வன்செயல்கள் குறித்து மோதலில் ஈடுபடும் இரு தரப்பினர் மீது கண்காணிப்புக்குழு கண்டனம்
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சில முக்கிய வன்செயல்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்களின் படுகொலை தொடர்பில் இலங்கை அரசாங்கப் படைகள் மீது குற்றஞ்சாட்டியுள்ள அதேவேளை, அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவவில் பொதுமக்கள் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மூதூரில் 17 சிவிலியன் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமக்கு சம்பந்தம் ஏதும் கிடையாது என்று இலங்கை அரசாங்கப் படையினர் மறுக்கின்ற போதிலும், அந்தச் சம்பவத்தில் அவர்களது தொடர்பைக் கோடிகாட்டும் பலமான குறிப்புகள் உள்ளதாக தாம் கண்டுபிடித்துள்ளதாக கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.
அந்த படுகொலைகள் இடம்பெற்ற சமயத்தில் மூதூர் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் இருந்த காரணத்தால், வேறு குழுக்கள் மீது இவை தொடர்பில் குற்றஞ்சாட்டுவது பெரிதும் பொருத்தமற்றது என்றும், அத்தோடு அந்த வேளையில் அந்தப் பகுதிக்குள் ஆட்கள் செல்வது கட்டுப்படுத்தப்பட்டமைக்கான காரணம் எதனையும் தம்மால் காணமுடியவில்லை என்றும் கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கண்காணிப்புக்குழுவினர், தமது விசாரணைகளின் அடிப்படையிலும், விடுதலைப்புலிகள் அமைப்பினர் செயற்படும் விதத்தின் அடிப்படையிலும் பார்க்கும் போது, குறிப்பாக அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப்புலிகள் அல்லது அவர்களுடன் சேர்ந்து செயற்படுபவர்களை விட, வேறு எவரேனும் அந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடிய சாத்தியத்தை தம்மால் காணமுடியவில்லை என்று கூறியுள்ளது.
தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக கருணா அணியினர் இந்தத் தாக்குதலை செய்திருக்கலாம் என்று விடுதலைப்புலிகள் கூறியிருப்பது குறித்து சுட்டிக்காட்டியுள்ள கண்காணிப்புக்குழுவினர், பல அடிப்படைகளில் பார்க்கும் போது கருணா அணியினர் அதனைச் செய்திருப்பார்கள் என்று கூறுவதற்கான உண்மையான ஆதாரத்தை தம்மால் காண முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
அதேவேளை மன்னர் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏப்ரல் முதாலாம் திகதி முதல் ஜூன் 15 ஆம் திகதி வரைலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட விடுதலைப்புலிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான கிளெமோர் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கப் படையினர் அல்லது அதன் அநுசரணையுடனும், ஆதரவுடனும் இயங்கும் ஆயுதக்குழுக்களின் மீது கண்காணிப்புக்குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேவேளை இந்த முடிவுகள் கண்காணிப்புக்குழுவின் பதவி விலகிச் செல்லும் தலைவர் மேஜர் ஜெனரல் உல்வ் ஹென்றிக்ஸன் அவர்களினால் நடத்தப்பட்ட மிகவும் ஆழ்ந்த விசாரணைகளின் பின்னர் எடுக்கப்பட்டவையாகும் என்றும் கண்காணிப்புக்குழுவின் சார்பில் பேசவல்ல தோபினூர் ஒமர்சன் கூறுகிறார். இவை போர் நிறுத்ததை மீறுகின்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தம்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத் தரப்பினரும் விடுதலைப்புலிகள் அமைப்பினரும் மறுத்துள்ளார்கள்.