“விடுதலைப் போராட்டம்” எவ்வாறு விலைபோனது? மேலும் விரிகிறது… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-26) – வி. சிவலிங்கம்
• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது.
•புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்? பஸில் ஏன் கைதாகவில்லை?
• புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்காவிடில் ரணில் அத் தேர்தலில் வெற்றியடைந்திருப்பார். இவ்வளவு மரணங்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் எரிக் சோல்கெய்ம்.
• பிரபாகரன் ஊழலுள்ள மனிதர் அல்ல என்பதாலும் தம்மால் அதனை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்த சோல்கெய்ம்
தொடர்ந்து..
விடுதலைப்புலிகளுக்கும், மகிந்த தரகர்களுக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வும், பணக் கொடுக்கல் வாங்கல்களும் தேர்தல் முடிந்த சில வாரங்களில் வெளிவரத் தொடங்கின.
தமிழ்ச்செல்வனுக்கும், மகிந்தவின் பிரதிநிதிக்குமிடையே கிளிநொச்சியில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
இவ் விசேட பிரதிநிதியாக ரிரன் அலஸ் செயற்பட்டார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். தேர்தலின் பின்னர் இவருக்கு மகிந்த வழங்கிய கௌரவமும், பரிசுகளும் அவற்றை உறுதிப்படுத்தின.
தேர்தல் பகிஷ்கரிப்பு முடிவு தொடர்பாக பிரபாகரன் அறிந்திருந்தாரா? அல்லது அவர் அறியாமலேயே தமிழ்ச்செல்வன் அம் முடிவுகளை எடுத்தாரா? என்பது பலத்த சந்தேகத்தை அளித்திருந்தது.
தேர்தல் காலத்தில் இப் பணக் கொடுப்பனவு தொடர்பாக பேசப்பட்ட போதிலும் பின்னர் சிறிது காலம் அச் செய்திகள் முக்கியத்துவம் பெறவில்லை.
2007ம் ஆண்டு இச் செய்திகள் மீண்டும் கவனத்திற்கு வந்தது. ஏனெனில் நண்பர்களாக இருந்த ரிரன் அலஸ், மங்கள சமரவீர ஆகியோருக்கிடையே பிரச்சனைகள் எழுந்தன.
அத்துடன் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக பலத்த கருத்து வேறுபாடுகள் மகிந்தவிற்கும், சமரவீரவிற்குமிடையே எழுந்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதனால் அவர் இச் செய்திகளை அம்பலப்படுத்தினார். ரிரன் அலஸ் புலிகளுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார்.
இத் தருணத்தில் அவர் பொலீசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் 2005ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் பஸில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் ஜயசுந்தர ஆகியோர் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் பேசியதாகவும், அரசாங்கம் புலிகளுக்குப் பணத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ரிரன் அலஸ் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இச் செய்தி வெளியானதும் ரணில் மகிந்த அரசின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்தார்.
புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்?
பஸில் ஏன் கைதாகவில்லை? என்ற கேள்விகளை எழுப்பினார்.
அமெரிக்க தூதுவரால் 2007ம் ஆண்டு யூன் மாத நடுப்பகுதியில் அனுப்பப்பட்ட செய்தி மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியது.
ஐ தே கட்சியின் உள் தகவல்களின்படி புலிகளின் முக்கிய பிரதிநிதியாக அவர்களது உளவுப் பிரிவில் செயற்பட்ட வர்த்தகரான எமில் காந்தன் செயற்பட்டார் எனவும், இச் சந்திப்பினை ரிரன் அலஸ் தனது தொலைபேசியில் வீடியோ வடிவில் பதிவிட்டிருந்ததாகவும் செய்தி வெளியாகியது.
அப் பதிவினை அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் பார்வையிட்டதாகவும் அச் செய்தி கூறியது.
அத்துடன் அமெரிக்க தூதுவர் மகிந்தவுடன் தேர்தலுக்கு முன்னர் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது அவ்வாறான தொடர்பு இருந்ததை அவர் ஏற்றிருந்தார் எனவும் அக் குறிப்பு கூறியது.
ரிரன் அலஸின் சாட்சியம் வெளியானதைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு தனது விசாரணைகளை ஆரம்பித்தது.
வாசகர்களே!
இத் தருணத்தில் சமீபத்திய செய்தி ஒன்றினை உங்கள் கவனத்தில் தருவது பொருத்தமானது.
முன்னாள் அமைச்சரான மகிந்தானந்த அழுத்கமகே பல கோடி மோசடிக் குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரது குற்றச்சாட்டு வெளியில் வந்த செய்தியும், ரிரன் அலஸ் புலிகளுக்குப் பணம் கொடுத்த செய்தியும் எதிர்பாராத விதமாக எவ்வாறு சிக்கிக்கொண்டன?
அதாவது கடந்த காலத்தில் காப்புறுதி முகவராக மாதம் 1500 ருபா சம்பளம் பெற்ற அந்த அமைச்சர் தற்போது பல கோடி பெறுமதியான சொத்துகளுக்கு அதிபதியான செய்தி அவரது முன்னாள் மனைவி 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரி அவர் மேல் வழக்குத் தொடர்ந்த செய்தியால் வெளியானது.
இது பொலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. அதன் விளைவாக அமைச்சர் அழுத்கமகே இன் ஊழல் அம்பலமாகியது.
பயங்கரவாத விசாரணைக் குழு ரிரன் அலஸின் சாட்சியத்தையும், அவரால் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் மையமாக வைத்து விசாரணைகளைத் தொடர்ந்தபோது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விபரங்கள் மேலும் தெரிந்தது.
புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது.
இப் பணம் அமெரிக்க நாணயத்தில் சுமார் 1.3 மில்லியன் டொலர்களாகும். தாம் தேர்தலில் வென்றால் அதைவிட பெரும் பரிசுத் தொகை தருவதாக வாக்களிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் பெயரால் பாரிய வீடமைப்புத் திட்டத்திற்கென பெரும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், கருணா தரப்பினரின் ஆயுதங்கள் பறிக்கப்படும் எனவும், புலிகளால் குறிப்பிடப்படும் பிரமுகர்கள் முக்கிய அரசியல் பதவிகளைப் பெற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிந்த மூன்று மாதங்களில் ராஸபக்ஸ அரசு வட பகுதி வீடமைப்புத் திட்டத்திற்கென பல மில்லியன் ருபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.
அப் பணம் புலிகளால் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவை தீர்மானிக்கப்பட்டன. அதற்கு முன்பதாகவே எமில் காந்தனால் வழங்கப்பட்ட பொய் கம்பனி வங்கிக் கணக்கிற்கு 150 மில்லியன் ருபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டது பின்னர் நடத்திய விசாரணைகளில் அது தெரியவந்தது.
இவ் ஊழல் நடவடிக்கைகளை சட்டரீதியானதாக மற்றவர்கள் கணிக்கும் வகையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட பி ரொம் அமைப்பிற்குப் பதிலாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அப் புதிய அமைப்பிற்கு ரிரன் அலஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இச் செய்திகள் மக்களைச் சென்றடைய நிலமைகள் மேலும் சிக்கலாகின.
பாராளுமன்றத்தில் கேள்விகள் எழும்பின.
பஸில் ராஜபக்ஸ புலிகளுடன் தாம் உறவு வைத்திருக்கவில்லை என பாராளுமன்றத்தில் மறுத்தார்.
2010ம் ஆண்டு ஜனவரியில் ரிரன் அலஸ் வீட்டிற்குக் கைக்குண்டு வீசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்.. “பஸில் ராஜபக்ஸ தாமே எமில் காந்தனிடம் 180 மில்லியன் ருபாய் பணத்தை வழங்கினார்” எனக் குற்றம் சாட்டினார். ஆனால் இன்றுவரை விசாரணைகள் இல்லை.
தேர்தல் பகிஷ்கரிப்பிற்காக பணம் வழங்கியமை குறித்து எரிக் சோல்கெய்ம் இன் கருத்து இவ்வாறாக இருந்தது.
இச் செய்தி தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும், இது குறித்து பாலசிங்கத்திடம் வினவியபோது அவர் அதனை ஏற்கவில்லை எனவும், பதிலாக ரணில் ஏற்படுத்திய சர்வதேச வலைப்பின்னல் குறித்து பிரபாகரன் அச்சமடைந்திருந்ததாகவும், தேர்தலைப் பகிஷ்கரிப்பதைத் தாம் ஏற்கவில்லை எனவும், ஏனெனில் ரணிலின்மேல் தாம் அதிக மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாக தெரிவித்தார் எனவும் குறிப்பிடுகிறார்.
தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான நியாயங்கள் பொருத்தமற்றதாக இருந்ததாகவும், பல நம்பிக்கையானவர்கள் புலிகள் மகிந்தவுடன் ஏதோவகையான இணக்கத்திற்கு சென்றுள்ளதாக நம்பிய போதிலும் தாம் அதனைப் பாலசிங்கத்திடம் பேசிய வேளையில் அவ்வாறான முயற்சி நடப்பதாக குறிப்பிடவில்லை எனவும்..,
பிரபாகரன் ஊழலுள்ள மனிதர் அல்ல என்பதாலும் தம்மால் அதனை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்த சோல்கெய்ம், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க பணம் தேவை என்பது மறுப்பதற்கு இல்லை.
அவருக்கு வெளி நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லை.
போரில் ஈடுபட்டுள்ள அவர் நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நியாயமில்லை.
ஆனால் ராஜபக்ஸ சகோதரர்கள் புலிகளை ஊழலுக்குள் தள்ளுவதில் கில்லாடிகள். அதிகாரத்தை அடைவதற்காக எதனையும் செய்வார்கள்.
மகிந்த பதவிக்கு வந்தால் அவரது அனுபவமின்மையும், சர்வதேச தொடர்பு குறைந்த நிலமைகளும் புலிகளுக்கு வாய்ப்பாக அமையும் என அவர்கள் நம்பியிருக்கலாம்.
ஆனால் ரணில், சந்திரிகா ஆகியோர் மிகவும் வித்தியாசமான லிபரல் விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.
மகிந்தவிற்கு பண்பாட்டு வழிகாட்டி மிகவும் மட்டமானது.
புலிகள் பகிஷ்கரிக்காவிடில் ரணில் அத் தேர்தலில் வெற்றியடைந்திருப்பார். இவ்வளவு மரணங்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் எரிக் சோல்கெய்ம்.
தேர்தலில் புலிகளின் தந்திரங்களால், தமிழ்த் தேசியவாதம் பணத்திற்குச் சோரம் போனநிலையில் மகிந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரபாகரனின் மாவீரர் உரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மகிந்த நீண்ட, நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல சமஷ்டி, சுயாட்சி, பி ரொம் பற்றியும் கேள்வி எழுப்பினார்.
அவரைப் பொறுத்த மட்டில் இதுவரை நடந்ததெல்லாம் மிக மோசமான தவறுகள் என்பதால் தாம் புதிய விதத்தில் அணுக எண்ணினார். தனிநாடு தவிர்ந்த எதனையும் வழங்கத் தாம் தயார் என்றார்.
பிரபாகரனோடு நேரடியாக ஒப்பந்தம் போடுவதே அவரது அணுகுமுறையாக இருந்தது.
ஆனால் பிரபாகரனின் 2005ம் ஆண்டு மாவீரர் தின உரை சிங்கள ஆட்சியாளர் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.
சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.
ராஜபக்ஸ தனது அணுகுமுறை முற்றிலும் புதியது என குறிப்பிட்டமையால், புதிய ஆட்சியளரின் போக்கு என்ன? என்பதை அறிய சிறிது காலம் காத்திருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் காத்திருப்பு பலிக்கவில்லை.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்கும் அணுகுமுறை எதுவும் வெளிப்படவில்லை. இறுதியில் மீண்டும் சுயநிர்ணய உரிமை, தமது தாயகங்களில் சுயாட்சி என்பதாக ஆரம்பித்தது. இவை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு மிகவும் சொற்பமே என்பதை தெளிவாக உணர்த்தியது.
மாவீரர் தின உரையின் சாராம்சம் சில வாரங்களில் படிப்படியாக தெரிய ஆரம்பித்தது.
வடக்கு, கிழக்கில் காணப்பட்ட ராணுவ சோதனைச் சாவடிகளில் தாக்குதல்கள் ஆரம்பமாயின.
2005ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4ம் திகதி ராணுவ வாகனம் கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது. 7 ராணுவத்தினர் மரணமாகினர்.
2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இடம்பெற்ற பாரிய சம்பவமாக அது அமைந்தது. கிழக்கில் முஸ்லீம்- தமிழ் மோதல்கள் ஆரம்பமாகின.
ராஜபக்ஸ மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நோர்வேயை நாடினார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய எரிக் சோல்கெயம் இரு சாராரும் தமது ஈடுபாட்டினை ஏற்பதாக பகிரங்கமாக தெரிவித்தால் மாத்திரமே தம்மால் பங்களிக்க முடியும் என்றார்.
நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் நிலவிய நிலமையில் பகிரங்கமாக அறிவிப்பது அரசிற்குப் பெரும் சங்கடமாக இருந்தது.
அதே போலவே புலிகள் இதுவரை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களைக் கௌரவிக்க வேண்டுமெனவும், பிரபாகரனுடன் வேண்டிய நேரங்களில் நேரடியாக தொடர்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் தரவேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர்.
நோர்வே தூதுக் குழுவிலிருந்து எரிக் சோல்கெய்ம் நீக்கப்படவேண்டுமெனவும், புலிகளுடன் நேரடியாகப் பேசுவதை எதிர்த்தும் பேசிவரும் மகிந்த அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளான ஜே வி பி, ஜாதிக கெல உறுமய ஆகியனவற்றை மகிந்த எவ்வாறு சமாளித்தார்?
( அடுத்த வாரம் )
Average Rating