போதுமானதா பிரதமரின் மன்னிப்புக் கோரல்? கட்டுரை
முதலாவதும் கடைசியுமான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான இறுதிப் பிரசார வேலைகள் நடைபெறும் நிலையில், அவ்வருடம் மே மாதம் 31 ஆம் திகதி, ஆசியாவிலேயே மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம் தீ வைத்து அழிக்கப்பட்டது. 35 வருடங்களுக்குப் பின்னர் அப்போது நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்துக்கு இரண்டாண்டுகள் பூர்த்தியாகும் போது, வட மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தியாகியிருக்கும் என்றார்.
“உங்கள் ஆட்சிக் காலத்தில்தான் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது” என அப்போது மஹிந்த அணியின் உறுப்பினர் ஒருவர் கூறவே, “நாம் அதையிட்டுக் கவலையடைகிறோம்; மன்னிப்புக் கேட்கிறோம்” எனப் பிரதமர் கூறினார். அத்தோடு, “உங்கள் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக நீங்கள் மன்னிப்புக் கேட்கத் தயாரா” எனவும் அவர் மஹிந்த அணியினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.
எனவே, இது மனப்பூர்வமானதும் பூரணமானதுமான மன்னிப்புக் கோரல் அல்ல எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஏனெனில், பிரதமர் அன்று யாழ்ப்பாண நூலக எரிப்புக்காக மன்னிப்புக் கேட்கவிருக்கவில்லை; எதிர்க் கட்சியினர் அந்தச் சம்பவத்தைப் பாவித்து, ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிக்க முற்பட்டதனாலேயே, அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர், “நாம் மன்னிப்புக் கேட்கிறோம்” என்றார். எதிர்க் கட்சியினர் அவ்வாறு நூலக எரிப்பைப் பற்றி, ஐ.தே.கவை விமர்சிக்க முற்படாவிட்டால் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டார்.
அத்தோடு பிரதமரின் மன்னிப்புக் கோரலை, இதற்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தாம் பதவியில் இருக்கும் போது, மன்னிப்புக் கோரிய சம்பவத்துடன் ஒப்பிட்டும் இந்த மன்னிப்பு, முறையானது அல்ல என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
‘கறுப்பு ஜூலை’ என்று உலகளாவிய ரீதியில் அழைக்கப்படும் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு, 21 வருடங்கள் பூர்த்தியாகிய 2004 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அந்த வன்முறைகளுக்காகத் தாம் முதலில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் அடுத்ததாக நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.
அது, பிரதமரின் மன்னிப்பைப்போல் தற்செயலானதோ, மற்றொருவரின் குற்றச்சாட்டுக்குப் பதிலாகவோ அன்றி, திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட உரையாகவிருந்தது. அதேபோல், அது ஒரு கட்சியின் சார்பில் கேட்கப்பட்ட மன்னிப்பன்றி 1983 ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களைப் பற்றி விளக்கி, அரசாங்கத்தின் சார்பில் அரசாங்கத்தின் தலைவி என்ற முறையில் அவர் கேட்ட மன்னிப்பாகும். எனவே, பிரதமரின் மன்னிப்பு முறையானது அல்ல என்றும், போதுமானது அல்ல என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
ஒரு வகையில் இந்த வாதம் சரி தான். ஆனால், அவர் அந்தச் சம்பவத்துக்காக தாம் ஒரு போதும் மன்னிப்புக் கேட்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்திருந்தால், ஒருபோதும் அவ்வாறு மன்னிப்புக் கேட்டிருக்கவும் மாட்டார். எனவே, இந்த மன்னிப்பானது அவர் மனச்சாட்சிக்கு எதிராகக் கேட்டதாகக் கூற முடியாது. அதேவேளை, ஐ.தே.கவின் எவருமோ அல்லது பொதுவாக சிங்கள மக்களில் எவருமோ அந்த மன்னிப்புக் கோரலை எதிர்த்துக் கருத்து வெளியிடவும் இல்லை. ஐ.தே.க அண்மைக் காலமாகக் கடைபிடித்து வரும் நல்லிணக்கக் கொள்கையோடும் அது பொருத்தமாக இருக்கிறது.
எனவே, பிரதமரின் மன்னிப்புக் கோரலைக் கொச்சைப் படுத்துவதை விட, அதை ஓர் உதாரணமாக வைத்து ஏனைய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏனைய சமூகங்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் தமது சமூகத்தினர் இழைத்த, அநீதிகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தூண்டுவதும், அதன் மூலம் இனங்களுக்கிடையேயான பகை உணர்வைத் தணிக்க முடியுமானால், அதற்கு இவ்வாறான அரசியல் கருத்துக்களைப் பாவிப்பதுமே எல்லோரினதும் கடமையாகும்.
சந்திரிகாவை அடுத்து, ஜாதிக்க ஹெல உருமயவின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் யாழ்ப்பாண நூலக எரிப்புத் தொடர்பாகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார். போர் முடிவடைந்து சில மாதங்களில் அதாவது 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் சென்ற போதே அமைச்சர் சம்பிக்க இவ்வாறு மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்த மன்னிப்பு மிகவும் முக்கியமானதாக அப்போது கருதப்பட்டது. ஏனெனில், சம்பிக்கவை மிக மோசமான பேரினவாதியாகவே அப்போது கருதப்பட்டது. அது, மட்டுமல்லாமல் இனவாதிகளின் கோட்டையாகத் திகழ்ந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அவர் முக்கிய அமைச்சராக இருந்தார். அதேபோல், போரினால் புலிகள் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, அழிந்துவிட்ட நிலையில், தமிழ் மக்கள் மானசிகமாக வீழ்ச்சியுற்றும், சிங்களப் பேரினவாத அகம்பாவம் மேலோங்கியும் இருந்த காலம் அது. அந்த நிலையில், சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்துக்குச் சென்று தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியமை உண்மையிலேயே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாகும்.
ஆனாலும், அதுவும் அவரது கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவின் படியோ அல்லது அவர் மனம் வருந்தி, அதனால் ஏற்கெனவே திட்டமிட்டோ தமிழ் மக்களிடம் கோரிய மன்னிப்பா என்று அப்போது சந்தேகிக்கப்பட்டது. எனினும், அது போன்ற நல்லிணக்கத்துக்குச் சாதகமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது முக்கியமாகும்.
பிரதமரின் மன்னிப்புக் கோரலை அடுத்து அதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜாதிக்க ஹெல உருமயவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தற்போதைய பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில மட்டுமே தென் பகுதியில் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து இருந்தார். யாழ்ப்பான நூலகத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகளே எரித்தார்கள் என்றும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் எட்வட் குணவர்தனவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர், பிரதமர், புலிகளின் சார்பிலா மன்னிப்புக் கோரினார் எனக் கேள்வி எழுப்பினார்.
ஆனால், மஹிந்த அணியினரின் குறுக்கீடொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் மன்னிப்புக் கோரினார் என்பதை கம்மன்பில மறந்து விட்டார் போலும். கம்மன்பிலவின் வாதத்தின்படி, புலிகளின் குற்றச் செயலொன்றுக்காகவா அவரது சகாவான மேற்படி உறுப்பினர் பிரதமரின் கட்சியை குறை கூறினார்? ஐக்கிய தேசிய கட்சியின் குண்டர்களே நூலகத்தை எரித்தார்கள் என்பதே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அபிப்பிராயமாகும். ஆதனால்தான், மேற்படி உறுப்பினர் பிரதமரைப் பார்த்து, “உங்கள் காலத்தில்தான் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது” என்றார்.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டுக் காலத்தில் புலிகள் பெரும் படையாக வளர்ந்திருக்கவில்லை. அக்காலத்தில் மிகச் சில உறுப்பினர்கள் மட்டுமே அவ்வியக்கத்தில் இருந்தனர். அக்காலத்தில் வட பகுதியில் ஆங்காங்கே சிதறிக் கடைமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் மற்றும் ஏனைய ஆயுதப் படை வீரர்களின் பின்னால் சைக்கிளில் வந்து தாக்கிவிட்டுத் தப்பி ஓடும் நிலையிலேயே புலிகள் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் இருந்தன.
அந்த நிலையிலேயே 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி முதலாவது மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்றது. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒருவித அதிகாரப் பரவலாக்கல் முறையாகவே மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்தத் தேர்தலை விரும்பவில்லை. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு, கிழக்கில் ஏழு மாவட்ட சபைகளுக்கும் போட்டியிட்டது. தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக 1977 ஆம் ஆண்டு கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆணையை இதன் மூலம் கூட்டணி காட்டிக் கொடுத்ததாகவே தமிழ் ஆயுதக் குழுக்கள் அதனை விவரித்தன.
மக்கள் பெரும்பாலும் கூட்டணியுடனேயே இருந்தனர். போட்டியிட்ட ஏனைய கட்சிகளான ஐ.தே.க மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் அக்காலத்தில் வடக்கு, கிழக்கில் பெருமளவில் மக்கள் ஆதரவு இருந்தது. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த கூட்டணி 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோவிலடியில் மாபெரும் பிரசார கூட்டமொன்றை நடத்தியது. சுமார் 200 பேர் கொண்ட பொலிஸ் படையொன்றின் மூலம் கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் ஆற்றப்பட்ட ஆவேச உரைகள் மத்தியில், இனந்தெரியாத இரு ஆயுததாரிகள் மூன்று பொலிஸ் அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். கடமையில் ஈடுபட்டு இருந்த முழுப் பொலிஸ் படையும் ஆவேசத்தில் குழப்பம் விழைவிக்கத் தொடங்கியது.
கடைகள், வீடுகள் அடித்து நொருக்கி, எரித்து நாசமாக்கப்பட்டன; மக்கள் தாக்கப்பட்டனர். கூட்டம் சிதறி ஓடத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் ஒருபோதும் காணாதவாறு பொலிஸார் அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே யாழ்ப்பாண நூலகமும் எரிக்கப்பட்டது.
அந்த நாட்களில், கொடிய இனவாதியான அமைச்சர் சிறில் மத்தியூ உள்ளிட்ட சில ஐ.தே.க அமைச்சர்கள் தெற்கிலிருந்து குண்டர்களை அழைத்துக் கொண்டு ‘தேர்தல் பணிகளுக்காக’ யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். அவர்களும் பொலிஸாருடன் சேர்ந்து அடாவடித் தனங்களில் ஈடுபட்டனர்.
தற்போதைய அமைச்சர் நவின் திஸாநாயக்கவின் தந்தையான அப்போதைய மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் குண்டர்களே நூலகத்தை எரித்ததாக அக்காலத்தில் பரவலாக நம்பப்பட்டது. ஆனால், பின்னர் ஒரு நாள் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை எழுந்த போது, குறித்த நாளில் தாம் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை என்பதை தமது உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் மூலம் தம்மால் நிரூபிக்க முடியும் எனக் காமினி திஸாநாயக்க கூறினார்.
தேர்தல் முடிவடையும் வரை தாக்குதல்கள் இடம்பெற்றன. தேர்தல் தினத்தன்று யாழ்ப்பாணக் கச்சேரியில் இருந்த ஆறு வாக்குப் பெட்டிகள் காணாமற் போயின. இவ்வாறுதான் ஜனநாயக முறையில் அதிகாரப் பரவலாக்கல் மூலம் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட முதலாவது தேர்தலின் போது ஆட்சியாளர்கள் நடந்து கொண்டார்கள்.
எனவே, கம்மன்பில கூறுவது போல், யாழ்ப்பாண நூலகம் புலிகளால் எரிக்கப்பட்டது என்பதை நம்ப முடியாது. அவர் அவ்வாறு கூறும்போது, அவருடன் அண்மைக் காலம் வரை ஒன்றாக அரசியலில் ஈடுபட்ட ஹெல உருமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்ஹ பிரதமரின் மன்னிப்புக் கோரலை வரவேற்று தமிழ்த் தலைவர்களும் விகாரைகளைப் புலிகள் அழித்ததற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேவேளை, 2010 ஆம் ஆண்டு சம்பிக்க ரணவக்க, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதற்காக மன்னிப்புக் கோரும் போது, கம்மன்பிலவும் சம்பிக்கவுடன் ஹெல உருமயவிலேயே இருந்தார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய அதேவேளை, சிறந்த நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில் பெறுமதி வாய்ந்ததும் ஈடுசெய்ய முடியாததுமான பல அரிய நூல்கள் உள்ளிட்ட 95,000 க்கும் அதிகமான நூல்கள், சஞ்சிகைகள், கையெழுத்துப்பிரதிகள், ஓலை ஏடுகள் மற்றும் பத்திரிகைகள் போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. அக்கட்டடமும் புராதன தமிழ்க் கட்டடக் கலையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த நூலகத்தை எரித்தமையானது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட மிகப் பெரும் கலாசாரக் கொடுமைகளில் ஒன்றாகும்.
இனக்கலவரங்களின் போதும், அதன் பின்னர் இடம்பெற்ற போரின் போதும், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் அழிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கில் அழிக்கப்பட்டவற்றின் சின்னமாகவே யாழ்ப்பாண நூலகம் கருதப்படுகிறது. தென்பகுதி மக்கள் மத்தியிலும் அந்த அழிவின் தாக்கம் காணக்கூடியதாக இருக்கிறது.
எனவேதான், யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் தென்பகுதி மக்கள் யாழ். நூலகத்தையும் பார்க்கச் செல்கிறார்கள். அவர்கள் உணர்வுபூர்வமாக அங்கு செல்கிறார்கள் என்று கூற முடியாது. ஆனால், வடக்கின் அழிவின் சின்னமாக அவர்களும் அதனைப் பார்க்கிறார்கள். அதனால்தான் ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எவ்வளவோ அழிவுகள் இடம்பெற்று இருந்தும் மஹிந்த அணியின் மேற்படி உறுப்பினர் நூலகத்தை மட்டும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமையும் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமும் தான் அரசாங்கத் தரப்பில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளல்ல; கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களில் கொத்துக் கொத்தாக அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், பல அழிவுகளும் இடம்பெற்றன. எனவேதான், கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்துக்காகவும் அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
அதேவேளை, தலதா மாளிகை தாக்கப்பட்டமை, அநுராதபுரம் ஸ்ரீமா போதி அருகே நூற்றுக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டமை, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஒண்டாச்சிமடம் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை போன்ற தமிழ் ஆயுதக் குழுக்கள் ஏனைய சமூகங்களுக்கு இழைத்த அநீதிகளுக்கும் தமிழ்த் தரப்பினர் மன்னிப்புக் கோர வேண்டும் என அவ் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. இதேபோல், முஸ்லிம் தலைவர்களும் தமது தரப்பிலிருந்து ஏனைய சமூகங்கள் பாதிக்கப்பட்டனவா என்பதை ஆராய்ந்து அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் ஆபிரிக்க நல்லிணக்க நடவடிக்கைகளின் போது, இவ்வாறு பரஸ்பரம் மன்னிப்புக் கோரல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அது போன்றதோர் நிலைமைக்கு இந்நாட்டில் மூன்று இன சமூகங்களும் மானசிகமாகத் தயாரா என்பது தெளிவாகவில்லை. ஆனால், அதற்காகச் சமூக ஆர்வலர்கள் பிரதமரினதும் சந்திரிகாவினதும் சம்பிக்கவினதும் மன்னிப்புக் கோரல்களைப் பாவித்து மூன்று சமூகங்களினதும் தலைவர்களைத் தூண்ட முடியும்.
Average Rating