சாம்பூரை கைப்பற்ற ராணுவம் கடும் போர் 120 விடுதலைப்புலிகள் பலியா?
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும்போர் நடக்கிறது. சாம்பூரை கைப்பற்ற ராணுவம் நடத்திய தாக்குதலில் 120 விடுதலைப்புலிகள் இறந்ததாக தெரிகிறது.
தன்னாட்சி அதிகாரம்
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இந்த பகுதிகளை ஆள, விடுதலைப்புலிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று கோரி, விடுதலைப்புலிகள் இயக்கம், கடந்த 20 ஆண்டுகளாக ராணுவத்துடன் போர் புரிந்தனர். இந்த போர், நார்வே சமரச குழுவின் முயற்சியால், கடந்த 2002-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
அதன்பின் 4 ஆண்டுகளாக நடந்த சமரச பேச்சில் எந்த வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், கடந்த சில மாதங்களாக, இரு தரப்பினரும் மீண்டும் சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதத்தில் மட்டும் 1000 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள்.
சாம்பூர்
சாம்பூர், விடுதலைப்புலிகள் வசம் இருக்கிறது. ஏற்கனவே அந்த நகரில் வசித்து வந்த 40 ஆயிரம் பேர் ,அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
ராணுவத்தின் வசம் இருக்கும் யாழ்ப்பாணம் துறைமுகம், மற்றும் வடக்கு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படும் உணவு மற்றும் ராணுவத்துக்கு தேவையான ஆயுத போக்குவரத்தை தடுக்க விடுதலைப்புலிகள் சாம்பூரில் இருந்து தாக்குதல் நடத்துகிறார்கள். எனவே, சாம்பூரை கைப்பற்ற ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடும் போர்
சாம்பூரில் கடந்த ஒரு வாரமாக கடும் போர் நடந்து வருகிறது. ராணுவத்தினர் பீரங்கியாலும், ஏவுகணையாலும் தாக்கி வருகிறார்கள். விடுதலைப்புலிகளும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போர் பற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
120 பேர் சாவு?
கடந்த 7 நாட்களாக நடந்து வரும் சாம்பூர் போரில் ராணுவத்தினர் 14 பேர் இறந்து இருக்கிறார்கள். 92 பேர் காயம் அடைந்து உள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பில் 120 பேர் இறந்ததாக தெரிகிறது.
சாம்பூரில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் இங்கு வந்து குடியேற ராணுவம்நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக 20 லாரிகளில் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல வடக்கு யாழ்ப்பாணம் பகுதி மக்களுக்காக 3,600 டன் உணவுப்பொருட்கள் சென்றுள்ளன. இவ்வாறு ராணுவ அதிகாரி கூறினார்.
இங்கிலாந்தில் ராஜபக்சே
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, இங்கிலாந்து சென்று இருக்கிறார். அங்கு பிரதமர் டோனி பிளேரை சந்தித்து, இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசனை நடத்தினார். மீண்டும் இரு தலைவர்களும் இன்றும் சந்தித்து பேசுகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர்
இதற்கிடையில், இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கே, அதிபர் ராஜபக்சேக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “விடுதலைப்புலிகள் பிரச்சினையில் தீர்வு காண உதவ நாங்கள் தயார்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.