ஸ்கொட்லாந்து: பிரிந்து போதலெனும் முரண்நகை..!! (கட்டுரை)
நாட்டின் ஒருபகுதி பிரிந்து தனிநாடாவதும் அதை நிறுத்தப் போர்கள் வெடிப்பதும் அவை பேரழிவுகளாகத் தோற்றம் பெறுவதும் வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்திருக்கிறது.
இப்போதைய உலக ஒழுங்கு, தனிநாடுகள் உருவாவதற்கு வாய்ப்பானதாக இல்லை. இயல்பாகவே தனிநாடுகளாக உரித்துடைய பல, அவ்வாறு பிரிந்து போகாமல் பார்க்கப்பட்டுள்ள அதேவேளை, மக்களால் கோரப்படாத நிலையில் சில நாடுகள் தனிநாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இவை தனிநாடு என்கிற கோரிக்கையின் நியாயத்தை ஒருபுறம் கேள்விக்குட்படுத்துவதோடு, மறுபுறம் நியாயமான தனிநாட்டுக் கோரிக்கைகளை மறுதலிக்கவும் வழிசெய்கின்றன.
ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது, ஏறத்தாழ முடிவாகிவிட்ட நிலையில், பிரித்தானியாவில் இருந்து பிரிந்து போவதற்கான இன்னொரு முயற்சியை ஸ்கொட்லாந்து எடுத்திருக்கிறது. இவை ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக்கான கோரிக்கையை இன்னொருமுறை கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன.
2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பானது, பிரிந்து போவதற்கு எதிராக அமைந்த நிலையில், 2016 இல் நடைபெற்ற, ‘பிரிக்ஸிட்’ வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்தில் 62 சதவீதமானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்புவதாகவும் 38 சதவீதமானவர்கள் விலக விரும்புவதாகவும் வாக்களித்தனர்.
ஆனால், ஒட்டுமொத்த முடிவுகள் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு விரும்புவதைக் கோடுகாட்டிய நிலையில் அதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
ஸ்கொட்லாந்து மக்களின் விருப்பத்துக்கு முரணான முறையிலும் ஸ்கொட்டிஸ் நலன்களுக்கு பாதகமானதாகவும் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், ஸ்கொட்டிஸ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டுர்ஜியோன், பிரிந்து போவதற்கான விருப்பை அறிவதற்கான இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமையைக் கோரியுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் பிரிவினைக் கோரிக்கையை வரலாற்று வளர்ச்சியின் அடிப்படையில் கவனிக்க வேண்டும். தேச அரசும் தேசமாதலும் இன்று இவ்வாறான பிரிவினைக் கோரிக்கைகள் தோற்றம் பெற வழியமைத்துள்ளன.
தேச அரசு என்பது முதலாளியத்தின் துணை விளைவு. ஓரு சமூகப் பொருளாதார அமைப்பாக உள்ள மக்கள்திரள்கட்குச் சுயாதீனமான இருப்பு தேவைப்பட்ட போதே, தேசம் என்பதற்கான வரைவிலக்கணம் தேவைப்பட்டது.
ஐரோப்பாவில் முதலாளியம், ஏகாதிபத்தியமாக விருத்திபெற்ற போது, தம்மினும் வலியதான ஒரு நாட்டின் ஆளும் வர்க்கத்தால், தேச நலனின் பேரில், ஒடுக்குமுறை ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளும் மக்களும் தமக்கெனச் சுதந்திரமான அரசுகளைக் கோரினர்.
இனமும் பிரதேசமும் சார்ந்த அடையாளங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஆயினும், முதலாளியத்தின் தோற்றம் வரை, அவ்வடையாளங்கள் தேசங்களாக அமையப் பெறவில்லை. தேசம் என்ற கருத்தும் அதை அரசொன்றுடன் அடையாளப்படுத்தும் நடைமுறையும் உருவாகி, வளர்ந்து வந்த முதலாளி வர்க்கம் ஒன்றின் தேவைகட்கமையவே எழுந்தன.
தேசியம், முதலாளிய அரசுக்குத் ‘தேசஅரசு’ என்ற மதிப்பான அடையாளத்தை வழங்கியதன் மூலம், அந்த அரசில் தமக்கும் ஒரு பங்குண்டு என ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் நம்பி ஏமாற உதவியது.
தேசம் என்ற கருத்தாக்கம் முதலாளியத்தை ஒட்டி விருத்தியான அதேவேளை, நவீன முதலாளிய அரசின் விருத்தி, பலவாறான நடை முறைகளினூடு, பல்வேறு இனக்குழுமத் தேசிய அடையாளங்கள் நசுக்கப்பட வகை செய்தது.
‘கோணிஷ்’, ‘வெல்ஷ்’, ‘ஸ்கொட்டிஷ்’ இனக்குழும தேசிய அடையாளங்களின் வீழ்ச்சிகளின் துணையுடனேயே பிரித்தானியத் தேசிய அடையாளம் எழுச்சி பெற்றது. ஐரிஷ் மக்களது ‘கேலிக்’ மொழியின் இடத்தை ஆங்கிலம் வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்ட பின்பும், ஐரிஷ் மக்கள் பிரித்தானியத் தேசிய அடையாளத்துக்குள் கரைவதைத் தவிர்த்துள்ளனர்.
பிரித்தானியரது கொடூரமான ஒடுக்கு முறையினதும் சுரண்டலினதும் காரணமான வெறுப்புக்கும் அப்பால், மத வேறுபாடும், (கடலால் பிரிக்கப்பட்டிருந்த வகையில்) புவியியலும் தத்தமக்குரிய பங்கை அதற்கு வழங்கின.
இவை காலங்காலமாக, தனித்துவமான அடையாளங்களுக்கான அங்கிகாரத்தை வேண்டி நின்றன. அவை மறுக்கப்பட்டு, ஓடுக்கலுக்குள்ளான நிலையில் தனிநாட்டுக் கோரிக்கை முனைப்படைந்தது என்பதையும் இங்கு கவனித்தல் தகும்.
மத்திய கால ஐரோப்பாவில் தனித்துவமான அடையாளங்களுடன் தோற்றம் பெற்ற ஸ்கொட்லாந்து, நீண்டகாலமாகத் தனியான அரசாக முடியாட்சியைக் கொண்டிருந்தது.
ஆனால், தொடர்ச்சியான நெருக்கடிகளும் பாதுகாப்பின்மையும் 1603 ஆம் ஆண்டுமுதல் பிரித்தானியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் ஒரே மன்னரை முடியாகக் கொள்வதற்கு வழியேற்படுத்தியது.
1707ஆம் ஆண்டு, ஸ்கொட்லாந்து இங்கிலாந்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டிருந்தது. ஸ்கொட்லாந்தின் பிரபல கவிஞரான ரொபெட் பேர்ன்ஸின் ‘இங்கிலாந்திடம் இருந்து தங்கத்தை வாங்குவதற்காக விற்கப்பட்டவர்கள் நாங்கள்;’ என்ற பாடல் ஸ்கொட்லாந்தில் மிகவும் பிரபலமானதொன்று.
இது, ஸ்கொட்லாந்தின் இணைப்பை விளக்கும் ஒருவகையான பார்வை. 1800 ஆம் ஆண்டு பெரிய பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் கொண்ட ஐக்கிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. இது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. 1922 இல் நீண்ட போராட்டங்களின் பின்பு அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தது.
பிரித்தானியாவுடன் இணைக்கப்பட்ட காலம் முதல், ஸ்கொட்லாந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுவதும் பின்னர் அமுங்கிப்போவது என்பதும் கடந்த, முந்நூறு ஆண்டுகளில் பல தடவைகளில் நடந்துள்ளது.
1934 இல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி, தனி நாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்தி அரசியலை மேற்கொள்கிற கட்சியாக விளங்கியது. இருந்தபோதும் 1967 வரை அக்கட்சியால் பிரதானமான ஓர் அரசியல் சக்தியாக மிளிர இயலவில்லை.
1967 இல் நடந்த இடைத்தேர்தலில் எதிர்பாராத வகையில் பெற்றுக்கொண்ட ஓர் ஆசனம், ஸ்கொட்டிஷ் தேசிய அரசியலின் அரங்காடிகளாக ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி உருவாகுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
இருந்தபோதும், பிரித்தானியாவின் இருபெரும் கட்சிகளான பழைமைவாதக் கட்சியும் தொழில் கட்சியுமே ஸ்கொட்லாந்தில் மாறிமாறி ஆட்சி செய்தன. ஸ்கொட்லாந்தின் வடகடலில் 1970 இல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய், மீண்டுமொருமுறை ஸ்கொட்டிஷ் தனிநாட்டுக் கோரிக்கையை முன்தள்ளியது.
இதன் விளைவாக அதிகாரப்பகிர்வைக் கோரி, 1979 இல் நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 52 சதவீதத்துக்கு 48 சதவீதம் என்ற வகையில் வெற்றிபெற்றபோதும் மொத்த வாக்காளர்களில் 40 சதவீதமானவர்கள் வாக்களிக்கவில்லை என்று காரணம் காட்டப்பட்டு ஸ்கொட்லாந்தின் அதிகாரப்பகிர்வுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
1994 இல் மீண்டுமொருமுறை அதிகாரப்பகிர்வைக் கோருவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் 75 சதவீதமானவர்கள் (மொத்தத்தில் 45சதவீதம்) அதிகாரப்பகிர்வைக் கோரி வாக்களித்ததன் விளைவாக அதிகாரப்பகிர்வை வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு பிரித்தானியா ஆளானது.
1998 இல் ஸ்கொட்லாந்துக்கான தனியான நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோடு, ஸ்கொட்லாந்தின் உள்நாட்டு அலுவல்கள் மீதான முழுமையான கட்டுப்பாடும் அந்தாடாளுமன்றத்திடம் பாரப்படுத்தப்பட்டது.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்கொட்டிஷ் சுதந்திர தனிநாட்டை அடைவதை இலக்காகக் கொண்டு போட்டியிட்ட ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது.
ஸ்கொட்டிஷ் நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டிராத ஆளும் கட்சி என்ற வகையில் தனிநாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பைக் கோர அவர்களால் முடியவில்லை.
இதனை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர்களுக்குக் கிடைத்தது. இதன்படி 2014 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 55 சதவீதமானவர்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனிநாடாவதற்கு எதிராக வாக்களித்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற ‘பிரிக்ஸிட்’ வாக்கெடுப்பின் விளைவாக இன்னொரு சர்வஜன வாக்கெடுப்புக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. அதிகாரங்கள் 1997 இல் பகிரப்பட்ட நிலையிலும் தனிநாட்டுக்கான அவா குறைவடையவில்லை என்பதை 2014 ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளும் அதைத் தொடர்ந்த 2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் உறுதிப்படுத்தியுள்ளன. அதற்கு வலுவான காரணங்கள் உண்டு.
சிறுபான்மை மொழிகளும் கணிசமான அளவுக்கு இனக்குழும அடையாளங்களும் ஓரங்கட்டப்பட்டதில், முதலாளியப் பொருளியற் செயற்பாடுகளின் விரிவாக்கம் தீர்மானமான பங்கு வகித்துள்ளபோதும், இனக்குழும, மொழி அடையாளங்களை நசுக்குவதில் அரசு ஒரு கருவியாக இயங்கியுள்ளது.
அரச ஒடுக்குமுறையினதும் பின்தங்கிய முதலாளிய வளர்ச்சியினதும் பின்னணியில், ஐரோப்பாவின் சில பகுதிகளில், இனக்குழும, மொழி அடையாளங்கள் தேசிய அடையாளங்களாகவும் பிரிவினைவாத இயக்கங்களாகவும் உருப்பெற்றுள்ளன. ஸ்பெயினில் ‘பாஸ்க்’ இதற்கு ஒரு முக்கியமான உதாரணமாகும்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கான பிரசாரத்தின்போது, பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஸ்கொட்லாந்து வாக்களித்தால், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் பிரிந்து செல்ல நேரிடும்.
ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் ஸ்கொட்லாந்தை உறுப்பு நாடாக ஏற்காது. குறிப்பாக இவ்வாறான பிரிவினூடான புதிய நாட்டின் உதயமானது ஸ்பெயினிலும் பெல்ஜியத்திலும் பிரிவினைவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தும் என்பதால் ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் தனிநாடான ஸ்கொட்லாந்தை உறுப்பு நாடாக ஏற்காது என விளக்கம் சொல்லப்பட்டது.
அவ்வாறு நிகழுமிடத்து ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரத்தை சிதைக்கும் என ஸ்கொட்லாந்து மக்கள் பயமுறுத்தப்பட்டார்கள்.
இன்று மூன்று ஆண்டுகள் கழித்து பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்கான ஸ்கொட்லாந்து மக்களின் விருப்பையும் காரணம் காட்டி, இப்போது இன்னொரு சர்வஜன வாக்கெடுப்பான முன்னெடுப்புகள் நடப்பது உண்மையில் ஒரு முரண்நகை.
இன்று 42 ஆண்டுகளுக்கு பிறகு அதேகட்சியின் தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கான கோரிக்கையை முன்வைப்பது இன்னொரு முரண்நகை.
இவ்வாறு முரண்நகைகளின் மொத்த வடிவமாக ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக் கோரிக்கை இருக்கிறது. ஸ்கொட்டிஷ் தேசியவாதத்தின் வெளிப்பாடாகவே இப்போதைய நகர்வை நோக்க வேண்டியிருக்கிறது.
தேசியவாதம் முற்போக்கான கூறுகளைக் கொண்டுள்ள அதேவேளை, மிகவும் பிற்போக்கான அடக்குமுறைக்குத் துணைபோகும், சுரண்டும் கருவியாகவும் வரலாற்றில் செயற்பட்டு வந்திருக்கிறது.
ஐரோப்பிய வெள்ளை இனவாதமும் கிறிஸ்தவ மதவாதமும் ஐரோப்பிய தேசியவாதங்களும் யூத இன மக்களுக்கு எதிராக நடத்திய கொடுஞ்செயல்களின் வரலாறு பல நூற்றாண்டுகால விரிவை உடையது.
அது, ஜேர்மன் பாஸிஸமான நாஸிஸமெனும் வடிவில் யூதர்களை ஒடுக்கியபோது, ஐரோப்பியத் தேசியவாதங்கள் முதலில் அதைக்கண்டு கொள்ளவில்லை.
ஏகாதிபத்திய நலன்களுக்காக உலக வல்லரசுகள் இஸ் ரேலை உருவாக்கிய பின்பு, விடுதலைக்காகப் போராடிய யூத தேசியம், ஆக்கிரமிப்பாளனாகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை மத்திய கிழக்கில் காத்து நிற்கும் காவலனாகவும் மாறி விட்டது.
அரபு தேசியவாதங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்கிற பலவேறு அரபு ஆட்சிகள், பலஸ்தீன மக்களது விடுதலைக்காகச் செய்ததை விடத் தேசியத்தின் பேராலும் தமது நாடுகளில் தமது ஆட்சியை உறுதிபடுத்தவும் தம் செல்வத்தைப் பெருக்கவும் செய்த காரியங்களே முதன்மையானவை.
இதில் பிரதானமானது யாதெனில் தேசியவாதத்தில் இயற்கையானது எனவோ, நிரந்தரமானது எனவோ எதுவும் இல்லை. தேசியவாதம் என்பது குறிப்பிட்ட ஒரு காலச் சூழலில் ஒரு சமுதாயத்தின் சமூக அரசியல் பிரச்சினைகளின் விளைவாகக் கட்டியெழுப்பப்படும் ஒன்று. இது ஸ்கொட்டிஷ் தேசியவாதத்துக்கும் பொருந்தும்.
உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவால் உந்தித்தள்ளப்பட்ட ‘பிரிக்ஸிட்’ என்ற விளையாட்டின் விளைவால் ஸ்கொட்லாந்து பிரிந்து போகுமாயின் இவ்விளையாட்டு ஆபத்தானதாகும்.
பிரித்தானியா இதை நன்கறியும். இன்று மேற்குலகெங்கும் வீசுகின்ற தீவிர வலதுசாரி அலை நிறைவில், பிரித்தானியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் தீங்காய் முடியக் கூடும்.
ஒரே கருத்தையும் கோட்பாட்டுருவாக்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய, ஸ்கொட்டிஷ் தீவிர வலதுசாரிகள் தமக்குள் முரண்படுவது முரண்நகையே.
‘பிரிக்ஸிட்’ ஒருபுறம் ஸ்கொட்டிஷ் தேசியவாதத்துக்கும் அதன்வழி அதன் தனிநாட்டுக் கோரிக்கைக்கான வழியான சர்வஜன வாக்கெடுப்புக்கான கதவைத் திறக்க முனைகிறது.
இங்கு கவனிக்கப்படாமல் போகிற விடயம் யாதெனில், கடந்த சில ஆண்டுகளாக வட அயர்லாந்தில் தேசியவாதக் கட்சிகளின் எழுச்சி சத்தமில்லாமல் நடந்தேறியுள்ளது.
இது இன்னொன்றுக்கான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. வடஅயர்லாந்து, ஸ்கொட்லாந்தை முந்தி பிரித்தானியாவில் இருந்து பிரிந்திடவும் கூடும்.
அரசியல் என்பது ஆச்சரியங்கள் நிறைந்ததென்பதாலேயே சுவாரசியமானது. ஏனெனில், நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பர் நடந்துவிடும்.
Average Rating