போரில் வாழ்வை தொலைத்தவர்களும் தொலையாத போர் வடுக்களும்..!! (கட்டுரை)
இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட, தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது.
போரில் தமிழ் மக்கள் சந்தித்த, மேலும் அதன் தொடர்ச்சியாக தற்போதும் அனுபவிக்கின்ற வேதனைகள், வார்த்தைகளில் வடிக்க முடியாதவை; பெரும் கறைகள் படிந்தவை. கொடிய யுத்தத்தில் தம் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் வாழ்வை இழந்தவர்களாகவே, நடைப்பிணங்களாக நம் தேசத்தில் ஊசலாடுகின்றனர்; உலாவருகின்றார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதலால் தமது கணவனைப் பறிகொடுத்த, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பெண்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே அல்லல்படும் அவல வாழ்வுடன் போராடுகின்றனர்.
இவ்விரு மாகாணங்களிலும் அண்ணளவாக சுமார் 90,000 க்கும் அதிகமான விதவைகள் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதாவது 90,000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.
ஒரு குடும்பத்தில் சராசரியாக நான்கு அங்கத்தவர்கள் உள்ளதாக கணிப்பிட்டாலும் ஏறக்குறைய இம் மாகாணங்களில் 350,000 க்கு அண்மித்த சனத்தொகையைக் கொண்ட மக்கள், பெண்களின் உழைப்பில் தங்கி வாழ்பவர்களாக கூறலாம்.
ஆகவே, போரில் தன் கணவனைப் பறிகொடுத்த ஒரு பெண், தனது உச்ச சக்திக்கு அப்பால் ஆயிரம் சிரமங்களுக்கு மத்தியில் குடும்பத்தை வழி நடத்துகின்றாள். இவர்களில் கணிசமானோரின் வயது 22 – 35 க்கும் இடைப்பட்டதாகவே உள்ளமை கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயமாகும்.
சில குடும்பங்களில் பிள்ளைகளது அப்பா, அம்மா என இருவருமே போரில் மரணித்துப் போக, வயதான பாட்டி, தாத்தா ஆகியோரின் பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றனர்.
அத்துடன் இவர்கள் கடுமையான உளப்பாதிப்புக்கும் உட்பட்டுள்ளனர். தாழ்வு மனப்பான்மை, சமூகத்தில் முன்னிலை வகிக்காத பாங்கு, பாலியல் இம்சைகள், பொருளாதார நலிவு, எதிர்கால வாழ்வு எனப் பல கவலைகளின் ஒட்டு மொத்த திரட்சிகளையும் ஒன்று சேர அனுபவிக்கின்றனர்.
அன்புக்கு உரியவர்களின் திடீர் மரணம், பிரிவுத் துயர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டமையால் தினம் அவர்கள் நினைவுகளுடனேயே வாழ்கின்றனர். தன் கணவருடன் ஒன்றாக வாழ்ந்த அந்த இனிய நாட்களை அசை போடுகின்றனர்; மீட்டுப் பார்க்கின்றனர்.
அது மீளக் கிடைக்காதா என ஏங்குகின்றனர். இவை ஒரு போதும் மீளக் கிடைக்காது என்ற சிந்தனையில் நீடித்த எதிர்மறை சிந்தனை உடையவர்களாக மாறுகின்றனர்; மாற்றப்படுகின்றனர்.
பல இரவுகளில் ஆற்றொனா பிரிவுத் துயரில் தனியாக அழுகின்றார்கள். தாங்கள் இவ்வாறாகத் தனி மரமாக அழுவதைக் கூட தங்கள் குழந்தைச் செல்வங்கள் கண்டு கொள்ளக் கூடாது என்பதில் கூட சிலர் கவனமாக உள்ளனர். ஏனெனில், தாம் கவலையில் மிதந்தாலும் தம் சோகங்கள் தங்கள் காரிருள் சூழ்ந்த வாழ்க்கை, குழந்தைகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி, அவர்களது இனிய வாழ்வு இருண்டதாக மாறக் கூடாது என்ற தாய்மை அங்கு உயர்ந்து நிற்கின்றது.
எமது சமூகத்தில் இவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, சட்ட ரீதியான சிக்கல்களை நீண்ட பட்டியல் இடலாம். கிராமப் புறங்களில் சகுனம் பார்க்கும் சம்பிரதாயங்கள், பாரம்பரியங்கள் உள்ளன. அதில் கணவன்மார்களைப் பறிகொடுத்தவர்களைக் கண்டு, காரியம் ஆரம்பிப்பது எதிர் மறையான விளைவுகளைக் கொண்டு வரும் என நம்பப்படுகின்றது.
இது, கணவன்மார்களைப் போரில் பறிகொடுத்தவர்களது தனிப்பட்ட கௌரவத்துக்கு பாரிய பின்னடைவாக உள்ளது. மேலும், சிலர் “இவள் ராசி இல்லாதவள்; இவளைத் திருமணம் செய்ததாலேயே அவன் இறந்தான்” எனக் கூறியே அந்தப் பெண்னை சொல்லால் சாகடித்து விடுகின்றனர்.
இவ்வாறான நிலையில் ஆதரவாக, அன்பாக, நிழலாக உள்ளவர்களின் இது போன்ற செயற்பாடுகள், அவளை வாழ்க்கையின் எல்லைவரை கொண்டு சென்று விட்ட பல சம்பவங்கள் உள்ளன; இன்னும் தொடர்கின்றன.
ஒரு பெண் தனது சோகக் கதையை இவ்வாறாகத் தொடர்கின்றாள். “27 ஆவது வயதில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. 20 வயதில் தொடங்கிய காதல், ஏழு வருடங்களின் பின் கை கூடியது. ஆனால் திருமணம் நடைபெற்று ஏழு மாதங்களின் பின், கணவன் காணாமல் ஆக்கப்பட்டார். ஏழு வருடங்களாகக் காத்திருந்து கைகூடிய வாழ்வு, ஏழு மாதங்களில் கை நழுவியது. தேடாத படை முகாம்கள் இல்லை; படி ஏறாத அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இல்லை. தற்போது என் உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளும்படி என்னைத் தொடர் கோரிக்கை (தொந்தரவு) செய்கின்றனர். ஆனாலும், அவர் மீள வந்தால் அவருடன் வாழ்வு; இல்லையேல் அவர் நினைவுகளைச் சுமந்தபடியே மிகுதி நாட்களும் நகரட்டும்” எனத் தெரிவிக்கின்றார்.
தமது எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை அற்றவர்களாகவும் வாழ்வின் நம்பிக்கைகளைத் தொலைத்தவர்களாகவும் மொத்தத்தில் நடைப்பிணமாக வாழ்கின்றனர். ஏதோ பிறந்தோம் தமது பிள்ளைகளுக்காகவேனும் வாழ்ந்து விட்டுப் போவோம்; வாழ்ந்து தொலைப்போம் என வாழ்கின்றனர். (வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்) எனது அப்பா எங்கே? அப்பாவுக்கு என்ன நடந்தது? ஏன் அப்பாவுக்கு எங்களில் பாசம் இல்லையா? அப்பா எப்போ வருவார்? என் அப்பா எனக்கு வேண்டும் என தனது அன்பு குழந்தைகளின் கேள்விக் கணைகளுக்கு விடை கொடுக்க முடியாமல் திணறியபடி வாழ்கின்றனர்.
தமது பழைய நினைவுகள் மீள மீள ஞாபகப்படுத்தப்படுவதால் இரவு நித்திரையை தொலைத்தவர்களாக வாழ்கின்றனர். ஆதலால் நித்திரை இன்மையால் ஏற்படக் கூடிய பல நோய்கள் இவர்களை மறுபக்கம் வாட்டுகின்றது. அதன் தொடர்ச்சியாக பகலில் சோர்வு, பசியின்மை, எதிலும் பிடிப்பற்ற தன்மை என நோய்களின் பட்டியலும் கூடவே வளருகின்றது.
போரில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு பெண்ணின் கணவன் போரில் இறந்ததால், அந்த அபலைப் பெண்ணின் கதை இவ்வாறு தொடர்கின்றது.
“எனது கணவன் என்னுடன் இருந்த வேளையில் எமது குடும்பத்துக்குத் தேவையான உப்பு தொடக்கம் உடுப்பு வரை கொள்வனவு செய்யக் கூடிய வல்லமை இருந்தது. தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி என அனைத்துப் பண்டிகை கொண்டாட்டங்களும் கோயில் திருவிழாக்களும் களை கட்டும். எப்போது பெருநாட்கள் வரும் என காத்திருப்போம்.
ஆனால் தற்பேது இவ்வாறான நிகழ்வுகள் வருவது எம்மைச் சங்கடத்துக்கு உட்படுத்துவதாக உணர்கின்றோம். விழாக்களில் பற்று அற்றவர்களாக வாழ்கின்றோம்” என அவர்கள் கூறுகின்றனர்.
தன் கணவன் தன்னுடன் வாழ்ந்த அந்த இனிமையான காலப்பகுதியில் காலையில் பணிக்கு செல்லும் தனது கணவன்; எப்போது வீடு திரும்புவான் என வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து, அவனுக்கு விருப்பமான உணவுகளை ஆக்கித் தன் பிள்ளைச் செல்வங்களுடன் கூடிக் குலாவி ஆசையாக அடிபட்டுச் சாப்பிட்டவர்களின், சமையலறையில் இன்று பூனை நிரந்தரமாகப் பள்ளி கொள்ளும் அபாக்கிய நிலை.
இவ்வாறனவர்கள், இன்று குடும்ப வறுமையைப் போக்க பணிக்குச் செல்கின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு 500 தொடக்கம் 600 ரூபாய் வரையில் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது. அண்ணளவாக இவர்களால் மாதாந்தம் 13,000 ரூபாய் தொடக்கம் 15,000 ரூபாய்க்கு இடைப்பட்டதாக ஈட்டிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. மாதாந்தம் ஏறக்குறைய 40,000 ரூபாய் அளவில் சம்பளமாகப் பெறும் ஓர் அரச உத்தியோகத்தரே திண்டாடும் வேளையில் இவர்களது வருமானம் யானைப் பசிக்கு சோளப் பொரியே.
கடந்த வருடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் இணைந்து ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் பணிப் பெண் வேலைக்காகச் சென்ற குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களே பாடசாலை செல்லாத பள்ளிச் சிறார்களாக அதிகம் இனங்காணப்பட்டனர்.
அத்துடன் நாளாந்தம் கூலி வேலை செய்வதும் அதற்காக சிலர் பிள்ளைகளை அழைத்துச் செல்வதும் மேலும் சிலர் மூத்த பிள்ளையை வீட்டில் விட்டு வேலைக்கு செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சிறார்கள் பாடசாலை செல்லாது சிறுவர் தொழிலாளர்களாகவும் சில வேளைகளில் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் உட்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, அக் குடும்பங்களின் அடுத்த சந்ததி கூட அல்லல் படாமல் அக்கறை கொண்டு அவர்களை பாதுகாக்க வேண்டிய பெரிய தார்மீக கடமை நம் அனைவருக்கும் நிறையவே உள்ளது.
இவ்வாறாக வடக்கு, கிழக்கில் கணவனைப் போரில் பறிகொடுத்து இருண்ட வாழ்வில் உறையும் தமிழ்ப் பெண்களைப் போலவே, அதே போரில் தமது கணவனை இழந்த (சிறிலங்கா படையினரின்) சிங்களப் பெண்களும் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. ஆகையால், மாதாந்தம் சீரானதும் நிலையானதுமான உறுதிப்படுத்தப்பட்ட வருமானம் உள்ளது. இதனை விட இலங்கை அரசாங்கத்தினது பல உதவித் திட்டங்களும் சலுகைகளும் காணப்படுகின்றன.
ஆனாலும், இந்தக் கொடிய யுத்தம், கொடுமைகள் நிறைந்த போர் இவ்வாறான எவ்விதத்திலும் ஈடுசெய்ய இயலாத பல ஆயிரம் சோகங்களை மட்டுமே அள்ளிக் கொட்டி விட்டு சென்று விட்டது.
ஆட்சியில் இருந்தவர்கள் போரை முடிவுறுத்தியதாகவும் ஆட்சியில் இருப்பவர்கள் நல்லாட்சி நிலவுவதாகவும் கூறிக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வு இன்னமும் பெரும் போருக்குள் வாழ்கின்றது என்பது மட்டும் நிறுத்திட்டமான உண்மை.
Average Rating