கைதுகளும் மாணவர் மற்றும் இளைஞர் எழுச்சியும்..!! (கட்டுரை)
விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் 1982 நவம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கத்தோலிக்க குருவானவர்களான சிங்கராயர் மற்றும் சின்னராசா மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி
எம். நித்தியானந்தன் மற்றும் அவரது மனைவியும் எழுத்தாளருமான நிர்மலா நித்தியானந்தன் ஆகியோர் தொடர்ந்தும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார்கள்.
அவர்கள் தமது சட்டத்தரணிகளைக் கூட சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. வெளியுலகத் தொடர்பேதுமின்றி, அவர்கள் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கத்தோலிக்க குருவானவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனமும் யாழ். மாவட்ட ஆயரிடமிருந்து அவர்களை விடுதலை செய்வதற்கான அழுத்தமும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு வழங்கப்பட்டன.
ஆனால், இந்த அழுத்தங்களும் கண்டனமும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இதைவிடவும் மாணவர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
யாழில் வீதிக்கு இறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
இந்தச் சூழலில்தான் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவர்களிடையே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் எதிராக பெரும் எழுச்சியொன்று ஏற்பட்டது. 1983 ஜனவரி 26 ஆம் திகதி பெரும்தொகையான இளைஞர்களும் மாணவர்களும் யாழ். நகர வீதிகளில் இறங்கி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோசத்துடன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள்.
வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இந்தச் சந்தர்ப்பத்தில் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடப்படவிருந்த இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கவும், அன்று ஹர்த்தால் நடவடிக்கையை முன்னெடுக்கவும் சில இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடு, அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராக பெப்ரவரி நான்காம் திகதி ஹர்த்தால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடச் சில தமிழ்த் தலைமைகளும் அழைப்பு விடுத்தன. அதனடிப்படையில் 1983, பெப்ரவரி நான்காம் திகதி ஹர்த்தால், வேலைநிறுத்தப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
பெரியண்ணன் அரவணைப்பில் பலம்பெற்ற ஆயுதக் குழுக்கள்
மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் விரிவடையத் தொடங்கியிருந்தன.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறத் தொடங்கியிருந்தது. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனமும் தமிழ் அரசியல் தலைமைகள் எதனையும் சாதித்திராத விரக்தியும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிட்டிருந்த வன்முறைகளும் கைதுகளும் தமிழ் மக்கள், இந்த ஆயுதக் குழுக்கள் மீது அனுதாபமும் நம்பிக்கையும் கொள்ளத் தொடங்கக் காரணமானது.
1981 மற்றும் 1982 இல் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பொலிஸார் மீது உட்பட சில தாக்குதல்களையும் வங்கிக் கொள்ளைகளையும் நிகழ்த்தியிருந்தனர் என்பதுடன் வட மாகாணத்தில் அவர்களது நடவடிக்கைகள் பெருமளவு அதிகரித்திருந்தன.
இந்தத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அடைக்கலம் என்பவற்றை இந்திய அரசாங்கம் வழங்கிக்கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்தார்கள். இதில் உண்மையில்லாமலும் இல்லை.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழு உறுப்பினர்கள் பலரும் பதுங்குவதற்கும் காயமடைந்தபோது மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும் கடல்மார்க்கமாக பாக்குநீரிணையைக் கடந்து தமிழகத்துக்குச் செல்வது வழமையாகவே இருந்தது.
மேலும், தமிழகத்திலும் மற்றும் சில பிரதேசங்களிலும் தமிழ் இளைஞர், ஆயுதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் இருந்தமை பற்றி இலங்கையின் இனமோதல் பற்றிய பல நூல்களிலும் குறிப்புகள் இருக்கின்றன.
ஆகவே, இந்தியாவின் மறைமுக உதவியுடன் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பலமடையத் தொடங்கின என்பதுடன், அவை தமிழ் மக்களிடையே முக்கியத்துவம் மிக்க சக்தியாகவும் உருவாகத் தொடங்கியிருந்தன.
இடைத்தேர்தலுக்குத் தயாரான ஜே.ஆர்
யாழ்ப்பாணமும் வடக்கு,கிழக்கும் கொதித்துக் கொண்டிருந்த நிலையில், ஜே.ஆர். ஜெயவர்த்தன இடைத் தேர்தலுக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கும் தயாரானார். நாடாளுமன்றத்தின் ஆயுளை நீடிப்பதற்கான சர்வசன வாக்கெடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிராத தொகுதிகளுக்குப் பொறுப்பாகவிருந்தோர் உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1983 பெப்ரவரி 10 ஆம் திகதி பதவிவிலகினர்.
அவர்களுக்கு மாற்றானவர்களை நியமிப்பதற்குப் பதிலாக, இடைத் தேர்தலொன்றுக்குச் செல்ல ஜே.ஆர் விரும்பினார். 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய இரண்டாம் குடியரசு யாப்பில், இடைத் தேர்தலொன்றுக்கான ஏற்பாடுகள் இருக்கவில்லை. ஆகவே, அந்த ஏற்பாட்டை அரசியலமைப்புக்கான ஐந்தாவது திருத்தமாகக் கொண்டுவந்து, 1983 பெப்ரவரி 25 ஆம் திகதி நிறைவேற்றினார். மீண்டும் தேர்தல்களுக்கு இலங்கை தயாரானது.
தங்கதுரை நீதிமன்றில் உரைத்தவை
1983 பெப்ரவரி 24 ஆம் திகதி தமிழீழ விடுதலை இயங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான தங்கதுரை என்றறியப்பட்ட நடராசா தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்படவிருந்தது.
வழக்கின் தீர்ப்புக்கு முன்பதாகத் தனது கருத்தை தெரிவிக்க வழங்கப்பட்ட வாய்ப்பின்போது, தங்கதுரை கூறியவை இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாகவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியதன், அல்லது விடுதலை கோரியதன் காரண காரியங்களை விளக்குவதாகவும் அமைந்தது.
ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்ற தேடலில், தங்கதுரை நீதிமன்றில் உரைத்தவற்றிலிருந்து சில முக்கிய கருத்துகளை உற்று நோக்குதல் முக்கியமானதாகிறது.
“வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜைகளாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே. இதன் விளைவே தமிழ்த் தலைவர்கள், தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர்.
அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறித் திட்டமிட்ட முறையில், சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விசயங்கள் அல்ல; இக்காலகட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர்.
ஆனால் நடந்தது என்ன? நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ். செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீ லங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின் வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள்,
வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன? காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில இலட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்” என்று சொன்ன தங்கதுரை, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த அடக்குமுறையை விளங்கப்படுத்தியிருந்தார்.
மேலும், “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை, அர்த்தசாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?” என்று கேள்வியெழுப்பிய தங்கதுரை, “பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?
ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை. ஆக்கிரமிப்புகள் வேறுபட்ட அதிகார அமைப்புகளினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம், குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று” என்று தம்முடைய விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத்தை முன்வைக்கிறார்.
மேலும், “இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது இலட்சியம் மட்டுமல்ல, இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும் தமக்கு உண்டான அரசியல், பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.
எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.
எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கிகரித்திருப்பின் இந்நிலை இத்தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கிகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த 35 ஆண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவிதையை ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.
ஆனால், சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது, தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்குத் தமிழினத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்” என்று பெரும்பான்மை மக்களிடையே இன மைய அரசியலைத் தூண்டும் இலங்கையின் அரசியல் கலாசாரம் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அத்துடன், “உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட, இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத, மீதி எந்தச் சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே” என்று தமிழ் மக்கள் வேண்டுவது விடுதலைதான் என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார்.
தங்கதுரை உள்ளிட்ட ஆறுபேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் வகுப்புத்தடை
1983 பெப்ரவரி 24 ஆம் திகதி கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, பேராதனை, களனி மற்றும் ருஹூணு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் வகுப்புத்தடை போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதற்கான காரணமென்ன?
(அடுத்த வாரம் தொடரும்)
Average Rating