பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்க கூடாது: நடிகைகள் வலியுறுத்தல்..!!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சுதந்திரம், சமூகத்தில் பெண்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகைகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
நடிகை டாப்சி இதுகுறித்து கூறியதாவது:-
“சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் ரீதியாக கசப்பான அனுபவங்கள் உண்டு. பஸ்சில் பயணிக்கும்போது, ரோட்டில் நடக்கும்போது, கூட்டத்தில் செல்லும்போது ஆண்களால் சில்மிஷத்துக்கு ஆளாகிறார்கள். இந்த தொல்லைகளை அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற தைரியமே ஆண்களை இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட வைக்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். பெண்கள் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொம்மைகள் அல்ல. யாரிடமும் அவர்கள் தலைகுனிய கூடாது.
விதிப்படி நடக்கட்டும் என்ற தாழ்வு மனப்பான்மையும் கூடாது. காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் சுதந்திரம் அதிகரிக்க வேண்டும். மற்றவர்களுக்காக நமது விருப்பங்களையும், கனவுகளையும் அழிக்க கூடாது. சரித்திர காலத்தில் மிக சிறந்த பெண்கள் இருந்துள்ளனர். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமாக அவர்கள் வாழ்ந்து விட்டுப்போய் இருக்கிறார்கள். அவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு தைரியமாக வாழ வேண்டும்”.
இவ்வாறு டாப்சி கூறினார்.
நடிகை அமலாபால் கூறியதாவது:-
“பெண்கள்தானே என்று பலர் இளக்காரமாக பார்க்கும் நிலைமை இருக்கிறது. தைரியம், அறிவு, முன்னேற்றம் எதிலும் பெண்கள் யாரும் ஆண்களுக்கு சளைத்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை. மென்மையாக இருப்பது, நேர்மறையாக சிந்திப்பது போன்றவை பெண்களுக்கு உள்ள பலவீனம் என்று நினைக்காதீர்கள். அவர்களுடைய பலமே அதுதான்.
பார்ப்பதற்கு நாங்கள் கடலில் இருக்கும் அலைகளைப்போல் இருக்கலாம். ஆனால் சுழன்று மூழ்கடிக்கும் பேரலைகளாக மாறுவதற்கு எங்களுக்கு அதிக நேரம் ஆகாது. பெண்கள் எதிர்ப்புகளையும், எதிர்மறை விளைவுகளையும் சந்திக்கும்போதுதான் அவர்களின் பலத்தை உலகுக்கு காட்டுவார்கள். என் வாழ்க்கைகூட நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது.
சில தோல்விகள் வாழ்க்கையையே மாற்றி விடும். என்வாழ்க்கையில் அதுமாதிரி வந்த தோல்விகள் திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது. தோற்போம் என்று தெரிந்தும் கடைசி வரை போராடுபவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. நிறைய பெண்கள் ஆண்களை மீறி திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.”
இவ்வாறு அமலாபால் கூறினார்.
நடிகை தமன்னா கூறியதாவது:-
“முந்தைய கால கட்டத்தை ஒப்பிடும்போது பெண்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றம் வந்து இருக்கிறது. முன்பு போல் அவர்கள் அடக்கி வைக்கப்படவில்லை. சினிமாவிலும் சுதந்திரம் இருக்கிறது. கதாநாயகிகளை உயர்வாக காட்டும் கதைகள் வருகின்றன. கதாநாயகிகள் இந்த மாதிரி உடைகளைத்தான் அணிய வேண்டும் என்று முன்பெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள். இப்போது உடை பிடிக்கவில்லை. வசனம் பிடிக்கவில்லை என்று கூறினால் வற்புறுத்துவது இல்லை.
எனக்கு உடை பிடிக்காவிட்டால் நான் அணியமாட்டேன். பெண்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது. உரிமைகளும், பாராளுமன்றத்தில் ஒதுக்கீடுகளும் மற்றவர்கள் கொடுத்து எடுப்பது இல்லை. நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கக்கூடாது”
இவ்வாறு தமன்னா கூறினார்.
நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியதாவது:-
“பாவனா உள்ளிட்ட பல பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. எங்களையும் மனிதர்களாக பாருங்கள். பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. நிறைய அச்சுறுத்தல்கள் வருகின்றன. இவற்றில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும். போராட்ட குணத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்”.
இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.
Average Rating