ஜல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்..!! (கட்டுரை)
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இலங்கையின் தமிழ்ப்பகுதிகளோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டது. இலங்கையில் யுத்தம் இடம்பெறும் போது, அங்கு மாபெரும் போராட்டங்கள் எல்லாம் இடம்பெற்றன.
அதேபோல், அங்கு தற்போது இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக, இங்கும் ஏராளமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.
சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறுதழுவுதல் போட்டிகளை, இந்தியா முழுவதும் நடத்துவதற்கு, இந்திய உச்சநீதிமன்றத்தால் 2014ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எதிர்ப்புகள், இவ்வாண்டு பொங்கல் காலத்தில் அதிகரித்து, மாபெரும் போராட்டங்களாக வெடித்துள்ளன. மெரினா கடற்கரை, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் பிரதானமான போராட்டங்கள் இடம்பெற, இணையத்தளங்களிலும் சமூக ஊடக வலையமைப்புகளிலும், ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
ஏறுதழுவுதலுக்கு ஆதரவான நிலைப்பாடென்பது, “தமிழர்களின் பாரம்பரியம் அது. அதை நடத்துவதற்கு அனுமதி வேண்டும்” என்பதைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. தவிர, “ஏறுதழுவுதலுக்காக வளர்க்கப்படும் காளைகள், பலமிக்க காளைகளாக உள்ளமையால், சினைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலம், ஆரோக்கியமான கன்றுகள் பிறக்கின்றன” என்ற வாதமும் காணப்படுகிறது.
ஏறுதழுவுதலுக்கு எதிரான நிலைப்பாடென்பது, “பாரம்பரியம், பண்பாடு என்பன எவ்வாறு இருந்தாலும், விலங்குகளைத் துன்புறுத்துவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்பதைப் பிரதானமான வாதமாகக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே, ஒன்றுக்கொன்ற எதிரானவையாக மாறியுள்ளன. இதனால் தான், தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் போராட்டங்களும் குழப்பங்களும்.
முதலாவதாக, “இது எங்கள் பாரம்பரியம், இதை நாங்கள் தொடர வேண்டும். அதற்கு அனுமதி வேண்டும்” என்பது, ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் கிடையாது.
ஏனென்றால், ஏறுதழுவுதலுக்குத் தடை விதித்து 2014ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, இதே வாதம் முன்வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்நீதிமன்றம், “சிறுவர் திருமணங்களும் பாரம்பரியமாகத் தான் இருந்தன. அதற்காக அவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?” என்று மறுகேள்வி கேட்டது.
மனிதர்கள் நாகரிகமடைய நாகரிகமடைய, பண்டைய காலங்களில் காணப்பட்ட, ஆனால் நாகரிகமடைந்த உலகத்துக்குப் பொருத்தமற்ற பழக்கங்களைக் கழற்றிவிடுதல் வழக்கமானது, அவசியமானது. அவ்வாறு தான் சிறுவர் திருமணங்கள், உடன்கட்டை ஏறுதல் போன்றன தவிர்க்கப்பட்டன. எனவே, “இது எங்கள் பாரம்பரியம், அதை அனுமதிக்க வேண்டும்” என்ற வாதம், நீதித்துறையிடம் பலிக்கப் போவதில்லை.
இரண்டாவது வாதம், சற்று உறுதியானது. சினைப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் காளை மாடுகளை, ஏறுதழுவுதல் போட்டிகளுக்காக அனுப்பும் போது, அவர்களுக்கான வருமானம் கிடைக்கிறது என்பது முக்கியமானது.
ஏனென்றால், தற்போது உழவியந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக, பயிர்ச்செய்கைகளில் காளைகளின் பயன்பாடு, மிகவும் குறைந்து வருகிறது.
எனவே, தற்போதைய நிலையில், பால் தரும் பசு மாடுகளைச் சினைப்படுத்துவது தான், காளைகளின் பிரதான தொழிலாக மாறியிருக்கிறது.
ஆனால், இந்தக் காளைகளைப் பராமரிப்பதென்பது, செலவு கூடிய ஒன்று. எனவே, சினைப்படுத்தல் மூலம் கிடைக்கும் வருமானம், போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். எனவே, ஏறுதழுவுதல் மூலம் கிடைக்கும் வருமானம், அவர்களுக்கு முக்கியமானதாக அமையும்.
ஆனாலும் கூட, ஆண்டுதோறும் அன்பாக வளர்க்கிறீர்கள் என்பதற்காக, அதைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குச் சித்திரவதை செய்யும் உரிமை கிடையாது என்பது, விலங்குரிமை அமைப்புகளின் விமர்சனமாகும். அவர்களின் விமர்சனத்திலும், ஓரளவு நியாயம் இருப்பது போன்றே காணப்படுகிறது.
சித்திரவதை இடம்பெறுகிறதா என்பது, அடுத்த பிரதானமான விவாதப் பொருள். “காளை மாடுகளை நாங்கள் குழந்தைகள் போன்று வளர்க்கிறோம்.
அவற்றை எவ்வாறு சித்திரவதை செய்வோம்?” என்று, ஏறுதழுவுதலுக்கு ஆதரவானவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். ஆனால், ஏறுதழுவுதல் தொடர்பாக வெளியான பல காணொளிகளில், காளைகள் துன்புறுத்தப்படுகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டில், பீட்டா என அறியப்படும் “விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்” என்ற அமைப்பினால் காட்சிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட காணொளியில், விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவது காண்பிக்கப்பட்டது.
ஆவணிபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட அந்தக் காணொளி, இந்தியாவின் விலங்குநல வாரியத்தின் அங்கிகாரத்துடன் வெளியிடப்பட்டது.
காளைகளைத் தடியால் குத்தி, அவற்றின் கண்களில் எரிவூட்டும் பதார்த்தங்களைத் தடவி, மதுபானம் என்று எண்ணப்படும் ஒருவகையான பானத்தை அவற்றுக்குப் பருக்கிக் கொடுத்து, ஏறுதழுவுதலுக்காகக் காளைகள் தயார்படுத்தப்படுவது, அக்காணொளியில் காட்டப்பட்டது.
ஆகவே, விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்ற வாதம், பொய்யானது. மாறாக, 2009ஆம் ஆண்டில் தமிழக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஏறுதழுவுதல் தொடர்பான விதிமுறைகள், பின்பற்றப்படவில்லை என்பது தான் உண்மையானது. இதைத் தொடர்ந்து தான், அடுத்தாண்டு, ஏறுதழுவுதலுக்காகத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான், இப்போது இடம்பெற்றுவரும் போராட்டங்களை ஆராய்தல் அவசியமானது.
தமிழக மக்களை மத்திய அரசாங்கம் ஏமாற்றிவிட்டது அல்லது தமிழர்களின் மரபை அழிப்பதற்காக அது முயல்கின்றது என்பது, முதலாவது குற்றச்சாட்டு.
2011ஆம் ஆண்டு, சூழல் மற்றும் வனாந்தர அமைச்சினால் வெளியிடப்பட்ட சட்ட வெளியீடு மூலம், காளைகளைக் காட்சி விலங்குகளாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது.
இதன்மூலம், ஏறுதழுவுதலுக்குத் தடை ஏற்பட்டது. ஆனால், தமிழக அரசாங்கத்தின் ஏறுதழுவுதல் ஒழுங்குவிதிச் சட்டத்தின் கீழ், இது நடைபெற்று வந்தது. 2014ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தாலேயே, இதற்குத் தடை விதிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டில், மோடி அரசாங்கத்தின் சூழல் மற்றும் வனாந்தர அமைச்சு, ஏறுதழுவுதல் நடப்பதற்கு ஏற்றவாறான மாற்றங்களை ஏற்படுத்தியது.
எனினும், அந்த மாற்றத்தை, உச்சநீதிமன்றம் இல்லாது செய்தது. எனவே, ஏறுதழுவுதலுக்குச் சாதகமாகச் செயற்பட மத்திய அரசாங்கம் முயன்ற போதிலும், இந்திய நீதித்துறையினாலேயே அது தடுத்து நிறுத்தப்பட்டது.
அடுத்ததாக, பீட்டா அமைப்பு மீதான எதிர்ப்பு. ஏறுதழுவுதலுக்கு எதிராக பீட்டா அமைப்பு, தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தது. இம்முறை பொங்கலுக்கும் ஏறுதழுவுதலை அனுமதிக்கும் உத்தரவை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததால், பீட்டா மீதான கோபம் அதிகரித்தது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், பீட்டா அமைப்பைத் தடைசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். #BanPETA என்பது, சமூக ஊடக இணையத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் ஒரு ஹாஷ்டக் ஆக மாறியிருக்கிறது.
ஆனால், பீட்டா மீதான இந்த வெறுப்பு, பொருத்தமற்றது என்றே தோன்றுகிறது. தான் நம்பும் ஒரு விடயத்துக்காக, அந்த அமைப்புப் போராடுகிறது.
அதற்கு, இந்திய சட்டங்களைப் பயன்படுத்தி, இந்திய நீதிமன்றங்களில் அவ்வமைப்பால் உத்தரவுகள் பெறப்படுகின்றன. இதில், இந்திய விலங்குநல வாரியமும் இன்னும் பல விலங்குநல அமைப்புகளும், இணைந்தே செயற்படுகின்றன.
எனவே, எதற்காக பீட்டா மாத்திரம் இலக்குவைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஏறுதழுவுதல் தடைசெய்யப்பட்டமை, அநீதி; தவறான தீர்ப்பு எனக் கருதினால், அதை வழங்கிய இந்திய நீதித்துறை மீதல்லவா கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும்?
பீட்டாவை தடைசெய் என்பது, கேலிக்கூத்தான ஒரு கோரிக்கை. அந்த அமைப்பு, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஓர் அமைப்பு. தனது கொள்கைகளை அது பரப்புகிறது. அந்த அமைப்பின் கொள்கைகள் தவறானவை என்றால், கொள்கைகளைத் தான் எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த அமைப்பைக் கிடையாது.
எந்தவித அடிப்படைகளும் இன்றி, “பீட்டாவைத் தடைசெய்” என்பது, பொருத்தமற்றது.
பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து, அவற்றின் பால் பண்ணைகளை இந்தியாவில் காலூன்ற வைப்பதற்கான சதியில், பீட்டா ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஆனால், அதற்கான உறுதியான ஆதாரங்கள் எவையும் வழங்கப்படவில்லை. பீட்டா அமைப்போ, முழுமையான தாவர உணவுகளை (பால், முட்டைகளைத் தவிர்ப்பது) உள்ளெடுப்பதையே தாம் ஊக்குவிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அடுத்ததாக, பல்தேசிய நிறுவனங்கள் மீது தனது எதிர்ப்பை வெளிக்காட்டாத பீட்டா, தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்கப் பாடுபடுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால் பல்தேசிய நிறுவனங்களான மக்டொனால்ட்ஸ், கே.எப்.சி, பேர்கர் கிங் உள்ளிட்டவை மீது, கடுமையான எதிர்ப்புப் பிரசாரங்களை, அவ்வமைப்பு மேற்கொண்டது.
ஸ்பெய்னின் காளை அடக்குதலையும் முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரித்தையும் ஏன் பீட்டா எதிர்க்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
ஆனால், ஸ்பெய்ன் காளை அடக்குதல் தொடர்பாகவும் தனது பணிகளை, பீட்டா மேற்கொள்கிறது. பக்ரித் பண்டிகைக்கும், தனது எதிர்ப்பை வெளியிட்டது. ஆனால் இந்தியச் சட்டங்களின்படி, சமயப் பாரம்பரியங்களுக்காக, விலங்குகளைக் கொல்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்ரித் பண்டிகையைத் தடை செய்ய முடியாது. ஏறுதழுவுதலை, இந்துசமயப் பண்டிகையாகப் பிரகடனப்படுத்தி, இச்சட்டத்தின் மூலம் விதிவிலக்குப் பெறலாமே என்றால், இச்சட்டத்தின்படி, சமயப் பாரம்பரியங்களுக்காகக் கொல்லலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சித்திரவதை செய்வதற்கு அனுமதி இல்லை.
ஏறுதழுவுதல் இடம்பெற வேண்டுமாயின், அதற்குரிய சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு, அதற்குரிய சிறந்த வாதங்களை முன்வைத்து, உச்சநீதிமன்றத்தில் வெற்றிபெற வேண்டும்.
அதற்காக, களத்தில் நின்று, போராட்டங்களை மேற்கொண்டு, மாநில, மத்திய அரசாங்கங்களுக்கு ஆதரவு வழங்குவதும் முக்கியமானது. ஆனால் அந்தப் போராட்டங்கள், இலக்கு மாறுவதை அனுமதிக்கக்கூடாது.
ஏனென்றால், காளைகளை அடக்குவதற்காக இன்று போராட்டங்கள் நடக்கும் தமிழ்நாட்டில் தான், சில வாரங்களில் ஏறத்தாழ 200 விவசாயிகள், வறட்சியின் விளைவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
அது தொடர்பில், ஏறுதழுவுதலுக்கான போராட்டத்தின் பாதியளவு கூட இடம்பெற்றிருந்தால், அவர்களின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.
Average Rating