விபசாரத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற தம்பதி..!!
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் சாரூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்னசென்ட் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சசிகலா அந்த பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு மற்றும் தொண்டு நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்தார். இதனால் அடிக்கடி அவர் வெளியிடங்களுக்கு சென்று வந்தார்.
கடந்த மாதம் 25-ந் தேதி சசிகலா சுய உதவிக்குழு வேலை தொடர்பாக நாகர்கோவில் செல்வதாக கணவர் இன்னசென்டிடம் கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு சசிகலா வீடு திரும்பவில்லை. அவரை இன்னசென்ட் மற்றும் உறவினர்கள் பல இடங்களுக்கும் சென்று தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சசிகலா காணாமல் போனது பற்றி இன்னசென்ட் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை தேடி வந்தனர்.
சசிகலாவின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டது யார்? என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. அப்போது நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் இலுப்பையடி காலனியில் வசிக்கும் கலா என்பவர் சசிகலாவுடன் பேசியிருப்பது தெரியவந்தது.
கலாவையும், ஆட்டோ டிரைவரான அவரது கணவர் முருகேசனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சசிகலா யார் என்றே தெரியாது? என தொடங்கிய அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சசிகலாவை கொன்று எரித்து விட்டதாக அவர்கள் கூறினர். சம்பவத்தன்று எங்கள் வீட்டுக்கு வந்த சசிகலாவுக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து நாங்கள் அவரை அடித்துக் கொன்றோம். பிணத்தை எங்கள் வீட்டருகிலேயே போட்டு எரித்தோம். சசிகலாவின் உடல் சரியாக எரியாததால் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை ஆட்டோவில் ஏற்றினோம். பின்னர் திசையன்விளை பகுதிக்கு சென்று அங்கு ரோட்டோரம் பிணத்தை வீசி விட்டு எதுவும் தெரியாததுபோல் நடந்து கொண்டோம் என தெரிவித்தனர்.
போலீசார் கலாவையும், முருகேசனையும் அழைத்துக் கொண்டு திசையன்விளைக்கு சென்றனர். முதலில் அங்குள்ள சுடுகாட்டில் போட்டு பிணத்தை எரித்ததாக தெரிவித்தனர். போலீசார் நேற்று இரவு விடிய, விடிய சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை.
இன்று காலை முருகேசன் பிணத்தை வீசிய இடத்தை அடையாளம் காட்டினார். திசையன்விளை- நாங்குநேரி செல்லும் சாலையில் உள்ள பட்டறை கட்டியவிளை என்ற இடத்தில் ரோட்டோரத்தில் பிணத்தை புதைத்தாக கூறினர்.
அந்த இடத்துக்கு சென்று போலீசார் தேடினர். அங்கு சசிகலாவின் தலை மட்டும் வெளியே தெரிந்தநிலையில் புதைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து உடலை தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலாவை கொன்ற கலாவும், அவரது கணவர் முருகேசனும் சேர்ந்து விபசார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி வீடுகளை மாற்றும் இவர்கள் அந்த வீட்டுக்கு அழகிகளையும், வாடிக்கையாளர்களையும் வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அதிக பணம் சம்பாதித்துள்ளனர்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஊட்டுவாழ்மடத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து இங்கு வந்து தங்கியுள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு சசிகலாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று நல வாரியத்துக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று ஏமாற்றி சசிகலாவை, கலாவும், முருகேசனும் அழைத்துள்ளனர்.
அவர்களது பேச்சை நம்பி சசிகலாவும் ஊட்டுவாழ்மடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே சில வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் சசிகலா கேரள அழகி என அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் சசிகலாவிடமும் ஆசை காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்தால் அதிக பணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதற்கு சகிகலா உடன்பட மறுத்ததால் இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் தான் சசிகலா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சசிகலா அணிந்திருந்த நகையை பறிக்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள். சசிகலாவின் உடலை மீட்ட பின் கலாவையும், முருகேசனையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சசிகலா கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவட்டார் மற்றும் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating