யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், காணி இழப்பும் காணி இன்மையும்..!! (கட்டுரை)

Read Time:19 Minute, 7 Second

unnamed__1_-300x225யுத்தம் முடிந்த பின்னரான ஒடுக்கு முறைக் காலத்தில் சிறு நெருப்பாக இருந்த காணிப் போராட்டம் இப்போது வடக்கு அரசியலில் பெருநெருப்பாக எரிகின்றது.

இந்தப் போராட்டங்களுக்கு ஆட்சி மாற்றத்துடன் வந்த ஜனநாயக காற்று, ஒட்சிசன் வழங்க, யுத்தத்தில் சீரழிந்துபோன மக்களை வாட்டும் கிராமிய பொருளாதார நெருக்கடி, விவசாயத்துக்கான காணியையும் மீன்பிடிப்புக்கான இறங்கு துறைகளையும் மீட்டெடுப்பதற்கான அவசர முயற்சிகளைத் தூண்டிவிட்டுள்ளது.

இந்த மக்களைப் பொறுத்தவரையில் காணி என்பது வீடு கட்டுவதற்கான நிலம் என்ப​தோடு நிற்கவில்லை. காணி கிராமிய, பொருளாதார வாழ்க்கையைப் பேணவும் உற்பத்திக்கான வளமாகவும் உள்ளது.

காணியை மையமாகக்கொண்ட பல சிக்கல்கள் யுத்த முடிவின் பின்னர், முன்னுக்கு வந்துள்ளன. காணியை இராணுவம் பிடித்து வைத்திருத்தல், காணி உறுதிகளையும் காணி அனுமதிப்பத்திரங்களையும் புதுப்பித்தல் அல்லது சீராக்கல், இடம்பெயர்ந்து போனவர்களின் காணிகளில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் குடியேறி இருத்தல், வறிய மக்களின் காணி இல்லாப் பி​ரச்சினை தொடர்தல் என இவை பலவகைகளில் உள்ளன.

இந்தப் பிரச்சினைகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 2010, 2011 அமர்வுகளில் வெளிவந்த போதும், 2015 ஜனவரியில் கிடைத்த ஜனநாயக சுதந்திரத்துடன் வடக்கு மக்கள் கூடுதல் ​எழுச்சி ​பெற்றனர்.

நத்தை வேகக் காணி மீளளிப்பு, அரசாங்கத்தின் அரசியல் உறுதிப்பாடு இன்மை, தமது பிரதிநிதிகளின் மற்றும் சேவை அதிகார மட்டத்தினரின் இழுத்தடிப்புகள் என்பவற்றால் விரக்தியுற்ற மக்கள் இனியும் பொறுக்க முடியாது எனக் கண்டனர்.

2017 இன் தொடக்கத்தில் வன்னியில் சில சமூகத்தினர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினர். வன்முறை தவிர்ந்த இந்த எதிர்ப்புகள் பிடிக்கப்பட்ட தமது நிலங்களின் முன்னே முகாம் இட்டிருத்தல், சுழற்சி முறை உண்ணாவிரதம் என்பனவாக அமைந்தன.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது, தமிழ் ஊடகங்களின் பாணியிலான இராணுவத்தைக் குறை கூறல், சலிப்புத் தரும் வகையில் தொடர்ந்து கூறப்படும் அறிக்கைகள் என்பவற்றுக்கு மாறாகத் தமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி, அதை முன்னெடுத்த மக்களே நேரடியாகத் தமது சமூக, பொருளாதார கீழ்நிலைபற்றி, மோதல் முறையில்லாத வழியில் எடுத்துரைத்தனர்.

இந்த உறுதியான, ஆனால் மோதல் வழியில் அமையாத அணுகுமுறை, உள்ளூரில் இராணுவத்தை எதிர்கொண்ட வேளையில் கொழும்பிலிருந்த அதிகார வர்க்கத்தினருக்கு விண்ணப்பங்கள் செய்வதாகவும் அமைந்தது. இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மற்றும் வட மாகாண சபையின் சில தரப்பினரின் வாய் வீச்சிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

இவர்கள் தமது தேசியவாத நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கப் பயன்படுத்தும் இராணுவத்துக்கு எதிரான வழமையான சுலோகங்களாக இந்த மக்களின் போராட்ட முறைகள் இருக்கவில்லை.

அரசும் காணி இல்லாதோரும்

30 ஆண்டுகளில் திரும்பத் திரும்ப நடந்த இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் என்பன வடக்கில் காணி மையப்பட்ட சமூக வாழ்வைப் பெருமளவில் குழப்பியது.

மேலும் ஒரு போதும், காணி உரித்தைக் கொண்டிராத தாழ்த்தப்பட்ட சாதி மக்களும், யுத்தம் காரணமாக ஒரு நிரந்தர வீட்டை அமைக்க முடியாத இளைய தலைமுறையினரும் வீடு மற்றும் விவசாய காணியின்றி வாடி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது அதன் சனத்தொகையில் 10 வீதம் கொண்ட 14,000 குடும்பங்கள் ஒரு சிறு துண்டுக் காணிகூட இன்றியுள்ளனர். இதனால் அரசாங்கம் நன்கொடையாகக் கொடுக்கும் வீட்டைப் பெறவும் தகுதியின்றியுள்ளனர்.

மீள்குடியேற்றம் தொடர்பில் பல அறிக்கைகள், கொள்கை முன்னெடுப்புகள் உள்ளபோதும் அரசாங்கம் நிலம் இல்லாதோர் தொடர்பாக ஒரு கொள்கை​யை இன்னும் வகுக்கவில்லை.

உண்மையில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வறுமைபட்டவர்களே, யுத்தத்தினாலும் அதன்பின் தொடரும் துன்பங்களாலும் பெரிதும் வருத்தப்படுபவர்களாக உள்ளனர்.

வாழ்விடம் மற்றும் வா​ழ்வாதாரத்துக்கான போராட்டம் பல வகையில் காணப்படினும் இந்தப் பிரச்சினையின் அடி நாதமாக இருப்பது அரசாங்கத்தின் வகிபாகம்தான். இங்கு முரண்பாடு என்னவெனில், பாதிக்கப்பட்ட மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறும் அரசாங்கம்தான், மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாது தடுப்பதாகவும் உள்ளது.

கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள்

அண்மைய மாதங்களில் முக்கியமான பிரச்சினை கேப்பாபிலவு கிராமத்தில் உள்ள விமானப்படையாகும். இங்குள்ள 500 ஏக்கர் நிலம் 12 வருடங்களுக்கு முன்னர் குடியேறிய 400 குடும்பங்களுக்கு உரித்தானவை. இது விமானப்படையின் ஆக்கி​ரமிப்புக்கு உட்பட்டதாக உள்ளது.

இந்த மக்கள் பல தடவை இடம் பெயர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட மலைநாட்டுத் தமிழ் மக்கள் ஆவர். இவர்கள் தெற்கில் இடம்பெற்ற பல்வேறு கலவரங்களின்போது இடம்பெயர்ந்தவர்கள். இதேநேரத்தில் புதுக்குடியிருப்பில் சுமார் ஐம்பது குடும்பங்களும் பரவிப்பாஞ்சானில் 25 குடும்பங்கள் வரையானவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சொற்பமான குடும்பங்களே இங்கு கணிசமான விவசாய நிலத்தைச் சொந்தமாக வைத்துள்ளனர். இவர்களுள் அநேகமானோர் இரண்டு அல்லது மூன்று தலைமுறையாக மட்டு​மே இங்கு வாழ்ந்துள்ளனர்.

கேப்பாபிலவு மக்கள் 10 வருடங்கள் மட்டுமே இங்கு வாழ்ந்துள்ளனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இந்தக் காணிகள் அவர்களது கடந்த காலத்துடன் தொடர்புற வைப்பனவாக உள்ளன.

மேலும், இந்தக் காணிகள் ஓரிடத்துடன் உரித்துடைமை உணர்வையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் வழங்குபவையாக உள்ளன. மேலும் ஒப்பீட்டளவில் சிறியதான இந்தக் காணிகள் சீவனோபாயம் வழங்குபவையாகவும் உள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஆகியோர் நடாத்திய பேச்சுவார்த்தை காரணமாக, இந்தக் ​காணிகளில் சிலவற்றை விடுவிப்பதாக அறிவித்தமை முக்கியமாகும். ஆனால், யாருக்கு எவ்வளவு என்பவை போன்ற விடயங்கள் அடுத்த சில மாதங்களின் பின்னரே வெளிவரும்.
விடாப்பிடியாக ஓரங்கட்டுதல்

யாழ்ப்பாணத்தில் உள்ள மயிலிட்டி, வடக்கில் உள்ள பெரிய மீன்பிடித்துறைமுகங்களில் ஒன்றாகும்.
இந்த இடத்தைப் படையினர் பிடித்து வைத்திருப்பதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு, துறைமுகத்துக்கான உரிமை இல்லாதுபோக, பல மீனவக் குடியிருப்புகள் காணப்பட்ட நிலங்களும் பறிக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் குடியிருந்தோர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராகவும் ஏழை மீனவர்களாகவும் இருந்தனர். இவர்களுக்கு அங்கு காணிகள் சொந்தமாக இருக்கவில்லை. ஆனால், யுத்தம் ஆரம்பித்த காலங்களிலேயே இவர்கள் இடம்பெயர வேண்டியிருந்தது.

இதுபோலவே கிளிநொச்சியின் மேற்குக் கரைக்கு அப்பாலான இரண்டு தீவுகளைகி கொண்ட இரணைதீவும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட, இரணைத்தீவு 300 மீனவக் குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

இவர்கள் பல தலைமுறையாக அங்கு மீன் பிடித்து வாழ்ந்தவர்கள். துறைமுகம் மற்றும் இரணைத்தீவு, திரும்பக் கொடுக்கப்படின் நல்ல உட்கட்டமைப்புடன் குறைவான எரிபொருள் செலவில் மீன்பிடிக்க முடியும்.

மக்கள் மீளக்குடியேறித் தமது வாழ்க்கைத் தரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக பாதுகாப்புப் படை மற்றும் அரசின் சேவை அதிகார மட்டத்திலுள்ள கரங்களும் மக்கள் மீள்குடியேறுவதையும் தமது சீவனோபாயத்தை கட்டியெழுப்புவ​தையும் தடை செய்வனவாகவே உள்ளன.

1980களின் நடுப்பகுதியில் யுத்தம் தொடங்கியதைத் தொடர்ந்து அறுநூறு தமிழ் விவசாயிகள், தென்முல்லைத்தீவிலிருந்து குடிபெயர்ந்தனர். யுத்தக் காலத்தில் எல்லைக் கிராமங்களை தோற்றுவித்தல் எனும் பிரச்சினைக்குரிய உபாயத்தின் பகுதியாக சிங்கள விவசாயிகள் அங்கு குடியேற்றப்பட்டனர். இந்த இடம் வெலிஓயா என அழைக்கப்படுகின்றது.

சண்டை முடிந்த பின்னர் திரும்பி வந்த தமிழ் விவசாயிகள், நியாயபூர்வமாகத் தமக்கு குடும்பம் ஒன்றுக்கு நான்கு ஏக்கர் நிலம் தரப்பட வேண்டுமென கேட்டனர். இவர்கள் முன்னர் 5-10 ஏக்கர் காணிவரையில் சொந்தமாக வைத்திருந்தவர்கள். ஆனால் மகாவலி அதிகாரசபை 2 ஏக்கர் மட்டுமே கொடுக்கப்படலாம் என விடாப்பிடியாக உள்ளது.

மக்கள், 2 ஏக்கர், தாம் விவசாயம் செய்யப் போதுமானதல்ல எனக் கூறுகின்றனர். மூன்று வருடங்களாக இந்தப் பிரச்சினை பற்றி விவசாயிகள் வௌிப்படுத்தியும் செய்திருப்பினும் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

எல்.டி.டியினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட, வரலாற்று ரீதியாக நன்கு அறியப்பட்ட முஸ்லிம் குடியிருப்புக்கு அருகாமையில், யாழ்ப்பாண நகரத்துக்கு அண்மையிலுள்ள பறைச்சேரி வெளியில், மீண்டும் திரும்பிவந்த முஸ்லிம்கள், பல தசாப்தங்களாக வெறுமையாகக் கிடந்த நெல் காணியை யுத்தத்தின் பின்னர் வீடுகட்டவென வாங்கினர்.

ஆனால், உள்ளூர் மாநகராட்சி அதிகாரபீடம் இந்த நெற்காணியை உயர் நிலமாக்குவதைத் தடுத்து வருகின்றனர். வீடு கொடுத்தல் உட்பட பல மீள்குடியேற்ற விடயங்களில் உத்தியோகத்தர்களின் பாகுபாட்டுக்கு எதிராக யாழ். முஸ்லிம்கள் முறையிடும் போதும் இந்தப் பாகுபாடு தொடர்கிறது.

காணி அரசியல்

பல தலைமுறையாகச் சொந்த நிலத்தில் மக்கள் வாழ்ந்துள்ள போதிலும், காணியைத் தமது சொத்தாக உருவாக்கியது புதிய அரசாகும். மேலே குறிப்பிட்ட பல்வேறு காணிப்பிரச்சினைகளின் முரண் என்னவெனில், அரசேதான் நேரடியான ஆக்கிரமிப்பு மூலமாகவும் அரச சேவை உள்ளூர் அதிகாரபீடங்கள் ஊடாகவும் தடைகளை ஏற்படுத்தி, காணி ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுக்காமலும் மக்களை காணியற்றவர்களாகச் செய்தும் வருகின்றது.

இந்தப் பின்புலத்தில் யுத்தத்துக்கு பிந்திய காணிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் இறுதிப் ​பொறுப்பு அரசாங்கத்தின் மீதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் வருகின்றது. ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்வதற்கான சுதந்திரத்தைக் கொடுத்த ஜனாதிபதியை வெல்ல வைத்தவர்கள் என்ற வகையில், வன்னியில் உள்ள பலர், ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

அவர்கள், இதைப்போல 2015 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்து வெல்ல வைத்தனர். தேர்தல்களின்போது, மக்கள் இவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை இப்போது மெதுவாக குறைந்து செல்கின்றது.

காணி இல்லாதோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்கள் காணியைத் திருப்பிக் கொடுப்பதிலும் அரசாங்கம் அரசியல் உறுதிபாட்டை காட்டாமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுடன் சேர்ந்து செயற்பட தவறியதும் அவர்களை வழிப்படுத்தத் தவறியதும் இதற்கான காரணங்கள் ஆகும்.

வடக்கிலுள்ள காணி மீதான, இந்த விவாதம் அரசின் மீது குவிந்திருப்பினும் காணியானது முதலாளித்துவ பொருளாதார முறைமையின் அச்சாணி ஆகும். சந்​தைக்காகக் காணியில் நடைபெறும் உற்பத்தி, நிலமற்ற​ கூலி வேலையாட்களின் சுரண்டலோடும் காணிச் சொந்தக்காரர்களினால் செல்வம் குவிக்கப்படுவதோடும் சம்பந்தமானது.

சாதி ஒடுக்கு முறை, வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்த மலைநாட்டுத் தமிழர்களைத் தள்ளி வைத்தல், யாழ். முஸ்லிம்களுக்கு எதிரான தடைகள், காணி இல்லாத கூலித் தொழிலாளர்கள் சமுதாயங்கள் தொடர்பில், வடக்கில் காணப்படும் காணி உடைமையின் சமத்துவமின்மை இன்னும் தொடர்கின்றது.

வடக்கிலுள்ள காணிகளிலிருந்து புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்கள், முகம் கொடுக்கும் சவால்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் எல்லையிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுடன் குவியப்படுகின்றன. ​மேலும், அண்மைய தசாப்தங்களில் மூலதனக் குவிப்பு எமது நாட்டிலும் பூகோள ரீதியிலும் மக்களின் சொத்துகளைப் பறிப்பதுடன் நிலத்தில் உழைப்போரை சுரண்டுவதோடும் சம்மந்தப்பட்டது.

இவ்வாறு காணி பறிப்பு மறைமுகமாக இருக்கும். கிராமிய மக்களின் பெர்மிட் (அனுமதி) காணிகளை சுயாதீன காணியாக மாற்றும் புதிய காணிக் கொள்கை இதற்கு உதாரணம் ஆகும். இதனால் கடன்பட்ட விவசாயிகள் தமது காணிகளை விவசாய வர்த்தக கம்பனிகளுக்கு விற்றுவிட்டு, காணியை விட்டுப் போக நேரிடும். அரசானது பலவந்தமாகக் காணிகளைப் பறித்து எடுப்பதும் சாத்தியமே.

சேரிகளை ஒழிக்கவும் கிராமிய நிலங்களைப் பறிக்கவும் கூடிய அதிகாரங்களை பெருநகர அமைச்சுக்கும் அபிவிருத்திக்கான முகவரகத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ள பாரிய அதிகாரங்கள்.

இதற்காகவே, வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி காணிக்காகவும் சமத்துவத்துக்காகவும் போராடுவோர் அணி சேரவும் பலம்மிக்க காணிக்கான இயக்கத்தை கட்டியெமுப்பவும் வேண்டிய அவசர சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா..!!
Next post இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது..!!