வருடம் முழுவதும் முட்டாள்கள் தினமா?..!! (கட்டுரை)
ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம். கடந்த சனிக்கிழமை முட்டாள்கள் தினத்தன்று வெளியாகிய சில ஊடகங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால், அது முட்டாள்கள் தினச் செய்தி அல்ல.
ஏனென்றால், முட்டாள்கள் தினத்துக்கு முதல் நாளான, மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில்தான், அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனால்தான், அது முட்டாள்கள் தினச் செய்தியல்ல.
ஆனால், முட்டாள்கள் தினச் செய்தியை விட, மக்களை முட்டாள்களாக்கும் செய்தியே அது என்பதில் சந்தேகம் இல்லை.
மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியை அமைத்தது யார் என்றே தமக்குத் தெரியாது என்றும் ஜனாதிபதிக்கு மாத்திரமே ஆணைக்குழுக்களை அமைக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான அமைச்சர்களில் ஒருவர், நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியை அமைத்தது யார் என்றே தெரியாது என்று கூறுகிறார் என்றால், அவர் யாரை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நன்றாகவே தெரிந்து விடுகிறது.
உண்மையில், நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதற்குத் தயாராக இல்லாத நிலையில்தான், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்தச் செயலணியை அமைத்திருந்தார்.
சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அந்தச் செயலணி அமைக்கப்பட்ட போது, அதற்குள் இராணுவ அதிகாரிகள் இருவருக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்று, யாழ்ப்பாணத்தில் படை அதிகாரிகளுக்கான கூட்டம் ஒன்றில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வலியுறுத்தியிருந்தார் 51 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக, உடனடியாகவே மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இராணுவத் தலைமையகத்தில் காலாட்படைகளின் தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அப்போதே, இந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி பற்றிய பரபரப்பான செய்திகள் வெளியாகின. அதற்குப் பின்னர், அந்தச் செயலணி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமர்வுகளை நடத்தியும் நேர்காணல்களைச் செய்தும் எழுத்து மூலம் அறிக்கைகளைப் பெற்றும் ஒரு நீண்ட ஆய்வை நடத்தியிருந்தது. அதன் பின்னர்தான் ஒரு அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
குறுகிய காலத்துக்குள், ஒப்பீட்டளவில் இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை விடவும் தரமானதாகவும் நம்பகமானதாகவும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அதனால்தான், இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார்.
பல நாடுகளின் பிரதிநிதிகள் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியே, அண்மைய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்தனர். அந்தளவுக்கு சர்வதேச மட்டத்தில் இந்த அறிக்கை நம்பகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அறிக்கைகள், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருப்பதில்லை. அந்தவகையில் தான், நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையையும் ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் பின்நிற்கிறது.
இந்தக் கலந்தாய்வுச் செயலணியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கி, அதன் அறிக்கை தயாரிக்கப்படும் வரைக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதுவுமே பேசாமல் அமைதியாகத்தான் இருந்தார்.
பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையை உருவாக்குவதற்காக இந்தச் செயலணியின் அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூறிக் கொண்டிருந்தபோது கூட, எந்தச் செயலணி, அதனை யார் நியமித்தது என்று ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ அவரிடம் கேள்வி எழுப்பவில்லை.
ஏனென்றால், இப்படியொரு செயலணி அமைக்கப்பட்டு அதன் செயல்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்தச் செயலணியின் அறிக்கை தயாரிக்கப்பட்டு முடித்ததும், அதனை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு தடவைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அது முடியாமல் போன பின்னர்தான், ஜனாதிபதி இதனை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றார் என்று புரிந்து கொண்டு, அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளித்திருந்தது செயலணி.
அதற்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தச் செயலணியின் அறிக்கையை படித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டது. அது மாத்திரமன்றி, பின்னொரு நாள், நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் 11 உறுப்பினர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியாகச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ஜனாதிபதிக்குத் தெரியாமல் நியமிக்கப்பட்ட குழுவாக இருந்தால், எதற்காக அந்தக் குழுவினரை அழைத்து அவர் சந்தித்திருக்க வேண்டும்?
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி விடயத்தில் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இரட்டைவேடம் போடவே முனைகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான், இந்தக் குழுவை யார் அமைத்தது என்ற அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் கேள்வி அமைந்திருந்தது.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள், சாதகமானதாக இருக்கவில்லை என்பதால், அதனை நடைமுறைப்படுத்தும் விருப்பு அரசாங்கத்துக்கு இல்லை என்பதால்தான், இப்போது அந்தச் செயலணியை கேள்விக்குட்படுத்த முனைந்திருக்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மனித உரிமை விவகாரங்களைக் கையாளும் அமைச்சராக இருந்தபோது, இதுபோலப் பல உருட்டப் புரட்டுகளையும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும் கூறிப் பழக்கப்பட்டவர் அவர்.
சனல்-4 வீடியோ, ஐ.நா நிபுணர் குழு அறிக்கை என்று பல விடயங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப்போது வெளியிட்ட கருத்துகள் எப்படிப்பட்டவை என்று அனைவரும் அறிந்த விடயம்தான்.
அவருக்கு இந்த விவகாரத்தைக் கையாள்வது ஒன்றும் கடினமாக இருக்கவில்லை. எவ்வாறாயினும் மக்களை அடிமுட்டாள்கள் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்கவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
ஜனாதிபதிக்கு மாத்திரமே, ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றால், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஓர் ஆணைக்குழுவுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. ஏனென்றால், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிப்பதற்கும் ஒரு காரணம் தேவைப்பட்டது.
அந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம் என்று கூறி ஜெனீவாவில் காலத்தை இழுத்தடித்த அரசாங்கம், இப்போது அப்படியே ஒன்று விடாமல் நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அறிக்கை ஒன்றும் வேத வசனம் கிடையாது என்று கூறுகிறது.
இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டுதான், அதனை நடைமுறைப்படுத்துமாறு கோருகிறது. ஆனால், அரசாங்கமோ அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரைகளையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது. பொருத்தமானதை மாத்திரமே நடைமுறைப்படுத்துவோம் என்கிறது அரசாங்கம்.
ஒரு விடயம் தொடர்பாக ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்த பின்னர், அதில் பொருத்தமானதை மாத்திரம் நடைமுறைப்படுத்துவோம் என்றால் அங்கு அரசாங்கமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றதாகி விடும். ஒரு பொறிமுறையின் சுதந்திரமும் தனித்தன்மையும் பறிக்கப்பட்டு விடும்.
ஓர் ஆணைக்குழு தனியே சுதந்திரமானதாக, நம்பகமானதாக இருப்பது மாத்திரம் முக்கியமல்ல. அதன் பரிந்துரைகள் சுதந்திரமாகவும் நம்பகமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நாம் விரும்பிய பரிந்துரைகளை மாத்திரமே நடைமுறைப்படுத்துவோம் என்றால், அது ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி விடயத்தில் அரசாங்கம் இப்போது எழுப்புகின்ற கேள்விகள் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைத்தான் சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் முரண்பட்ட நிலைப்பாடுகள் இருப்பதையும் கூட இது அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தரப்புகளான இரண்டு கட்சிகளும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆளை ஆள் மாற்றிக் கைகாட்டிக் கொண்டிருப்பதும் கூட பாதிக்கப்பட்ட மக்களை முட்டாளாக்கும் செயல் தான்.
பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழ் மக்கள் நீதிக்காக ஏங்குகிறார்கள் என்பது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், இதுபோன்ற முட்டாள்தனமான விடயங்களை முன்வைத்து இன்னமும் அவர்களை முட்டாளாக்கவே அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் முயற்சிக்கின்றனர்.
முட்டாள்கள் தினம் ஆண்டுக்கு ஒருமுறை தான் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழ் மக்களை முட்டாளாக்குவதில் சிங்கள அரசியல் தலைமைகள் வருடத்தில் ஒவ்வொரு நாளையும் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதுதான் உண்மை.
Average Rating