ஆரோக்கியமான உணவின் ரகசியம் என்ன?..!!
நன்கு பசிக்கும் பொழுது மட்டுமே சாப்பிடுங்கள். சாப்பிடும் முன் உங்கள் உடல் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். ஏதோ பேசிக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் தவறு ஆகும். மன உளைச்சல், போர் அடிக்கின்றது. கம்பெனி கொடுக்கின்றேன் என்ற காரணங்களுக்காக உணவு அருந்தாதீர்கள்.
சாப்பாடு என்றால் அதிக அளவும், அதிக பண்டங்களும் என்று அர்த்தம் அல்ல. மூன்று வேளை அளவான உணவு, இரு வேளை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் உணவு உங்களுக்கு எளிதாக இருக்கும். உணவினை வேலை பளு என்று சொல்லி தவிர்க்காதீர்கள்.
சமீப காலத்தில் யாரும் பொறுமையாய் அமர்ந்து ஒரு வேளை உணவினை உண்பதனை காண முடிவதில்லை. பயணம் செய்யும் பொழுதும், நின்று கொண்டும், வேலை செய்து கொண்டேயும் தான் அநேகர் உணவு உண்கின்றனர். பலர் டி.வி. முன் அமர்ந்து தான் உண்கின்றனர். உணவு உண்பதும், நீர், டீ, காபி போன்றவை குடிப்பதும் நிதானமாக இருக்க வேண்டும். இவ்வாறு இல்லையெனில் குடலுக்கு மிக அதிக தொந்தரவினை நாம் கொடுக்கின்றோம் என்பதனை உணர்க. இதனால் அநேக செரிமானக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
நல்ல உணவினை மட்டுமே உண்ண வேண்டும் என்பது உங்கள் குறிக்கோள் ஆக வேண்டும். நல்ல உணவு என்பது என்ன?
விகிதாச்சார உணவு, நார்சத்து மிகுந்த உணவு, காய்கறிகள், பழங்கள் இவற்றினைக் கொண்டது. அதிக கொழுப்பு, துரித உணவு, எண்ணெய், காரம் சேர்ந்தவை இவையெல்லாம் தவறான உணவுகள். ஆனால் மக்களுக்கு பிடிப்பதெல்லாம் தவறான உணவுகள் தான். எனவே 80/20 என்ற விதிமுறை உருவாக்கப்பட்டது. அதாவது 80 சதவீத முறையான உணவுகளையும் 20 சதவீத பிடித்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூட இளம் வயதினருக்காக கூறப்படுகின்றது.
* சாப்பிடும் பொழுது போனில் பேசுவது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது, டி.வி. பார்ப்பது, பேப்பர் படிப்பது போன்ற அஷ்டாவதானி வேலைகளைச் செய்யாதீர்கள். எதனையும் முறையாய் செய்யவும் மாட்டீர்கள். உணவினை சுவைத்து, மென்று விழுங்கவும் மாட்டீர்கள்.
* உங்கள் உடல் ஸ்வீட் சாப்பிடச் சொல்கின்றதா? ஐஸ்க்ரீம் சாப்பிடச் சொல்கின்றதா? உடனடி ஏதாவது ஒரு பழம் சாப்பிடுங்கள். சூடாய் காபி கேட்கின்றதா? சுக்கு காபியோ, சூப்போ குடியுங்கள் கொஞ்ச நாளில் உடம்பு நீங்கள் சொல்வதைக் கேட்கும்.
* பிரிட்ஜில் ஆரோக்கியமான பொருட்களையே வையுங்கள். ஐஸ்கிரீம், கோலா போன்ற பொருட்களை வாங்காதீர்கள். பிரிட்ஜில் அடுக்காதீர்கள். இருந்தால்தானே பிரச்சினை.
* உங்களை எக்காரணம் கொண்டும் பட்டினி போட்டுக் கொள்ளாதீர்கள்.
* உண்மையாய் இப்படிச் செய்து பாருங்கள். உங்கள் உடல் உங்களுக்கு எத்தனை நன்மைகளைத் தருகின்றது என எளிதில் அறிவீர்கள்.
* அநேக சாதனையாளர்களை கேட்டுப் பாருங்கள். முறையான காலை உணவினை அவர்கள் தவிர்க்க மாட்டார்கள். காலை உணவினை தவிர்க்கும் அனைவரும் முனைந்து தன் உடல் நலத்தினை தானே கெடுத்துக் கொள்பவர்களே. காலை உணவில் ஒரு பழம், உணவு என்று பிரித்து எடுத்து கொள்ளுங்கள்.
* நல்ல ஆரோக்யத்தினை விரும்பும் உலகம் அறிந்த மிகப்பெரிய தலைவர்கள் (நம்நாடு, வெளிநாடு) மதுப்பழக்கத்தினையும், புகை பழக்கத்தினையும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். உணவு விஷயத்தில் இவர்களையும் நம் முன்னோடிகளாகக் கொள்ளலாமே.
* உங்கள் படுக்கை விரிப்பினை அன்றாடம் மாற்றுவது நாம் தினமும் குளிப்பது போல இல்லையெனில் உங்கள் படுக்கை விரிப்பினை ஒருநாள் விட்டு ஒரு நாளாவது மாற்ற வேண்டியது அவசியம். உடல் நல குறைவுடையோரும் கண்டிப்பாய் அன்றாடம் மாற்ற வேண்டும். இல்லையெனில் பூஞ்சை, கிருமி தாக்குதல், எக்ஸிமா, அரிப்பு, தூசு பூச்சிகள் கடி, அலர்ஜி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
* நோய் என்றாலே கிருமி, வைரஸ் இவற்றினைப் பற்றிதான் நினைக்கின்றோம்.
* கிருமி, வைரஸ், பூஞ்ஜை, ஒட்டுண்ணி போன்றவைகளால் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. கிருமிகளும், பூஜ்ஜையும் வெது வெதுப்பான மற்றும் ஈரப்பதம் இருக்கும் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும். ஆனால் வைரஸ் மற்றொரு உயிருள்ள உடலில் தங்கிதான் பெருகும். நோயினை உருவாக்கும்.
இந்த பாதிப்புகள் ஒருவரது கை மூலம் அல்லது பாதிப்புடையவர் தொட்ட இடங்கள் மூலம் பரவும். மேலும் தண்ணீர், ஒருவரது தும்மல், வாயிலுள்ள சலைவா, இருமல், வாய் திறந்த பேச்சு இவற்றின் மூலமும் வேகமாய் பரவும்.
* பாதிப்புடைய உணவு, நீர்.
* கதவின் கைபிடி, குழாய், டி.வி. ரிமோட், டெலிபோன்.
* குப்பை தொட்டிகள் பாத்ரூம்.
* பல் தேய்க்கும் ப்ரஷ்
* பாதிப்புடைய மக்கள்
ஆகியவற்றின் மூலம் கிருமிகள் பரவுகின்றன.
கைகளை அடிக்கடி சோப் கொண்டு கழுவுவதன் மூலம் அநேக பாதிப்புகளை தவிர்த்து விடலாம். மேலும் இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைக்குட்டை மூலம் வாயினை மறைத்துக் கொள்வதன் மூலம் நோய் பிறருக்கு பரவுவதை தடுக்கலாம். கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை நிறுத்துவதன் மூலம் நோயற்ற சமுதாயத்தினை உருவாக்கலாம். இவையெல்லாம் நமது நாகரீகம், சமுதாயக் கடமை. வெளிநாடுகளில் பளிச்சென்ற சுற்றுபுற சூழ்நிலையை காணும் நாம் நம் நாட்டில் இதனை செயல்படுத்த இத்தகு சுய ஒழுக்கங்களை இன்றே கடை பிடிப்போமாக.
Average Rating