கால அட்டவணை: இழுத்தடிப்பைத் தடுக்கும் ஜெனீவாவின் உத்தி..!! (கட்டுரை)

Read Time:25 Minute, 7 Second

article_1489065906-article_1479829797-aubeஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், மூன்றாவது வருடமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையைச் சமாளித்துவிட்டது.

இந்த வருடமும் அரசாங்கத்துக்கும் மனித உரிமைப் பேரவைக்கும் இடையிலான இணக்கப்பாட்டுடன் பேரவையின் இவ்வருட மார்ச் மாத அமர்வு முடிவடையப் போவதாகவே தெரிகிறது

இந்த அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு, பதவிக்கு வந்தவுடன் அந்த வருடம் மார்ச் மாதம் பேரவை அமர்வு கூடிய போது, ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் இலங்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டு, அதன் அறிக்கை வெளியிடப்படவிருந்தது.

அவ்வேளை, தாம் முன்னைய அரசாங்கத்தைப் போல் நடந்து கொள்வதில்லை எனவும், கடந்த கால வாக்கு மீறல்களை மறந்து, புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமை விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக அவகாசம் வழங்க வேண்டும் என்றும் எனவே, மேற்படி விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஆறு மாதங்களுக்கு ஒத்திப் போடுமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. மனித உரிமைப் பேரவையும் அதனை ஏற்றுக் கொண்டது.

அந்த அறிக்கை, அதே ஆண்டு செப்டெம்பர் மாத அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டது. அத்தோடு அமெரிக்கா உட்பட ஐந்து நாடுகள், இலங்கை விடயத்தில் சமர்ப்பிக்கவிருந்த பிரேரணையொன்றில் சில சொற் பிரயோகங்களை மாற்றிய பின்னர், இலங்கை அரசாங்கமும் அதற்கு அனுசரணை வழங்க முன்வந்தது. எனவே, அந்த அமர்வும் சுமூகமாக முடிவடைந்தது.

இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வருடா வருடம் இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் தலைமையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு வந்த போதிலும், கடந்த வருடம் அவ்வாறான எவ்வித பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆனால், இலங்கை தொடர்பாக மனித உரிமை உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்த் ராத் அல் ஹூசைன், பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்துக்குச் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தன.

ஆனால், இம்முறை இலங்கை விடயத்தில் புதியதோர் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. அது, மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் வகையில் அமையும் என்றும் ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.

அதற்கு முன்னர், மனித உரிமை உயர் ஸ்தானிகர் இந்த வருடத்துக்கான அறிக்கையை கடந்த வாரம் சமர்ப்பித்து இருக்கிறார். அது வரப் போகும் நிலைமைகளை ஓரளவுக்குக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஒரு நாடு தொடர்பாக, மனித உரிமைப் பேரவையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்படுவது நல்ல விடயமாகக் கருதப்படுவதில்லை. அது, அந்த நாட்டு அரசாங்கம், தமது மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க தவறி விட்டதையே குறிக்கிறது.

எனவே, இம்முறை இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடனோ அல்லது அனுசரணையுடனோ மீண்டும் இலங்கை விடயத்தில் புதிய பிரேரணையொன்று நிறைவேற்றப்படுவதானது இலங்கை அரசாங்கத்துக்கு நல்லதல்ல.

இந்த அரசாங்கம், பதவிக்கு வந்ததன் பின்னர், மனித உரிமை உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த முதலாவது அறிக்கையைப் போலல்லாது, ஆனால், கடந்த வருடம் அவர் சமர்ப்பித்த அறிக்கையைப் போல், இவ்வருட அறிக்கையும் மிருதுவான எச்சரிக்கைத் தொனியில் அமைந்துள்ளது.

அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட சில காரியங்களைப் பாராட்டும் அதேவேளை, உயர்ஸ்தானிகர் அரசாங்கத்திடம் மனித உரிமை விடயத்திலான தமது பொறுப்புகளை நிறைவேற்றும் திடசங்கற்பம் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபோன்ற சொற்பிரயோகங்கள் முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் மனித உரிமைப் பேரவைக்கும் இடையே ஏற்பட்டதைப்போல், எதிர்காலத்தில் தற்போதைய அரசாங்கத்துக்கும் மனித உரிமைப் பேரவைக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகளையே எடுத்துக் காட்டுகின்றன.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத அமர்வின் போது, இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம், இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது அல்லது அரை குறையாக நிறைவேற்றியுள்ளது என்பதே மனித உரிமை உயர் ஸ்தானிகரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

அதேவேளை மனித உரிமை விடயத்தில் கவலைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என்றும் அவரது அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, இலங்கை அரசாங்கம் மனித உரிமைப் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட நல்லதோர் நிலைமை என்னவென்றால், போருக்குப் பின்னரான இன்று வரையிலான மனித உரிமை மீறல்கள், மனித உரிமைப் பேரவையின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதேயாகும்.

உதாரணமாக, இவ்வருட அறிக்கையில், கடந்த ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணம் குளப்பிட்டியில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் கடந்த வருடம் ஜனவரி மாதம் எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது, ஓர் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்களும் இம்முறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

அதேவேளை, பொலிஸ் நிலையங்களில், சில நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை மற்றும் புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தமை போன்றவையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இது, தாம் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டுகிறது.

இதற்கு முன்னர், உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கைகளிலும் வெலிவேரிய, ரத்துபஸ்வலவில் தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மூவரைப் படுகொலை செய்தமை, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் போன்ற சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தன.

அரசாங்கம் கடந்த சில மாதங்களில், நாட்டில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதற்காகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகமவின் தலைமையில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதோடு, கடந்த வருடம் காணாமற்போனோருக்கான அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சட்டம் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இவற்றைத் தமது அறிக்கையில் பாராட்டியுள்ள இளவரசர் செய்த் அல்-ஹூசைன், அவற்றில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், முத்தெட்டேகமவின் செயலணி தமது அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்தது. எதிர்காலத்தில் அமைக்கப்படப்போகும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சந்திரிகாவின் தலைமையிலான அமைப்பு பெரிதாக எதனையும் செய்யவில்லை. இந்த இரண்டு அமைப்புக்களைப் பற்றி குறிப்பிடும் உயர்ஸ்தானிகர், இரண்டு நிறுவனங்களும் நடைமுறை வேலைத் திட்டமொன்றை முன்வைக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகப் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்காக சர்வதேச தரத்திலான சட்டமொன்றைக் கொண்டு வருவதாக அரசாங்கம் ஏற்கெனவே மனித உரிமைப் பேரவைக்கு வாக்குறுதியளித்துள்ளது.

அதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்கம் பலமுறை அறிவித்துள்ளது. ஆனால், இன்னமும் பயங்கரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆட்கள் கைது செய்யப்படுவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்துக்கான வரைவொன்றை அரசாங்கம் தற்போது தயாரித்து வருவதைத் தாம் அறிவதாகக் கூறும் அல்-ஹூசைன், அந்த வரைவு சர்வதேச தரத்தில் இல்லை எனக் குறை கூறியுள்ளார்.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிராக இன்னமும் வெறிப் பேச்சுகள் நடத்தப்படுவதாகவும் அவற்றைத் தடுக்கப் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது மனித உரிமை உயர் ஸ்தானிகரின் மற்றொரு குற்றச்சாட்டாகும்.

2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வெறிப் பேச்சைத் தடுப்பதற்காக, அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டு வரமுயற்சித்தது. ஆனால், அதன் மூலம் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கடசிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அது, வாபஸ் பெறப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னர் அரசாங்கம் அந்த விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த விடயம், தற்போது ஏறத்தாழ மறக்கப்பட்ட ஒரு விடயமாகும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் மறந்தாலும் மனித உரிமைப் பேரவை, அதனை மறக்கவில்லை என்பதே இந்த அறிக்கை மூலம் தெரிகிறது.

இதுவே, வருடா வருடம் இவ்வாறான அறிக்கையொன்று வெளியிடப்படுவதில் உள்ள நன்மையாகும். இல்லாவிட்டால் எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் அரசாங்கங்கள் இந்த விடயங்களைக் கிடப்பில் போட்டு மக்களை ஏமாற்றிவிடும்.

அரசாங்கம் சர்வதேச சக்திகளின் கருத்துப் படியே நடந்து கொள்கிறது என்றும் உத்தேச புதிய அரசியலமைப்பும் அந்தச் சக்திகளின் தேவைப்படியே தயாரிக்கப்படுகிறது என்றும் கூட்டு எதிரணி என்றழைக்கப்படும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு கூறி வருகிறது. அவர்கள் மேலும் அவ்வாறே வாதிடும் வகையிலும் சில கருத்துகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட்ட பொறிமுறையொன்றின் மூலமே மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைப் பேரவை கூறி வருகிறது. 2015 ஆம் ஆண்டு அங்கு நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றாற் போல் மனோரி முத்தெட்டுவேகமவின் செயலணி வெளிநாட்டு நீதிபதிகளைப் பரிந்துரை செய்திருந்தது.

அமெரிக்காவில்போல், உரிமைகள் தொடர்பான சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என இதற்கு முன்னர் மனித உரிமை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டு இருந்தார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக அரசியலமைப்புச் சபையின் கீழ் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களில் ஒன்று அவ்வாறானதோர் சட்டத்தைப் பரிந்துரை செய்திருப்பதாக அல்- ஹூசைன் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இலங்கையின் அண்மைக் கால வரலாற்றில மனித உரிமைகளை மீறும் ஆயிரக் கணக்கான சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும், அவற்றில் சில சம்பவங்கள் பிரசித்தி பெற்று மனித உரிமை மீறல்களின் சின்னங்களாக இருக்கின்றன.

2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை, அதே ஆண்டு மூதூரில் தொண்டர் அமைப்பொன்றின் 17 உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை, குமரபுரம் படுகொலை, ரவிராஜ் படுகொலை, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை போன்றவை அவையாகும். அவற்றை மனித உரிமை உயர் ஸ்தானிகர் ‘அடையாளச் சம்பவங்கள்’ (emblemic cases) என வர்ணிக்கிறார்.

இவற்றில் ரவிராஜ் படுகொலை மற்றும் குமரபுரம் படுகொலை ஆகியவற்றுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சிங்கள ஜூரிமார்களைக் கேட்டுப் பெற்றனர். அதனை அடுத்து அவர்கள் குற்றமற்றவர்கள் என அந்த ஜூரிமார் தீர்மானித்தனர்.

இச்சம்பவங்கள் பற்றிய விசாரணைகளின் கவலைக்குரிய நிலைமையை குறிப்பிடும் அல்-ஹூசைன் இவற்றை முறையாகக் கையாள அரசாங்கம் திராணியற்று இருக்கிறது அல்லது திடசங்கற்பம் இன்றி இருக்கிறது எனக் குற்றம்சாட்டுகிறார்.

குமரபுரம் மற்றும் ரவிராஜ் படுகொலைகள் பற்றிய வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, அவை சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். அதனை மனித உரிமை உயர் ஸ்தானிகரும் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இம்முறை அவர் சமர்ப்பித்த அறிக்கையில், மிகவும் முக்கியமாகவும் அழுத்தமாகவும் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களில் அவர் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கைளிலும் அவ்வாறே வலியுறுத்தினார். 2015 ஆம் ஆண்டு அவர் அதற்கான பொறிமுறையை விசேட கலப்பு (hybrid) நீதிமன்றம் என்றே குறிப்பிட்டார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அந்தப் பிரயோகத்தை விரும்பவில்லை. அதேவேளை, அந்தப் பொறிமுறை உள்நாட்டுப் பொறிமுறையாக இருக்க வேண்டும் எனவும் விரும்பியது.

அதன்படி பொதுநலவாய நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதிமன்றமொன்றை உருவாக்குவதாக இணக்கம் காணப்பட்டு, இந்த வருடம் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் அது உள்ளடக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க முடியாது எனக் கருத்து வெளியிட்டு இருந்தனர். இந்த வருடமும் மனித உரிமைப் பேரவை கூடிய நிலையிலும் அவ்விருவரும் சர்வதேச நீதிபதிகளுக்கான தமது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், குமரபுரம் மற்றும் ரவிராஜ் படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மற்றும் வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்ற தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைச் சுட்டிக் காட்டியே இம்முறை அல்-ஹூசைன் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை வலியுறுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது ஒரு வகையில் அரசாங்கத்துக்கு விடும் பெரும் சவாலாகும்.

கடந்த முறைகளில் விசாணைப் பொறிமுறையைப் பற்றிக் குறிப்படும் போது, அரச படைகள் மற்றும் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் செய்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி, விசாரணை செய்வதற்கான பொறிமுறையாகவே அவர் அதனை குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இம்முறை அறிக்கையில் புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.

கடந்த முறை வலியுறுத்திய பொறிமுறையையே அவர், இம்முறையும் வலியுறுத்துகிறார் என்றும் கடந்த முறை புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்ததனால், இம்முறை அதனை விசேடமாகக் குறிப்பிடாவிட்டாலும் அதில் குறைகாண முடியாது எனச் சிலர் வாதிடலாம்.

ஆனால், அறிக்கையை மொத்தமாகப் பார்க்கும்போது, அரச படைகள் மட்டுமே மனித உரிமைகளை மீறின என்பதைப் போன்றதோர் அபிப்பிராயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, அறிக்கையின் நடுநிலையைப் பாதுகாப்பதற்காக அவர் அதனை குறிப்பிட்டு இருந்தால் அது பொருத்தமாகும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை படைகளில் சேர்த்துக்கொள்ளவோ, வைத்துக்கொள்ளவோ கூடாது என உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் கூறி வருகிறார். அண்மையில் மாலி நாட்டில் சமாதானப் பணிகளுக்காக அனுப்பத் தயாராக்கப்பட்ட ஒரு படையணியின் பயணம் மனித உரிமைப் பிரச்சினை காரணமாகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையும் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். வெளிநாடுகளில் சமாதானப் பணிகளுக்காக இலங்கையின் படைகள் போவதனால் நாட்டுக்கு பெருமளவில் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

அதேவேளை அது, அப்படைக்கு அளிக்கப்படும் சர்வதேச அங்கிகாரமாகும். எனவே, மாலி நாட்டுக்கான பயணத்தைத் தாமதப்படுத்தியதன் மூலம் படைகளைச் ‘சுத்தம் செய்வதற்கு’ ஐ.நா அமைப்பு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது தெளிவாகிறது.

எவ்வாறாயினும், மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அந்த அவகாசம் வழங்கப்படும் போல்தான் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்குவதை எதிர்க்கவில்லை எனக் கூறியுள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பான கலப்பு நீதிமன்றம் போன்ற விடயங்கள் மிகவும் சிக்கல் வாய்ந்த விடயங்கள் என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். இதுவும் அரசாங்கத்துக்குக் காலஅவகாசம் கிடைக்கும் என்பதற்கு அறிகுறியாகும்.

ஆயினும், இம்முறை படைகளைச் ‘சுத்தப்படுத்தல்’, பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றைக் கொண்டு வரல், மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்குதல், சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் பங்களிப்பபைக் குறைத்தல் போன்றவற்றை நிறைவேற்றுவதற்காக மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கால அட்டவணையொன்றைக் கேட்கும் அல்லது கூட்டாகத் தயாரிக்க முன்வரும் என்றே கூறப்படுகிறது. அவ்வாறானதோர் அட்டவணை அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்: ஒருவாரத்தில் பதில் கிடைக்குமா?..!!
Next post கடைசியில் ஸ்ரீதேவிக்கு வந்த சோதனை..!!