பேன் தொல்லையா எளிய வைத்திய குறிப்புகள்..!!
பேன் தலையில் உருவாகும் ஒரு சிறிய பூச்சி. இது தலையிலும், முடி இருக்கும் கண் புருவத்திலும், கண் இமையிலும்கூட வரலாம். நெருக்கமான தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவும். இதனுடைய சிறிய முட்டை பார்ப்பதற்குப் பொடுகு போல இருக்கும். இதனுடைய முட்டை இரண்டு வாரங்களுக்கு உயிர் வாழும். பேன் 30 நாட்கள்வரை உயிர் வாழும். பள்ளிக்குச் செல்லும் சிறார்களிடையே இது அதிகமாகப் பரவும்.
பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு. தலையில் சொறி வரும்.
எளிய பிரச்சினை
இது பெரிய மருத்துவப் பிரச்சினையல்ல. தலையில் பேன் இருப்பதால் ஒருவர் சுத்தமற்றவர் என்றோ, சுகாதாரம் இல்லாதவர் என்றோ அர்த்தமில்லை. தலையில் அரிப்பு, சிறிதாகச் சிவந்த நிறத்தில் உருண்டு காணப்படுகிற கட்டிகள், சில நேரத்தில் சொறிந்தால் நீர் வருதல் போன்றவை பேனால் பாதிக்கப்பட்டவருக்குக் காணப்படலாம்.
பேன் தொல்லை இருப்பவரின் முடியின் வேரில் வெள்ளை நிறத்தில் உருண்டு காணப்படும். நல்ல வெளிச்சத்தில் இதைப் பார்க்கலாம். நெருக்கமாகக் கண்களைக் கொண்ட பேன்சீப்பை வைத்து, கூந்தலைச் சீவிக்கொள்ளலாம்.
கவனம் தேவை
தலையில் குழந்தைகளுக்குப் பேன் பிடித்தால், பெரியவர்களுக்கும் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். நவீன மருத்துவத்தில் லோஷன், ஷாம்புகள் உண்டு. 1% permethrin என்ற மருந்தை நவீன மருத்துவர்கள் கொடுப்பார்கள். இன்னும் வீரியமுள்ள மருந்துகளை மருத்துவர் சில நேரம் பரிந்துரைக்கலாம். மருந்தைத் தேய்த்துப் பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். பின்பு தலையை நன்றாகக் கழுவவேண்டும். பேன் வந்தவரின் துணிகளைக் கொதிக்கவைத்த நீரில் முக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். தொப்பி, தலை துவட்டும் துண்டு, தலையணை உறை ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
மற்றக் குழந்தைகளிடம் இருந்து பள்ளிக் குழந்தைகளுக்குப் பேன் வரலாம். இதை pediculosis capitis என நவீன மருத்துவத்தில் அழைக்கிறார்கள். பேனை ஆயுர்வேதத்தில் மசகம் என அழைப்பார்கள்.
எளிமையான கை மருந்துகள்
ஆயுர்வேத மருத்துவத்தில் நரஸிங்க தைலம் என்று உள்ளது. இதைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.
சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்துப் பொடி செய்து சிறிதளவு எடுத்துச் சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் ஈறு, பேன் தொல்லை குறையும்.
வசம்பைத் தண்ணீர்விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரில் தலை முடியை நன்றாக அலசினால் பேன் தொல்லை குறையும்.
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து, தலையில் தடவிச் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.
உப்பு கலக்காத 50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பேன் தொல்லை குறையும்.
வால் மிளகை ஊறவைத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளிக்க, பேன் தொல்லை குறையும்.
வேப்பிலைத் தூள் – அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் – 2 டீஸ்பூன், பயத்தமாவு – 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் ஆகியவற்றுடன் வெந்நீரைக் கலந்து தலையில் பூசிக்கொண்டு, பத்து நிமிடம் கழித்து அலசிக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.
Average Rating