திரிகோணமலை: ராணுவ நிலைகள் மீது புலிகள் தாக்குதல்
திரிகோணமலை அருகே சம்பூர் என்ற இடத்தில் ராணுவ நிலைகள் மீது இன்று புலிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் காயமடைந்தனர். திரிகோணமலை துறைமுகத்தின் முகப்புப் பகுதியில் உள்ள சிறிய நகரம் தான் சம்பூர். இப்பகுதியை புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த இடத்தை விட்டு புலிகள் அகல வேண்டும் என ராணுவம் கூறி வருகிறது. ஆனால் இதை புலிகள் திட்டவட்டமாக நிராகரித்து விட்டனர்.
சம்பூர் எஙகளது பிராந்தியம். அதன் உரிமையை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று புலிகளின் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் கூறியுளளார்.
இந்த நிலையில் சம்பூர் புதியில் விடுதலைப்புலிகள் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர். இன்று காலை அங்குள்ள ராணுவ நிலைகள் மீது புலிகள் ராக்கெட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பல ராணுவ வீரர்கள் காயமடைந்தாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிரிழப்பு ஏதும் இல்லை.
திரிகோணமலையிலும் ராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராணுவம் கூறுகையில், எங்கள் மீது புதிய தாக்குதலை விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித்தாக்குவோம் என்று ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்திலிருந்து மீட்கப்பட்ட 161 பேர் திரிகோணமலை துறைமுகம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் கொழும்பு நகருக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் இரண்டு கப்பல்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்களுடன் சென்ற அந்தக் கப்பல்கள் மூலம், யாழ்ப்பாணத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் 500 வெளிநாட்டவர்களையும், நிவாரணப பணியாளர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 161 பேர்திரிகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அனைவரும் யாழ்பபாணத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பயம் கலந்த முகத்துடன் விளக்கினர்.
யாழ்ப்பாணத்தைப் பூர்விமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசிக்கும் 17 வயது ரேனு ஜெயபாலா கூறுகையில், எனது பெற்றோரின் பூர்வீக பூமியான யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தேன். இதுதான் எனது முதல் வருகை. ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என நினைத்துக்கூட பார்த்ததில்லை.
18 வருடங்களுக்குப் பிறகு எனது தாயார் யாழ்ப்பாணம் வந்திருந்தார். நாங்கள் தங்கியிருந்த முதல் 2 வாரங்கள் பிரச்சினை இல்லை. அதன் பிறகு தான் நிலைமை மோசமாகி விட்டது.
ஊரடங்கு உத்தரவில் சிக்கி, பயந்தபடி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம். எப்போது இங்கிருந்து செல்வோம் என்று அழுது கொண்டே இருந்தோம். என்னையும், எனது சகோதரியையும் முதலில் இங்கிருந்து அனுப்பி விடுவோம். அப்புறம் நாம் வெளியேறுவது குறித்து கவலைப்படுவோம் என எனது பெற்றோர் கூறினர் என்றார் ஜெயபாலா.
ஜெர்மனியைச் சேர்ந்த அல்போன்ஸ் சபாராம் என்பவர்கூறுகையில், எனது வாழ்க்கையில் இப்படி ஒரு போர்ச் சூழலை நான் பார்த்ததில்லை. நான் இங்கு வந்த முதல் நாள் இரவு பெரிய இடி இடிப்பது போல சத்தம் கேட்டது. என்னவென்று பார்த்தால் போர் வெடித்துள்ளதை அறிந்த அதிர்ச்சியுற்றேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதற்காக 2004ம் ஆண்டு இங்கு வநதேன். அங்கு நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது. யாரும் சண்டையை நிறுத்துவது போல தெரியவில்லை என்றார் அல்போனஸ்.
திரிகோணமலை துறைமுகத்தில் மீட்டுக்கொண்டு வரப்பட்டவர்களின் உடமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்களை கொழும்பு செல்ல ராணுவம் அனுமதித்தது. பேருந்துகள் மூலம்அ னைவரும் கொழும்பு சென்றனர்.