போலீசை திசை திருப்ப கணவரின் உடலை வெளியில் வீசினோம்: கைதான மனைவி வாக்குமூலம்..!!
மேடவாக்கத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகனின் மனைவி சுரேகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கைதான சுரேகா, கணவர் அறிவழகனை கொலை செய்ய திட்டம் போட்டது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதலன் கணபதியுடன் பழகிய பின்னர் என்னால் கணவருடன் சந்தோஷமாக வாழபிடிக்கவில்லை. அவ்வப்போது எனது கணவரும் சந்தேகப்பட்டு என்னுடன் சண்டை போடுவார்.
இதுபற்றி கணபதியிடம் நான் தெரிவித்தேன். அறிவழகனை கொன்று விட்டு 2 பேரும் சேர்ந்து வாழலாம் என்று கணபதி கூறினார். எப்படி கொலை செய்வது என்று குழப்பமாக இருந்தது.
சாப்பாட்டில் விஷம் வைத்தோ, அல்லது தூக்க மாத்திரைகளை அதிகம் கலந்தோ அறிவழகனுக்கு தெரியாமல் கொடுத்து விடலாமா? என்றும் யோசித்தோம். ஆனால் அந்த திட்டம் கைகூடாமல் போய் விட்டது.
இந்த நேரத்தில் தான் புத்தாண்டு கொண்டாட்டத் தின் போது, எங்கள் பகுதியில் வைத்து இளைஞர்கள் சிலர், மது அருந்தினர். இதனை எனது கணவர் அறிவழகன் தட்டிக்கேட்டார். அப்போது மது குடித்த இளைஞர்களுக்கும், எனது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணவரை கொலை செய்து விட்டு பழியை அந்த இளைஞர்கள் மீது போடுவதற்கு திட்டம் போட்டோம்.
இதன்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் நான்தான் கணபதியை வீட்டுக்கு வரச்சொன்னேன்.
அவர் வந்ததும் நானே கதவை திறந்து விட்டேன். அப்போது எனது கணவர் அறிவழகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். 2 பேரும் சேர்ந்து தலையணையால் அமுக்கினோம். அப்போது அவர் திமிறியதால் கத்தியால் குத்திக் கொன்றோம்.
பின்னர் கையையும், காலையும் பிடித்து கணவர் அறிவழகனின் உடலை வெளியில் தூக்கி வந்து வீட்டுக்கு அருகில் வீசினோம். போதையில் இருந்த வாலிபர்களே அறிவழகனை கொலை செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தோம்.
இதற்காக தயாராக வைத்திருந்த காலி மதுபாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும் உடலின் அருகில் வீசினோம்.
பின்னர் கள்ளக்காதலன் கணபதியை அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுமாறு கூறினேன். இதன்படி கணபதி, ஓடிவிட்டார். நான் உடனே வீட்டுக்குள் சென்று சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து எனது கையில் வெட்டிக்கொண்டேன். பின்னர் எனது தாய் சம்பூர்ணத்துக்கு போன் செய்து, வீட்டு அருகில் மது அருந்தியவர்கள் கணவரை கொலை செய்து விட்டு எனது நகைகளை பறித்துக் கொண்டு சென்று விட்டனர் என்று ஏமாற்றினேன். அவரும் உறவினர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
இதன் மூலம் எங்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வராது என்றும், போலீசாரை திசை திருப்பி விடலாம் என்றும் நினைத்தோம்.
இவ்வாறு சுரேகா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அறிவழகன் கொலை செய்யப்பட்ட போது 4 வயது குழந்தையான சாதனா வீட்டிலேயே தூங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating