என்ன சொல்கின்றன வேலைகோரும் போராட்டங்கள்? (கட்டுரை)
வேலையற்ற பட்டதாரிகளால், வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், அண்மைக்கால ஊடகப் பரப்பை ஆக்கிரமித்துள்ளன. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தைத் தொடர்ச்சியாக மக்கள் பின்தொடர்ந்த நிலையில், அதே போராட்ட மனநிலையுடன் காணப்படும் நிலையில், இந்தப் போராட்டங்களும், முக்கியத்துவம் பெற்றுள்ளன.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையென்பது, நாடு முழுவதும் காணப்படுகின்ற போதிலும், தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும், இந்நிலைமை மோசமாகக் காணப்படுகிறது.
ஏராளமானோர், இவ்வாறு வேலைவாய்ப்புகளின்றிக் காணப்படுகின்றனர். அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும், பல்வேறு தடவைகளில் வேலைவாய்ப்புகள் பற்றிய வாக்குறுதிகள் வழங்கப்பட்ட இவர்கள், அவை நிறைவேற்றப்படாத நிலையில், போராட்டங்களில் குதித்துள்ளனர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இப்போதும் தொடர்கிறது. இவர்களுக்கான தீர்வு கிடைக்காதா என்று, அவர்களைப் பற்றிய அக்கறையைக் கொண்டவர்கள் அங்கலாய்க்கின்றனர். இந்நிலையில், இப்பிரச்சினை பற்றி ஆழமாக ஆராய்வது பொருத்தமானது.
ஒரு நாட்டைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு உண்டு. நாட்டில் வேலைவாய்ப்புகளற்று ஏராளமானோர் இருக்கும் போது, நாட்டைச் சுமூகமாகக் கொண்டுநடத்த முடியாத நிலை ஏற்படும். குற்றங்களும் வன்முறைகளும் அதிகரிக்கும். இதனால் தான், வேலையற்றோர் சதவீதமென்பது, முக்கியமாகக் கருதப்படுகிறது.
நாட்டில் பணியாற்ற விரும்பும் ஊழியர்களில் 40 சதவீதமானோருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை காணப்படும் போது, அந்த நாடு, நிம்மதியான நாடாக இருக்க முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை, 5.1 சதவீதமே, வேலையின்மைப் பிரச்சினை காணப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் ஏறத்தாழ 5 சதவீதம், இது காணப்படுகிறது. இந்தியாவில் 8 சதவீதமாகவும் பாகிஸ்தானில் 6.5 சதவீதமாகவும் காணப்படுகிறது. இதனோடு ஒப்பிடும் போது. இலங்கையின் பிரச்சினை, ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையாகவே காணப்படுகிறது. ஆனால், இளைஞர்களிடத்தில் இந்தச் சதவீதம், சற்று அதிகமாக உள்ளமை, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பை, எடுத்தியம்புகிறது.
ஆனால் இங்கு, வேலைவாய்ப்புகள் என்று கூறப்படும் போது, அரச வேலைகள் என்ற அர்த்தப்படுத்தல் எடுக்கப்படக்கூடாது. மாறாக, தனியார்துறை மூலமாகவும் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட முடியும். அதற்கான சந்தையை அல்லது வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தி, அதன்மூலம், படித்தவர்களை அதற்குள் உள்வாங்க முடியும்.
ஆனால் இலங்கையின் நிலைமை, எப்போதும் அரச உத்தியோகத்தை மையப்படுத்தியதாகவே இருந்துவந்திருக்கின்றது. ஏற்கெனவே வினைத்திறனற்றுக் காணப்படும் அரச துறையில், மேலும் பலரைச் சேர்ப்பதென்பது, நாட்டைப் பொறுத்தவரை, எந்த விதத்திலும் பயன்தராது.
மாறாக, மேலும் வினைத்திறனற்ற அரச பணித்துறையே ஏற்படும். இலங்கையின் காணப்படும் அரச பணிகளில் கணிசமானவை, காலை 10 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்று, தேநீர் அருந்திவிட்டு, 12 மணி தொடக்கம் 2 மணிவரை மதிய உணவு எடுப்பதற்காகச் செலவிட்டு, பின்னர் 5 மணிக்கு வீடு செல்லும் நிலைமையாக உள்ளது என்பது, வருந்தத்தக்கது.
அண்மைக்காலத்தில் இந்நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இந்நிலைமை, திருப்திகரமானதாக இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் தான், மேலும் அரச வேலைவாய்ப்புகளை வழங்குதலென்பது, ஆரோக்கியமற்றதாக மாறும். மாறாக, அரச துறையை மீள்கட்டமைப்புக்கு உட்படுத்தும் தேவை காணப்படுகிறது. அதன் பின்னர், மேலும் சிலரை, பணியில் சேர்ப்பதைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரில் அனைவரையும், அரச பணியில் சேர்ப்பதென்பது, சாத்தியப்படாது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சிலர், கையில் குழந்தைகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருந்தது.
படித்து முடித்துவிட்டு, அதற்கான வேலையைத் தேடாமல், திருமணம் முடித்துவிட்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்ட இவர்கள், நாட்டைப் பொறுத்தவரை, மிகப்பெரிய பாரமே. திருமணம் முடிப்பதென்பது தனிப்பட்ட முடிவு என்ற போதிலும், திருமணம் முடித்தவர்களில் பெரும்பான்மையானோர், சமூக ரீதியான அழுத்தங்களாலேயே அந்தப் பாதையைத் தெரிவுசெய்திருப்பர் என்பது வெளிப்படை.
25, 26 வயதைத் தாண்டி, பெண்ணொருத்தியால் திருமணம் முடிக்காது தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்துவிட முடியாத நிலை இருக்கிறது. ஆணென்றால் அந்த வயது, 30 வயதுவரை செல்லலாம். ஆனால் அதைத் தாண்டி, வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ, இல்லையோ, குறித்த வயதுக்குள் திருமணம் முடித்துவிட வேண்டும்.
திருமணம் முடித்தால், அத்தோடு, அழுத்தங்கள் நின்றுவிடாது. திருமணமாகி 6 மாதங்களுக்குள் ஏதாவது “விசேட” செய்தி கிடைக்காவிட்டால், அதற்கான நச்சரிப்பு ஆரம்பித்துவிடும். இதனால், தாங்கள் விரும்பியதைப் போன்று வாழ்க்கையைத் திட்டமிடும் வாய்ப்பு, அநேகமானோருக்குக் கிடைப்பதில்லை.
எனவே, சமூகம் விரும்பும் அரச தொழிலைப் பெற்றுக்கொள்ள விரும்பும் இவர்கள், சமூகத்தின் அழுத்தங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுவிட்டு, தங்களது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்குச் சிரமப்படுகிறார்கள் என்பதே உண்மையானது.
ஆனால், எல்லாத் தவறுகளையும் சமூகத்தின் முன்னால் போட்டுவிட முடியுமா என்றால், இல்லை என்பதே பதிலாக அமையும். தனிநபர்களுக்கான பொறுப்புகள் என்பனவும் காணப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பாக, தனியார் நிறுவனமொன்றின் உயரதிகாரியொருவரை அணுகி, அவரது கருத்துகளைக் கேட்டபோது, அவர் தெரிவிக்கும் கருத்துகள், ஒருவகையான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. “ஏராளமானோருக்கான வேலைவாய்ப்புகளை நானே வழங்கினேன்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்னிடம் கேட்கப்படும் கேள்வி, ‘நேர்முகத்தேர்வு இருக்கிறதா? அது இல்லாமல் இந்த வேலையை எடுக்க முடியாதா?’ என்பது தான். நேர்முகத்தேர்வுக்குச் சென்று, அதை எதிர்கொண்டு, அதன்மூலம் பணியைப் பெறும் எண்ணம், எம்மவரிடத்தில் இல்லை. மாறாக, வாழைப்பழத்தை உரித்து, வாயில் திணிக்க வேண்டிய நிலையே உள்ளது” என்கிறார் அவர்.
அவரது விமர்சனத்தில் காணப்படும் உண்மைத் தன்மையையும் மறுத்துவிட முடியாது. இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்போம், தனியார் துறையில் தமக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, எவ்வளவு தூரத்துக்கு முயன்றனர் என்ற கேள்வி எழுகிறது.
யுத்தத்துக்குப் பின்னரான வடக்கிலும் கிழக்கிலும், ஏராளமான தனியார் நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. அவற்றில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் ஏன் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது, நியாயமான கேள்வியே.
நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணியின் திரைப்படமொன்றில், “பெற்றோமக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று கேட்பதைப் போல், “அரச வேலை தான் வேண்டுமா?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏனென்றால், தனியார் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புகள், ஏராளம் ஏராளம்.
அரச துறை தருவதைப் போன்று, வேலைக்கான உச்சபட்ச உத்தரவாதத்தை, தனியார்துறை வழங்குவதில்லை என்பது உண்மையானது.
ஆனால் அது தான், தனியார்துறையின் சிறப்பம்சமாகவும் உள்ளதே? உங்களை முழுமையாக நிரூபித்து, குறித்த நிறுவனத்துக்கான உங்கள் பெறுமதியை வெளிப்படுத்தினால், முன்னேறிக் கொண்டு செல்ல முடியும். மாறாக, உங்களது திறமையை நீங்கள் வெளிப்படுத்தவில்லையென்றால், வேலையை இழக்க வேண்டியேற்படும். இந்தப் போட்டித்தன்மை தான், வினைத்திறனான பணியாற்றலை ஏற்படுத்துகிறது
இதற்காக, அரச பணியென்பது முக்கியத்துவமற்றதோ அல்லது வினைத்திறனற்றதோ என்று பொருள் கிடையாது. அதுவும் முக்கியமான ஒன்று தான். ஆனால், அரச பணியைப் பெரும்பாலானோர் விரும்புவதற்கு, “அது, எனக்குப் போட்டித்தன்மையான சூழலை வழங்கும்” என்ற காரணம் இருப்பதில்லை.
மாறாக, “நிரந்தரமான தொழிலாக எனக்கு அது இருக்கும்” என்பதே காணப்படும். இவ்வாறான மனநிலையுடன் அரச பணியை ஏற்கும் ஒருவர், தனது உச்சபட்ட திறமையை, ஒருபோதும் வெளிப்படுத்தப் போவதில்லை. இதனால் தான், கோப்புகள் தேங்கிக் கிடக்கும் நிலைமை, பெரும்பான்மையான அரச அலுவலகங்களில் ஏற்படுகிறது.
எமது கல்விக் கட்டமைப்பும், ஆளுமைமிக்க பிரஜைகளை உருவாக்குவதில்லை. மாறாக, புத்தகத்தில் காணப்படுவதை மனப்பாடம் செய்து, அதன்மூலமாகப் புத்தகப்பூச்சிகளாகச் சிறப்பாக உள்ளவர்களையே, எமது கல்விக் கட்டமைப்பு உருவாக்குகிறது.
இதன்மூலம், பணியொன்றைச் செய்துமுடிப்பதற்குத் தேவையான திறன்களைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதில், அது தவறிழைத்து வருகிறது. இதற்காக, இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையும் உள்ளது.
அத்தோடு, பெரும்பான்மைச் சமூகத்தோடு ஒப்பிடும் போது, இந்த நிலைமையில், தமிழ்ச் சமூகம் பின்தங்கியுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது. பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், துடிப்பானவர்களாக, நேர்முகத் தேர்வுகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள்.
அரச துறையை மாத்திரம் தங்கியிருக்கும் நிலை, அவர்களிடம் குறைவாகக் காணப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, அரச பணியென்பதே, அவர்களது இலட்சியமாக இருக்கிறது.
“வைத்தியர் அல்லது பொறியியலாளர் ஆகு. அதன் பின்னர், அரச வேலையைப் பெறு” என்பதே, பெற்றோரது தாரக மந்திரமாக உள்ளது. எனவே தான், இவ்விடயத்தில் பெரும்பான்மைச் சமூகம், எமது சமூகத்தை முந்திக் கொண்டு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது.
மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் அனைத்தும், வேலைகோரிப் போராட்டம் நடத்தும் பட்டதாரிகளின் விடயத்தில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, எதிர்காலத்தில், இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக, குறுகிய காலத்தில், இவர்களுக்கான தீர்வும், ஏதோவொரு வழியில் வழங்கப்படுமென எதிர்பார்ப்போம்.
Average Rating