ஆரோக்கியமான ஊடகச் சூழலின் அவசியம்..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 9 Second

mediaஉலக பத்திரிகைச் சுதந்திர தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் இத்தினம், இவ்வாண்டும் வந்து போயிருக்கிறது. மகளிர் தினம், சிறுவர் தினம், விசேட தேவையுடையோர் தினம் போல, இதுவும் ஒரு தினம். ஆண்டின் ஒரு நாளில், அத்தினம் குறித்த கலந்துரையாடல்கள் மட்டுப்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிடக்கூடாது. இவ்வாறான தினங்கள் மூலம், அவற்றைப் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் அவை தொடர வேண்டும்.

ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில், நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என, 4ஆவது இடத்திலேயே ஊடகங்கள் வருகின்ற போதிலும், அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு, ஊடகங்களுக்கு உண்டு.

ஊடகங்கள் என்று வரும் போது, வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற பெருந்திரள் ஊடங்களைத் தாண்டி, இணையத்தில் காணப்படும் செய்தித் தளங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களும் கூட, ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

இந்த ஊடகங்களால் கட்டியெழுப்பப்படும் ஆரோக்கியமான சூழலே, ஆரோக்கியமான ஜனநாயகத்தையும் ஆரோக்கியமான சமூகங்களையும் கட்டியெழுப்ப முடியும். ஆனால், இன்றைய காலகட்டத்தில், உலகத்திலும் சரி, இலங்கையிலும் சரி, ஆரோக்கியமான ஊடகச் சூழல் நிலவுகிறதா என்ற கேள்வி, முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால், கடந்த புதன்கிழமை (26) வெளியிடப்பட்ட, ஊடகச் சுதந்திரச் சுட்டி, இது பற்றிய கலந்துரையாடலுக்கு முக்கியமானது. ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும், ஊடகச் சுதந்திரமென்பது ஆபத்துக்கு உள்ளாகியுள்ளதாக, அதன்போது குறிப்பிடப்பட்டது.

இந்தச் சுட்டியில், இலங்கைக்கு 141ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், இதே இடத்தில் தான் இலங்கை காணப்பட்டது. மேற்கத்தேய நாடுகள், தங்களை முன்னிலைப்படுத்துவதற்கான தகவலே இதுவென, இலகுவாகக் கூறிவிட்டுக் கடந்துபோக முடியும்.

ஆனால், உச்சபட்ச ஊடகச் சுதந்திரம் காணப்படுகிறது என நாம் எண்ணும் ஐக்கிய இராச்சியம், 40ஆவது இடத்தில் காணப்படுகிறது; ஐக்கிய அமெரிக்கா, 43ஆவது இடத்தில் காணப்படுகிறது. இலங்கையை விட உக்ரேன், ஆப்கானிஸ்தான், நேபாளம், பிரேஸில், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, மாலி, மாலைதீவுகள், பிலிப்பைன்ஸ், சிம்பாப்வே, கமரூன், மியான்மார், வெனிசுவேலா போன்ற, உள்நாட்டுப் போர் அல்லது உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவும் நாடுகள், சிறப்பான ஊடகச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளன என்பது, இங்குள்ள நிலைமையை இலகுவாக வெளிக்காட்டுகிறது.

ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக்கூடியது எனக் கருதப்படும் இந்த அரசாங்கம் வருவதற்கு முன்பாக, இலங்கையில் நிலைமை, 165ஆவது இடத்தில் காணப்பட்டது. எனவே, இந்த முன்னேற்றமென்பது முக்கியமானது என்ற போதிலும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறிய இலங்கை, 2016இலிருந்து 2017க்கு, எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது கவலையானது.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது, ஊடகங்களினதும் மக்களினதும் உரிமைகளுக்காகப் போராடுவதும், ஆட்சிக்கு வந்த பின்னர், எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது, தவறானவை என்று சொன்னவற்றைச் செய்வதும் வழக்கமானது தான். எனவே, இதுவொன்றும் ஆச்சரியமளிப்பதாக இல்லை.

இது இவ்வாறிருக்க, ஊடகச் சுதந்திரமென்பது இவ்வாறான நிலைமையில் இருக்கும் போது, ஆரோக்கியமான ஊடகச் சூழல் பற்றிய உரையாடல்களும் பாதிக்கப்படுவது வழக்கமானது. ஆனால், இதைத் தாண்டி, இருக்கின்ற சுதந்திரத்துக்குள், இருக்கின்ற வாய்ப்புகளுக்குள், ஆரோக்கியமான சூழலொன்றைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி முக்கியமானது.

ஏற்கெனவே சொல்லப்பட்டதன்படி, ஊடகங்கள் என்பன, இணையவழிச் சேவைகளையும் உள்ளடக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளன. இது, பல வழிகளில், ஆரோக்கியமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை வழங்க வேண்டிய நிலைமை; ஏதேனும் பிழை ஏற்பட்டால், உடனடியாகவே சுட்டிக்காட்டப்பட்டு, திருத்தக்கூடிய நிலைமை; கட்டுப்பாடின்றி, எத்தனை செய்திகளையும் பகிரக்கூடிய வசதி போன்றன, இதில் முக்கியமானவை. அத்தோடு, குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருந்த ஊடகத் தொழிலை, அனைவருக்காகவும் இது திறந்து விட்டிருக்கிறது. இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கங்களால் நடத்தப்பட்ட ஊடகத் தொழில், அனைவருக்கானதுமாக மாறியிருக்கிறது. எனவே, செய்திகளைத் தணிக்கை செய்து, மறைக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

ஆனால், அனைவருக்குமாக ஊடகங்கள் மாறியமை தான், பிரச்சினையையும் உருவாக்கியிருக்கிறது. இணையத்தளச் செய்திகளில், ஊடக தர்மங்களைப் பற்றி கவலைப்படாமல், எதையும் பிரசுரிக்கக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. ஆரோக்கியமான வழியில் இச்சுதந்திரம் பயன்படுத்தப்பட்டால், மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

மாறாக, தனிநபர்களையும் சமூகங்களையும் இலக்குவைத்து, செய்தியும் தகவல்களும் வெளியிடப்படுகின்றன. இவற்றின் காரணமாக, ஆரோக்கியமற்ற ஊடகச் சூழலொன்று ஏற்பட்டு, பெருந்திரள் ஊடகங்களும், அவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, கேள்வி – விநியோகம் என்ற கொள்கையில் அடிப்படையில் இடம்பெறுகின்றது. அவ்வாறான செய்திக்கு, மக்களின் ஆதரவு காரணமாக, அவ்வாறான செய்தியைப் பதிப்பிப்பதாக, ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம், இரண்டு தரப்பிலிருந்தும் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். ஒரு பக்கமாக, ஊடகங்களால் பிரசுரிக்கப்படும் பெறுமதியற்ற செய்திக்கும் உறுதிப்படுத்தப்படாத செய்திக்கும், மக்களிடத்தில் வரவேற்பு இருக்கின்றமை மறுக்க முடியாது. குறிப்பாக, இணையவழிச் செய்திகளில், இவ்வாறான நிலைமை, மிக அதிமாக இருக்கிறது. இப்போது அனைத்துமே, அதிக வருகைகள், அதிக வருமானம் என்றாகிப் போன பின்னர், அவ்வாறான செய்தியைப் பகிர்வதற்கு, ஊடக நிறுவனங்கள் முயல்வதில் ஆச்சரியமில்லை.

இந்நிலையைக் குறைக்க வேண்டுமாயின் அல்லது தடுத்து நிறுத்த வேண்டுமாயின், அவ்வாறான செய்தி வாசிப்பதை, மக்கள் நிறுத்துவது, இலகுவான தீர்வாக அமையும். கடினமாக உழைத்து, ஆராய்ந்து எழுதப்படுகின்ற செய்திக்கு, மக்களிடத்தில் வரவேற்பு அதிகமாக இருக்குமாயின், அவ்வாறான செய்தியை எழுத, ஊடகவியலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவர். தற்போதைய சூழலில், அந்த நிலைமை இல்லை என்பதே உண்மையானது.

மறுபக்கமாக, மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதிலும் மக்களுக்கு எது தேவை என்பதிலும், தெளிவான நிலைப்பாட்டை, ஊடகங்கள் கொண்டிருக்க வேண்டும்.

வீதியில் மதுபோதையில் ஆட்டம் போட்ட முதியவரின் காணொளியென்பது, மக்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெறும் என்பதைப் போல, தற்போது அமைச்சரவையில் அங்கிகாரம் பெறப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை வரைவு பற்றிய முழுமையான செய்தி, மக்களுக்குத் தேவை என்பதையும், ஊடகங்கள் புரிந்துசெயற்பட வேண்டும். முதலாவது வகைச் செய்தியை மாத்திரம் வழங்கிக் கொண்டிருப்பது, தன்னைச் சுற்றியுள்ள சூழல் பற்றிய பிரக்ஞைகளற்ற பிரஜைகளை உருவாக்கவே வழிவகுக்கும். அந்தத் தவறை, ஊடகங்கள் புரியக்கூடாது.

அடுத்ததாக, உலக மட்டத்திலும் சரி இலங்கையிலும் சரி, ஊடகவியலாளர்கள், போதிய ஊதியத்தைப் பெறாமை என்பது காணப்படுகிறது. இது, யதார்த்தமாக அமைந்திருக்கிறது. ஆரோக்கியமான ஊடகச் சூழல் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின், இந்த நிலைமை மாற வேண்டும். வேறு தொழில் வாய்ப்புகளின்றி, ஊடகவியலைத் தேர்ந்தெடுக்கும் அவலம், தொடரக்கூடாது. அதற்கு, ஊதியங்கள் அதிகரிக்கப்படுமாயின், திறமைவாய்ந்தவர்களை, இத்துறைக்குள் ஈர்க்க முடியும்.

மேம்போக்கான அறிவைக் கொண்டவர்களால், ஆழமான அர்த்தங்களைக் கொண்டுவரும் செய்தியை உருவாக்க முடியாது. இதற்கு, இலங்கையின் ஊடகவியல் பயிற்சிகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். ஊடகவியல் பயிற்சிகளின் முடிவில் வெளிவரும் ஒருவர், முழுநேர ஊடகவியலாளராகப் பணியாற்றக்கூடிய தரத்தைக் கொண்டிருக்கின்றமை, உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இவைகள் அனைத்துமே, இலங்கையின் ஊடகவியல் துறையிலும் செய்தியை நுகர்வதிலும், ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களாக இருக்கின்றன. இதன்மூலமே, ஆரோக்கியமான ஊடகச் சூழலொன்று கட்டியெழுப்பப்பட்டு, கிடைக்கும் ஊடகச் சுதந்திரம், பயனுள்ள விதத்தில் பயன்படுத்தப்படுமென்பது யதார்த்தமாகும். ஊடகத்துறையில் காணப்படும் தவறுகளை, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உணராதவரை, எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்பது, யதார்த்தமே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் ஒரு பெண்…எனக்கு உதவுங்கள்: வினாத்தாளில் எழுதி வைத்த மாணவி..!!
Next post சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்..!!