பிரபாகரன் தங்கி இருக்கும் முல்லைத்தீவு பகுதியில் இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கி இருக்கும் முல்லைத்தீவு பகுதியில், இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தமிழர் பகுதியில் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.
விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவத்திடம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக முன்னேறி வருகிறார்கள். இந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், பாதுகாப்புடன் தங்கி இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள கடற்புலிகளின் தளம் அழிக்கப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலின்போது ஏற்பட்ட மற்ற சேத விவரங்கள் பற்றி உடனடியாக தெரியவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில், கண்ணிவெடி தாக்குதலில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். வடகிழக்கு மாவட்டத்தில் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
கொழும்பில் வெடிகுண்டு பீதி
இதற்கிடையில், கொழும்பு கொல்லுப்பிட்டியா பகுதியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பார்சலால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதியை போலீசார் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பார்சலை பரிசோதித்தபோது, அது முகவரி அட்டைகள் அடங்கிய பார்சல்தான் என்று தெரிய வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை, கொழும்பில் அரசியல்வாதி ஒருவரை குறிவைத்து நடத்த முயன்ற தாக்குதல் தடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள கண்ணிவெடிகள் செயல் இழக்க வைக்கப்பட்டன. கொழும்பு நகரில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் 4 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் நிலையில், அங்கு அடிக்கடி வெடிகுண்டு பீதி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில், சிங்கள நிவாரணப்பணி அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போர் நிறுத்தம்?
இதற்கிடையில், யாழ்ப்பாணம் பகுதியில் அகதிகளாக இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்துள்ள வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 150 பேரை அழைத்து வருவதற்காக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சார்பில் இன்று படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 3,600 டன் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு, செஞ்சிலுவை சங்க கொடியுடன் சரக்கு கப்பல் ஒன்றும் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று ஏற்கனவே ஜனாதிபதி ராஜபக்சே அறிவித்து இருந்தார். இந்த நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி மங்கள சமரவீரா பாராளுமன்றத்தில் பேசும்போது, “போர்நிறுத்தம் பற்றி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து வேண்டுகோள் வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம்” என்று அறிவித்து இருக்கிறார்.