மீண்டும் சர்வதேசத்தை நோக்கி….!! (கட்டுரை)
தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.
இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுவீடனின் தூதுவராக இருப்பவர்தான், ஹரோல்ட் சான்ட்பேர்க். புதுடெல்லியில் இருந்து கொண்டு அவ்வப்போது, இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வந்து, தமது இராஜதந்திரப் பணியைக் கவனிப்பவர்.
ஸ்கன்டினேவிய நாடான சுவீடன், 2002 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கும் குழுவுக்குப் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது.
போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், சுவீடனுக்கும் இலங்கைக்குமான இடைவெளி அதிகரித்தது. இப்போதைய நிலையில், இலங்கைக்கு பெரியளவில் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில் சுவீடன் இல்லை என்பதே உண்மை.
கடந்த மாத இறுதியில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சுவீடன் தூதுவர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
அப்போதுதான், “தமிழ் மக்கள் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள் இனிமேலும் அவர்களால் பொறுத்திருக்க முடியாது” என்று இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.
“வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; மீள்குடியமர்வு பூர்த்தியடையவில்லை; அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; இராணுவப் பிரசன்னம் குறையவில்லை; காணாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை; மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம், பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று சுவீடன் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களின் பொறுமை தொடர்பாக இரா.சம்பந்தன், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் வெளிப்படுத்திய மிகக் கடுமையான ஒரு கருத்தாக இதனைக் குறிப்பிடலாம்.
இதற்கு முன்னர் வேறெந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதாகத் தெரியவில்லை.
சுவீடன் தூதுவருடனான சந்திப்பு நடந்த அன்று, அரசியலமைப்புத் திருத்தத்துக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்திலும், இரா.சம்பந்தன் காரசாரமான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
ஒற்றையாட்சி, கூட்டாட்சி போன்ற பதங்கள் தொடர்பாகவே அந்தக் கூட்டத்தில் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தீவிர கவனம் செலுத்தினாலும், அத்தகைய பதம் சேர்க்கப்படுவதை இரா.சம்பந்தன் எதிர்த்திருப்பதாகத் தெரிகிறது.
இதன்போது, இரா.சம்பந்தன் சூடாக வெளிப்படுத்திய கருத்துகளால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் பதில் கூற முடியாமல் திணறி நின்றதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அரசியலமைப்பு மாற்றம் இரா.சம்பந்தனுக்கு கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கடந்த ஆண்டு இறுதியிலேயே அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பியிருந்தார். அதனால்தான் அவர், 2016 டிசெம்பருக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று கூறியிருந்தார்.
அதற்குப் பின்னர், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான, இடைக்கால அறிக்கையை வெளியிடுவதில் கூட இன்னமும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட வழிநடத்தல் குழுக் கூட்டத்திலும் இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை.
தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்கா சென்று விட்டதால், அவர் திரும்பும் வரையில், எந்த நகர்வும் இடம்பெறப் போவதில்லை. அரசியலமைப்பு மாற்றம் என்பது இழுபறிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.
இது, இரா.சம்பந்தனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடும் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்பது போன்று, கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றன.
இது, கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு சவாலாகவும் மாறியிருக்கிறது. இவையெல்லாம் இரா.சம்பந்தனுக்கான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
கடந்த மாதம், ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பு வந்திருந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்திருந்தார்.
அப்போதும் கூட, “எதிர்பார்த்ததுபோல, அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவில்லை; அதற்கான பணிகள் இழுத்தடிக்கப்படுகின்றன” என்று இரா.சம்பந்தன் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதற்கு இந்தியப் பிரதமரும், “இலங்கை அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகிறது என்பதை இந்தியாவும் கவனித்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
அரசியலமைப்பு மாற்ற விடயத்திலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீளுகின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது கவனத்தைச் சர்வதேச சமூகத்தை நோக்கித் திருப்பத் தொடங்கியுள்ளது.
இந்தியப் பிரதமர் மற்றும் சுவீடன் தூதுவர் ஆகியோரிடம் இரா.சம்பந்தன் வெளிப்படுத்திய கருத்துகளின் உள்ளடக்கமானது, ‘அரசாங்கம் இழுத்தடிக்கிறது; தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்’ என்பதாகவே உள்ளது.
அதனால்தான், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேசம் எவ்வாறு அழுத்தம் கொடுக்கப் போகிறது- எதை வைத்து அதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு, போர்க்குற்ற விவகாரங்களைப் பயன்படுத்தி ஜெனிவாவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஜிஎஸ்பி பிளஸ் போன்ற தடைகளைப் பயன்படுத்தியும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தமது இலக்குவரை, பணிய வைக்க சர்வதேச சமூகத்தினால் முடியவில்லை. அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக சர்வதேசம் திட்டமிட்டது.
இப்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய சர்வதேச சமூகம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த அழுத்தங்களை ஒவ்வொன்றாக நீக்கிவிட்டது.
இப்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகள் கிடையாது, பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், இராஜதந்திர நெருக்கடிகள் இல்லை என்றே கூறலாம்.
பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் மாத்திரமே, சர்வதேச சமூகத்தினால் காத்திரமான பங்காற்ற முடியும். அத்தகையதொரு சூழல் தற்போது இலங்கையில், இருப்பதாகத் தெரியவில்லை.
சர்வதேச சமூகத்துக்கு தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் பெரியது அல்ல. விடுதலைப் புலிகள் இருந்த வரைக்கும்தான், சர்வதேசத்தினால் உற்று நோக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில், இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே சர்வதேச சமூகம் முடிவுகளை எடுக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினை, அதற்கான தீர்வு எல்லாமே சர்வதேசத்துக்கு இரண்டாம் பட்சம்தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து, தீர்வு ஒன்றை எட்டலாம் என்று நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை உடையத் தொடங்கியிருக்கிறது என்பதையே சம்பந்தனின் அண்மைய கருத்துகள் உணர்த்தியிருக்கின்றன. ஒரு வகையில் இது அவருக்கான நிர்ப்பந்தமும் கூட.
காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் கூட்டமைப்புக்கான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டுமானால், அரசாங்கத்தை எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி வருகிறது.
தமிழ் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவு செய்யும் ஓர் அரசாங்கத்துக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுக்கலாம்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை இழுத்தடிக்கும் அரசாங்கத்துடன் அண்டியிருப்பது ஆபத்தானது என்பதை கூட்டமைப்பு இப்போது உணரத் தவறினால், அது அவர்களின் அரசியல் தற்கொலையாகவே அமைந்து விடலாம்.
அதனால்தான், சர்வதேச சமூகத்தின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார் இரா.சம்பந்தன்.
இந்த விடயத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திர நெருக்கடிகள் அரசாங்கத்துக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பி்ரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அண்மையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வெளியிட்ட கருத்து அதைத்தான் வெளிப்படுத்துகிறது.
ஆனாலும், அரசியல், பொருளாதார, இராஜதந்திர மட்டங்களில் சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படாமல், கொழும்பின் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முன்வரும் என்று நம்புவது கடினமாகவே இருக்கிறது.
Average Rating