திருகோணமலை: செல்லாக் காசா? (கட்டுரை)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி கடந்த பல வாரங்களாகக் காணப்பட்ட பரபரப்பு சற்று அடங்கத் தொடங்கியுள்ள நிலையில், திருகோணமலைத் துறைமுக விவகாரம் முன்னுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கி, அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இந்த உடன்பாடு இறுதி செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்துக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்திருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுசரணையில் புதுடெல்லியில் நடந்த ‘ரைசினா’ கலந்துரையாடல் மாநாட்டின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதற்கு முன்னதாக, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யும் திட்டம் உள்ளதாக, கடந்த மாதம் கூறியிருந்தார்.
ஆனால், அவரது தகவலுக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவலுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனாவுக்கு வழங்கியது போல, திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கி அபிவிருத்தி செய்யும் திட்டமே இது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், இலங்கையில் இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்ற ஒரு சமநிலை உறவைப் பேணும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது என்ற கருத்து ஏற்பட்டது.
திருகோணமலைத் துறைமுகம் தொடர்பாக அரசாங்கத்துக்கு வெளியே இருக்கின்ற இரண்டு பேர் அவ்வப்போது எச்சரிக்கைகளை விடுத்து வந்தனர். ஒருவர் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. அவர், திருகோணமலையில் தளம் அமைக்க அமெரிக்காவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், அவரது அந்தப் பேச்சை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். முன்னாள் அமைச்சராக அவரும், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முனைகிறது என்று குற்றம்சாட்டி வந்தார். இவரது இந்தக் கருத்தும் அவ்வளவாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆனால், புதுடெல்லியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், திருகோணமலைத் துறைமுகம் இந்தியாவின் கைக்குள் செல்லப் போகிறதா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சரத் பொன்சேகா இதுபற்றிய தகவல் வெளியிட்ட அடுத்த நாள், ‘டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யும் திட்டம் பற்றி கூறியிருந்தார். திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்வது என்பதும், இந்தியாவுக்கு வழங்கி அபிவிருத்தி செய்வது என்பதும் வேறுபட்ட விடயங்களாகும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்டே அபிவிருத்தி செய்யப்படுகிறது. அதுபோல, ஒரு திட்டத்தையே திருகோணமலை விடயத்திலும் அரசாங்கம் செயற்படுத்த முனைந்திருக்கிறது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதை இந்தியா ஆதரிக்கவில்லை. அதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது. ஆனால், அதனை வெளியே பகிரங்கமாகக் கூறவில்லை. இந்தியா வெளிப்படையாக எதிர்க்கவில்லை என்பதற்காக, ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கும் முடிவை ஆதரிக்கிறது என்று அர்த்தம் கொள்ள முடியாது.
சீனாவுக்கு ஹம்பாந்தோட்டையை வழங்கியது போல, திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கினால், உறவுகளில் சமநிலையை பேணுவதாக இரண்டு நாடுகளிடமும் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளலாம் என்றே இலங்கை எதிர்பார்க்கிறது. ஆனால், இந்தியா இதுபற்றி வேறு விதமாகச் சிந்திப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அது அதிகாரபூர்வமானது அல்ல; இந்த விடயத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஆசியாவின் மிகமுக்கியமான – கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருக்கின்ற, ஆழம்மிக்கதும், விசாலமானதும், இயற்கையாக அமைந்ததுமான திருகோணமலைத் துறைமுகம் எப்போதுமே வல்லரசுகளின் உறுத்தலுக்குரிய இடமாகவே இருந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியாவிடம் இருந்த இந்தத் துறைமுகத்தை ஜப்பான் தேடி வந்து தாக்கியிருந்தது. அதற்குப் பின்னர் அமெரிக்காவும் இந்தியாவும் இதன் மீது ஆதிக்கம் செலுத்தப் போட்டி போட்டன.
இப்போது கூட முக்கியமான கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் எல்லாமே திருகோணமலை மீது கவனம் செலுத்தாமல் இருப்பதில்லை. இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கடற்படைத் தளபதிகள் ஒருமுறை திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றிப் பார்க்காமல் திரும்புவதில்லை. அந்தளவுக்கு ஆர்வத்தைத் தூண்டுகின்ற திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியா தனக்கு நாட்டமில்லை என்று மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை ஆச்சரியமானதே.
அதேவேளை, திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியா சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் எது உண்மை? எது பொய் என்று தெரியவில்லை. ஆனால், திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி ஓர் இரகசிய பேரமும் இழுபறியும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மாத்திரம் உணர முடிகிறது. திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை பொறுப்பேற்க இந்தியா ஏன் தயங்குகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பாதுகாப்பு ரீதியாக திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இந்தியா சரியாக உணரவில்லையா என்று எவரும் சந்தேகித்தால் அது தவறானது.
ஏனென்றால், இந்தியாவை விட, இதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை உணர்ந்த வேறு நாடு ஏதுவும் இருக்க முடியாது. திருகோணமலையின் மீது அமெரிக்கா குறிவைத்த போதும், சீனா குறிவைத்த போதும் அதனை சாதுரியமான முறையில் முறியடித்திருந்தது இந்தியா. அத்தகைய இந்தியாவுக்கு இப்போது திருகோணமலைத் துறைமுகம் கசப்பானதாக மாறி விட்டது என்று கூற முடியாது. திருகோணமலைத் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கவே இலங்கை அரசாங்கம் முனைகிறது. இன்னொரு பக்கத்தில் கடற்படைத் துறைமுகமாக அதனைப் பலப்படுத்தும் திட்டமும் தனியாக இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது. அதனை வேறு யாரிடமும் கையளிக்க அரசாங்கம் தயாரில்லை.
ஆனால், வர்த்தக துறைமுகமாக இதனை அபிவிருத்தி செய்வதன் மூலம் நீண்டகால நோக்கில் இந்தியாவுக்கு ஆதாயமாக இருக்காது என்று புதுடெல்லி சிந்திப்பதாகத் தெரிகிறது. இந்தியா இப்போது உள்நாட்டுத் துறைமுகங்களைப் பலப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் இனயம் துறைமுகத் திட்டம் அதில் முக்கியமானது. பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாள முடியாத நிலையில் தான் இந்தியா இன்னமும் இருக்கிறது. அத்தகைய கொள்கலன்கள் இப்போது கொழும்பு துறைமுகம் வழியாகவே கையாளப்படுகின்றன.
இதனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாவை இந்தியா ஆண்டுதோறும் இழக்கின்றது. அந்த நிலைக்கு முடிவு கட்டவே, தமிழ்நாட்டில் இனயம், கேரளாவில் விழிஞ்ஞம் போன்ற ஆழ்கடல் துறைமுகங்களை அவசரமாகக் கட்டும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இத்தகைய நிலையில், திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா அதிகம் விரும்பவில்லை.
திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தால், இலங்கைக்கும் இலாபத்தின் பங்கை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், உள்நாட்டுத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து, அந்த இலாபத்தை முழுமையாக அனுபவிக்கலாம் என்று பார்க்கிறது இந்தியா. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முன்னர் ஆர்வம் காட்டியது. அதற்காக, மும்பை நிறுவனங்களை இணைத்து, புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
ஆனால் இப்போது, அதில் இந்தியா ஆர்வம்காட்டவில்லை. ஏனென்றால், கொழும்புத் துறைமுகத்தின் தெற்குப் பகுதி முனையத்தை சீனா ஏற்கெனவே நவீனமயப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கிழக்கு முனையத்தை நவீனமயப்படுத்தினால், இந்தியாவில் புதிதாக உருவாக்கப்படும் துறைமுகங்களைத் தேடி கப்பல்கள் வராது. அதைவிட உள்நாட்டுத் துறைமுகங்கள் நவீனமயப்படுத்தப்பட்டால், கொழும்பு ஊடான இந்திய கொள்கலன்களின் பரிமாற்றமும் தடைப்படும். எனவேதான், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் முதலீடு செய்வதில், சீனாவுடன் போட்டியிட்டு முதலீடு செய்வதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.
கிட்டத்தட்ட அதேநிலைதான் திருகோணமலைத் துறைமுகத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.அதற்காக திருகோணமலையை விட்டுக் கொடுக்க இந்தியா தயாராகிறது என்று கருத முடியாது. திருகோணமலைத் துறைமுகத்தில் தானும் கால் வைக்காமல், வேறு யாரையும் கால் வைக்கவும் விடாமல் தடுக்கின்ற ஓர் உத்தியையே இந்தியா இப்போது கையாள முனைவதாகத் தெரிகிறது. இந்தக் கணிப்பு சரியாக அமையுமேயானால், திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி என்பது, இப்போதைக்கு சாத்தியமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. ஏனெனில், இந்தியாவுடன் முரண்பட்டுக் கொண்டு யாரும் இந்தத் திட்டத்தில் கால்வைக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தினாலும் இதனை நிறைவேற்ற முடியாது.
Average Rating