வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி..!! (கட்டுரை)
நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளிகள் எப்போது வைக்கப்படும்? இதனை யார்தான் வைப்பார்கள் என்பது இப்போதைக்கு கேள்விதான். இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம், முதுகெலும்பென்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்ற நேரத்தில் இப்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கின்ற இளம் பட்டதாரிகளின் முயற்சிகளுக்குப் பதில் என்ன? இதுதான் இந்தப் பத்தியின் கரு.
வடக்கு, கிழக்கில் பட்டதாரிகளின் போராட்டங்கள், காணி மீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் என்று பல வடிவங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு 2015 இல் தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் வழி விட்டுக் கொடுத்திருக்கிறது.
மக்களது வரிப்பணத்தில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வருடா வருடம் கல்வி கற்றுப் பெருந்தொகையில் பட்டதாரிகள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். அதேபோன்று அந்தப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் இருக்கின்ற வெளிவாரிக் கற்கைகள் பிரிவுகளினாலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கற்கைப்பிரிவுகள், தனியார் கற்கை நிறுவனங்களினாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன் பட்டதாரிகள் வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் தன்னுடைய ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரையில் தன்னுடைய அறிவுக்காகவே கல்வி கற்கிறான். ஆனால், பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியாக வேண்டும் என்கிற சித்தாந்தம் தோற்றுவிக்கப்பட்டது, ஒவ்வொருவருடைய அடிமனக்கட்டுமானங்களாலாகும்.
ஒரு நாடு வெறுமனே அரச துறைகளால் மாத்திரமே முன்னேற்றமடைகிறது என்றால் அது பொய்யானதொரு எடுகோளாக இருக்கும்.
இந்த இடத்தில்தான், 30 நாளை எட்டுகிற மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம், 25 ஆவது நாளை எட்டியிருக்கிற அம்பாறை மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம், வடக்கு மாகாணத்தில் நடைபெற்று வருகின்ற 20 நாளைத் தொடும் போராட்டம் எல்லாம் ஒன்றுசேர்கின்றன.
இருக்கின்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நிபந்தனைகள் எதுவுமின்றி நியமனம் வழங்கப்படுகின்ற போதுதான், போராட்டம் நிறைவுக்குவரும் என்று கூறிக்கொண்டு தொடர்ந்து வருகிறமையைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பட்டதாரிகளின் போராட்டம், தாங்கள் பெற்ற பட்டங்களின் பிரதிகளை எரிப்பதும், தமது தொழிலுரிமையை பிணப்பெட்டியாகவும் தங்களது கல்வி முயற்சி தூக்கிலிடப்படுவதாகவும் மட்டக்களப்பு பட்டதாரிகள் பதிவுகளை வைத்திருக்கிறார்கள்.
சுற்றுலாத்துறை, கைத்தொழில்துறை, சிறுமுயற்சிகள், உற்பத்திசார் முயற்சிகள் எனப்பல முயற்சிகள் இருக்கின்ற போதும், அவற்றினைப் புறந்தள்ளி அரச துறையில், அதுவும் ஆசிரியத் தொழில் தேவை என்கிற சிந்தனை கலைத்துறைப் பட்டதாரிகளிடத்தில் இருக்கிறது. எழுத்துக் கற்பிக்கின்றவர்களாக தாங்கள் மாற முடியும் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.
இதற்கு யுத்தமும் அதன் ஊடாக ஏற்பட்ட தங்கியிருக்கின்ற நிலையும், தன்னை முன்னேற்றாத, ஆளுமைத்தனமற்ற கற்றலுமே காரணமாகிப் போனது என்று சொல்லமுடியும். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று முன்னைய காலத்தில் சொன்னதையெல்லாம் மறந்து, அறம் என்றால் என்ன என்பதனை மறந்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இப்போதும் ஆங்கிலக் கல்வியைத் தங்களது கல்வியில் முக்கியமானதாகத் தேர்வு செய்யாத, உலகமயமாதலின் போக்கில் இலத்திரலியல், தகவல் தொழில்நுட்பம் என்று பலவற்றைத் தெரிந்து கொள்வதற்குக்கூட முயலாத தன்மை காணப்படுகிறது. இவ்வாறாக உலகத்தின் வேகத்துக்கு, ஈடுகொடுக்க முடியாத ஒரு தொகையினரை உருவாக்கும் கல்வி முறையைப்பற்றியும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
வெறுமனே பட்டங்களைப் பெற்று விட்டால், அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்கிற எண்ணத்துடனேயே தொடரப்பட்ட கல்விக்கு இப்போது தொழிலில்லை என்று யார் அறிவித்தாலும் மிகப்பெரியளவான பிரச்சினை ஒன்று உருவெடுக்கும்.
கடந்த கால ஆட்சிகளில் அரசியல் முன்னெடுப்புகளுக்காக பட்டதாரிகளின் பெருந்தொகையினருக்கு அரச உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. அந்த நியமனங்கள் சரியான முறையில் துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டதா என்றால் அதிலும் கேள்விகள் இருக்கின்றன. அதற்குக்கிடைக்கும் பதில்களிலும் விமர்சனங்கள் இருக்கின்றன.
அரசாங்கத்துறையின் நிச்சயத்தன்மையினை மாத்திரமே நம்பி, அரச உத்தியோகத்தராக மாற விளையும் பட்டதாரிகள் அவற்றிலிருக்கின்ற வசதிகளை மாத்திரமே கருத்தில் கொள்கிறார்கள். தனியார்துறையின் கட்டுப்பாடுகள் தமது இயலாமையின் காரணமாகவே பெரிதாகத் தோன்றுகின்றன என்பதனை உணர்வதற்கும் தங்களது ஆளுமை மேம்பாட்டினை நோக்கிய பயணத்தினை ஆரம்பிப்பதற்கும் விருப்பமற்றே இருக்கின்றனர்.
நாட்டின் கௌரவம், எதிர்காலம் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு மகிழ்ச்சிகரமான தீர்மானத்தினை எடுத்தாலும் அதனை முழுமையாகச் சிரம் மேல்கொண்டு, செயற்படுவதற்கு எத்தனைபேர் தயாராக இருப்பர் என்பது முதன்மைக்கேள்வி.
உண்மையில் கடந்த 35 வருடகாலத்துக்கும் அதிகமாக நீடித்த யுத்தம், இலங்கை சுதந்திரமடைந்தது முதல் உருவான அரசியல் பிரச்சினை வடக்கு, கிழக்கில் பல்வேறுபட்ட பின்னடைவுகளையே கொண்டுவந்திருக்கிறது. அதில் முக்கியமானது கல்வி, கலாசாரம், சமூகக்கட்டுப்பாடுகள், நல்ல பழக்கவழக்கங்கள், தன்நம்பிக்கை, ஆளுமைத்திறன் எனப் பலவற்றினை அடையாளம் காணமுடியும்.
இவற்றினைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்கள் செய்யப்படுகின்றனவா என்றால், வெறும் காலத்தைக் கடத்தும் கைங்கரியங்களே நடைபெறுகின்றன. வெளிவாரியாகப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்களுக்கு பட்டமளிப்பு நடத்தப்படக்கூடாது என்று கடந்த காலங்களில் உள்வாரியாகக் கற்கின்ற மாணவர்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். அது ஓரளவு தணிந்திருக்கிறது.
பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளைத் தயார் செய்யும்போது, அவர்களை உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாகத் தயார்படுத்துவதில்லை.
திருமணம் முடித்துப் பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் நிலையில் உள்ளவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், அவற்றுக்கிடையில் உள்ள வயதான குழந்தைகளையுடையவர்களும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்களில் பங்கு பெறுகின்றனர். அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு போராட்டக்களத்திலேயே பாலுட்டுவதும், உணவூட்டுவதும் நடைபெறுகின்றன.
பல்கலைக்கழகங்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கல்விமுறையில் இருக்கின்ற குறைபாடுகளும் இந்த வேலையில்லாத பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டாலும், அவற்றினை நிவர்த்தி செய்யக் கொண்டுவரப்படுகின்ற முறைமைகள் போதாது என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் கல்வி முறைமைகளையும் அவற்றினைப் பொருளாதார உற்பத்தித்துறை சார்ந்த தேவைப்பாடுகளை எதிர்கொள்ளும் வகையிலும் ஏன் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது கேள்விதான்.
கேள்விகளையே அடுக்கிக் கொள்கின்ற இந்த நேரத்தில்தான், பட்டதாரிகளின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொக்கி நிற்கின்றது. பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து பிரதமரையும் கல்வி அமைச்சரையும், ஜனாதிபதியையும் இழுத்து வைக்கின்ற பட்டதாரிகள் தேசியக் கொள்கையில் மாற்றம் தேவை என்பதனை கொண்டு வருகின்றனர்.
திறைசேரியும் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்று பல்கலைக்கல்வியை நிறைவுசெய்தவுடன் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியதான ஒழுங்கு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பட்டதாரிகளின் மன உழைச்சல்களைத் தீர்க்கின்றதான முறைமையானது, நாட்டின் பொருளாதாரத்தில் மேம்பாட்டினை தருகின்றதாக அமையும்.
சத்தியாக்கிரகங்களுக்கான முடிவுகளையும் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், இளைய சமுதாயத்தின் மனோநிலையில் மாற்றம் ஒன்று ஏற்பட்டாக வேண்டும்.
துறைசார் கல்வியையும், அது சார்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய ஏற்பாடுகள் பல்கலைக்கழகங்களிலேயே ஏற்படுத்தப்படுவதன்மூலமும் ஆளுமை விருத்திகளுடனான அறிவும் ஆற்றலும்மிக்க மனித வளமாக பட்டதாரிகளை வெளியேற்றுவதே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.
எது எப்படியானாலும் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் ஆதரவுகளைத் தெரிவிப்பதனாலோ அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதனாலோ தீர்வுகளைக் கொண்டுவர முடியாது என்ற யதார்த்தம் வெளிப்படையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை.
தனியார்துறை சார்ந்த தொழில்துறைகளை ஏற்படுத்துவதற்கான முதலீடுகள் இருக்கின்ற போதும் இளைஞர் சமுதாயம் அதற்கான முன்வருகையை வெளிப்படுத்தவேண்டும்.
அத்தோடு பட்டதாரிகளின் திறமைகளை ஒரு குறிப்பிட்ட போட்டிப்பரிட்சையின் மூலம் அறிந்து கொள்ள முடியாது. ஆகையால், போட்டிப் பரீட்சையின்றி, நேர்முகப் பரீட்சையின் மூலம் பயிற்சி அடிப்படையில் நியமனங்களை பட்டதாரிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டதாரிகளுக்கான நியமனங்கள், அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கான வயது எல்லையை 45ஆக அதிகரிக்க வேண்டும்.
நடைபெற்று வருகின்ற போராட்டமானது வெற்றியளிக்குமா இல்லையா என்ற நிறையில் வடக்கு, கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளின் முன்னெடுப்புகளுக்கு சாதகமான முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதே எதிர்பார்ப்பு.
அரசியல் சார்ந்தும் சாராதும் எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கப்பால் எமது நாட்டின் எதிர்காலம், மக்களின் மேம்பாடு, எதிர்கால சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் அவற்றினை எதிர்கொள்வதாகவும் அமையும்போது மாத்திரமே அமைதியான மகிழ்ச்சியான நாட்டை நாம் அடைந்து கொள்ள முடியும்.
Average Rating