விளக்கா? பானையா?..!! (கட்டுரை)
ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் ‘டெமோக்ரசி (Democracy) என்பார்கள். ‘டெமோக்ரசி’ என்ற ஆங்கிலச் சொல்லானது ‘டெமோஸ்’ (Demos) மற்றும் ‘கிரட்டோஸ்’ (Kratos) என்ற இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது என்பார்கள். ‘டெமோஸ்’ என்பதற்கு மக்கள் என்றும் ‘கிரட்டோஸ்’ என்பதற்கு அதிகாரம் என்றும் பொருள் என்பார்கள்.
‘மக்கள் அதிகாரம்’ அதாவது தம்மைத் தாமே ஆளும் அதிகாரமானது, தனிநபர்களிடமோ, ஒரு குழுவினரிடமோ அன்றி மக்களிடமே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
சுருங்கக் கூறின், ஐக்கிய அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் குறிப்பிட்டது போல, “மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சியே ஜனநாயகமாகும்”. இந்த, ஜனநாயகம் அல்லது மக்களாட்சி என்ற கருப்பொருள் கிரேக்கத்தின் நகர அரசுகளில் நடைமுறையில் இருந்தது என்று அரசறிவியல் மற்றும் வரலாற்றறிஞர்கள் சான்றுரைப்பார்கள்.
கிரேக்க நகர அரசுகளில், அந்த நகரங்களில் வாழ்ந்த மக்கள், நகரின் மையத்தில் ஒன்றுகூடி தாம் சார்ந்த முடிவுகளைத் தாமே நேரடியாக எடுத்தார்கள். இதனை அரசறிவியலாளர்கள் ‘நேரடி ஜனநாயகம்’ என்று வகைப்படுத்துவர்.
அதாவது, ஒரு ஜனநாயக அரசின் அங்கமான மக்கள் அனைவரும், நேரடியாக ஆட்சியில் பங்குபற்றித் தம்மைப் பற்றிய தீர்மானங்களை தாமே எடுக்கின்ற நடைமுறையாகும்.
இதையொத்த நடைமுறையை இந்தியக் கிராமங்களின் பஞ்சாயத்துகளில் நாம் காணலாம். ஆனால், அவற்றின் ஜனநாயகத்தன்மை, சமத்துவம் பற்றிய விமர்சனங்கள் பலதுமுண்டு என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகிறது.
ஆனால், பண்டைய கிரேக்க, ரோமானிய நகர அரசுகளில் இந்த நேரடி ஜனநாயக முறை வினைத்திறனாக இயங்கியது எனச் சில அரசறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குறைந்தளவிலான மக்களைக் கொண்ட நகர அரசுகளில் இவை சாத்தியமாக இருந்தன. இந்த நேரடி ஜனநாயக முறையின் முக்கியத்துவத்தை கிரேக்க அறிஞர்களான ப்ளேட்டோ மற்றும் அரிஸ்டோட்டில் ஆகியோரின் கருத்துகளிலும் நாம் காணலாம்.
ஆனால், காலவோட்டத்தில் நகர அரசுகள் இல்லாது போயின. மக்கள் தொகைப் பெருக்கமும் ஜனநாயகத்திலிருந்து முடியாட்சி நோக்கி நகர்ந்த மாற்றமும் பெரும் சாம்ராச்சியங்களின் உருவாக்கமும் இந்த நேரடி ஜனநாயகத்தை மட்டுமல்லாது ஜனநாயகத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, மீண்டும் ஜனநாயகத்தின் மீட்சி, ‘ப்ரெஞ்சுப் புரட்சி’யோடு ஆரம்பமானது எனலாம். சர்வாதிகார முடியாட்சியை ‘ப்ரெஞ்சுப் புரட்சி’ முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, அதிலிருந்து ஜனநாயக அரசுகளின் மீளெழுச்சி ஜரோப்பாவில் ஆரம்பமானது.
நவீன தாராளவாத, ஜனநாயக அரசுகளின் ஆரம்பமாக ‘ப்ரெஞ்சுப் புரட்சி’யைப் பல அரசறிவியலாளர்களும் குறிப்பிடுவர்.
‘ப்ரெஞ்சுப் புரட்சி’யோடு பெரும் சாமராச்சியங்களாக இருந்தவை ஜனநாயகத்தை நோக்கி நகரத்தொடங்கிய போது, பெரும் மக்கள் தொகையையும் அகண்ட நிலப்பரப்பினையும் கொண்ட அத்தேசங்கள், நேரடி ஜனநாயகத்தைப் பின்பற்றுவதென்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகியது.
ஆகவே, பிரதிநிதித்துவ ஜனநாயக முறை முக்கியத்துவம் பெற்றது. பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் முக்கியத்துவத்தோடுதான் அரசியல் கட்சிகளுக்கான தேவையும் உருவானது எனலாம்.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது மக்கள் தாம் நேரடியாக ஜனநாயக செயற்பாட்டில் பங்குபற்றுவதற்குப் பதிலாக, தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அதனூடாக அரசியல் செயற்பாட்டில் பங்குபெறுதலாகும். ஆங்கிலேயர்கள் மூலம் இலங்கையில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை தொடர்கிறது.
நாடாளுமன்றின் ஆயுளை நீடிக்க சர்வசன வாக்கெடுப்பு
1978 ஆம் ஆண்டின் 2 ஆம் குடியரசு அரசியல் யாப்பினூடாக நேரடி ஜனநாயகத்தின் பண்பினைக் கொண்ட சர்வசன வாக்கெடுப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வசன வாக்கெடுப்பு (அல்லது மக்கள் தீர்ப்பு, அல்லது ஒப்பங்கோடல்) என்பது பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைக் கொண்டுள்ள நாடுகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் தொடர்பாக மக்களின் நேரடி அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளும் வழிமுறையாகும்.
1978 ஆம் ஆண்டின் 2 ஆம் குடியரசு அரசியலமைப்பின் 4 ஆம் சரத்தானது ‘சட்டவாக்க அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறது.
இந்தச் சரத்தின் மூலம், நேரடி ஜனநாயகத்தின் பண்பினைக் கொண்ட சர்வசன வாக்கெடுப்பானது, மக்கள் நேரடியாக சட்டவாக்க அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு வழிமுறையாக, அரசியலமைப்பு ரீதியில் அங்கிகரிக்கப்பட்டது.
இந்தச் சர்வசன வாக்கெடுப்பு நடைமுறையைப் பயன்படுத்தியே 1977 ஆம் ஆண்டில் 5/6 பெரும்பான்மையைத் தான் பெற்றிருந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன நீடிக்க விரும்பினார். அரசியலமைப்புக்கு 4 ஆம் திருத்தத்தை முன்வைப்பதனூடாக அவர் இதனைச் செய்ய விளைந்தார். அதற்கு உயர்நீதிமன்றமும் 4:3 என்ற பெரும்பான்மையில் பச்சைச் சமிக்ஞையை வழங்கியிருந்த நிலையில், குறித்த அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்ப்பும், ஆதரவும்
அரசியலமைப்புக்கான 4 ஆம் திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்ட நிலைப்பாட்டினை எடுத்திருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மகனான அநுர பண்டாரநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் ஆனந்த திசாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சியை எதிர்த்த வேளையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் என்ற அந்தஸ்தில் பார்க்கப்பட்ட மைத்திரிபால சேனநாயக்க குறித்த முயற்சியை தார்மீக ரீதியில் தன்னால் எதிர்க்க முடியாது என்று பேசினார்.
ஏனெனில், “1970-1977 காலப்பகுதியில் சிறிமாவோவின் ஆட்சியில், தான் அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பது தொடர்பான யோசனைக்கு ஆதரவாகத் தான் பேசியதாகவும் செயற்பட்டதாகவும் தற்போது அதற்கு மாற்றாகச் செயற்படுவதானது சுயமுரண்பாடாக அமையும்” என்று அவர் பேசியதுடன் குறித்த மசோதாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தார்.
மறுபுறத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்கும் முடிவை எதிர்ப்பதாக அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 4 ஆம் திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 142 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான சரத் முத்தெட்டுவேகமவும் என வெறும் நான்கு பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். “நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதை நாம் எதிர்க்கிறோம்” என்று அறிவித்த அ. அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரும் வாக்கெடுப்பு நடந்தவேளையில் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.
ஜே.ஆரின் வல்லாட்சி இப்போது வந்து விட்டது குறித்த திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது ஜே.ஆருக்கு ஒரு சவாலே இல்லை. தேவைக்கு அதிகமாகவே நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இருந்தது.
ஆனால், சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெறுவது என்பதுதான் இதைவிடச் சவாலானது என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஏனெனில், சர்வசன வாக்கெடுப்பைப் பொறுத்தவரையில், பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 2/3 வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்குகொண்டால் சாதாரண பெரும்பான்மை போதுமானது, 2/3 வாக்காளர்களுக்கு குறைவானவர்களே வாக்களிப்பில் பங்குகொண்டால், பெறப்பட்ட பெரும்பான்மையானது குறைந்தபட்சம் மொத்த வாக்காளர்களின் 1/3 அளவினைக் கொண்டதாக இருக்கவேண்டியதாக இருந்தது.
ஆகவே, வாக்காளர்கள் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு வாக்காளர்கள் குறித்த சர்வசன வாக்கெடுப்பில் கலந்துகொள்வதும் முக்கியமாக இருந்தது.
அன்றைய சூழலில், இலங்கை மக்களிடையே கம்யூனிஸ்ட் கட்சியானது முன்பிருந்தளவுக்கு மக்களாதரவினைக் கொண்டிருக்காவிட்டாலும், அவர்களது பிரசுரமான ‘அத்த’ (உண்மை) பத்திரிகை பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம் பிரபல்யம்மிக்க பத்திரிகையாக இருந்தது.
குறிப்பாக, அரசாங்கத்தை விமர்சிக்கும் பிரதான ஊடகமாக அது காணப்பட்டது. குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முதல் நாள் இரவு கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ பத்திரிகை அரசாங்கத்தினால் மூடப்பட்டது.
மசோதா சமர்ப்பிக்கப்படவிருந்த நாளின் பத்திரிகை, ‘ஜே.ஆரின் வல்லாட்சி இப்போது வந்துவிட்டது’ என்ற தலைப்போடு அச்சாகி விநியோகத்துக்குத் தயாராக இருந்த பொழுதில்தான் குறித்த பத்திரிகை அரசாங்கத்தினால் மூடப்பட்டது.
இதனைப் பற்றி மறுநாள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்த, சரத் முத்தெட்டுவேகம நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த இராஜங்க அமைச்சராக இருந்த ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ், “குறித்த பத்திரிகையானது பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பதாக, குறித்த அதிகாரமுடையவர் கருதியதால் குறித்த பத்திரிகை மூடப்பட்டது” என்று பதிலை முன்வைத்தார்.
அதன்பின்னர் பேசிய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, “குறித்த பத்திரிகையானது அவசரகாலச் சட்டத்தின் கீழ்தான் மூடப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம வாக்களித்திருக்கிறார். ஆகவே, அவ்வாறு வாக்களித்ததன் மூலம் குறித்த பத்திரிகையை மூடியதற்கும் அவர் அங்கிகாரம் வழங்கியிருக்கிறார்” என்று புதுமையானதொரு தர்க்கத்தை முன்வைத்தார். இனி ஜே.ஆர் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான ஒரு முதல் சமிக்ஞையாகவே இந்தச் சம்பவம் தென்பட்டது.
வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான வாக்களிப்பு
குறித்த மசோதா தேவைப்பட்ட 2/3 பெரும்பான்மைக்கு அதிகமாகவே ஆதரவினைப் பெற்றிருந்த நிலையில், குறித்த திருத்தத்துக்கு சர்வசன வாக்கெடுப்பு ஒன்றினூடாக மக்கள் அங்கிகாரத்தைப் பெறும் அடுத்த கட்ட நகர்வுக்கு ஜே.ஆர் தயாரானார்.
1982 நொவம்பர் 14 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தேர்தல்கள் ஆணையாளருக்கு 1982 டிசெம்பர் 22 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சர்வசன வாக்கெடுப்பினை நடத்துமாறு உத்தரவிட்டார்.
அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 4 ஆம் திருத்தத்தின்படி, முதலாவது நாடாளுமன்றத்தின் ஆயுளை 1989 ஓகஸ்ட் நான்காம் திகதி வரை நீட்டிப்பதை அங்கிகரிக்கிறீர்களா? என்ற கேள்வியைக் கொண்டமைந்த வாக்குச்சீட்டில் மக்கள் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற இரண்டு தெரிவுகளில் ஒன்றுக்கு புள்ளடியிட வேண்டும்.
இந்த இரண்டு தெரிவுகளுக்கும் தனித்தனிச் சின்னமும் வழங்கப்பட்டது. சின்னங்களுக்கே வாக்களித்துப் பழகிவிட்ட மக்களுக்கு, சின்னமில்லாத தேர்தல், அதுவும் வாசித்து விடையளிக்க வேண்டிய கேள்வியைக் கொண்டமைந்த தேர்தல் கடினமானதாக இருக்கலாம் என்று சிந்தித்ததாலோ என்னவோ, ‘ஆம்’ என்று நாடாளுமன்ற ஆயுளை நீட்டிப்பதற்கு அங்கிகாரம் வழங்க ‘விளக்கு’ சின்னமும், ‘இல்லை’ என்று அதனை எதிர்க்க ‘பானை’ சின்னமும் தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டித்தல், அதன் ஜனநாயக விளைவுகள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், வல்லாட்சிக்கான வாய்ப்புகள் பற்றியெல்லாம் மிகப் பரந்த விவாதமொன்றை உருவாக்கியிருக்க வேண்டியதொரு சர்வசன வாக்கெடுப்பானது துரதிஷ்டவசமாக ‘விளக்கா’, ‘பானையா’ என்ற குறுகிற வட்டத்துக்குள் சிக்குண்டுவிட்டது.
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஆதரவாளர்களையும் பொது மக்களையும் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க விளக்குக்கு வாக்களிக்கக் கோரிய அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இடதுசாரிக் கட்சிகளும் குறித்த முயற்சிக்கு எதிராகப் பானைக்கு வாக்களிக்கக் கோரினர்.
அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு இந்தச் சர்வசன வாக்கெடுப்பு தொடர்பிலான பிரசாரங்களில் பங்குபெற அனுமதி கிடைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“பானைக்கு வாக்களிப்பது என்பது எந்தவோரு கட்சிக்கு ஆதரவானதோ, எதிரானதோ வாக்களிப்பு அல்ல. அது 1931 ஆம் ஆண்டு முதல் நீங்கள் அனுபவித்துவரும் உங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான வாக்களிப்பாகும்” என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தனது பிரசாரக் கூட்டங்களில் பேசினார்.
நக்ஸலைட் சதி
இந்தச் சர்வசன வாக்கெடுப்பை வெற்றிகொள்வதற்காக ‘ஆசியாவின் நரி’ என்றறியப்பட்ட ஜே.ஆர் இன்னொரு தகிடுதத்தத்தை ஏலவே ஆடத்தொடங்கியிருந்தார். இம்முறை, ‘நக்ஸலைட் சதி’ என்ற பேரில் ஜே.ஆர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிக்கும் தந்திரோபாயம் முன்னெடுக்கப்பட்டது.
(அடுத்த வாரம் தொடரும்)
Average Rating