பயன்படுத்தப்படாத வரப்பிரசாதங்கள்..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 12 Second

downloadநாடாளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயரிய சபையாகும். அந்த நாட்டின் நீதியை நிலைநாட்டும் கட்டமைப்பாக நீதித் துறை இருக்கின்ற வேளையில், அதற்குத் தேவையான சட்டங்களையே உருவாக்குகின்ற சபை என்பதால் நாடாளுமன்றத்துக்கு ஒரு மேலான அந்தஸ்து இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்டோரும் நியமன உறுப்பினர்களுமாக மொத்தம் 225 பேர் அந்தச் சபையில் அங்கத்துவம் பெறுகின்றனர். அதில் அங்கம் வகிப்போர், மக்களின் நல்ல தலைவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் ஆளுமையுள்ளவர்களாகவும் தேசத்துக்குத் துரோகம் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் பொதுவாகவே எதிர்பார்ப்பதுண்டு.

ஆனால், நிஜம் என்பது அவ்வாறில்லை. நாடாளுமன்ற உறுப்புரிமையை மக்கள் சேவைக்கான ஒரு களமாகப் பார்க்காமல், தமது சொந்த அரசியலுக்கான விளைநிலமாகவே அநேகமான எம்.பிக்கள் பார்க்கின்றனர்.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டுகின்ற அக்கறையைக் காட்டிலும், கடந்த தேர்தலுக்குச் செலவழித்த பணத்தை ஈட்டிக் கொள்வதில் அதீத அக்கறை காட்டுவதையும் காணமுடிகின்றது.

இதற்கு, விதிவிலக்கான ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். ஆனால், அவ்வாறானவர்கள் மிகச் சிலரே.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பல்வேறு வரப்பிரசாதங்களும் சிறப்புச் சட்டங்களும் உள்ளன. இதற்கப்பால் எத்தனையோ சலுகைகள், சட்ட ஏற்பாடுகள் என்றெல்லாம் இருக்கின்றன. இது உண்மையிலேயே தனியே எம்.பிக்குரிய கௌரவமும் சலுகைகளும் மட்டுமல்ல. மாறாக, அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கு, ஒரு ஜனநாயக நாடு வழங்குகின்ற மதிப்பும் மரியாதையும் என்றே இதைக் கருத வேண்டியிருக்கின்றது.

ஆனால், இன்று எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பதவிக்கு பொருத்தமானவர்களாக இருக்கின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் பதவிக்கு வந்தபிறகாவது, அதற்கான தார்ப்பரியத்தையும் அதனது கனதியையும் விளங்கிச் செயற்படுவோர் எத்தனைபேர் என்ற கேள்வி மிகப் பெரியது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியூடாகத் தீர்வைச் சலுகையுடன் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பெறலாம் என்பது போன்ற விசேட சலுகை ஏற்பாடுகள் பற்றி அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு, நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்குரிய பொறுப்புகளும் கடமைகளும் என்ன? அவற்றைச் செய்வதற்காக, சிறப்புரிமைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று யோசிக்கின்ற எம்.பிக்கள் மிகக் குறைவாகும்.

பொதுவாக சிங்கள, தமிழ், முஸ்லிம் என எல்லாச் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்லர் என்றாலும் தமிழ் அரசியல்வாதிகள் ஒப்பீட்டளவில் உயர்ந்தபட்சமாகச் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, தமது மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள் எல்லா மக்களுக்காகவும் இதைப் பயன்படுத்துகின்றனர். மற்றைய சிங்கள அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்ற போதிலும், சிங்கள ஆட்சிச் சூழல் என்பது பௌத்த மக்களுக்கு சாதகமாகவே செயற்படும் என்பதால், அவர்கள் குரல்கொடுக்காவிட்டாலும் இயல்பாகவே மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விடயத்தில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தத்துவங்களும் சிறப்புரிமைகளும் குறித்து நாடாளுமன்ற சட்டம் குறிப்பிடுகின்றது.

‘நாடாளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் சிறப்புரிமைகளையும் விடுபாட்டு உரிமைகளையும் தத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்கும் வரைவுபடுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் பேச்சு, விவாதம் அல்லது நடவடிக்கைகள் என்பதற்கான சுதந்திரத்தை பாதுகாக்கப் பெறுவதற்கும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீதான தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும் நாடாளுமன்ற அறிக்கைகள், பத்திரங்கள், நிகழ்ச்சிக்குறிப்புகள், தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றை வெளியிடுவதில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆட்களுக்கு பாதுகாப்பளிப்பதற்குமான ஒரு சட்டம்’ என்றே இது வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தச் சாராம்சக் குறிப்பிலிருந்தே, இதனுள் எவ்வகையான விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன என்று விளங்கிக் கொள்ளலாம். சுருங்கக்கூறின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வரப்பிரசாதங்கள் (சிறப்புரிமைகள்), அவரது நடவடிக்கைகள் பற்றி முழுமையாக இச்சட்டம் குறிப்பிடுகின்றது.

இச்சட்டம் இரண்டு பிரதான பாகங்களையும் அட்டவணைகளை உள்ளடக்கிய இரு பாகங்களையும் கொண்டுள்ளது. பாகம் 1 ஆனது சிறப்புரிமைகள் விடுபாட்டுரிமைகள் பொதுவிலான சட்டங்களும் பொதுவிலான தத்துவங்களும் குறைநிரப்பு ஏற்பாடுகளும் என்ற விடயத் தலைப்பின் கீழ், 19 பிரதான ஏற்பாடுகளையும் அதன்கீழ் உப பிரிவுகளையும் கொண்டுள்ளது.

பாகம் 2 ஆனது நாடாளுமன்றச் சிறப்புரிமைகளும் அதனது தண்டனைகளும் பற்றி வரையறை செய்கின்றது. இந்த விடயப் பிரிவின் கீழ், 10 முக்கிய விடயங்கள் குறித்துரைக்கப்பட்டுள்ளன.

பாகம் அ மற்றும் ஆ ஆகியவை உயர்நீதிமன்றத்தால் மாத்திரம் தண்டிக்கப்படக்கூடிய தவறுகள் மற்றும் நாடாளுமன்றத்தினாலோ அல்லது உயர்நீதிமன்றத்தாலோ தண்டிக்கப்படக்கூடிய தவறுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

மொத்தமாக இச்சட்டத்தில் 53 விடயங்கள் பற்றிய ஏற்பாடுகள், விலாவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால், இன்று எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை விளங்கிக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்று கூறுவது கடினமாகும்.

நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காகப் பாடசாலை மாணவர்கள் வருகின்றார்கள்; புத்திஜீவிகள் வருகின்றார்கள்; வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் களரிகளை நிரப்புகின்றார்கள். ஆனால், சபையில் இருக்கின்ற உறுப்பினர்களில் கணிசமானோர் க.பொ.த உயர்தரம், சாதாரண தரம் ஆகிய கல்வித் தரங்களில் சித்தியடையாதவர்கள் என்றும் ஒரு சிலர் மாத்திரமே பட்டதாரிகள் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகி மக்களிடையே அது பெரும் பேசுபொருளாகி இருந்தது.

ஒரு சாதாரண சிற்றூழியர் தொழிலுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கே சாதாரண தரம் சித்தியடைந்திருக்க வேண்டுமென்று கோரப்படுகின்ற நாட்டில், பட்டதாரிகளுக்கே வேலை பெற முடியாதிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அந்த நாட்டை ஆளும் சபையில் இருப்போரின் கல்வித் தகைமை இவ்வாறு இருப்பதை என்னவென்று சொல்வது.

எவ்வாறிருப்பினும், ஓர் அரசியல்வாதி கல்வி கற்றவராக இருக்க வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லை. பட்டதாரி ஒருவரே மக்கள் பிரதிநிதியாகும் தகுதியை உடையவர் என்று சொல்லவும் முடியாது.

சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்ட தகுதிகளைக் காட்டிலும் வேறுபல தகுதிகளே அரசியல்வாதி ஒருவருக்கு முக்கியமானது என மக்கள் கருதுகின்றார்கள். அதனாலேயே ஒரு சண்டியனையும் சாதாரண தரம் சித்தியடையாதவரையும் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புகின்றார்கள்.

அவர்கள் படிக்காத மேதைகளாக இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்கள் தமக்கு மக்களால் வழங்கப்பட்ட கடமையைச் செய்கின்றார்களா என்பதற்கு அவர்களது மனச்சாட்சிகளே பதிலளிக்க வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் எம்.பிக்கள் தம்மை இது விடயத்தில் சுய விசாரணை செய்து கொள்ளட்டும்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் தத்துவங்கள் சட்டத்தின் முதலாம் பாகத்தின் முதலாவது விடயமே, நாடாளுமன்றத்தில் பேசுவது பற்றியதாகும். ‘நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரமும் விவாதச் சுதந்திரமும் நடவடிக்கைச் சுதந்திரமும் இருத்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய சுதந்திரம் அல்லது நடவடிக்கைகள் நீதிமன்றத்தாலோ நாடாளுமன்றத்துக்குப் புறம்பான ஏதேனும் இடத்திலோ கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது’ என்று அப்பிரிவு குறிப்பிடுகின்றது.

அத்துடன், உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கூறிய விடயத்துக்காக அல்லது நாடாளுமன்றத்தில் கொணர்ந்திருக்கக் கூடிய ஏதேனும் காரியத்துக்காக கைது செய்யப்பட முடியாது என்ற சட்டப் பாதுகாப்பை, அதற்கு அடுத்த பிரிவு வரையறை செய்து குறிப்பிட்டிருக்கின்றது.

அதாவது, தமது மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் சட்டத்தின் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை தமிழ் எம்.பிக்கள் ஓரளவுக்கு சிறப்பாக பயன்படுத்துகின்ற போதிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் எம்.பிக்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர் என்பது கவனிப்புக்கும் கவலைக்கும் உரியது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றினாலும் உரையாற்றாவிட்டாலும் சமூகமளித்தாலும் இலேசாகத் தூங்கினாலும்…. தாங்கள் அதிகமதிகம் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கின்றோம் என்றே முஸ்லிம்
எம்.பிக்கள் இதற்கு முன்பு மக்களிடையே ஒரு மாயையை உருவாக்கி வந்தார்கள்.

இப்போது நாடாளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு, ஓரிருவர் பேசத் தொடங்கியிருக்கின்ற போதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக இத்தனை இனத்துவ அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்ற சூழலிலும் முஸ்லிம் எம்.பிக்கள் சிலர் சபையில் இப்போதும் மௌனம் காக்கின்றனர்.

முஸ்லிம்கள் சம்பந்தமான சில விடயங்களை ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் எம்.பிக்களும் பேசுகின்றபோது, நமது முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐ.தே.க, சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் அந்த வரப்பிரசாதத்தை வீணாக்கி விடுவதை இன்னும் காண முடிகின்றது.

சபையில் பேசுவதும் பேசாதிருப்பதும் அவர்களது சிறப்புரிமையே! ஆனால், மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, ஓர் உயரிய சபையில் பேசாதிருப்பது, தமது பொறுப்பை உணராமையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

சபையில் பேசாதிருப்பது ஒருபக்கமிருக்க,“பேசி என்ன பயன்” என்ற தோரணையில் விளக்கமளித்து, அதை நியாயப்படுத்துகின்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்.பிக்களும் முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்றார்கள்.

நாடாளுமன்றச் சட்டத்தின் ஊடாக மக்களுக்காக எவ்வாறு குரல் கொடுக்கலாம்? தமக்கிருக்கும் சிறப்புரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியாக எவ்வாறு போராடலாம் என்பதை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து விளங்கி செயற்படுகின்றார்களோ இல்லையோ; ஆனால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டால் தமக்கு எத்தனை பொலிஸாரை பாதுகாப்புக்கு எடுக்கலாம்? எரிபொருள் கொடுப்பனவு, வீடு வசதி, தொலைபேசிக் கொடுப்பனவு எவ்வளவு பெறலாம்? எந்தெந்த வழிகளில் பணம் உழைக்கலாம்? எங்கிருந்து கொந்தராத்துகளைக் கொண்டு வரலாம்? அதை யாருக்கு கொடுத்து தரகுக்கூலி பெறலாம்? வேலைவாய்ப்பை எப்படி வழங்கலாம்?

அதற்கு யார் ஊடாகப் பணம் பெறலாம்? மதுக்கடை அனுமதியை யாருக்கு எடுத்துக் கொடுக்கலாம்? எப்படி மண் அகழ அனுமதிப்பத்திரம் கொடுத்து வருமானம் உழைக்கலாம்? போன்ற தமக்குச் சாதகமான எல்லாச் சலுகைகள் தொடர்பிலும் நல்ல ஆழ-அகலமாக அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றனர்.

பொதுவாகவே, எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம் பெறுவதில் குறியாக இருக்கின்றனர். நாடாளுமன்றத்துக்கு எதற்காக அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்களோ அந்த முதன்மையான காரியம் பற்றித் தெளிவில்லாமல் இருக்கின்ற எம்.பிக்களும் தீர்வைச் சலுகையுடனான வாகனத்தை பெறுவதில் நல்ல தெளிவுடனும் உறுதியுடனும் செயற்படுகின்றனர்.

அது, அவர்களுக்குச் சட்டத்தால் வழங்கப்படுகின்ற சலுகையாகும். ஆனால், அவ்வாறு கிடைக்கப் பெறும் அதிசொசுகு வாகனங்களை அவர்கள் சட்டமுரணான முறையில் வேறு ஆட்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கின்றனர் என்ற விவகாரம் இப்போது சூடுபிடித்துள்ளது.

இவ்வாறு நடைபெறுவது வழக்கமானதுதான். நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனேகர் தீர்வையற்ற வாகனங்களை இவ்வாறே விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், இறக்குமதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலம் முடிவடைவதற்கு இடையில், அதாவது உடனடியாகவே வேறு ஒரு நபருக்கு வாகனங்கள் கைமாற்றப்படுவதுதான் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

1989 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க சுங்கவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3சி பிரிவின் 6ஆவது உப பிரிவுக்கு அமையவே தற்போது இந்தத் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது.

இந்நிலையில், நல்லாட்சி உருவான பின்னர் அமையப் பெற்ற நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சுமார் 85 பேர் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்துள்ளதாகவும் அதனால் குறித்த சட்ட ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட நோக்கம் அடையப்படாமல் விடப்பட்டுள்ளதுடன், நாட்டின் வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை சுட்டிக்காட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஒரு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் இதனை உயர் நீதிமன்றத்துக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றார். இவ்வாறு வாகனங்களை வேறு ஆட்களுக்கு விற்ற எம்.பிக்களின் பட்டியலில் தமிழ், முஸ்லிம் எம்.பிக்களும் உள்ளடங்குகின்றனர்.

குறிப்பாக, தற்காலிகமாக ஒரு எம்.பி பதவியைப் பெற்ற முஸ்லிம் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு தீர்வையற்ற வாகனத்தை இறக்குமதி செய்து, வேறு தரப்புக்கு கைமாற்றியிருக்கின்றார்.

அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக நிறையச் செலவு செய்கின்றார்கள். அது அவர்களுக்குத் தொழிலும் கூட. எனவே, நீங்கள் அங்கு உள்ள வெகுமதிகளை, அதிகாரத்தை, தீர்வையற்ற வாகனம் போன்ற பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதில் மக்களுக்குப் பிரச்சினையில்லை.

ஆனால், இவற்றையெல்லாம் நன்றாகப் பயன்படுத்துபவர்கள் நாடாளுமன்றச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான வரப்பிரசாதங்களான நாடாளுமன்றத்தில் பேசுதல், விவாதித்தல் போன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தாமல் வீணாக்குகின்றார்களே என்பதே மக்களின் கவலையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மாவிற்கு, கணவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீதேவியின் மகள்..!!
Next post 72 வயது ரிஷிகபூருக்கு, 102 வயது அப்பாவாக நடிக்கும் அமிதாப் பச்சன்..!!