தனித்து விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 37 Second

downloadதமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள் பலர், தற்போது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதில், மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவர், சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது.

அவரது கணவரும் முன்னாள் போராளி என்று தெரிவிக்கும் செய்தி, கணவர் இறந்த பின்னர், குடும்பத்தைக் கொண்டுசெல்ல இயலாமல், மன அழுத்தத்துக்கு மத்தியிலேயே இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, ஆறு வயதில் பிள்ளையொன்றும் உள்ளது.

முன்னைய காலங்களில் என்றால், இந்தச் செய்தி, பாரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும். ஆனால், முன்னாள் போராளிகளின் இழப்புகள், அவர்களின் வேதனைகள், தற்போது சிறு செய்திகளாக மாறிவிட்டன. முன்பைப்போல அவை, பிரதான செய்திகளாகக் கூட வருவதில்லை. வவுனியாவிலும் முன்னாள் போராளி ஒருவர், அண்மையில் தற்கொலை புரிந்திருந்தார். அந்தச் செய்தியும், பெருமளவுக்குப் பேசப்படவில்லை.

இந்த நிலையில்தான், முன்னாள் போராளிகளின் நிலைமை குறித்து, ஆராய வேண்டிய பொறுப்பு உள்ளது.
இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருந்த போராளிகளில் பலர், இராணுவத்திடமும் பொலிஸாரிடமும் சரணடைந்தனர். அதேபோல இன்னும் பலர், கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தின் மீது, தமிழ் மக்கள் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் காணப்பட்டாலும், முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு என்பது, ஓரளவு வரவேற்கத்தக்கதாக இருந்தது. 11,000 – 12,000 வரையிலான முன்னாள் போராளிகள், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் சொற்பிரயோகப்படி, “சமூகத்துக்குள் மீள இணைக்கப்பட்டனர்”.

இவ்வாறு புனர்வாழ்வு செய்யப்படாது, எத்தனை போராளிகள் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், சில நூறு போராளிகள் என்றே கருதப்பட்டது. எனவே, பெரும்பான்மையான போராளிகள், முன்னாள் போராளிகள் ஆகி, சமூகத்துக்குள் இணைந்தனர்.

முன்னாள் போராளிகளில் சிலர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்துகொண்டனர். இன்னும் சிலருக்கு, சிறு கடன்கள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், பெரும்பான்மையானோர், போதுமான வழிகாட்டல்கள், உதவிகள் இன்றியே, “சமூகத்தோடு மீள இணைக்கப்பட்டனர்” என்பது தான், யதார்த்தமாக இருந்தது.

அவர்களுடைய பிரச்சினைகள் அவ்வாறிருக்க, அவர்களுடைய தமிழ்ச் சமூகத்தில் கூட, அவர்களை ஏற்று, சாதாரண பிரஜைகளாக நடத்தும் பண்பு, குறைவாகவே இருந்தது என்பதுதான் உண்மை. அவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் போன்றே நடத்தப்பட்டனர். அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டனர். எந்தச் சமூகத்துக்காக அவர்கள் போராடினார்களோ, அதே சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலையில், மன அழுத்தமும் ஏனைய பிரச்சினைகளும், அவர்களை நாடி வருவதில் எந்தவிதமாக அதிசயமும் கிடையாது.

எழுத்தாளரான தியே நிஷிமோரி என்பவர், “நல்ல பண்பு என்பது, பதிலாக உங்களுக்கு எதையும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பது. ஒழுக்கம் என்பது, யாரும் உங்களைப் பார்க்காத போது, நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பது” என்று கூறியிருந்தார்.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையிலும், முன்னாள் போராளிகளை நடத்தும் விதத்தைப் பார்க்கும் போது, இந்தக் கூற்றுத்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு காலத்தில், தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியினரின் நாயகர்களாகவும் அவர்களின் பெருமையாகவும் காணப்பட்ட முன்னாள் போராளிகள், இப்போதைய நிலையில், அவர்களுக்கு உடனடிப் பயனற்றவர்களாக மாறியுள்ளார்கள். அந்த நிலையில், அவர்களைப் புறக்கணிக்கும் நிலை என்பது, “பயன்படுத்திவிட்டு, வீசியெறியும்” மனநிலையையே காண்பிக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதோ, அதன் தலைமைத்துவம் மீதோ, அல்லது அதன் இறுதிக்கட்ட நகர்வுகள் மீதோ, என்னவாறான விமர்சனங்களும் ஒருவரிடத்தில் காணப்படலாம். இல்லாவிடில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, முழுமையாக ஆதரிப்பவராகவும் ஒருவர் காணப்படலாம். ஆனால், அந்த எண்ணங்கள், கருத்துகள், முன்னாள் போராளிகள் மீது பிரதிபலிக்கக்கூடாது. அரசாங்கத்தின் புனர்வாழ்வுச் செயன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, சமூகத்தில் “முன்னாள் போராளி”களாக இணைக்கப்பட்ட பின்னர், சாதாரண பிரஜைகள் போன்றே அவர்கள் நோக்கப்பட வேண்டும்.

இதில், ஒரு முக்கியமான யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவர்கள் எவ்வளவோ, அவர்களைப் போல, இணைக்கப்பட்டவர்களும் அதிகம். தானாக விரும்பி இணைந்தவர்கள் தவிர, சமுதாய அழுத்தம் காரணமாக இணைந்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். முன்னாள் போராளிகளோடு உரையாடும் போது, “வீட்டில் 5 பிள்ளைகள். நான் தான் மூத்தவன்/ள். ஏனையோருக்காக நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டேன்” என்று வரும் கதைகள் ஏராளம்.

அதேபோல, கட்டாயத்தின் பேரில் சேர்க்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, இறுதி யுத்தக் காலப்பகுதியில், இது அதிகரித்திருந்தது. எனவே, இந்தப் பத்தியாளரும் இந்தப் பத்தியை வாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்களும் கூட, முன்னாள் போராளியாக இருந்திருக்க முடியும். அந்த இடத்தில், அந்த நேரத்தில் இல்லாத அதிர்ஷ்டம் காரணமாகவே, “முன்னாள் போராளி” என்ற அடைமொழி இல்லாமல் எம்மால் இருக்கக்கூடியதாக இருக்கிறது. எமக்கு அது அதிர்ஷ்டம் என்றால், சிக்கிக் கொண்டவர்களுக்கு துரதிர்ஷ்டம். எனவே, அதிர்ஷ்டத்தைப் பெற்றுக் கொண்ட நாம், துரதிர்ஷ்டத்தைக் கொண்டவர்களுக்காகக் குரலெழுப்ப வேண்டியது அவசியம்.

மறுபக்கமாக, பொதுமக்களிடத்தில் காணப்படும் அச்சத்தை அல்லது அது போன்றதோர் உணர்வையும், ஓரளவு நியாயப்படுத்த முடியும். தெற்கிலும் சர்வதேச மட்டத்திலும் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள முன்னாள் போராளிகளே, அரசாங்கத்தின் இலக்காக மாறுகின்றனர். எனவே, அந்த இலக்காக, தாங்கள் மாறக்கூடாது என, பொதுமக்கள் எண்ணுகின்றனர். ஆனால், போர்க் காலத்தில், இந்த அச்சங்களை மனதில் வைத்துக் கொண்டா செயற்பட்டோம் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும். போர்க் காலத்திலேயே அவ்வாறு செயற்பட முடியுமானால், தற்போதுள்ள ஓரளவு மிதவாதப் போக்குள்ள அரசாங்க – அதன் காரணமாக அதன் மீதான விமர்சனங்கள் இல்லாமற் போகப் போவதில்லை – காலத்தில், முன்னாள் போராளிகளை அரவணைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்நிலைமை இவ்வாறிருக்க, மே மாதம் வந்துவிட்டால், உணர்ச்சிகரமான கோஷங்களையும் உசுப்பேற்றக்கூடிய வார்த்தைகளையும் கூறக்கூடிய அரசியல்வாதிகள், போர் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், முன்னாள் போராளிகள் தொடர்பாகப் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விடயத்தில் எவ்வாறான பங்கை அளித்திருக்கிறது என்பது கேள்வியாகவே உள்ளது. இதுவரை காலமும் முன்னாள் போராளிகளை, கட்சிக்குள் இணைப்பதற்கே மறுத்துவந்த நிலையில், தற்போது ஏதோவொரு காரணத்துக்காக, அவர்களை இணைக்கத் தயார் என்று கூறியிருக்கின்ற கூட்டமைப்பு, அவர்களின் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என்பதே கேள்வியாக இருக்கிறது.

“நாங்கள் வெறுமனே மாகாணசபை/நாடாளுமன்ற உறுப்பினர்கள். எங்களுக்கு அதிகாரங்கள் இல்லை. எங்களுக்கு நிதி இல்லை. எங்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறுவார்களாயின், அதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்த அரசாங்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு என்பது, கணிசமாக உள்ளது என்பது உண்மை. அவர்கள் கோருவதை, ஆகக்குறைந்தது செவிமடுக்கவாவது, அரசாங்கம் தயாராக இருக்கிறது என்பதும் உண்மை. எனவே, அதிகாரம் இல்லை, நிதி இல்லை போன்ற காரணங்களை, இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததும் முழு மாகாண சபைக்கும் இல்லாத அதிகாரம், கிடைத்துவிடும் என்று எண்ணுவது முட்டாள்தனம். அமைச்சுப் பதவி கிடைத்தாலும், “இந்த அமைச்சுக்கு அதிகாரம் போதாது” என்ற கருத்தே வரும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமன்றி, அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமாக இணைந்து செயற்படுவது அவசியமானது.

ஆனால், அதைவிட முக்கியமாக, முன்னாள் போராளிகளையும் எம்மைப் போல சாதாரண பிரஜைகளாகப் பார்க்க வேண்டிய பொறுப்பு, தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோமெனில், முன்னாள் போராளிகளின் எல்லாப் பிரச்சினைகளும் தீராவிட்டாலும் கூட, சமூகத்தின் ஓர் அங்கமாக அவர்கள் உணர்வதற்கு உதவும். அது, பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான சிறந்த அடித்தளமாக அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவை அருகே வாலிபரை கொன்று தலையை போலீஸ் நிலையத்தில் வீசிய நண்பர்கள்..!! (வீடியோ)
Next post இயக்குனர் பாலாவுக்காக பரோட்டா மாஸ்டர் ஆன நாயகன்..!!