கல்லூரி மாணவனுடன் காதல்: என்ஜினீயரிங் மாணவியை கொன்று அண்ணன் தற்கொலை முயற்சி..!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பெருமாள். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர். இவருடைய மனைவி ருக்மணி.
இவர், சென்னாவரம் கிராமத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும், ராஜேஸ்வரி (வயது 22) என்ற ஒரு மகளும் இருந்தனர்.
ராஜேஸ்வரி, வந்தவாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை நாட்களில் தனது தாய்க்கு உதவியாக அலுவலகத்தை சுத்தம் செய்வார்.
இந்த நிலையில், மனநலம் பாதித்த மகனை அழைத்துக் கொண்டு பெருமாளும், ருக்குமணியும் வெளியூர் சென்றனர். ராஜேஸ்வரியை மட்டும் தனியாக விட்டுச் சென்றனர்.
தாய் வெளியூர் சென்றதால் மாணவி ராஜேஸ்வரி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தனியாக சென்று சுத்தம் செய்தார். அப்போது அங்கு, அதே கிராமத்தில் வசிக்கும் பெரியப்பா ராகவனின் மகன் ராஜா (25) வந்தார்.
ராஜா மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தங்கை ராஜேஸ்வரியை அழைத்து பேசினார். பிறகு, தனியாக பேச வேண்டுமென கூறி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தின் மாடிக்கு தங்கையை அவர் அழைத்துச் சென்றார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மோதல் முற்றியதால் ஆத்திரமடைந்த ராஜா தங்கையின் கையை கடித்து குதறினார். மேலும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
பிறகு தங்கை பிணத்தை அங்கேயே வீசிவிட்டு, ராஜா கிராமத்திற்குள் போதையில் தள்ளாடியபடி பதட்டத்துடன் சென்றார். உறவினர்களிடம் அவர், தங்கை ராஜேஷ்வரியை கொன்று விட்டதாகவும், பிணம் சமுதாய கூடத்தின் மாடியில் கிடப்பதாகவும் கூறினார்.மேலும் தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறியபடி ஆற்றுப்பக்கமாக சென்றார். இதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. போதையில் உளருகிறார் என்று நினைத்தனர்.
அதன்பிறகு தான், சந்தேகத்தின் பேரில் சிலர், சமுதாய கூடத்திற்கு சென்றனர். அங்கு ராஜேஸ்வரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், வந்தவாசி வடக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
டி.எஸ்.பி. பொற் செழியன், இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் கொடுத்த தகவலின்படி, ஆற்றுப் பக்கமாக சென்று ராஜாவை போலீசார் தேடி பார்த்தனர். அப்போது அவர், விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை, மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ராஜாவின் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது. ராஜாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து மாணவி தாய்ருக்மணி கொடுத்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:- கொலையுண்ட ராஜேஸ்வரி தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலனின் புகைப்படத்தை தனது பர்சில் வைத்திருந்தார். இதனை அண்ணன் முறையான பெரியப்பா மகன் ராஜா பார்த்துவிட்டு தகராறு செய்தார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தங்கையை கடுமையாக எச்சரித்தார். ராஜேஸ்வரி காதலை கைவிட முடியாது என திட்டவட்டமாக கூறியதோடு, என்னை கண்டிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று தூக்கியெறிந்து பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா, சமுதாய கூடத்திற்கு தங்கையை அழைத்துச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. மாணவி கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Average Rating