எதுவரை நீளும் இந்த காலஅவகாசம்?..!! (கட்டுரை)
ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவு, மார்ச் 13ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட தருணங்களில் எல்லாம், பல்வேறு கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் என்று இழுபறிப்பட்டு, கடைசி நேரத்திலேயே பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை வரலாறு.
உறுப்பு நாடுகளின் போதிய ஆதரவைத் திரட்டுவதற்காகவும், தீர்மான வரைவு தொடர்பாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவும், இழுபறி நிலை நீடிக்கும். ஆனால், இம்முறை நிலைமை அதற்கு நேர்மாறானதாக இருக்கின்றது. பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் வரைவுகளைக் கையளிப்பதற்கு நேற்று, மார்ச் 16 வரை காலஅவகாசம் இருந்தது.
அந்தக் காலஅவகாசம், முடிவடைவதற்கு முன்று நாட்கள் முன்னதாகவே, அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய பிரதான அனுசரணை நாடுகள் இந்தத் தீர்மான வரைவைக் கையளித்து விட்டன. இந்தத் தீர்மான வரைவு தொடர்பாக ஒரே ஒரு உபகுழு கூட்டம் மாத்திரம் நடத்தப்பட்டிருக்கிறது. அதைவிட வேறெந்த கருத்தறியும் முயற்சிகளும் பகிரங்கமாக முன்னெடுக்கப்படவில்லை. உறுப்பு நாடுகள் மத்தியில் இந்த வரைவுக்குப் போதிய ஆதரவும் கருத்து ஒற்றுமையும் காணப்படுவதால் மேலதிக கூட்டங்கள் ஏதும் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தத் தீர்மானம் பெரும்பாலும் திருத்தங்களின்றி நிறைவேற்றப்படும்.
இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளதால், இந்தத் தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இரண்டுபட்டு நின்று, வாக்கெடுப்பு நடத்தக் கோரும் நிலை ஏற்படாது என்றே நம்பப்படுகிறது. இதனால், ஒருமனதாக வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றப்படுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. இந்தத் தீர்மானம் மூலமாக, இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் நிம்மதியாக இருக்கக்கூடிய காலஅவகாசம் கிடைக்கப் போகிறது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே, காலஅவகாசத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டு, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கின்ற ஓர் உத்தியைத்தான் கையாண்டு வந்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஜெனீவா, நியூயோர்க், புதுடெல்லி என்று ஓடித் திரிந்து, அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதை ஆறு மாதங்கள் தள்ளிப் போடுமாறு காலஅவகாசம் கேட்டது. அதற்குள்ளாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், 2015 செப்டெம்பரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை அடிப்படையாக வைத்து, 2015 ஒக்டோபர் மாதம், இலங்கை தொடர்பான 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் இணங்கிக் கொண்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு, ஒன்றரை ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் காலஅவகாசம், 2017 மார்ச் வரை இலங்கைக்கு கிடைத்திருந்தது. அதையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தாம் அதைச் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்வதற்கும் அரசாங்கம் தயங்கவில்லை.
இப்போது, நிறைவேற்றப்படாதுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகவே இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கேட்டுள்ளது. உண்மையில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு இலங்கை கோரும் அல்லது இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாவது காலஅவகாசம் இதுவாகும்.
அடுத்தவாரம் ஜெனீவாவில் நிறைவேற்றப்படும், தீர்மானத்தின் மூலம், 2019 மார்ச் வரையில் இலங்கைக்கு, காலஅவகாசம் வழங்கப்படவுள்ளது. சரியாக ஒரு வருடம் கழித்து, 2018 மார்ச்சில் நடக்கும், பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில், முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர், எழுத்து மூலமான ஓர் அறிக்கையைப் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த முறை இந்த இடைக்கால அறிக்கை எழுத்து மூலமாக கோரப்படவில்லை. வாய்மூல அறிக்கையாகவே கோரப்பட்டது. ஆனால், இம்முறை, எழுத்து மூலமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மான வரைவு கூறுகிறது. அதன் பின்னர், 40 ஆவது கூட்டத்தொடரில், 2019 மார்ச்சில் விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மான வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம்தான், இலங்கை அரசுக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கிடைக்கிறது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர்கள் மத்தியில் மேலும் காலஅவகாசம் வழங்கப்படுவது தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமலேயே இந்தக் காலஅவகாசம் வழங்கப்படுகிறது. முதலில் ஆறு மாதம், பின்னர் ஒன்றரை ஆண்டுகள், இப்போது இரண்டு ஆண்டுகள்; ஆக மொத்தம் இலங்கைக்குக் கிடைத்ததும் கிடைக்கப் போவதுமாக, மொத்தக் காலஅவகாசம் நான்கு ஆண்டுகள். இதில் இரண்டு ஆண்டுகள் எதுவுமே செய்யாமலேயே முடிந்து போய் விட்டன.
எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளில் தனது கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதனை வலியுறுத்திக் கொண்டு வரப்படவுள்ளதே இப்போதைய தீர்மானம். இந்த முறை தீர்மான வரைவில் ஒரு முக்கியமான விடயம் எதிர்பார்க்கப்பட்டது. தீர்மானத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கான ஒரு செயலகத்தை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் அமைக்க வேண்டும் என்பதே அந்த விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனை வலியுறுத்தியது.
இந்தச் செயலகம் வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதுபோலவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையிலும் அந்த விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு உறுப்பு நாடுகள் மத்தியிலும் ஓரளவுக்கு ஆதரவு இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும், இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் அத்தகைய செயலகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு அனுமதிக்கக் கோரும் எந்தப் பந்தியும் இடம்பெற்றிருக்கவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம், தேவையான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்க வேண்டும் என்றொரு பந்தி இந்த வரைவில் இருக்கிறது.
இந்தத் தொழில்நுட்ப உதவி என்ற சொல்லாடலுக்குள் பல விடயங்கள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாகக் கூட, இந்தச் செயலகத்தை அமைக்கும் விடயத்தை உள்ளடக்கலாம். ஆனால், அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்க வேண்டும். அதுகுறித்த உள்ளக இணக்கப்பாடுகள் ஏதும் எட்டப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஐ.நாவின் கண்காணிப்புச் செயலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு வழிசெய்யும் எந்தப் பரிந்துரையையும் வெளிப்படையாக, இந்த வரைவு உறுதி செய்திருக்கவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டிலும் கூட இத்தகையதொரு கண்காணிப்புச் செயலகத்தை அமைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அப்போது அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும், அந்த அழைப்பை அரசாங்கம் நிராகரித்து விட்டதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஐ.நாவினால் இத்தகைய கண்காணிப்புச் செயலகத்தை நேரடித் தலையீட்டின் மூலம் அமைக்க முடியாது. இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும். அதன் மூலம்தான் ஐ.நா அதனை அமைக்க முடியும். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூட, கண்காணிப்புச் செயலகத்தை அமைக்குமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் இலங்கை அரசின் உரிமை. அதில் தலையீடு செய்ய எந்த நாட்டினாலும் முடியாது. இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவில், மார்ச் 21 ஆம் திகதி வரையில் திருத்தங்களைச் செய்யலாம்; அதற்குப் பின்னர், இந்தத் தீர்மான வரைவு பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போதும் திருத்தங்களை முன்வைத்து, கோரிக்கைகளை விடுக்கலாம். அதற்குச் சிலவேளைகளில் ஒப்புதல் அளித்தால், அப்படியே நிறைவேற்றவும் ஒப்புதல் அளிக்காவிடின், வாக்கெடுப்பு நடத்தப்பட்டுத் திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும்.
ஆனால், கண்காணிப்புச் செயலகம் ஒன்றை அமைக்கும் திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது குறைவாகவே உள்ளன. ஏனென்றால், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையைப் பெறுவதற்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இலங்கை அரசு இணை அனுசரணை அளிக்க வேண்டுமானால், தீர்மானத்தில் கடுமையான தன்மைகள் இருப்பதை விரும்பாது. எனவே, தீர்மானத்தை முடிந்தவரையில் இலகுபடுத்தவே அனுசரணை நாடுகள் முனைகின்றன.
அந்த வகையில், இப்போதைய தீர்மானம் மூலம் கிடைக்கப்போகும் காலஅவகாசத்தை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்துகிறதோ இல்லையோ- தனக்கான அழுத்தங்களை முடிந்தவரையில் குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலை நிரந்தரமானதா, இல்லையா என்பதை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிந்திய அரசியல் சூழல்தான் தீர்மானிக்கும்.
Average Rating