சிங்கள ஆதரவுக் காற்று ராஜபக்ஷ பக்கம் வீசுவதைக் காட்டுகிறதா மே தினப் பேரணிகள் ?..!! (கட்டுரை)
இலங்கையில் நடந்து முடிந்த மே தின பேரணியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு பெருமளவில் மக்கள் கூடியது இலங்கை அரசியல் வட்டாரங்களில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி, புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன.
ஜனாதிபதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இருக்க, பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க பணியாற்றுகிறார்.
இலங்கையின் மிகப்பெரிய இரு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாக இது பொதுவாக பார்க்கப்படுகின்றது.
ஆனால், ஆளும் அதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒரு குழுவினரும் ஏனைய சில சிறு கட்சிகளும் சேர்ந்த நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக தம்மை கூறிக்கொண்டு செயற்படுகிறார்கள்.
இந்த கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டமே பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு அணியை தம்வசம் வைத்திருப்பதால், தாம் அரசியலில் முன்னணி சக்தியாக ஐக்கிய தேசிய கட்சியை மேலும் வளர்க்கலாம் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்துக்கு இது ஒரு அடி என்று கூறுகிறார் மூத்த பத்திரிகை ஆசிரியரான வீ. தனபாலசிங்கம்.
இந்த மே தினத்துக்காக கூட்டப்பட்ட கூட்டம் எந்த வகையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், மஹிந்த தலைமையில் உள்ள கட்சிக் குழு இன்னமும் முன்னணியில் இருக்கிறது, அது பலம் குறைந்துவிடவில்லை என்பதையே இந்தக் கூட்டம் காண்பிப்பதாக அவர் கூறுகிறார்.
கடந்த இரு வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடே மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு அதிகரிக்க காரணம் என்று கூறும் தனபாலசிங்கம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரை மைத்திரிபால ஆட்சியில் இருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் தொடர்வதையே இந்த மக்கள் கூட்டம் காண்பிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
செல்வாக்கு இழக்காத மஹிந்த
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தாலும், சிங்கள மக்கள் அதிகமாக வாழும் தென்னிலங்கையில் மிகவும் செல்வாக்கு மிக்கவராகவே அவர் அப்போதும் பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது இந்த மேதினக் கூட்டத்தை பார்க்கும் போது, அவரது செல்வாக்கு இன்னமும் அப்படியே இருக்கிறது அல்லது கூடியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுவதாக கூறுகிறார், கொழும்பில் இருந்து செயற்படும் ஒரு மூத்த இந்தியச் செய்தியாளர்.
தற்போதைக்கு இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்குமானால், இந்த நிலவரத்தை அது நேரடியாகவே பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறுகிறார். ஆனாலும், இப்போதைக்கு அப்படியான தேர்தல் நடக்குமா என்பது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதியான ஜே. ஆர். ஜெயவர்த்தனவினால் 1978இல் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தேசியக் கட்சிகள் இரண்டும் சிங்கள வாக்குகளை பிரிக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வாக்குகளே ஆட்சியமைப்பது யார் என்பதை ஓரளவு தொடர்ச்சியாக முடிவு செய்து வந்தன.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு இராணுவம் வெற்றிபெற்றதை அடுத்து வந்த 2010 ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றிருந்தார். (அந்த தேர்தலில் சிறுபான்மைமக்களின், குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் அவருக்கு எதிராக அளிக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.)
ஆனாலும், கடந்த 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது கட்சியை சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார். அவரது வெற்றியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான சிறுபான்மை மக்களின் வாக்குகள் கணிசமான பங்களித்திருந்தன.
ஆனால், தற்போதைய நிலைமை மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக மாறிவிடுமோ என்று அச்சம் ஆளும் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் பார்க்கிறார்கள்.
‘இனப்பிரச்சினை தீர்வுக்கு பின்னடைவு’
ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுந்திரக் கட்சி மற்றும் மஹிந்தவின் கூட்டு எதிர்க்கட்சி ஆகியவை தமது பலத்தை காண்பிக்கவே தனித்தனியாக மே தினக் கூட்டங்களை நடத்தியதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன், தனது கருத்தின்படி மஹிந்த தரப்புக்கே அதிக கூட்டம் கூடியிருப்பதாக கூறுகிறார்.
அதேவேளை, மஹிந்தவுக்கு அதிகரிப்பதாக தெரியும் இந்த ஆதரவு, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அனைத்துமே தேர்தல் அரசியலில் தங்கியிருக்கும் இலங்கை சூழ்நிலையில், இந்த நிலைமைகளால், பயப்படக்கூடிய அரசாங்கம், அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை கைவிடலாம் அல்லது அதனை முன்னெடுக்க தயங்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
அதிலும் குறிப்பாக ஒற்றையாட்சியா அல்லது கூட்டாட்சியா என்பது குறித்து முடிவெடுக்கவும், பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் உயரிய அந்தஸ்தில் மாற்றம் செய்யவும், அரசியலமைப்பு குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தவும் அரசாங்கம் தயங்கும் என்றும் அவர் கூறுகிறார்.
அதுமாத்திரமன்றி, தமது புளொட் அமைப்பின் கருத்தின்படி அரசியலமைப்பு விசயத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும், ஆனாலும் இந்த நடைமுறைகளில் இருந்து தாமாக முறித்துக்கொண்டு வெளியேறப் போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்துக்கு அதிகளவில் வந்திருந்தவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களே என்று கூறும் மலையகத்தை சேர்ந்த ஆய்வாளரான பெ. முத்துலிங்கம், ஆனால், அது தேர்தலில் மஹிந்தவுக்கு பெரும் வெற்றியை தந்துவிடும் என்று அஞ்சத் தேவையில்லை என்று கூறுகின்றார்.
இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக தற்போதைய மந்தப் போக்கையே கடைப்பிடித்தால், கால ஓட்டத்தில் அரசாங்கத்துக்கு அது பாதகமாக அமையலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
Average Rating