அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெற சில டிப்ஸ்..!!
கண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் புருவங்களும், கண் இமைகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் தான் கண்களை கவர்ச்சியாக காண்பிக்க மேற்கொள்ளும் மேக்கப்பில் கண் இமைகளுக்கு மஸ்காரா மற்றும் புருவங்களை அழகாக வடிவமைக்கின்றனர். சிலருக்கு புருவங்களே தென்படாது.
அத்தகையவர்கள் பென்சில் கொண்டு புருவங்களை வரைத்து வெளிக்காட்டிக் கொள்வார்கள். இப்படியே எத்தனை நாட்கள் தான் பென்சில் கொண்டு புருவங்களை வெளிக்காட்டுவீர்கள். எனவே தமிழ் போல்ட்ஸ்கை புருவங்கள் மற்றும் கண் இமைகள் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்வதற்கு ஒருசில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றி, அழகான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெறுங்கள்.
தேங்காய் எண்ணெய்
தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கண் இமைகள் மற்றும் புருவங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால், கண் இமைகள் மற்றும் புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஆலிவ் ஆயில்
மசாஜ் தினமும் 5 நிமிடம் ஆலிவ் ஆயில் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் இரவில் படுக்கும் முன், இச்செயலை செய்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பெட்ரோலியம் ஜெல்லி
ஆம், பெட்ரோலியம் ஜெல்லி வெறும் மாய்ஸ்சுரைசராக மட்டுமின்றி, புருவங்கள் மற்றும் கண் இமைகளை அடர்த்தியாக வளர உதவும். மேலும் புருவங்களில் உள்ள முடி மற்றும் கண் இமைகள் உதிர்வதைத் தடுக்கும். எனவே தினமும் இரவில் படுக்கும் போது, பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகள் மற்றும் புருவங்களுக்கு தடவுங்கள்.
முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது புருவம் மற்றும் கண் இமைகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை புருவங்கள் மற்றும் கண் இமைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். குறிப்பாக இச்செயலை காலையில் செய்வது சிறந்தது. அதிலும் தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
விளக்கெண்ணெய்
காலங்காலமாக முடியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வரும் ஓர் எண்ணெய் தான் விளக்கெண்ணெய். இந்த விளக்கெண்ணெயை புருவங்கள் மற்றும் கண் இமைகளில் மட்டுமின்றி, கூந்தலுக்கும் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலசி வந்தால், வளர்ச்சி அதிகரிப்பதோடு, கருமையாகவும், அடர்த்தியாகவும் முடி இருக்கும்.
பால்
பாலை காட்டனில் நனைத்து, புருவங்கள் மற்றும் கண் இமைகளின் மீது தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், பாலில் உள்ள புரோட்டீன் புருவம் மற்றும் கண் இமைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
தேங்காய் பால்
தேங்காய் பால் கூட கண் இமைகள் மற்றும் புருவங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை பயன்படுத்தி வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்ச்சி பெறும்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சையின் தோலை விளக்கெண்ணெயில் 3 நாட்கள் ஊற வைத்து, பின் அந்த தோலைக் கொண்டு புருவங்கள் மற்றும் கண் இமைகளில் மென்மையாக மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், புருவங்கள் மற்றும் கண் இமைகளில் நல்ல பலன் தெரியும்.
செம்பருத்தி
செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை கண் இமைகள் மற்றும் புருவங்களில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, புருவங்கள் மற்றும் கண் இமைகள் அடர்த்தியாக வளரும்.
Average Rating