இளம்பெண் கும்பலால் கற்பழித்து, கொடூர கொலை: முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் கைது..!!
டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்ததைப் போன்று அரியானாவில் இளம்பெண் ஒருவர் கடத்தி, கும்பலால் கற்பழித்து, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில், முக்கிய குற்றவாளி உள்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைநகர் டெல்லியில் 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி நள்ளிரவு, நிர்பயா என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த துணை மருத்துவ மாணவி ஒருவர், ஒரு கும்பலால் ஓடும் பஸ்சில் கற்பழித்து, கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனையை கடந்த 5-ந் தேதி உறுதி செய்தது.
அதன் சுவடு மறைவதற்கு முன்பாக அரியானா மாநிலத்தில், நிர்பயா போன்று ஒரு பெண், கடத்தப்பட்டு, கற்பழித்து, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம், சோனிப்பட் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான அந்த இளம்பெண். இவர் திருமணமாகி விவாகரத்து ஆனவர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 9-ந் தேதி சோனிப்பட்டில் வழிமறித்து காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரது பெற்றோர் செய்த புகாரின்பேரில் ‘இளம்பெண் மாயம்’ என சோனிப்பட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
2 நாட்கள் கழிந்த நிலையில் 11-ந் தேதி, சோனிப்பட்டில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள ரோட்டக் நகரின், தொழிற்பேட்டை டவுன்ஷிப் அருகில் ஒரு இளம்பெண் கற்பழித்து, கொலை செய்யப்பட்டு, உடல் வீசப்பட்டு நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் கிடப்பது தெரியவந்தது.
அந்த உடல், மாயமான சோனிப்பட் இளம்பெண்ணின் உடல்தான் என்பது அவரது உடையின்மூலம் தாயாரால் அடையாளம் காணப்பட்டது.
அந்தப் பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ரோட்டக்கில் உள்ள ‘பி.ஜி.ஐ.எம்.எஸ்.’ என்னும் முதுநிலை மருத்துவக்கல்வி நிறுவன மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், அந்தப் பெண்ணின் கபாலம் (மண்டையோடு) அடித்து நொறுக்கப்பட்டிருப்பதும், அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான ஆயுதங்களை கொண்டு சிதைத்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக அந்த மருத்துவமனையின் தடய அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் எஸ்.கே. தட்டர்வால் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் கொடூரமான முறையில் கற்பழித்து, கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிற சுமித் (24) மற்றும் விகாஸ் (28) என்னும் 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இவர்கள் இருவருக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு உள்ளது, அவர்களில் 5 பேர் சுமித்தின் உறவினர்கள் என்று அந்தப் பெண் தரப்பில் கூறுகின்றனர்.
நடந்தது என்ன என்பது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் தரப்பில் கூறும்போது, “கற்பழித்து, கொடூரமாக கொல்லப்பட்டுள்ள அந்தப் பெண்ணை, கைது செய்யப்பட்டுள்ள சுமித் பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அந்தப் பெண்ணை அவர் வழி மறித்து மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அப்போது அந்தப் பெண் அவரை அடித்து விட்டு வீட்டுக்கு ஓட்டம் பிடித்து விட்டார். அதைத் தொடர்ந்துதான் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்கின்றனர்.
இந்த வழக் கில் விசாரணை நடத்துவதற்கு சோனிப்பட் தலைமையக போலீஸ் டி.எஸ்.பி. முகேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பெண்கள் பாதுகாப்பில் மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கூறி உள்ளார்.
அரியானா மாநிலத்தை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில், கொலையுண்ட பெண்ணின் பெற்றோரை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா சர்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த வழக்கில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது போன்று கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.10½ லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அரியானா பா.ஜனதா அரசு அறிவித்துள்ளது.
Average Rating