நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா?..!! (கட்டுரை)
பொது எதிரணி என அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பெயரளவிலான தலைவரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன, கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பாக, நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கேட்டு இருக்கிறார். அதற்கு இணங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார்.
நாட்டில் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அல்லது பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக அவகாசம் கோருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகும்.
சில விவாதங்களின்போது, எதிர் காலத்துக்குப் பயனுள்ள பல கருத்துகள் தெரிவிக்கப்படுவதும் உண்டு. ஆனால், ஏனைய அரசியல் கட்சிகளைத் திட்டித் தீர்ப்பதே அனேகமான நாடாளுமன்ற விவாதங்களின்போது நடைபெறுகின்றன.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பாக, நாடாளுமன்ற விவாதமொன்று நடைபெற்றால் அதன் மூலம் குப்பை மேடு தொடர்பாகவோ அல்லது நாட்டில் பெரும் பிரச்சினையாக இருக்கும் குப்பை தொடர்பாகவோ அரசியல் கட்சிகள் தீர்வுகளை முன்வைக்குமா என்பது சந்தேகமே.
ஆனால், நிச்சயமாக அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் செய்த தவறுகளையும் குற்றங்களையும் அந்த விவாதத்தின் போது, ஏனைய கட்சிகள் சுட்டிக் காட்டுவது மட்டும் நிச்சயமாகும்.
உண்மையிலேயே குப்பை அகற்றும் விடயத்தில் இந்த நாட்டில் இதுவரை ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கத்துக்கும் முறையான தீர்வுத் திட்டமொன்று இருக்கவில்லை.
எனவே, சகல கட்சிகளிடமும் ஏனைய கட்சிகளை விமர்சிக்கப் போதிய தகவல்கள் இருக்கிறதேயன்றி, இவ்வாறுதான் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று ஒரு திட்டத்தை முன்வைக்க இது வரை ஆட்சி செய்த எந்தவொரு கட்சியினாலும் முடியாது. ஒரு நாடாளுமன்ற விவாதத்தின் மூலம் தீர்வுகள் முன்வைக்கப்படாது என்பதற்கு அதுவும் ஓரு காரணமாகும்.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்திரிகை ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் அதிபர்களையும் அழைத்து, நாட்டு நிலைமைகளைப் பற்றி கலந்துரையாடினார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான சகல விடயங்களையும் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மூலம் விசாரணைக்கு உட்படுத்துவதாக அவர் அப்போது கூறியிருந்தார். இந்தக் கவலைக்குரிய நிலைமை எவ்வாறு உருவாகியது என்பதையும் அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதையும் விசாரித்து, அந்த நீதிபதி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அவர் அந்த நீதிபதி மூலம் என்ன விசாரணை செய்யப் போகிறார் என்பது, அவ்வளவு தெளிவாகவில்லை. அது அந்த நீதிபதி நியமிக்கப்பட்டு அவருக்குப் பணிகள் ஒப்படைக்கப்பட்டதன் பின்னரே தெளிவாகும். ஆயினும், அவ்வாறு விசாரணை செய்வதானால் விசாரணை செய்வதற்குப் பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.நாடாளுமன்றம் விவாதித்தாலும் இந்த விடயங்கள்தான் மேலோட்டமாக விவாதிக்கப்படும்.
குப்பை மேடு சிலருக்கு குப்பை மேடாக இருந்த போதிலும், வேறு சிலருக்கு அது பொற்குவியலாக இருந்ததாகப் பாரிய நகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
அதாவது, சிலர் இந்தக் குப்பை மேட்டைப் பாவித்து பணம் சம்பாதித்தார்கள் என்பதையே அவர் எடுத்துக் காட்டுகிறார். இதனை வேறு சிலரும் வேறு விதமாகக் கூறியிருந்தனர்.
குப்பை மேட்டுக்கு, குப்பை கொண்டு வருவதற்காக வாகனங்கள் வழங்கிய, கொலன்னாவ பகுதியில் வாழும் சில அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர், தமக்கு அதன் மூலம் கிடைககும் வருமானம் குறையும் என்பதனால் குப்பையை வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுத்து வந்ததாகவும் அதனால் குப்பை மேடு நாளாந்தம் உயர்ந்து கொண்டே போனதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனை நிரூபிக்க முடியாத போதிலும், அதனை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில், பல பிரதேச அரசியல்வாதிகள் தமது வாகனங்கள் மூலம் குப்பை ஏற்றி வந்து இலட்சக் கணக்கில் அரசாங்கப் பணத்தை பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மை.
எனவே, அவர்கள் வேறு இடத்துக்கு குப்பையை எடுத்துச் செல்வதையோ குப்பை மீள்சுழற்சியையோ விரும்ப மாட்டார்கள் என்பது தர்க்க ரீதியாக அமைகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் குப்பை மேட்டோடு சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட ஊழல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத் மற்றும் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் கடந்த காலத்தில் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை, மீள்சுழற்சி செய்ய 108 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஆனால் அரசியல்வாதிகள் அந்த உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் கோரியதால் அவர்கள் தமது திட்டங்களைக் கைவிட்டுச் சென்றதாகவும் அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கியிருந்த பேட்டிகளின் போது கூறியிருந்தனர்.
இவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதா என்ற கேள்வி பலர் மனதிலும் எழலாம். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கைகளில் சிலவற்றை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஏனைய அரசியல் கட்சிகளைப் போலன்றி அக்கட்சி அனேகமாகப் பொறுப்பற்ற முறையில் எவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்துவதில்லை.
மேலும், இந்த இருவரில் ஓருவர், அதாவது ஹந்துன்னெத்தி, நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (‘கோப்’ குழுவின்) தலைவராக இருப்பவர். அதாவது, அரசாங்க நிறுவனங்களின் நிதி முகாமைத்துவத்தை மேற்பார்வை செய்யும் குழுவின் தலைவர்.
அவர் இது வரை நேர்மையிழந்து செயற்பட்டதாக எவரும் குற்றம்சாட்டவில்லை. அவரும் 108 நிறுவனங்கள் இலஞ்சக்காரர்கள் காரணமாகத் தமது திட்டங்களைக் கைவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்.
108 நிறுவனங்கள் இந்த விடயத்துக்காக வந்து, அரசியல்வாதிகள் இலஞ்சம் கோருவதனால் திரும்பிச் சென்றுள்ளார்கள் என்றால், அதில் ஒரு சம்பவத்தைப் பற்றியாவது நாட்டின் தலைவருக்குத் தெரியாதா?
இந்தச் சம்பவங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் இந்த அரசாங்கத்தின் காலத்திலுமே இடம்பெற்றுள்ளன.
மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற குறிப்பிட்டதோர் சம்பவத்தைப் பற்றியும் ‘கோப்’ குழுத் தலைவர் பெயர் விபரங்களோடு விவரித்திருந்தார். அதன்படி, கனடாவில் குப்பை மீள்சுழற்சியைத் தொழிலாகக் கொண்டு பெரும் செல்வந்தராக இருக்கும் இலங்கையரான சுதேஷ் என்பவர், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வந்து, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலிருக்கும் பிளாஸ்ரிக் பொருட்களை மீள்சுழற்சி செய்யத் திட்டமிட்டு, இலங்கை முதலீட்டுச் சபையிடம் இருந்து அதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.
ஆனால், அவருக்கு அந்தத் தொழிலை ஆரம்பிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. மஹிந்தவின் அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதியொருவர் அந்தத் தொழிற்சாலையின் அரைவாசியைத் தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார். அதனை மறுத்த சுதேஷ், திட்டத்தை கைவிட்டுவிட்டு கனடாவுக்கே திரும்பியிருக்கிறார்.
ஒரு சாதாரண அரசியல்வாதி, இவ்வாறு இலஞ்சம் கோரினால், அதைப் பற்றி அரசாங்கத்தின் தலைவர்களுக்கு முறைப்பாடு செய்து, தமது திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அந்த முதலீட்டாளரினால் முடியும். சுதேஷ் அவ்வாறு முறைப்பாடு செய்யவில்லை.
ஏனெனில், அது பலனற்ற செயல் என அவர் உணர்ந்து இருக்கிறார். அதாவது, தலைவர்கள் அறிந்தோ அல்லது அவர்களது உதவியுடனோ அல்லது அவர்கள் மறைமுகமாகத் தலையிட்டோ தான், இது போன்ற ஊழல்கள் இடம்பெறுகின்றன. இல்லாவிட்டால் 108 முறை இது போன்ற சம்பவங்கள் இடம்பெற முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குப்பை மேடு தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதற்காக நீதிபதி ஒருவரை நியமிப்பதாக இருந்தால் இந்த 108 சம்பவங்களைப் பற்றியும் விசாரணை செய்ய வேண்டும்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் நடைபெறுவதாக இருந்தால் தமது காலத்தில் இவ்வாறு நடைபெற்றது என்பதைப் பொது எதிரணியினரும் அதற்குப் பின்னர் இடம்பெற்றவற்றை தற்போதைய ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தத் தைரியமும் நேர்மையும் இந்த அரசியல்வாதிகளுக்கு இருக்குமா? நிச்சயமாக இல்லை.
இந்த விடயத்தில், மக்கள் விடுதலை முன்னணியும் மக்களுக்கு ஒரு விடயத்தை விளக்க வேண்டும். அதாவது குப்பை மேடு சரியும் வரை இந்த ஊழல்களை அம்பலப்படுத்த அக்கட்சியினர் ஏன் தவறிவிட்டனர் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடைபெற்றால், தாம் இந்த விடயத்தில் தவறிழைத்ததாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக் கொள்ளுமா?
நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடைபெறுவதாக இருந்தால், நிச்சயமாக அதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறின்றி இந்தப் பிரச்சினையை வளரவிட்டதற்காக மற்றக் கட்சிகளைத் திட்டித் தீர்ப்பதில் மக்கள் அடையும் நன்மை ஏதும் இல்லை.
தம்மிடம் தீர்வு எதுவும் இல்லாமல் ஏனைய கட்சிகளைக் குறைகூறும் நோக்கில் விவாதத்தைக் கேட்பதானது, இந்த அனர்த்தத்தில் இறந்தவர்களின் மரணங்களைப் பாவித்து, அரசியல் இலாபம் தேடுவதேயல்லாமல் வேறு எதுவும் அல்ல.
அதேபோல், தம்மிடம் தீர்வேதும் இல்லாமல் அரசாங்கம் அந்த விவாதத்துக்கு இணங்குவதும், குப்பை மேட்டை வளர்த்தவர்களின் குற்றங்களைக் காட்டி அரசியல் இலாபம் தேடுவதற்கேயாகும். அதுவும் மரணங்கள் மூலம்அரசியல் இலாபம் தேடுவதேயாகும்.
இவ்வளவு பாரிய அனர்த்தம் ஒன்று இடம்பெற்றும் யதார்த்தபூர்வமான தீர்வொன்றை முன்வைக்க இந்த நாட்டில் அரசியல்வாதிகளோ விஞ்ஞானிகளோ அல்லது அதிகாரிகளோ முன்வராதமை ஒரு வகையில் ஆச்சரியத்துக்குரிய விடயமாகும். மற்றொரு வகையில் நகைப்புக்குரிய விடயமாகும்.
எல்லோரும் குப்பை மேட்டை மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதைப் பற்றியே கவனம் செலுத்துகிறார்கள். எங்கு எடுத்துச் சென்றாலும் அந்தக் குப்பை மேடு நாளாந்தம் உயரும் என்பதையும் மனிதர்கள் அல்லது மிருகங்கள் அதனால் பாதிக்கப்படலாம் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.
சுற்றாடலோ மக்களோ பாதிக்கப்படாது மின்சார உற்பத்திக்காகவோ அல்லது உர உற்பத்திக்காகவோ அல்லது நிலத்தை நிரப்புவதற்காகவோ பயன்படுத்தி மீதொட்டமுல்ல குப்பை மேடு அகற்றப்படும் எனவும் இராணுவமும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியல் பிரிவினரும் ஒன்பது மாதங்களில் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றிவிடுவர் என்றும் ஜனாதிபதி மேற்படி பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக அதிபர்களின் கூட்டத்தில் கூறியிருந்தார்.
அதாவது, குப்பைக்கு என்ன செய்வது என்பதைப் பற்றி குறிப்பிட்டதோர் திட்டம் அவரிடம் இல்லை. அவர் தான் இந்த நாட்டில் சுற்றாடல்துறை அமைச்சர். குப்பைப் பிரச்சினை பல தசாப்தங்களாக நாட்டில் நிலவி வருகிறது. ஆயினும் அவரிடம் இன்னமும் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை.
அதேவேளை, நாட்டில் குப்பை மீள்சுழற்சி தொடர்பான சட்டமொன்றைக் கொண்டுவரப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கடந்த சனிக்கிழமை ‘டெய்லி மிரர்’ பத்திரிகையின் முன்பக்கத் தலைப்புச் செய்தி கூறியது. இதற்கும் ஜனாதிபதியின் கருத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவில்லை.
இதற்கிடையே கொழும்பிலுள்ள குப்பையைப் புத்தளத்துக்கு எடுத்துச் செல்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார். அதாவது குப்பை மூலம் மின்சாரமோ உரமோ உற்பத்தி செய்யப்படாது. இவ்வாறு பார்த்தால் குப்பை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நடைபெற்றால், அரசாங்கத்தின் இந்தக் குழம்பிய நிலைமையைப் பாவித்துப் பொது எதிரணியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் இலாபம் அடையலாம்.
அதபோல் 2008 ஆம் ஆண்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்காலிகமாக இரண்டு ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டுவதாகக் கூறி, மீததொட்டமுல்லயில் குப்பை கொட்ட ஆரம்பித்த மஹிந்த அரசாங்கம், அதனை 20 ஏக்கர் பரப்பளவிலும் 300 அடி உயரத்திலும் வளரவிட்டது. போர் நடைபெற்றுவந்த காரணத்தால், குப்பை மேட்டை அகற்ற முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசித்திரமான காரணத்தைக் கூறியிருக்கிறார்.
போர் நடைபெற்ற காலத்தில் நிலத்தை தோண்டித் துறைமுகம் ஒன்றை நிர்மாணித்தவரும் விமான நிலையம் ஒன்றை நிர்மாணித்தவரும் அதே மஹிந்தவே.
போர் அந்த ‘மெகா’ திட்டங்களுக்கு தடையாக இல்லாதிருந்தால் இந்தக் குப்பை மேட்டை அகற்ற மட்டும் எவ்வாறு தடையாக இருந்திருக்க முடியும்? நாடாளுமன்ற விவாதம் நடைபெற்றால் அரச தரப்பினர் இதனை மஹிந்த அணியினரிடம் கேட்கலாம். ஆனால், இவ்வாறான சண்டைகளால் மக்களுக்கு என்ன பயன்? பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்காத விவாதங்களால் என்ன பலன்?
Average Rating