நாளை அன்னையர் தினம்: தாயை இறுதிவரை  காப்போம்..!!

Read Time:13 Minute, 43 Second

201705131355450623_Mothers-day-in-tomorrow_SECVPFஉலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் எனும் உறவுதான். உலகெங்கும் பல்வேறு வகையான பண்பாடுகள், கலாச்சாரம் காணப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்குமே பெரிதும் போற்றப்படும் உறவும் தாய்தான்.

மனிதகுலம் தோன்றி சமூக வாழ்வு தொடங்கும்போது தாய்வழிச் சமூகமாகத்தான் தொடங்கி நடைபெற்று வந்துள்ளதை பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலமும், இந்திய நாட்டின் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் கோசலராமன், கங்கைமைந்தன், குந்திநந்தனன் என்று தாயின் பெயருடனே அழைக்கப்பட்டதன் வழியும் காண்கிறோம்.

தாய் என்ற சொல்லில் இருந்துதான் தாயம் என்ற சொல் பிறந்தது. தாயம் என்றால் உரிமை என்று பொருள். தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே அதாவது தாயே வேட்டையாடுபவளாக இருந்து தன் மக்களை காப்பாற்றி வளர்ப்பவளாகவும், தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தாள். பொருள்சார்ந்த வாழ்க்கை தொடங்கும்போது, நிலவுடமைச் சமூகம் தோன்றிய பின்னர்தான் தந்தைவழி சமூகமாக மாறியதோடு தாயின் நிலைப்பாடு இல்லத்தையும், குழந்தைகளையும் பராமரிப்பதோடு நின்றுவிட்டது.

தாயின் பெருமை என்பது எல்லோரும் அறிந்ததுதான். பொதுவாக பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். கணவனின் அன்பைப் பெற தன்னை அழகாக்கும் பெண்ணானவள் தாயாய் மாறும்போது தன் குழந்தைக்காக தன் அழகை இழக்கிறாள். வயிற்றுச் சுருக்கங்களோடு, தன் தோற்றமும் மாறிவிடுவதைப் பற்றி அவள் கவலைப்படுவதில்லை. உயிருக்குள் இன்னொரு உயிரை சுமக்கும் அரிய வாய்ப்பு உயிரினங்களில் பெண்ணுக்குத்தான் கிடைத்துள்ளது என்பதை எண்ணி பெருமையடையும் தாய், தன் குழந்தைகளுக்காக பசி, தூக்கம், விரும்பும் உணவு, தன் சுகம் என அனைத்தையும் தியாகம் செய்து வளர்த்தெடுக்கிறாள். அதனால்தான் அனைத்தையும் துறந்த பட்டினத்தார் தாய்ப் பாசத்தை துறக்க முடியாமல்,

“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று

கைப்புறத்தில் ஏந்தி கனகமுலைத் தந்தாளை இனி

எப்பிறப்பில் காண்பேனோ!” – என்று பாடுகிறார்.

தன்னுடைய உயிராலும் மெய்யாலும் நமக்கு உயிர்மெய் தந்தவள் நம் அம்மா என்பதனை அச்சொல்லில் உள்ள எழுத்துக்களையே சான்றாக்கித் தருகிறது நம்முடைய அமுதத்தமிழ். ஆம்! ‘அ’ என்பது உயிரெழுத்து ‘ம்’ என்பது மெய்யெழுத்து ‘மா’ என்பது உயிர்மெய்யெழுத்து. தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன் வாழ்வை தன்னலமற்று அர்ப்பணிப்பவள் தாய்தான். அதனால்தான்,

“தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்”

என்கிறார் பூவை செங்குட்டுவன்.

“கன்னித் தமிழும் கன்றின் குரலும்

சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா,

கருணை தேடி அலையும் உயிர்கள்

உருகும் வார்த்தை அம்மா.. அம்மா”

என்பார் கவியரசர் கண்ணதாசன்.

தாயை வணங்கிப் போற்றுதலும், தாய்வழி பாடும் என்று? எங்கு தொடங்கியது? எனும் கேள்விகளுக்கு விடைதேடிப் போனால் அது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் 5000 ஆண்டுகள் பழங்காலத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும்.

மிகப் பழங்காலந்தொட்டே எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், இந்திய நாட்டில் சிந்துசமவெளி நாகரிகத்து மக்கள் என உலகின் தொன்மையான நாகரிகம் தோன்றிய அனைத்துப் பகுதிகளிலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அன்னையர் தினம் கொண்டாட ஆரம்பித்தார்கள். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஓரிடத்திலிருந்து வேற்றிடங்களுக்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு தங்கள் தாயைச் சந்திப்பதற்காக வருடத்தில் மே மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் விடுமுறை அளித்தார்கள். அது ‘மதர்ஸ் சண்டே’ என அழைக்கப்பட்டது. அந்நாளில் பரிசுப் பொருட்களுடன் தங்கள் தாயைச் சந்திக்கச் செல்வார்கள். ஆனால் அமெரிக்க நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஐரோப்பியர்களால் தங்களின் பாரம்பரியமான மதர்ஸ் சண்டே போன்றவற்றை கொண்டாட முடியாமல் போனது.

1870ல் முதன்முதலாக வட அமெரிக்காவில் ஜூலியா வார்ட் ஹோவே எனும் பெண்மணிதான் ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பேரழிவும், பெருமளவிலான உயிரிழப்புகளும் ஜூலியாவை பெரிதும் வேதனையுறச் செய்தது. ஒரு தாய் பெற்ற பிள்ளை, இன்னொரு தாய் பெற்ற பிள்ளையை கொல்கின்ற யுத்தங்கள் இனி நடைபெறக் கூடாது என்று போர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க, உலகின் அனைத்து தாய்மார்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜூலியா ஹோவே வேண்டுகோள் விடுத்தார். உலகெங்கும் அமைதியையும் தாய்மையையும் போற்றும் நாளாக அன்னையர் தினம் உலகளவில் கொண்டாடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வட அமெரிக்க மகளிர் அமைப்புகள் 1873 ஆம் ஆண்டு ஜூன் 2ந் தேதியை புதிய அன்னையர் தினமாக அறிவித்துக் கொண்டாடினர். ஜூலியாவின் நிதியுதவில் பத்தாண்டுகள் இக்கொண்டாட்டம் கடைப்பிடிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின்னர் அன்னையர் தினமும் மறைந்து போனது.

ஜூலியாவுக்கு பின் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜீனியா மகளிர் அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வந்த அன்னாரிவீஸ் ஜார்விஸ் என்ற பெண்மணி உள்நாட்டு யுத்தத்தால் பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் நாளாக ‘அன்னையர் தினம்’ கொண்டாட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்ற அவர் மகளான அன்னா மேரி ஜார்விஸ் பல முயற்சிகள் மேற்கொண்டார். ‘அன்னையர் தினத்தை’ முறைப்படி அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரிடம் எடுத்துரைத்து போராடி வந்தார். இறுதி முயற்சியாக அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் வரை சென்று அன்னையர் தினத்தை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று கோரினார். 1912 ஆம் ஆண்டு மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை ‘அன்னையர் தினம்’ கொண்டாட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்னா மேரி ஜார்விஸின் இருபதாண்டுக் கோரிக்கை நிறைவேறியது. தற்போது உலகமயமாக்கலால் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

உணர்வுகளாலும், அன்பு பாசத்தாலும் சங்கமிக்க வேண்டிய அன்னையர் தினமானது முதலாளித்துவத்தால் வணிகமயமாக்கப்பட்டது. எனவே மேரி ஜார்விஸ் அன்னையர் தினத்தின் நோக்கம் சீர்குலைக்கப்பட்டதெனக் கூறி அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார். ஆனால் அமைதியை கெடுப்பதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். மனவேதனையுடனே மறைந்து போனார் மேரி ஜார்விஸ்.

ஆண்டிற்கு ஒருமுறை அன்னையர் தினத்தன்று மட்டும் பெற்ற தாயை சந்தித்து சம்பிரதாயமாக பரிசுப் பொருட்கள் கொடுத்து விடுவதோடு தாயைப் போற்றுதல் முடிந்துவிடுமா என்ன?

நம்முடைய நாட்டில் தாயின் உழைப்பை முழுமையாய்ப் பெற்றுக் கொண்டு முதுமையில் அத்தாயை கவனிக்காமல் விட்டுவிடுதல் என்பது அதிகரித்து வருவதுதான் பெரிதும் வேதனைக்குரியது. ஆண் பிள்ளையானாலும், பெண் பிள்ளையானாலும் அவரவர் தாயை அவரவரே பொறுப்போடு இறுதிவரை பார்த்துக் கொள்வதுதான் தாய்க்குச் செய்யும் உண்மையான கடமையாகும். அதுதான் உண்மையான பாசத்தின் வெளிப்பாடு ஆகும்.

பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்

அது வாய்மை! அதன் பேர் தாய்மை!

என்பது கவியரசர் கண்ணதாசனின் தாய்மை தரிசனம்.

தன் வயிற்றில் கருவைச் சுமக்கும் எந்தத் தாயும் சிறந்த பிள்ளையை பெற வேண்டுமென்றே விரும்புகிறாள். கரு உருவாகிவிட்டதென அறிந்த நாள்முதலே தன் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்றும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் வாழும் நற்பண்புகள் மிக்க பிள்ளையாய் வாழும் வாழ்க்கை பெற வேண்டும் என்றும் பல்வேறு கற்பனைகளையும், கனவுகளையும் வளர்த்துக் கொள்கிறாள்.

“எவள் இல்லையென்றால் நீ பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்துவிட்டால் மீண்டும் அடைய முடியாதோ, அவளே உன் வாழ்க்கைத் தத்துவங்களை துவக்கி வைக்கிறாள். அவள்தான் உன் தாய்’’என்கிறார் விவேகானந்தர்.

அதுதான் தாயின் மலர்ப்பாதம் என்பது புலமைப்பித்தனின் வைரவரிகள்.

எத்தனையோ மாற்றங்களை கண்டுவரும் இம்மாய உலகில் உறவுகளின் அருமையும் பெருமையும் மிகச்சாதாரணமாக மாறிவரும் சூழலில், முதியோர் இல்லங்கள் முளைத்தெழுந்து முதுமையின் உறைவிடமாகி உடல், மன வலிகளோடு போராடி, வாழ்ந்ததே வீணாகிவிட்டதே என வாழவும் இயலாமல், சாகவும் முடியாமல் தவிக்கின்ற நிலையை நாம் கண்டும் காணாமல் கடக்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். நமக்கு முதுமை வரும்போதுதான் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றோம்.

உணர்ந்து வாழக் கூடிய இந்தப் பிறப்பில் நம்முடைய உறவுகளை விட்டுவிடாமல் வாழ்வதும், பெற்றவர்களை அவர்களின் நிறைவு காலம்வரை பாதுகாத்து, பசிக்கவிடாமல் உணவளித்து, நோயுற்றால் மருத்துவம் செய்து மனம் புண்படாமல் பராமரிப்பதுதான் மானுட தர்மம். அதுமட்டுமல்லாது அடுத்த தலைமுறைக்கு செயலால் கற்றுத்தரும் மிகச் சிறந்த பாரம்பரியமும் இதுதான். உறவுகளைப் பாதுகாப்போம். உயிர்தந்த தாயை போற்றிப் பேணுவோம். அன்னையர் தினத்தை உண்மையாய்க் கொண்டாடுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ரஜினிகாந்தை சந்தித்து போட்டோ எடுக்க முடியும்..!!
Next post விஜய் 61 படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன?..!!