இலங்கையில் சிறுவர் தொழில் ஒழிக்கப்படுமா?..!! (கட்டுரை)
இலங்கையில் காணப்படும் பிரச்சினைகள் என்று உரையாடும் போது, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், ஊழல், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள், எம் கண்முன்னே வந்து செல்லும். சிறுவர் தொழிலாளர் என்ற ஒரு பிரச்சினை, அநேகமானோரின் கண்முன்னே வந்து செல்வதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், அதுவும் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது என்பது தான், குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
சிறுவர் தொழிலாளர் என்பது, இலங்கையிலுள்ள பிரச்சினைகளுள் ஒன்று என்று கூறிய பின்னர்தான், உணவகங்களில் உணவு பரிமாறும் சிறுவர்கள், மோட்டார் வாகனத் திருத்தகங்களில் கழிவு எண்ணெயை உடல் முழுதும் பூசியபடி நிற்கும் சிறுவர் உள்ளிட்ட சிறுவர் தொழிலாளர்கள், எமக்கு ஞாபகம் வந்திருப்பர். ஆனால், அவர்களைப் பற்றியும் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும், போதியளவுக்குக் கரிசனை கொள்ளப்படவில்லை என்பது தான், யதார்த்தமாக உள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, சிறுவர் தொழில் என்பது, சிறுவர்களின் குழந்தைப்பருவம், அவர்களது எதிர்காலம், நற்பெயர் ஆகியவற்றைப் பறிப்பதோடு, அவர்களின் உடல், உள விருத்திக்கு ஆபத்தானது என வரையறுக்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள நிலைவரத்தைப் பார்த்தால், பெண்கள், இளைய நபர்கள் மற்றும் சிறுவர்களுக்கான தொழில் சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்டவர்களே சிறுவர்களாக வரையறுக்கப்படுகின்றனர்.
சில அமைப்புகளைத் தவிர, 14 வயதுக்குக் குறைவான எவரும், கடைகளிலும் அலுவலகங்களிலும் பணியாற்ற முடியாது என வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 16 வயதுக்குக் குறைந்த எவரும், சுரங்கங்களில் பணியாற்ற முடியாது என, சுரங்கம் மற்றும் கனிய வளங்கள் சட்டம் தெரிவிக்கிறது. அதைத் தவிர, ஆபத்தான வேலைகளில், 18 வயதுக்குக் குறைந்தோர் பணியாற்றுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதைத் தவிர, சர்வதேச தொழில் அமைப்பின் “குறைந்த வயது ஒப்பந்தம்” என்ற 1973ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தில், 2000ஆம் ஆண்டே, இலங்கை கைச்சாத்திட்டது. அதேபோல், மோசமான நிலையிலுள்ள சிறுவர் தொழிலாளர்களுக்கான 1999ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தில், 2001ஆம் ஆண்டில், இலங்கை கைச்சாத்திட்டது. இவற்றின் மூலம், சர்வதேச நியமங்களுக்கு ஏற்பச் செயற்படுவதற்கு, இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது.
சிறுவர் தொழிலாளர் தொடர்பான அண்மைய கவனம், தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிக்கையொன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அத்திணைக்களத்தின், 2016ஆம் ஆண்டுக்கான, சிறுவர் தொழிலாளர் சம்பந்தமான கருத்துக்கணிப்பு முடிவுகள், அண்மையில் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்தே, இக்கவனங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தக் கருத்துக்கணிப்பின்படி, இலங்கையில் 4,571,442 சிறுவர்கள் (5 தொடக்கம் 17 வயதுடையோர்) இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
இவர்களில் 2.3 சதவீதமானோர், சிறுவர் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். இதன் எண்ணிக்கை, 103,704 பேர் ஆகும். இது தொடர்பான மதிப்பாய்வு, இதற்கு முன்னர் 2008/09 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சிறுவர் தொழிலாளர்களாக, மொத்த சிறுவர்களில் 12.9 சதவீதமானோர் காணப்பட்டனர். எனவே, சிறுவர் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
ஆனால், வளர்ச்சியடைந்துவரும் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது கூட, எமது நாட்டின் சிறுவர் தொழிலாளர் விடயத்தில், முன்னேற்றம் ஏற்பட வேண்டிய தேவையைக் காணக்கூடியதாக உள்ளது. பங்களாதேஷ், பிரேஸில், பூட்டான், எகிப்து, இந்தோனேஷியா, ஈராக், மெக்ஸிக்கோ, பலஸ்தீனம், தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகள், இலங்கையை விடக் குறைவான சதவீதமான சிறுவர் தொழிலாளரைக் கொண்டிருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
தரவுகளைக் கணிப்பதில், மாற்றங்கள் இருந்திருக்கலாம் என்ற போதிலும், மேலே குறிப்பிட்ட நாடுகளை விட அதிகமாக, இலங்கையில் சிறுவர் தொழிலாளர் இருக்கக்கூடும் என்ற எண்ணம், வருத்தத்தைத் தருகிறது.
பங்களாதேஷ் போன்ற நாடுகள், சிறுவர் தொழிலாளர்களுக்கான அதிகம் அறியப்பட்டவை. அந்நாட்டில் காணப்படும் அதிகரித்த சனத்தொகை காரணமாக, இந்நிலை காணப்படுவதாகக் கருதப்படுகிறது. அவ்வாறாயின், இலங்கையில் ஏன் இந்த நிலைமை என்ற கேள்வி எழுகிறது. இலங்கையின் பொருளாதாரம், ஓரளவு முன்னேற்றகரமான வளர்ச்சியைக் கொண்டதாக இருக்கிறது. அவ்வாறாயின், எவ்வாறு இந்த சிறுவர் தொழிலாளர்கள் உருவாகின்றனர்?
சிறுவர் தொழிலாளர் என்றால், குறைந்தளவு ஊதியத்தை வழங்க முடியும், அவர்களைக் கட்டுப்படுத்துவது இலகுவானது, நீண்டகாலத்துக்குத் தொழில் புரிவர் என்ற எதிர்பார்ப்பு போன்வற்றை, இங்கு குறிப்பிட முடியும். இவை அனைத்தையும், சட்டத்துக்குப் புறம்பான பேராசை என்று குறிப்பிடலாம்.
இதில் முக்கியமான இன்னொரு தரவாக, சிறுவர் தொழிலாளர்களாக உள்ளவர்களில் 72 சதவீதமானோர், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர், நகர்ப்புறங்களிலேயே காணப்படுகின்றனர். ஆகவே, கல்வியறிவு வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில், தொழில் நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று கருதிவிட்டுப் போய்விட முடியாது. சிறுவர்களின் உழைப்பை உறிஞ்சுகின்ற இந்த “தொழில் வழக்குநர்கள்”, அபிவிருத்தியடைந்ததாகக் கருதப்படும் நகரப்பகுதிகளில் தான் வாழ்கிறார்கள்.
அதேபோன்று, 40.7 சதவீதமான சிறுவர்கள், தங்கள் குடும்பத் தொழில்கள் அல்லாத பணிகளை ஆற்றுகின்றனர். இவர்கள், கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
குடும்பங்கள் அல்லது நெருங்கிய உறவினர்களின் தொழிற்றுறைகளில் பணியாற்றுவோரே (59.3 சதவீதமானோர்) பெரும்பான்மையினர் என்ற போதிலும், குடும்பங்கள் என்ற அடிப்படையில், பெருமளவுக்கு துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்க வாய்ப்புகள் குறைவு என்று கருதலாம். ஆனாலும் கூட, இவ்வாறு தொழில்புரிவோருக்கு, அநேகமாக, ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது, இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அடுத்த முக்கியமான தரவாக, அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரியும் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 39,007 என அடையாளங்காணப்பட்டுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இவ்வாறு அவர்கள் வரையறுக்கப்படுவதற்கு, அவர்களின் பணிநேரம், வாரத்துக்கு 43 மணித்தியாலங்களைத் தாண்டுவதே காரணமெனக் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் கூட, ஆபத்தான சூழ்நிலைகளில் பணியாற்றுபவர்களை இங்கு புறக்கணிக்க முடியாது என்ற யதார்த்தமும் உள்ளது.
இலங்கைச் சிறுவர்களில் 90.1 சதவீதமான சிறுவர்கள் மாத்திரமே, பாடசாலைக்குச் செல்வதாக மதிப்பிடப்படுகிறது.
சிறுவர் தொழிலாளர் பற்றிய ஆய்வுகளில், இந்த இலக்கமும் முக்கியமானது. இதில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருப்போரும், முதலாம் ஆண்டுக்குச் செல்வதற்கு வயதை அடையாதோரும் தவிர, ஏனையோரே, இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள்.
இலங்கையில், கட்டாயக்கல்வி நடைமுறை காணப்படும் நிலையில், அதன் கீழ் கல்விகற்றுக் கொண்டிருக்க வேண்டியவர்கள், எதற்காக இவ்வாறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்பது தான்; வறிய மாணவர்கள், அடிப்படையான கல்வியைக் கூடக் கற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு, அவர்களுக்கான சவால்கள் காணப்படுகின்றன என்பது தான், இங்கு தெளிவாகத் தெரிகிறது. இதற்கு, இலங்கையில் இடம்பெற்ற போரும், முக்கியமான காரணமாக அமைந்தது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவலின்படி, உலகில் சிறுவர் தொழிலாளர்களாக 168 மில்லியன் சிறுவர்கள் உள்ளனர். அதில் இன்னொரு முக்கியமான தகவலாக, அதில் பெரும்பான்மையானோர், முரண்பாடு, வன்முறை, தளம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே வசிக்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை, 3 தசாப்தகாலமாக நீடித்த ஆயுத முரண்பாட்டை, இதற்குக் காரணமாகக் குறிப்பிட முடியும். ஏனெனில், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில், ஏனைய தெற்காசிய நாடுகளை விட முன்னணியில் காணப்படும் இலங்கை, சிறுவர் தொழிலாளர் விடயத்தில் மாத்திரம் பின்னடைவான போக்கைக் காண்பித்தது.
தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சிறுவர் தொழிலாளர் விடயத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை, அதனோடு இணைத்துப் பார்க்க முடியும்.
குறிப்பாக, சிறுவர் போராளிகளின் பயன்பாடு என்பது, ஒரு தொகுதி சிறுவர்களின் எதிர்காலத்தையே அழிக்குமளவுக்குச் சென்றது. போரின் பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு விரும்பிய துறையில், அவர்கள் மலர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அதேபோன்று, இலங்கையில் அரசியல்வாதிகளைப் பற்றிய விமர்சனங்கள், அனைவரிடமும் உள்ளன என்ற போதிலும், சிறுவர் தொழிலாளர் விடயத்தில், அவர்களைப் பாராட்டவும் வேண்டிய தேவையிருக்கிறது.
ஏனென்றால், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் சரி, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்திலும் சரி, சிறுவர் தொழிலாளர் நிலைமைக்கு எதிரான சட்ட அமுல்படுத்தல், கடுமையாகக் காணப்பட்டது. அதன் விளைவாகவே, இலங்கையில் சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை, சடுதியாகக் குறைவடைந்துள்ளது.
ஆனால், 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை, முக்கியமானது. அதில் அவர், எந்தளவுக்குத் தான் சட்ட அமுலாக்கம் இருந்தாலும், சமூகத்தின் பங்களிப்பின்றி, சிறுவர் தொழிலாளர் என்ற விடயத்தை ஒழிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியிருந்தார். அதைத் தான், இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டியிருக்கிறது.
அண்மைக்காலத்தில், சிறுவர் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தியவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக, சிறுவர் தொழிலாளரின் எண்ணிக்கை, பாரியளவில் குறைவடைந்துள்ளது. ஆனால், எஞ்சியுள்ள சிறுவர் தொழிலாளர்களை ஒழிப்பது தான், சவாலாக அமையவுள்ளது.
ஏனெனில், இவ்வளவு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சிறுவர் தொழிலாளரைப் பணிக்கமர்த்துவோர், அரசியல் அல்லது வேறு விதமான பின்புலங்களைக் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. எனவே, இறுதிக் கட்டம் தான், சவாலாக அமையும்.
சவாலான இந்தப் பகுதியில், அரசாங்கம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், திட்டமிட்ட வகையில் அமைய வேண்டும் என்பதோடு, அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது, பொதுமக்களின் பொறுப்பாகும்.
சிறுவர்களின் கையில் இருக்க வேண்டியது, புத்தகங்களும் பென்சில்களும் தான், தொழில் செய்வதற்கான கருவிகள் அன்று என்பதை, நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
Average Rating