ஆள்வோரின் ஆசைக்கு இரையாகும் கலையும் கலாசாரமும்..!! (கட்டுரை)
ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும், விருதும், விருந்துமாகக் கொண்டாடிக் கழிந்த இரவுப்பொழுது.
ராஜாக்களின் (மன்னராட்சி) காலத்தில்தான் இப்படியெல்லாம் இருந்ததாக அறிந்திருக்கிறோம். அது உண்மையா இல்லை, வெறும் கதைதானா என்று தெரியாது. ஆனால், இப்போது நடந்திருப்பது உண்மை.
கிளிநொச்சியில் உள்ள மலையாளபுரம் என்ற ஊரிலேயே, இதெல்லாம் நடந்திருக்கிறது. கிளிநொச்சியின், பெரும்பாலான இடங்களில் இருந்தும், கலைஞர்களும் பொதுமக்களும் உத்தியோகத்தர்களும் நிர்வாக அதிகாரிகளும் வந்து கூடியிருந்தனர். தங்களுடைய கிராமத்தில், கலாசார விழா நடக்கிறது என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, மலையாளபுரம், பாரதிபுரம் மக்கள், தங்களது ஊரை அலங்கரித்தே வெளிப்படுத்தியிருந்தனர். ஊர் கூடித் தேரிழுப்பதைப்போல, ஊர்கூடி விழாக்கொண்டாடியது.
இந்தத்தடவை, கரைச்சிப் பிரதேச செயலகத்தின் கலாசார விழா, மலையாளபுரம் கிராமத்தில் நடத்தப்பட்டது.
வழமையாக, பிரதேச செயலகங்களில் அல்லது நகரில் உள்ள பொது மண்டபங்களில் நடத்தப்படுகின்ற கலாசார விழா, கிராமத்தை நோக்கி நகர்ந்திருப்பது சிறப்பு. இது நல்லதொரு தீர்மானமும் கூட. இதற்காக பிரதேச செயலகத்தையும் பிரதேச கலாசாரப் பேரவையையும் பாராட்ட வேண்டும். நகரங்களை மையப்படுத்தாமல், நகரங்களை நோக்கி இழுக்காமல், கிராமங்களை நோக்கிச் செல்வதும் கிராமங்களை மையப்படுத்திச் செயற்படுவதும், சிறப்பானதே.
பொதுவாகவே, கிராமங்களில்தான் கலைஞர்கள் உயிர்த்துடிப்புடன் கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதுண்டு. அங்கே, தொழில்முறைக்கு அப்பால், கலையை முழுமையான ஈடுபாட்டுடன் பயின்று கொண்டிருப்பார்கள். அவர்களைப்பொறுத்தவரை, கலை என்பது அவர்களுடைய ஆன்மா. கிராமங்களிலுள்ள மக்களும் அப்படித்தான்.
கலையையும் கலைஞர்களையும் எப்போதும் கொண்டாடுவார்கள். அது தலைமுறைகளாக ஊறி வருகின்ற பழக்கமும் பண்புமாகும்.
மலையாளபுரத்தின் கலாசார விழா சிறப்பாக நடந்திருந்தாலும், தொடக்க நிகழ்வு, சற்று வருத்தத்தையும் சினத்தையும் எல்லோருக்கும் ஏற்படுத்தியது. காரணம், குறிப்பிட்ட நேரத்துக்கு நிகழ்வைத் தொடங்காமல் இரண்டு மணி நேரம் பிந்தித் தொடங்க வேண்டியிருந்ததேயாகும். பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிகழ்வு, மாலை 5 மணியாகியும் தொடங்கவில்லை.
பிரதமவிருந்தினரின் வருகை தாமதமாகியதே இதற்குக் காரணம். பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு வருகை தரவில்லை. எதற்காக அவர் தாமதித்துக் கொண்டிருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது. தாமதத்துக்கான காரணமும் அவரால் தெரிவிக்கப்படவில்லை.
அவருடைய வருகையை எதிர்பார்த்து, அவருக்குக் கீழே பணி செய்கின்ற உத்தியோகத்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் மட்டுமல்ல, விழாவில் கௌரவிக்கப்படவிருந்த கரைச்சிப்பிரதேசத்தின் மூத்த கலைஞர்கள், தொழிலாளர்கள், விழாவுக்கு வந்திருந்த, அழைக்கப்பட்டிருந்த மூத்த விவசாயிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் சிவலிங்கராஜா, கிளிநொச்சி மாவட்டக் கல்விப்பணிப்பாளர், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள், அதிபர்கள், பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், வங்கியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மதகுருக்கள், கூட்டுறவாளர்கள், அரசுசாரா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் காத்துக் களைத்திருந்தனர்.
பிரதம விருந்தினருடைய வருகைக்காகக் காத்திருந்த சிறுவர்கள், மாலைகளை ஏந்தியவாறு இரண்டு மணிநேரமாக வெயிலில் நின்றனர். மாலைகளும் அவர்களுடைய முகங்களும் வாடி விட்டன. இரண்டு மணிநேரக் காத்திருப்பு என்பது, சாதாரணமான ஒன்றல்ல. மழை போன்ற இயற்கைக் காரணங்களால் ஏற்படும் தாமதம், தவிர்க்க முடியாதது.
இது அப்படியல்ல. மாவட்ட செயலாளரிடம் தாமதத்தைச் சொல்லி, காத்திருப்போரைப்பற்றிச் சொல்லி, அவரை அழைப்பதற்கு, அவருக்குக் கீழே பணியாற்றும் எந்த உத்தியோகத்தருக்கும் முடியவில்லை.
மாவட்ட செயலாளருக்கு முக்கியமான வேலைகள் இருந்திருந்தால், அவர் தனக்காக அத்தனை பேரையும் வெயிலில் காத்திருக்க வைக்காமல், நிகழ்ச்சியை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கலாம். இடையில் தான் வந்து, கலந்து கொண்டிருக்கலாம். மாவட்டத்தின் தலைமைப்பதவியிலிருப்பவர், காரணத்தைச் சொல்லாமலே இப்படித் தாமதித்தது நிச்சயமாகத் தவறு.
இந்த மாதிரியான நடைமுறை, அரச நிர்வாக மட்டத்திலான நிகழ்ச்சிகளிலும் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளிலும், நடப்பதுண்டு. பொதுவாகவே, பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக, மாகாண மட்டத்திலான கலாசார விழாக்களில் காணப்படுகின்ற ஒரு வியாதி இது. மக்களையும் கலைஞர்களையும் மதித்துக் கொண்டாடுவதற்கு முன்னெடுக்கப்படுகின்ற விழாக்களே இவை என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில், அரச அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் மையப்படுத்தியே, இவை நடத்தப்படுவதுண்டு. இதனால்தான் இந்தச் சீரழிவு,
தமக்கு இது பிடிக்கவில்லை எனச் சிலர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துக் கொண்டு வெளியேறிச் சென்றனர். மற்றவர்களின் சகிப்புணர்வைப் பரிசோதிக்கிறார்கள் போலும். படித்தவர்கள், பொறுப்புடன் நடக்க வேண்டியவர்கள், கவனிக்க வேண்டியது இது.
கலாசார விழாக்களை நடத்துவதற்கு, அரசாங்கம், நிதி ஒதுக்கீட்டைச் செய்கிறது. மட்டுமல்ல, அமைச்சு மற்றும் நிர்வாக மட்டத்திலும் பலவிதமாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கலாசார அமைச்சு எனத் தனியாக ஓர் அமைச்சு மத்தியிலும், பின்னர் தனித்தனியாக ஒவ்வொரு மாகாணத்துக்கும் உண்டு.
ஒரு நாட்டினது அடையாளமும் ஆன்மாவும், கலாசாரம் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல, ஒவ்வோர் இனத்தினருக்கும் ஒவ்வொரு சமூகப்பிரிவினருக்கும், ஒவ்வொரு பிரதேசத்துக்கும், தனித்தனியான, சிறப்பம்சங்களைக் கொண்ட கலாசாரப் பண்புகளும் அடையாளங்களும் உள்ளன என்ற அடிப்படையிலே, மாவட்ட ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும், கலாசாரப் பேரவைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சுயாதீனமான கலாசார அமைப்புகள், நிறுவனங்களை விட, அரச நிர்வாக முறைக்குட்பட்ட ஏற்பாடு இது. ஆகவே, கலாசாரத்துறைக்காக, இத்தகைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு, நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கமைப்பும் இந்த ஒழுங்கமைப்பு இயங்குவற்கான நிதி ஒதுக்கீடும், அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்தாலும் நடைமுறை என்பது, சிறப்பானதாக இல்லை என்பதே உண்மை. இதற்குக்காரணம், இது அரச அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலும் அரசியல்வாதிகளின் தலையீட்டிலும் நடப்பதேயாகும்.
திட்டமிட்டிருப்பதைப்போல, இவற்றில் முறையான ஒழுங்கமைப்பும் நடைமுறையும் இருக்குமானால், இந்த நாட்டிலே மிகச் சிறந்த கலை வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும். நாட்டுக்குள்ளும் சர்வதேச அளவிலும், மிகத்திறமையான கலைஞர்களும் படைப்பாளிகளும் ஏராளமாக அறியப்பட்டிருப்பார்கள். கலைச் செயற்பாடுகளிலும் இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும், நாட்டில் அதிகரித்திருக்கும்.
கலைஞர்களும் இலக்கியப் படைப்பாளிகளும், வறுமையிலும் துயரத்திலும், சிக்கியிருக்க மாட்டார்கள். பதிலாக, அவர்களுக்கான விசேட ஏற்பாடுகள், மேலும் மேலும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆகவே, அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியும் நிர்வாகக்கட்டமைப்பும், தவறாகவே பயன்படுத்தப்படுகிறது என்றே அர்த்தமாகும்.
கலாசாரத்துறையின் வளர்ச்சிக்காக, அரசாங்கம் ஏற்பாடு செய்வதற்கு முன்பே, மன்னர்களின் காலத்துக்கு முன்பே, கலையையும் இலக்கியத்தையும், கலைஞர்களும் படைப்பாளிகளும் மக்களும் வளர்த்து வந்திருக்கிறார்கள். இப்போது கூட அதுதான் நிலைமை. அரச ஒழுங்கமைப்புக்கும் ஏற்பாட்டுக்கும் அப்பால்தான், சிறப்பான கலைச் செயற்பாடுகளும் இலக்கியப் படைப்புகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு உருவாகும் சிறப்பான கலைகளையும் கலைஞர்களையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் அடையாளம் கண்டு, கௌரவிப்பதற்கே அரச கலாசாரத்துறையினால் முடியாமலிருக்கிறது. அரச ஏற்பாட்டில் நடக்கின்ற விருது வழங்கல்களில் கூட, ஊழலும் தவறான தேர்வுகளும் அரசியல்சார்புகளும், இடம்பெறும் அளவுக்கே நிலைமை உள்ளது. இதனால், பல சிறந்த கலைஞர்களும் சிறந்த படைப்பாளிகளும், இந்த அரச ஏற்பாடுகளுக்கு அப்பால், தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஏற்பாடுகள் கூச்சமளிப்பதாக உள்ளன.
ஏனென்றால், கலை என்பது எப்போதும் சுயாதீனமானது, சுதந்திரமானது. புதிய சிந்தனைகளையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சமூக அக்கறையையும் பரந்த மனப்பாங்கையும் உடையது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என, உலகளாவிய அளவுக்குப் பரந்த மனதைக் கொண்டவர்களே கலைஞர்களும் படைப்பாளிகளும்.
என்பதால்தான் கலையும் கலைஞர்களும், உலகளாவிய ரீதியில் மதிப்பையும் கவனத்தையும் பெறக்கூடியதாக இருக்கிறது. மொழி, பிரதேசம், நிறம், மதம், காலம் என்ற எத்தகைய எல்லைகளும் கலையையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும், கட்டுப்படுத்தி விடமுடியாது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த அடிப்படைகளை அரசியல்வாதிகளும் அரச நிர்வாக அதிகாரிகளும் புரிந்துக் கொள்வதில்லை. இதனால், இந்த அரங்குகளில், தாங்களே முதன்மையாளர்களாகத் தோன்ற முற்படுகிறார்கள்.
இதில் இன்னோர் இரகசியமான உண்மையும், மறைந்தோ, கலந்தோ இருக்கிறது. கலைக்கும் கலைஞர்களுக்குமிருக்கும் கவர்ச்சியும் மதிப்பும் வெகுஜனத்திரட்சியும், அரசியல்வாதிகளையும் அரச அதிகாரிகளையும், கலைஞர்கள் தோன்றும் அரங்குகளில், தங்களையும் இணைத்துக் கொள்ளத்தூண்டுகிறது.
இப்படித்தோன்ற முற்படுகின்றவர்கள், அந்தக் கலையையும் கலைஞர்களையும், தாங்களே போற்றிப்போஷிப்பதாகக் காட்ட முற்படுகின்றனர். இதன்மூலம் கலையையும் கலைஞர்கள், எழுத்தாளர்களையும் தாமே உயிரூட்டிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்ள முயல்கின்றனர். ஆனால், அப்படியெல்லாம் உண்மையில் நடப்பதேயில்லை.
இதைப்பற்றி கலைஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் கேட்டால், அவர்கள் கதை, கதையாகச் சொல்வார்கள்.
ஏன், இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கே உண்மை புரியும். உங்களுக்குத் தெரிந்த எத்தனையோ சிறந்த கலைஞர்களும் எழுத்தாளர்களும், தங்களுடைய ஆற்றலை மேலும் வளர்த்துக்கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும், வாய்ப்பில்லாமல், வழியில்லாமல் இருப்பதை. பல எழுத்தாளர்கள், தாங்கள் அச்சிட்ட புத்தகளை விற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்படுவதை. எழுத்துத்துறையிலும் கலைத்துறையிலும், ஆர்வத்தோடு ஈடுபடும் இளைய தலைமுறை, அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல், அதைத் தொடர முடியாமல் திசைமாறிப்போவதை.
அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற கலாசார விழாக்கள், விருதளிப்புகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பயிற்சித்திட்டங்கள், கலை முன்னெடுப்புகள் போன்றவற்றின் மூலமாக பலர் மதிப்பளிக்கப் -பட்டிருக்கிறார்கள். பல கலைஞர்களுக்குப் பணப்பரிசுகள் கூட வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்டளவு புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
ஆண்டுதோறும் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் மிக உயர்ந்த விருதுகள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன. இதற்காக, மாகாணசபைகளுக்குக் கூட வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதேசத்திலும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில், குறிப்பிடத்தக்க அளவிலான எழுத்தாளர்களும் கலைஞர்களும் தேர்வு செய்யப்பட்டு மதிப்பளிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியத்துறைகளில் பங்களிப்புச் செய்த முதிய, மூத்த தலைமுறையினருக்கு, ஓய்வுதியத்திட்டம் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் இருக்கும்போது, நீங்கள் ஒரேயடியாக இப்படிக் குற்றச்சாட்டை எப்படி முன்வைக்க முடியும்? இது நியாயமே இல்லை என, அரச தரப்பிலும் அரசியல்வாதிகளின் தரப்பிலும் வாதிடுவோர் இருக்க முடியும்.
கலாசாரத்துறையின் மேம்பாட்டுக்காக அரச தரப்பிலிருந்து ஒன்றுமே நடக்கவில்லை, அரச நிர்வாகிகளும் அரசியல்வாதிகளும் எதுவுமே செய்யவில்லை, அல்லது அவர்கள் செய்வதெல்லாம் தவறு எனவும் இந்தப் பத்தி வாதிடவில்லை. பதிலாக அரசாங்கத்தின் திட்டப்படியும் அதற்காக ஒதுக்கப்படும் நிதியின்படியும், நடைமுறைகள் அமையவில்லை. அதாவது கலாசாரத்துறையின் மேம்பாட்டுக்குப் பதிலாக, அதனுடைய சீரழிவும் மந்த நிலையுமே காணப்படுகிறது என்பதே, இந்தப் பத்தியின் சுட்டிக்காட்டுதலாகும்.
உண்மையில், இந்த மாதிரியான கலாசார விழாக்களில், அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பிரதம விருந்தினர்களாகவோ முதன்மையாளராகவோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், இதற்குக் கலாசார விழா என்று பெயரிடமுடியாது. இது அரச சாகித்திய விழாவுக்கும் பொருந்தும். அங்கே ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் கலந்து கொள்வதாக இருந்தாலும், அவர்கள் முதன்மையானவர்களாக இருக்க முடியாது. கலாசார விழாக்களில் மையமாகவும் நாயகர்களாகவும் இருக்க வேண்டியவர்கள், கலைஞர்களும் எழுத்தாளர்களுமே. பல அரச சபைகளிலேயே கலைஞர்களும் புலவர்களும் மிக உச்சமாகப் போற்றி மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுவே சரியானதாகும். பிரித்தானிய மன்னர்களையும் விட, பிரித்தானியாவை ஆட்சி செய்தவர்களையும் விட, ஷேக்ஸ்பியர், புகழும் சிறப்பும் உடையவர். சோழ மன்னனையும் விட, கம்பன், புகழும் சிறப்பும் மிக்கவர். இந்தியத்தலைவர்களுக்கு நிகரானவர் அல்லது அதற்கும் மேலானவர் தாகூர். சிலியின் மணிமகுடம் பாப்லோ நெருடாவே. ரஷ்யாவின் மங்காப்புகழ் தோல்ஸ்ரோயும் மாயாகோவ்ஸ்லியும், அன்னா அக்மத்தோவாவும் தஸ்தாயேவ்ஸ்கியும் கார்க்கியும்தானே. யப்பானின் ஒளி அகிரா குரோசாவே, வங்கத்தின் தலைமகன் சத்யஜித் ரேயே, பாரதிக்கு, வள்ளுவருக்கு, சார்ளி சப்ளினுக்கு, புதுமைப்பித்தனுக்கு, பிரமிளுக்கு, அசோகமித்திரனுக்கு, டானியலுக்கு, நடிகமணி வைரமுத்துவுக்கு நிகரென யாருண்டு?
இப்படி உலகத்தின் வரைபடங்களில் மணி மகுடங்களாகவும் ஒளித்தீபங்களாகவும் காலமெல்லாம் சுடர்ந்து கொண்டிருக்கும் மகத்தான கலை ஆளுமைகள், எங்கும் இருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் உள்ளனர்.
இவர்களை அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், தங்களுக்குக் கீழ் வரையறை செய்ய முடியாது. ஆனால், அப்படியான அபத்தமே நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் கலைஞர்கள் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏதாவது உதவிகளோ, அங்கிகாரமோ தேவையென்றால், அரசியல்வாதிகளையும் அரச அதிகாரிகளையும் அனுசரித்துப் போகவேண்டியுள்ளது. விருதோ, பரிசோ கூட, அனுசரித்துப்போனால்தான் உண்டு என்ற நிலைமையே வளர்ந்திருக்கிறது. தாங்கள் வெளியிடும் புத்தகங்களைக் காவிக்கொண்டு, இவர்களைத் தேடி அலைந்து திரியும் படைப்பாளிகளைக் கண்டிருக்கிறேன்.
ஆனால், நெஞ்சுறுதியும் நிமிர்வும் கொண்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும், இந்தப் பக்கம் தலைவைப்பதில்லை. அவர்கள், மக்களையே தங்களுக்கான நம்பிக்கையாகக் கொள்கிறார்கள். சமூகத்தையே தங்களுக்கான அங்கிகாரமாகக் கருதுகின்றனர். “மன்னவனும் நீயோ வளநாடும் நினதோ” என; “நாமார்க்கும் குடியல்லோம். நமனையும் அஞ்சோம்” என; “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று, அப்படித்தான் இந்த வரலாறும் நகர்ந்து வந்திருக்கிறது
கலாசார விழாக்கள், எல்லாப் பண்பாட்டிலும் நடப்பதுண்டு. அந்தந்த இனத்துக்கோ சமூகத்துக்கோ ஏற்றமாதிரி அவை அமையும். அந்தந்த மக்கள் அதை நடத்தி வந்திருக்கிறார்கள். மன்னர்களும் அரசுகளும் அரசாங்கங்களும், சில இடங்களில் இதற்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம்.
அதே அரசுகளும் ஆட்சியாளர்களும், கலையையும் எழுத்தையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும், ஒடுக்கியும் கொன்றும் சிறைவைத்தும் அவமானப்படுத்தியும் தங்கள் தயவுக்காகக் காலடியில் வீழ்த்தியும் வந்திருக்கின்றன, வருகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேணும். ஆனால் வரலாறு ஒன்றையும் எப்போதும் மூடி வைத்திருப்பதில்லை. அது கீழ் நோக்கி எதையும் இறக்குவதுமில்லை. எல்லாவற்றையும் அது திறக்கும். எல்லாவற்றையும் அது மேலுயர்த்தும்.
இனிமேலாவது, தேசிய அளவிலும் மாகாண மட்டத்திலும் மாவட்ட, பிரதேச ரீதியாகவும் நடத்தப்படுகின்ற கலாசார விழாக்கள், புதிய பண்பாட்டைக் கொண்டிருக்கட்டும். அந்தத் துறையையும் அந்தத் துறையில் செயற்படுவோரையும் மெய்யாகவே மாண்புறுத்தும் வகையில் அமையட்டும்.
அமைச்சர்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் வேறு இடங்களும் வேறு சந்தர்ப்பங்களும் உள்ளன. அதில் அவர்கள் கூடிக்களித்துக் கொண்டாடி மகிழட்டும். இந்த மாதிரி இடங்களில் வந்து அதிகாரக் கோமாளிகளாக அரங்கில் நின்று சீரழிந்து, எல்லாவற்றையும் சீரழிக்க வேண்டியதில்லை. கலாசார விழாக்களை எந்தக் காலத்தில் நடத்துவது என்பதைப் பற்றியே, இன்னும் இந்த அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை.
மக்கள் தங்கள் பிரதேசங்களின் தொழில்முறைகள், பருவநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே, தங்களுடைய கலாசார நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் விழாக்களையும் வைத்திருக்கிறார்கள். வடக்கு, கிழக்கில் இளவேனில் காலத்தையும் மலைநாட்டில் வெயிற் பருவத்தையும் தெற்கிலும் மேற்கிலும் மென்னிலைப் பருவத்தையும் தேர்ந்திருக்கின்றனர்.
ஆனால், இன்று அரச மட்டத்திலான விழாக்கள், இந்த அடிப்படையில் நடப்பதில்லை. அரசியல்வாதிகளின் விருப்பம், அவர்களுடைய நிகழ்ச்சிநிரல் அல்லது அரச அதிகாரிகளின் நிகழ்ச்சிநிரலுக்கேற்பவே நடக்கின்றன. இதுவே அடிப்படையில் தவறானது. பண்பாட்டு நிகழ்வென்பது அந்தப் பண்பாட்டுடன் இசைந்தும் நெகிழ்ந்தும் நடப்பதன்றி வேறெப்படி இருக்க முடியும்?
ஆகவே, எல்லாத்தளங்களிலிருந்தும் இது சீர்ப்படுத்தப்பட வேண்டும். விழாக்களை நடத்தும் காலம், அவற்றை நடத்தும் முறை, நிகழ்ச்சிகளையும் விருதுகளையும் விருதாளர்களையும் பரிசுபெறுவோரையும் தேர்வு செய்யும் ஒழுங்கு, புத்தகக் கொள்வனவு, கலைஞர்களுக்கான ஊக்கமளிப்பும் மதிப்பளிப்பும், பங்கேற்பாளர்கள் என அனைத்திலும் ஒரு புதிய முறை தேவை.
நாட்டை நாம் எல்லாத்தளங்களிலும் தவறாகவும் குப்பையாகவும் அதிகாரத்தின் கீழும் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் அது நாடும் அல்ல. அங்கிருப்பது சமூகமும் சனங்களுமாக இருக்க இயலாது. கலை சிறந்தால் அந்த நாடு ஒளிமிக்கதாகும் என்பதைப் புரிந்து கொள்வதே இந்த இடத்தில் அவசியமானது.
Average Rating