முஸ்லிம் காங்கிரஸ் மீதான விமர்சன அத்துமீறல்கள்..!! (கட்டுரை)
முஸ்லிம் காங்கிரஸின் அவசியமும் அதன் இருப்பும் வெறுமனே அதன் தலைவரை விமர்சிப்பதிலும் குற்றம் சுமத்துவதிலும் தங்கி இருக்கும் ஒன்றல்ல. சிலரின் சுயநல அரசியலுக்கும், பதவி, பட்டங்களுக்கும் ஒரு கட்சியின் இருப்பைப் பிழையாக்கிவிட முடியாது. இலங்கை முஸ்லிம்கள், இன்று நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரேஒரு சமூகக் கட்சியாகவும் எமது மக்களின் ஆதரவையும் அங்கிகாரத்தையும் பெற்ற தனித்துவக் கட்சியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகிறது.
தேசிய அரசியலில் மாத்திரமல்லாமல் சர்வதேச அரசியல், சமூகங்கள் மற்றும் இயங்கங்களின் அவதானத்தையும் பெற்ற ஒரு கட்சியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னை நிலைப்படுத்தியுமுள்ளது. இந்நிலையில் எமது நாட்டின் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களான நல்லாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் என்கின்ற அரசியல் பொறிமுறைக்குள் சிறுபான்மை அரசியலை நிலைப்படுத்தி, அது சார்ந்த சமூகங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் பலத்தை இன்னும் ஆழமாக ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
இதன்படி நமது சமூகத்தினை, நடைமுறை அரசியலின் அசைவோடும் நமக்கான அரசியல் போக்கோடும் வைத்திருக்கும் வகையில் ஆய்வரங்குகள், கலந்துரையாடல்கள், ஆராய்ச்சிகள், ஆவணப்படுத்தல்கள் மற்றும் செயற்றிட்டங்கள் என்று பல்வேறு இயங்கு தளங்களையும் எமது சமூகத்தினுள்ளும் சகோதர சமூகங்களோடும் முன்னெடுக்கும் பொறுப்புகள் பற்றி நாம் சிந்திக்கும் ஓர் அரசியல் சூழல் எம்மை சூழ்ந்துமுள்ளது. இக்காலகட்டத்தில் எமது குற்றச்சாட்டுகளும் குறைகளும் எதிர்க்கட்சிகள் எப்போதும் செய்துகொண்டிருப்பது போன்று, எதிர் பிரசாரம் செய்வதாகவே இருப்பது, ‘இவர்களுக்கு இதுதான் வேலை’ என்பது போல் அர்த்தமற்றதாகி விட்டது.
இவ்வாறு இல்லாமல் நடுநிலைமையான நோக்கத்துடன் சமூக ரீதியான பிரச்சினைகள் மீதான கட்சியினதும் தலைமையினதும் செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களை வைக்கின்ற போது அதைக் கட்சிக்குள்ளும் வெளியிலும் ஏற்றுத் தீர்வுகளை நோக்கி நகரச் செய்யும் பலனும் பலமும் கிட்டும் எனும் உண்மையும் இருக்கிறது. ஆனால், அவ்வாறு இல்லாது மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் காலம் தொட்டு, இன்றுள்ள தலைவர் ரவூப் ஹக்கீம் வரை முஸ்லிம் காங்கிரஸ் குறித்து விமர்சிப்பவர்களும் அதன் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்புபவர்களும் தனிப்பட்ட தேவையின் பின்னணியில் பழிதீர்க்கும் வகையிலேயே செயற்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை ஆகும்.
கட்சிக்குள் தங்களது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, தங்களுடைய தவறுகளையும் குறைகளையும் மறைப்பதற்கான மாற்றுக் குற்றச்சாட்டுகளைக் கட்சியின் மீதும் தலைவரின் மீதும் சுமத்திவிட்டு, தாங்கள் சமூகக் காவலர்களாகவும் சுத்தமானவர்களாகவும் மாறிவிடுகின்றவர்கள் வடிக்கின்ற முதலைக் கண்ணீரில் எந்த உண்மையும் இருக்கப்போவதில்லை. இத்தகையவர்களின் செயலில் எத்தகைய அரசியல் நேர்மையும் இருக்காது.
இப்படியான அரசியல் நேர்மையற்றவர்கள் குறிப்பிட்ட நிகழ்வோ பிரச்சினையோ நடக்கும் போது வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு, பின்னர் ஞானம் பெற்றவர்களாகவும் உண்மையைக் கண்டறிந்தவர்களாகவும் துள்ளிக்குதிப்பதில்தான் மக்கள் அவர்களுடைய கதைகளுக்கு காது கொடுப்பதுமில்லை அவர்களைக் கணக்கில் எடுப்பதுமில்லை. இதைச் சுட்டிக்காட்டினால் “கட்சிக்குள் இருக்கும் போது பேசுவதற்கு ஜனநாயகம் இல்லை; அதனால்தான் நாங்கள் பேசாதிருந்தோம்” என்று தாங்கள் கட்சிக்குள் இருக்கும் போது, பேசாது இருந்த தவறையும் மறைப்பதற்கு, திரும்பவும் கட்சியின் மீதே பழியைப் போட்டு, ஜனநாயகம் இல்லாத ஒரு கட்சி என்ற குற்றத்தையும் சுமத்திவிடுவார்கள்.
வேண்டுமென்றே குழப்பத்தையும் பிரச்சினையையும் ஏற்படுத்தும் நோக்கில் கட்சிக்குள் பேசுபவர்களுக்கு மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படுவதை வைத்து, கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று அர்த்தப்படுத்தி பிரசாரம் செய்பவர்களின் அறியாமையை நாம் என்ன என்று சொல்ல முடியும்? கட்சியின் கருத்துச் சுதந்திரம் என்பது பேசுகின்றவரின் ஜனநாயகப் பண்பிலும் செயலிலும் தங்கி இருக்கிறது. மாறாக குழப்பவாதிகளுக்கும் பிரச்சினைக்காரர்களுக்கும் கட்சியின் ஜனநாயம் சாதகமாக இருக்க வேண்டும் என்று சொல்வது உண்மையான ஜனநாயகம் அல்ல.
இதைவிடுத்து தனிப்பட்ட முறையில் தலைவர் அப்படிச் செய்தாலும் தப்பு, இப்படிச் செய்தாலும் தப்பு, எது செய்தாலும் தப்பு என்று எல்லாவற்றையும் தப்புத் தப்பாகவே பார்ப்பதும் அதை பெரும் ஒரு குற்றச்சாட்டாக்கி பிரசாரம் செய்து சிலரின் சுயநல நிகழ்ச்சி நிரல்களுக்கு துணைபோவதுதான் இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளினதும் விமர்சனங்களினதும் அத்துமீறல்களாக இருக்கின்றன. இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று ஒருபக்க நியாயம் பேசவும் இல்லை. அரசியல் வரலாற்றில் எந்தத் தலைவர்களும் விமர்சிக்கப்படாதவர்களாக இல்லை. அரசியல் என்பதும் எதிர் விமர்சனத்துக்கான செயல் முறைதான். விமர்சனம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. ஆனால், இங்கு விமர்சிக்கின்ற விடயம், இடம், நேரம் என்பன எமது விமர்சனத்தை அளவிடக்கூடியதாக இருக்கின்றன.
ரவூப் ஹக்கீம் மீது பிழைகளைச் சுட்டிக்காட்டி பழி போடுகின்றவர்கள், அரசியல் ரீதியாக அவர் செய்கின்ற சரிகளையும் வெளிப்படுத்தி, அதன் உண்மைகளையும் சொல்ல வேண்டும். வெறுமனே குற்றம் சுமத்துவதும் பழிபோடுவதுமாக எல்லா விடயங்களையும் அரசியலில் நோக்க முடியாது. ஒவ்வொரு முடிவுகளுக்குப் பின்னாலும் உள்ள சந்தர்ப்ப நியாயங்களையும் நன்கு ஆராய வேண்டும். பெரும் தலைவர் அஷ்ரபுக்குப் பிறகு இன்று இக்கட்சியை வழிநடத்தும் தலைமையின் தார்மீக அடையாளமாக இருக்கும் ரவூப் ஹக்கீம், பல சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் இக்கட்சியின் கம்பீரம் மாறாமல் இன்றுவரை அதன் நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர வைத்திருக்கிறார்.
இதுவே இவரிடம் நாம் சரிகானும் முதலாவதும் மிக முக்கியமானதுமான தலைமைத்துவ ஆளுமை ஆகும். மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இக்கட்சி, அதற்கான அரசியல் அடையாளங்களுடன் இருக்கிறது என்றால் அது ரவூப் ஹக்கீம் என்ற தலைமையின் உறுதியான நிலைப்பாட்டின் விளைவே ஆகும். இதற்குப் பக்கபலமாக கட்சியின் உயர்பீடத்தினர் இருப்பதோடு, ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை கட்சியின் விசுவாசத்தைச் சுமந்து கொண்டிருக்கும் கட்சிப் போராளிகளும் உறுதுணையாக இருக்கின்றனர்.
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் நிழல் கொடுக்கும் மரம், ஒரு வரமாக, எமது அரசியலை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் இதுவரைகாலமான போராட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்துவந்த, அதன் வரலாற்றுப் பாதையில் பெரும் கல்லாக வீசப்படும் எதிர்ப்புகளையும் குறுக்கே இடப்படும் தடைகளையும் வழிமறித்து நிற்கும் சவால்களையும் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்லும் ஒரு பலத்தினை ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவக் காலம் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இணைத் தலைமை என்று உருவான கட்சியின் தலைமைத்துவ சவால்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் துண்டாட ஆரம்பித்த முதல் புள்ளியாகவும் பார்க்கலாம். அந்த இடத்திலிருந்து இன்றுவரை கட்சியின் கட்டுக்கோப்பு மாறாமலும் அது துண்டாடப்படாமலும் இருந்துவருகிறது என்றால் அது ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவ ஆற்றலாகும்.
இணைத்தலைமைத்துவம் உருவாக்கப்படும் சூழலில் இன்று முஸ்லிம் காங்கிரஸின் எதிரிகளாக மாறி இருக்கும் அதாவுல்லா, ரிஷாட் பதியுதீன், அமீர் அலி, ஹிஸ்புல்லா போன்றவர்கள் ரவூப் ஹக்கீமின் தலைமையை ஏற்று அவரோடு அணிசேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். பின்னர் அவர்களின் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் கட்சிக்கும் தலைமைக்கும் எதிரிகளாக மாறினார்கள். இவர்களோடு நின்றுவிடாமல் தொடர்ந்தும் காலத்துக்குக் காலம் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு சுயநல அரசியல் தேவையோடு முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் எதிர்ப்பவர்களாக மக்கள் முன் தோன்றுவதும் அவர்கள் அதற்காக முன்வைக்கும் வாதங்கள் மக்களிடம் எடுபடாது அவர்கள் தோற்றுப்போவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகின்றது.
ஆனபோதும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் தேவையை தூரதிருஷ்டியோடும் சமூக விடுதலை இலக்கோடும் உணர்ந்தவர் தலைவர் அஷ்ரப் ஆவார். அவர் வகித்த தலைமைத்துவப் பொறுப்பினை அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செல்லும் ஓர் அமானிதமாகவே அதன் அடுத்த தலைவர்களும் சுமந்து கொள்ள வேண்டும். எமது மக்களும் கட்சியின் தற்போதுள்ள தலைவர் ரவூப் ஹக்கீமை, தலைவர் அஷ்ரப் என்ற கண்ணாடியின் முன் வைத்து, அவரும் அவ்வாறே செயற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். இதில் தற்போது எங்களிடத்தில் ஏற்பட்டுள்ள காலமாற்றம், அரசியல் மாற்றம், சமூக மாற்றம் என்பவை எமது அரசியல் சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியே வருகின்றது.
இந்நிலையிலும் உரிமை அரசியலோடு ஆரம்பித்த முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கோஷம் என்றும் மாறாதபடி எமது சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் கொள்கையிலும் உறுதியானதொரு நிலைப்பாட்டில் தலைமை எப்போதும் குறியாக இருக்க வேண்டும். இன்று தேசிய அரசியலில் காணப்படுகின்ற பேரினவாதப் போக்குகளைக் கடந்து, எமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காக வேறுபட்ட புதிய உபாயங்களை உருவாக்கிப் போராடுவதற்கு பெரும் பலமாக எமது கட்சியின் மக்கள் பலம் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பும் அடிப்படையும் பிரதேச வாதங்களாலும் பதவி மோகங்களாலும் தனிநபர் முரண்பாடுகளாலும் சிதைந்து போகாதவாறு அதே கட்டுக்கோப்புடன் இருப்பதில் எப்பொழுதும் முஸ்லிம் சமூகம் குறிதவறாதவர்களாக செயற்படவேண்டும்.
எமது சமூக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி நிலைப்பதற்கு அக்கட்சிக்கு தலைமையின் உறுதிப்பாடு அவசியம். முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டில் தலைமை வேறு கட்சி வேறு என்று யாரும் எப்போதும் இயங்க முடியாது. இதை மிகத் தெளிவாக எதிர்வு கூறியதன் விளைவாகத்தான் பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் ‘கட்சிதான் தலைமை; தலைமைதான் கட்சி’ என்ற கொள்கையை வகுத்தாரோ? இங்கு ‘கட்சிதான் தலைமை; தலைமைதான் கட்சி’ என்ற கொள்கைதான் கட்சியைக் காப்பாற்றும். இது பெரும் தலைவர் அஷ்ரப் கண்ட உண்மை. இதற்கு மாற்றமாக எழுகின்ற விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் தோற்றே போனது… இனி எழுந்தாலும் தோற்றே போகும்.
Average Rating