வடக்கின் மீது கைநீட்டும் முயற்சி..!! (கட்டுரை)
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, தமக்கான அரசியல் இலாபத்தை அடைவதற்குப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தை வைத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் குற்றவாளியாக்க ஒரு தரப்பு முனைகின்றது.
அதேவேளை, இன்னொரு தரப்பு, அவர் நீதியாக, வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளார் என்று மகுடம் சூட்டுகின்றது.
இந்த விவகாரத்தை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கூட முனைப்புகள் காட்டப்படுகின்றன.
அதேவேளை, மற்றொரு புறத்தில் இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் திருப்பிவிடும் முயற்சிகளும் நடக்கின்றன.
இவையெல்லாம் தமிழர் தரப்புக்குள் நடத்தப்படுகின்ற அரசியல் ஆட்டங்கள் என்றால், இதை வைத்துத் தெற்கிலும் அரசியல் இலாபம் ஈட்டுகின்ற நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தனிநாடு கேட்டவர்களால், ஒரு மாகாணசபையைக் கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்று அமைச்சர் மனோ கணேசனிடம், சிங்கள நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேவேளை, வடக்கு மாகாணசபையில் இடம்பெற்றுள்ள மோசடிகள், தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோருவதற்குத் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கோரிக்கையை அவர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்வைப்பதற்குத் தயாராகி வருகிறார் என்று அவரது அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
தனிநாடு கேட்ட தமிழர்களால், ஒரு மாகாண சபையைக்கூட, ஒழுங்காக நடத்த முடியவில்லை என்ற கேள்வியின் மீது விசமத்தனம் இருப்பது போலவே, வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விசமத்தனமானதுதான்.
தனிநாடு கோரியது புலிகள்தான் என்றும், ஆனால், மாகாண சபையை நடத்துவது கூட்டமைப்பு என்றும் சில நியாயங்கள் கூறப்படுகின்றன. ஆனால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும், தமிழ் அரசியல் கட்சிகளும் தனிநாடு கோரியது உண்மைதான்.
தனிநாடு ஒன்றை அமைத்தால்தான், நிம்மதியாக வாழ முடியும் என்ற சூழ்நிலையைத் தமிழர்களுக்கு உருவாக்கியது, சிங்களப் பௌத்த பேரினவாத அடக்குமுறைகள்தான்.
அடுத்து, ஒருநாடு, ஓர்அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டும் அளவுக்கு ஒரு சிறப்பான ஆட்சிமுறை வடக்கில் புலிகளின் காலத்தில் இருந்ததை யாரும் மறந்து விடமுடியாது.
வடக்கில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் வசித்தவர்கள், இப்போதும் அந்தக்காலம் மீண்டும் வராதா என்று ஏங்குகின்ற நிலை இருக்கிறது.
போருக்குப் பின்னர், நவீன வசதிகள், வாய்ப்புகள் எல்லாம் கிடைத்திருந்தாலும், விடுதலைப் புலிகளின் காலத்து நிர்வாக முறைமை இன்னமும் மக்களை ஈர்க்கின்றது என்றால், அதற்காக ஏங்குகிறது என்றால், அதற்குக் காரணம், புலிகளின் திறமையான நிர்வாகம்தான்.
வடக்கில் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விட்டால், புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று கேட்கும்நிலை இருக்கிறது. அண்மையில், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர் கூட, “புலிகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா” என்று கேட்ருந்தார். இது விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திறனையே வெளிப்படுத்தியது.
அப்படியிருக்கும்போது, தனிநாடு கோரியவர்களால் மாகாணசபையைக் கூட நடத்த முடியவில்லை என்று கேட்பது அபத்தமானது.
அதேவேளை, அவ்வாறு கேட்கின்ற சூழலை ஏற்படுத்தியதற்காக, தமிழர்களாகிய நாம் வருந்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இன்னொரு பக்கத்தில், வடக்கு மாகாண சபையில் மிகப்பெரிய ஊழல்கள், மோசடிகள் நடந்து விட்டது போலவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து, விசாரிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் மீது அதிகார முறைகேடு, அதிகார வரம்பு மீறல், நிதி விரயம் போன்ற குற்றச்சாட்டுகளைத்தான், முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு கூறியிருக்கிறது.
பெரியளவில் ஊழல்கள் நடந்திருப்பதாகவோ, மாகாணசபையின் நிதி, மோசடி செய்யப்பட்டிருப்பதாகவோ கூறப்படவில்லை. வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டத்தில் இன்னமும் மில்லியன் கணக்கில்தான் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்ற நிலையில், பாரியளவு மோசடிகளோ, முறைகேடுகளோ நடந்திருக்க வாய்ப்பில்லை.
இதைவிடப் பெரியளவில், பலநூறு பில்லியன் கணக்கான ரூபாய் மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் முன்னைய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருந்தன. ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டி விட்டதாக முன்னைய அரசாங்கத்தின் மீது இப்போதைய அரசாங்கமே குற்றம்சாட்டியது.
அந்த முறைகேடுகள் குறித்து இந்த அரசாங்கம் இன்னமும் கூட, சரியான விசாரணைகளை முன்னெடுக்கவோ, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளை எடுக்கவோ இல்லை.
ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சின்ன மீன்கள்தான் சிக்கியுள்ளனவே தவிர, சுறாக்களும் திமிங்கிலங்களும் தப்பித்துக் கொண்டுதான் திரிகின்றன.
இப்படிப்பட்ட நிலையில், வடக்கு மாகாணசபையில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று விட்டதுபோன்ற, தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தில் உள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், வடக்கு மாகாணசபைக்கு இராணுவ ஆளுநரைக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடிவாளம் போட்டு வைத்திருந்தது.
இப்போது அந்த நிலைமையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபை முழுமையாகத் தனது அதிகாரங்களை இன்னமும் பெற்றிருக்கவில்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லா அதிகாரங்களையும் வடக்கு உள்ளிட்ட மாகாணசபைகளால் இன்னமும் அனுபவிக்க முடியாத நிலையே உள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டுள்ள வடக்கு மாகாணசபை மீது, மத்திய அரசாங்கத்தின் தலையீட்டை ஏற்படுத்துகின்ற மற்றொரு முயற்சியாகத்தான், விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பார்க்க முடிகிறது.
மாகாணசபை இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றபோது, மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்ய முனையுமானால் அது மீண்டும் மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையிலான மோதலாக உருவெடுக்கும்.
மாகாணசபை ஒன்று, மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றோ, அதன் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ அவசியம் இல்லை.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், மத்தியின் திட்டங்களைச் செயற்படுத்தும், பின்பற்றும் சபையாகவே, மாகாணசபைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. அதற்காக வடக்கு மாகாணசபைக்குப் பல்வேறு நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய அரசாங்கம் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிராது போனாலும், அரசாங்கத்தை அத்தகையதொரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன என்பதை மறந்து போகக்கூடாது.
அத்தகைய சக்திகள்தான், கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வடக்கு மாகாணசபையை ஆட்டுவிப்பதற்கு முயற்சிக்கின்றன.
அதேவேளை, வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் கூடத் தமிழர்களின் அரசியலுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
அதிகாரப் பகர்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் தரப்பு, கிடைத்துள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் விளைவுகளையும் இதன் மூலம் உணர முடிகிறது.
மாகாண சபைகளின் நிர்வாகத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்கின்ற நிலை ஏற்படுமானால், அது தொடர்ச்சியான சிக்கல்களுக்கே வழிவகுக்கும். அவ்வாறான நிலையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்காத வகையில், மாகாண நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்.
வடக்கு மாகாணசபை பொறுப்புக்கூறலிலும், வெளிப்படைத்தன்மையிலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று பெயரெடுத்து விட்டால் மாத்திரம் போதாது, இதுபோன்ற கறைகள் இனிமேலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது.
இதுபோன்ற, இன்னொரு சூழல் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் அனைவரதும் கடப்பாடு. ஒருசிலரின் அல்லது ஒருசில தவறுகள் ஒட்டுமொத்த இனத்தின் நலன்களுக்குமே ஆபத்தாக அமைந்து விடக்கூடாது.
அவ்வாறான நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அது, அரசியல்வாதிகளுக்கானது மாத்திரமல்ல; வாக்காளர்களான மக்களுக்குமான பொறுப்புத்தான்.
Average Rating