மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை…!! கட்டுரை
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது.
இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி.
ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன.
தமது பூர்வீக இடமான ஹம்பாந்தோட்டையைப் பொருளாதார, அரசியல் கேந்திரம்மிக்க இடமாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.
ஏற்கெனவே, ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தையே பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதும், அவர் தனது அபிவிருத்தித் திட்டங்களைச் சொந்த மாவட்டத்துக்குள் ஒன்று குவித்திருக்கவில்லை.
பரந்துபட்டளவில் அவர் திட்டங்களைச் செயற்படுத்தி, மக்களின் ஆதரவைப் பெற்றார். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவோ, ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்குள் தான் அரசாங்கத்தின் பெரும்பாலான வளங்களைக் குவித்தார்.
மாகம்புரத் துறைமுகம், மத்தல விமான நிலையம், சூரியவெவ கிரிக்கெட் மைதானம் என்று பெருமளவு திட்டங்கள் மஹிந்த ராஜபக்ஷவினால் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டதுடன், அந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் தனது பெயரையும் சூட்டிக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இந்தத் திட்டங்கள் வெற்றிகரமானவையல்ல. இத்தகைய கட்டுமானங்கள், பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ள பிரதேசம் போன்ற தோற்றப்பாட்டை வெளியே காண்பித்தாலும், இந்தத் திட்டங்களால் நாட்டின் கடன் பளுவே அதிகரித்தது.
இதனால்தான், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் செயற்படுத்த முடியாமலும், விமான நிலையத்தை இயக்க முடியாமலும், தள்ளாடும் நிலைக்கு அரசாங்கம் சென்றது.
கொழும்புத் துறைமுகத்தின் மூலம் பெறப்படும் வருவாயை, ஹம்பாந்தோட்டைத் துறைமுகமே விழுங்கிக் கொண்டிருந்தது. அதுபோலத்தான் மத்தல விமான நிலையமும் விமானங்களைத் தவிர அங்கு மற்றெல்லாமே வந்து போயின.
கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டிராத ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், விமான நிலையம் போன்றவற்றை சீன நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்குவதன் மூலம், கடனை அடைக்கும் திட்டம் ஒன்றைத் தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ளது. இதற்குச் சீனாவும் இணங்கியிருக்கிறது.
1.12 பில்லியன் டொலருக்கு ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு காலக் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துறைமுகத்தின் 80 சதவீதமான உரிமையை சீன நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.
மத்தல விமான நிலையத்தையும் இதுபோன்று சீன நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கும் பேச்சுக்களும் நடத்தப்படுகின்றன.
இது தவிர, ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைப் பொருளாதார முதலீட்டு வலயத்தை அமைப்பதற்காக சீனாவுக்கு வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது.
சீனாவுடன் இணைந்து, இந்தத் திட்டங்களைச் செயற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில்தான், ஹம்பாந்தோட்டையில் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைச் சீனாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு, கடந்த மாதம் சீனாவுக்குப் பயணமாவதற்கு முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், வெளியிடப்பட்ட அறிக்கையிலும் அதுகுறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைச் சீனாவுக்கு வழங்கினால் விவசாயிகளும் பொதுமக்களும் போர்க்கொடி தூக்குவார்கள் என்றும் சமூகக் குழப்பங்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
15 ஆயிரம் ஏக்கர் காணிகள் எங்கு, எப்படி ஒதுக்கப்படவுள்ளன என்ற தகவல்கள் வெளியாகாததால் இந்த விவகாரம் இன்னமும் புயலாக உருவெடுக்கவில்லை.
ஆனால், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. அங்கு பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளமை மாத்திரமன்றி, சீனாவுக்குத் துறைமுகத்தைக் குத்தகைக்கு வழங்குவதற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் பின்னால், கூட்டு எதிரணியினரே குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இருப்பதாகவே அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 200 இற்கும் மேற்பட்டவர்கள், நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணியில் இருந்தவர்கள். அவராலேயே வேலைக்கும் அமர்த்தப்பட்டவர்கள்.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் செல்வாக்கில் வேலைவாய்ப்புப் பெற்றவர்கள், அவர்களின் நலன்களுக்காகப் போராட்டத்தில் குதித்திருந்தால் அது ஆச்சரியமான விடயமாக இருக்காது.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் செயற்பாடுகளை முடக்குவதன் மூலம் ராஜபக்ஷ அணியினர் எதனை அடைய முனைகின்றனர் என்ற கேள்வி இங்கு எழக் கூடும்.
தமக்கான தரகுப்பணம் கிடைக்காது என்பதால்தான் சில அரசியல்வாதிகள் தொழிலாளர்களைத் தூண்டி விடுவதாக அரசாங்கம் சொல்கிறது. அதற்கும் அப்பால் இந்தப் போராட்டங்களின் பின்னணியில் அழுத்தமான காரணங்கள் இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜப்பானிய மற்றும் சிங்கப்பூர் கப்பல்களைக் கடந்தவாரம் துறைமுகத்துக்குள் பணயம் வைத்திருந்தனர். அந்தக் கப்பல்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இது அரசாங்கத்துக்குக் கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தியது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கான பயணங்களை நிறுத்த நேரிடும் என்று சர்வதேசக் கப்பல் நிறுவனங்கள் எச்சரிக்கின்ற நிலையையும் ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு எப்போதாவது ஒரு முறைதான் கப்பல்கள் வந்து போகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றால், அது துறைமுகத்தின் பெயரை மேலும் பாதிக்கும்.
ஹம்பாந்தோட்டைக்கு வரும் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களையோ அல்லது சிங்கப்பூர் துறைமுகத்தையோ தேடிச் செல்லும் நிலையை ஏற்படுத்தும்.
துறைமுகத்தில் கப்பல்களைத் தடுத்து வைத்திருப்பது, சர்வதேச கப்பல் போக்குவரத்து விதிகளின்படி கடற்கொள்ளைக்கு ஒப்பானதாகும். இதனால் தான், கடற்படையினர் மூலம் அரசாங்கம் நிலைமைகளைக் கையாண்டது. ஆனாலும், கடற்படைத் தளபதியின் அணுகுமுறைகளால் மீண்டும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் அவர்களின் உரிமைகளுக்கு அப்பாலான சில கோரிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. குறிப்பாகச் சீனாவுக்குத் துறைமுகத்தின் பங்குகளை வழங்குவதைத் தடுப்பது, இதன் பிரதான நோக்கமாகும்.
நட்டத்தில் இயங்குகின்ற துறைமுகத்தைச் சீனாவுக்கு விற்பதன் மூலம், கடன்பளுவில் இருந்து மீள அரசாங்கம் முனைகின்ற போது, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவே இத்தகைய போராட்டங்களைக் கூட்டு எதிரணி தூண்டி விட்டு வருகிறது என நம்பப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பெயர் கெட்டுப்போனால், சர்வதேச அளவில் அதன் மதிப்புப் பாதிக்கப்பட்டால், இதனை வாங்கும் முடிவைச் சீனா மீள்பரிசீலனை செய்யும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்கக் கூடும்.
வெளிநாட்டுக் கப்பல்கள் இந்தத் துறைமுகத்தைத் தவிர்க்கின்ற ஒரு நிலை ஏற்படுமானால், சீன நிறுவனமும் தமது முடிவை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு வரக் கூடும்.
இதன் மூலம், அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளலாம் என்று கூட்டு எதிரணி திட்டமிட்டிருக்கலாம்.
இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து போனால், அரசாங்கம் இன்னும் வலுவடையும் என்பதில் சந்தேகமில்லை.
அவ்வாறு அரசாங்கம் பலமடைவது, கூட்டு எதிரணிக்குச் சவாலாக இருக்கும். அதனைத் தடுப்பதற்கு, பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கத்தை வீழ்த்தி வைத்திருப்பதே அவர்களுக்கு உள்ள ஒரே வழியாகும்.
அதேவேளை, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் அல்லது அங்குள்ள காணிகளைச் சீனாவுக்கு வழங்குவதை எதிர்க்கும் மஹிந்த ராஜபக்ஷ, 99 வருட காலக் குத்தகைக்குக் கொடுக்கப்படும் இந்தச் சொத்துக்கள் மீளவும் இலங்கையின் கைக்கு வரும் என்று எவ்வாறு நம்புவது என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதே மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையில் 750 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு 198 ஆண்டு காலக் குத்தகைக்கு வழங்குவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி, கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தில், 99 ஆண்டு காலக் குத்தகைக்கு நிலத்தை, சீனாவுக்கு வழங்கவும் இணங்கியிருந்தார். மற்றொரு தொகுதி நிலத்தின் உரிமையைக் கூட முழுமையாக விட்டுக் கொடுக்கவும் அவர் உடன்பட்டிருந்தார்.
அப்போதெல்லாம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டவரின் கைகளுக்குள் செல்வது தவறானதாகத் தெரியவில்லை. இப்போது அதே விவகாரத்தை அவர் அரசியலாக்க முனைந்திருக்கிறார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தினால் தான் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் கடுமையான அதிருப்திகளைச் சம்பாதிக்க நேரிட்டது. அதுவும் கூட அவர், ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்படுவதற்கு ஒரு காரணியாக இருந்தது.
அதுபோலவே, தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கு ஹம்பாந்தோட்டையைத் தனது கையில் எடுத்துக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ முனைகிறார். இந்த விடயத்தில் இந்தியாவின் ஆதரவு அவருக்குக் கிடைக்குமா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், இதுவே அவரது எதிர்கால அரசியல் நகர்வுகளின் மையப் புள்ளியாக இருக்கப் போகிறது.
அதாவது, ஹம்பாந்தோட்டைதான் இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் களமாக மாறப்போகிறது. அவ்வாறு மாற்றிக் கொள்வதே மஹிந்தவின் அரசியல் வியூகமாகத் தெரிகிறது.
Average Rating