இவைகளை நீக்கினால் ஆரோக்கியம் கூடும்..!!
உங்களது வாய் சதாசர்வ காலமும் அரிசி மிஷின் போல் எதனையாவது மென்று கொண்டே இருக்கின்றதா?
இப்படி அநேகர் இருக்கின்றனர். எப்பொழுதும் ஏதாவது மென்று கொண்டே இருப்பர். உணவு முடிந்த உடனேயே கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட்டோ, நெறுக்கு தீனி வேறு ஏதாவதோ கையில் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இதனால் ஜீரணக் கோளாறு முதல் ஏராளமான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இயற்கையாக உடலில் பசி ஏற்படும் நேரத்தில் முறையாய் சாப்பிடுவது என்பது ஒன்று. இதை விட்டு மேற்கூறியவாறு சாப்பிடும் பொழுது ஒழுங்கு முறை கெடுகின்றது. எடை கூடுகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகின்றது. இருதய பாதிப்பு ஏற்படுகின்றது. ஆபத்தான நிலைக்குக் கூட கொண்டுச் செல்கின்றது.
மன உறுதியுடன் கூடிய முயற்சியால் மட்டுமே ஒருவர் இதனை கட்டுப்படுத்த முடியும்.
நல்லா பசி எடுக்கும் வரை சாப்பிட மாட்டேன் என உறுதி கொள்ளுங்கள். மனிதன் வாழ்வில் எத்தனையோ சாதிக்கின்றான். எத்தனையோ தியாகம் செய்கின்றான். நம் உடல் நலனுக்காக இந்த கட்டுப்பாட்டினை மட்டுமாவது நம்மால் மேற்கொள்ள முடியாதா?
முறையான விகிதாச்சார உணவுகளைக் உட்கொள்ளுங்கள். காய்கறி, பழங்கள், கொழுப்பு குறைந்த உணவு, முழு தானிய உணவு என எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய மருத்துவ உலகில் இந்த பாதிப்பு உடையோர்களை அதிகம் காண முடிகின்றது.
இன்றைக்கு கிரெடிட் கார்டுகள் ஒருவருக்கு மிக எளிதாக கிடைத்து விடுகின்றன. இதன் காரணமாக தேவையானது, தேவை அல்லாதது என ஒருவர் ஏதேதோ வாங்கி சக்திக்கு மீறிய கடனாளி ஆகி விடுகின்றார். சரி இதற்கும், மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இந்த கடன்களால் ஏற்படும் மன உளைச்சலால் அதிக நபர்கள் ரத்தக் கொதிப்பு, இருதய பாதிப்பிற்கு ஆளாவதாக இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே பை நிறைய கிரெடிட் கார்டு வைத்து கொள்ளும் பழக்கத்தினை உடனடியாக கைவிடுவோமாக.
டி.வி. முன் சோபாவிலோ, சேரிலோ தன்னை மடக்கி கோணலாக வழிந்து அமர்ந்து டி.வி. தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் நபர்கள் பல வகை நோய்களுக்கு ஆளாகின்றனர் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. நாள் ஒன்றுக்கு 22 மணி நேரம் இவ்வாறு செலவழிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இவ்வாறு இருப்பவர்கள் கையில் எதையோ வைத்து கொரித்துக் கொண்டே இருப்பார்கள்.
இரவு 12 – 2 மணி வரை இவ்வாறு டி.வி. பார்த்து கொண்டே கொரிப்பவர்கள் ஏராளம். இவர்களின் கலோரி சத்து கூடுவதும், செரிமான கோளாறு ஏற்படுவதும், ரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதும் அநேக பெரிய நோய்களுக்கு அடித்தளம் ஆகின்றது. தினமும் 30 நிமிட துரித நடை என்பதனை கட்டாயம் ஆக்கி விடுங்கள். ஆய்வுகள் கூறும் ஒரு உண்மையினையும் அறிந்து கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் நடந்து விட்டு மீதி நேரம் மெத்தனமாக இருப்பவர்களின் உடல் நலம் கெடச் செய்யும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து 5-10 நிமிடங்கள் நடக்கவும்.
சில உடற்பயிற்சிகள் செய்யுங்கள். தேவையான நிகழ்வுகளையே டி.வி.யில் பார்க்கும் வழக்கத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள். மெத்தன வாழ்க்கையே நோய் வாழ்க்கை என்பதனை அறிந்து கொள்ளுங்கள். பொதுவில் அதிக கலோரி சத்து இல்லாத, கொழுப்பு, சர்க்கரை இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பசி இல்லாமல் சாப்பிடாதீர்கள்.
அதிக வெயில் என்பது மட்டுமல்ல நம் நாட்டில் எப்போதுமே வெயில்தான். அதிக உஷ்ணம்தான். இதெல்லாம் வெயிலா என பாதுகாப்பின்றி நீங்கள் அடிக்கடி வெயிலில் அலைந்தால் உங்கள் சருமம் எரிந்து உறுதித்தன்மையை இழந்து சீக்கிரம் வயதான தோற்றத்தினை அளிக்கும். ஆக சரும பாதுகாப்பு லோஷன், தலைமுடி பாதுகாப்பு, குடை, கறுப்பு கண்ணாடி இவை அனைத்தும் வெயிலின் கொடுமை குறைந்த காலத்திலும் அவசியம்.
சிலர் தேவையான மருத்துவர் கொடுத்த மாத்திரைகளில் பாதியினை அவர்களே குறைத்து விடுவார்கள். கேட்டால் உடலுக்கு கெடுதல். ஒத்துக் கொள்ளாது என்பார்கள். இதன் பின்னர் டாக்டர் சரியில்லை. எனக்கு நோய் சரியாகவில்லை என்றும் சொல்வார்கள். இவர்கள் ஒரு ரகம். சிலர் எடுத்ததெற் கெல்லாம் பிடி பிடியாக மாத்திரை சாப்பிடுவார்கள்.
இவர்கள் தானே வைத்தியம் செய்து கொள்ளும் பிரச்சினை யானவர்கள். மூட்டு வலி, ஜுரம், தலை வலி போல் பலவற்றிற்கு சுய வைத்தியம் செய்து கொள்ளும் இவர்கள் இதன் அபாயத்தினை உணர்வதே இல்லை. செலவு குறைவு என்று நினைத்து இவ்வாறு செய்யும் இவர்கள் பின்னால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய செலவுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். இப்படி மாத்திரை சாப்பிடுபவர்கள் அநேகருக்கு வயிற்று புண், வயிற்றில் உணவுப் பாதையில் ரத்த கசிவு, தசைவலி, அதிக ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு போன்ற தாக்குதல்கள் ஏற்படுகின்றன. அதிகமான மருந்துகளும், தவறான மருந்துகளும் இதற்கு காரணம் ஆகின்றன.
இவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி மருந்து எடுத்துக் கொள்வதில்லை என்ற உறுதியினை எடுத்தாலே போதும். தீர்வு கிடைத்து விடும்.
ஆய்வு கூறிய ஒரு செய்தி பாதிக்கும் மேற்பட்ட பெரியோர்களும், அநேக பள்ளி செல்லும் குழந்தைகளும், இளைஞர்களும் காலை உணவை அடியோடு தவிர்க்கின்றனர். அல்லது அவை குறைவாக எடுத்துக் கொள்கின்றனர் என்பதுதான். காலை உணவினை 7 – 8 மணிக்குள் எடுத்துக் கொள்வது உங்கள் உடலின் செயல்பாடுகளை நன்கு இயங்கச் செய்யும் என்பது மருத்துவ அறிவுரை. இதனை தவிர்க்கும் போது உடல் சோர்வடைவதுடன், சக்தியினையும் இழக்கின்றது.
இவ்வாறு காலை உணவை தவிர்ப்பவர்கள் முற்பகலில் பசியின் காரணமாக கடையில் கிடைக்கும் எதனையும் வாங்கி சாப்பிடுவார்கள். இதனால் எடை கூடுதலில் ஆரம்பித்து அநேக பிரச்சினைகள் இவர்களுக்கு வந்து சேருகின்றன. காலையில் எதுவும் தயாரிக்க முடியவில்லை என்ற குறை வேண்டாம். பழைய சோறுநீர் ஊற்றியது மிக சத்தான உணவு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வு இதனைப் பற்றி கூறுவதை பாருங்கள்.
* உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியா அதிகம் கிடைக்கிறது.
* உடலை சக்தியுடனும், எளிதாகவும் வைக்கிறது.
* வயிற்று பிரச்சினைகள் (அசிடிடி, வலி, வாயு) நீங்குகின்றன.
* ரத்த கொதிப்பு வெகுவாய் கட்டுப்படுகிறது.
* ரத்தக் கொதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது.
* உடல் சோர்வின்றி நாள் முழுவதும் இருக்கின்றது.
* அலர்ஜி, சரும பாதிப்புகள் நீங்குகின்றன.
* உடல் புண்கள் ஆறுகின்றன.
* உடல் கிருமிகள் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறது.
* உடல் இளமை அடைகின்றது.
* காபி, டீ அடிமை வழக்கம் நீங்குகின்றது.
* மிகுந்த பி-12 சத்து நிறைந்தது. குறிப்பாக சைவ உணவு கண்களுக்கு நல்லது.
* இரும்பு சத்து கூடுகின்றது.
ஆக இனியாவது காலை உணவினை தவிர்க்காதீர்கள்.
* எதற்கெடுத்தாலும் டென்ஷன், கவலை, கோபமா? நீங்களும் கஷ்டப்பட்டு, இருப்பவர்களையும் திண்டாட வைக்கின்றீர்களா? உங்கள் ரத்த அழுத்தம் கூடி, சர்க்கரை அளவு கூடி உள்ளதா? பட படத்தவராக இருக்கின்றீர்களா? வேலையில் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லையா? உங்களின் குணாதிசயங்களே இத்தகைய பாதிப்புகளுக்கு காரணம். இதிலிருந்து நீங்கள் வெளிவராவிடில் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நோயாளிகள்தான்.
இவர்களுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் தேவை. மேலும் கண்டிப்பாய் இவர்கள் உடற்பயிற்சி, யோகா, தியானம், மூச்சு பயிற்சி முறைகளை முறையாக கற்று கடைபிடிக்க வேண்டும். மனதினை எளிதாய் வைக்க பாட்டு, ஓவியம் என ஏதேனும் ஒன்றினை கற்றுக் கொள்ளுங்கள்.
இதற்கு வயது ஒரு தடையல்ல. டாக்டரிடமும், வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். நீங்கள் முறையான மருந்தினை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு சில நிரந்தர பிரச்சினைகள் உள்ளது என்றால் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லுங்கள். இது உங்களை மேலும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்.
* மது, புகை இதனை சிறிதும் தயங்காமல் உடனே விட்டு விடுங்கள். முடியும், உங்களால் முடியும். உங்கள் மன உறுதியினால் முடியும்.
* துரித உணவு, பொரித்த உணவு இதில் உயிர் வாழ்வதை நிறுத்துங்கள்.
* ஏதோ அவசரமாக ப்ளேனுக்கு நேரமாகி விட்டது போல் அள்ளி அள்ளி போட்டு அவசரமாக உண்ணாதீர்கள். இதற்கு ஒன்றும் சாப்பிடாமல் இருப்பதே மேல். உணவினை பொறுமையாய் மென்று விழுங்குங்கள்.
* காய்கறிகளும், பழங்களும் உங்கள் உணவில் இல்லை என்றால் ஆரோக்கியமும் உங்களுக்கு இல்லை.
* மனம் தோன்றியபடி மருந்துகளை சாப்பிடுவதும், விடுவதும் மிகவும் தவறு.
* எதற்கெடுத்தாலும் ‘சத்தியமாக’ என்று பேசாதீர்கள். சத்தியம் என்பது மிக மிக பெரிய வார்த்தை. அதனை சாதாரண விஷயங்களுக்கு பயன்படுத்தாதீர்கள்.
* உணவு உண்ணும்பொழுது செல்போனில் பேசுதல், செல்போனில் செய்திகளை பார்ப்பது போன்ற செயல்களை செய்யாதீர்கள்.
* உடலும் சரி, பேசும் சொல்லும் சரி எப்பொழுதுமே கவுரவமான நாகரீகத்தோடு இருக்க வேண்டும். அவ்வாறே நடந்து கொள்வோமாக.
Average Rating