6 மணி நேரம் தொடர்ந்து தண்டால் எடுக்க வைத்து சித்ரவதை: ராகிங்கால் மாணவரின் சிறுநீரகம் பாதிப்பு…!!
கேரள மாநிலம் கோட்டயத்தில் பாலிடெக்னிக் மாணவரை தொடர்ந்து 6 மணி நேரம் தண்டால் எடுக்க வைத்து ராகிங் செய்ததால் அந்த மாணவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே அரசு பாலி டெக்னிக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இக்கல்லூரியின் விடுதியில் முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் பலர் தங்கி உள்ளனர். இங்கு இரிஞாலகுடாவைச் சேர்ந்த அவினாஷ் என்ற மாணவர் தங்கி இருந்தார்.
முதலாம் ஆண்டு படித்து வந்த இவரையும், இன்னும் சில மாணவர்களையும், விடுதியில் தங்கி இருந்த மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக புகார் எழுந்தது.
இதில் அவினாசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வீடு திரும்பினார். பெற்றோர் அவரை திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவினாசின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே அவினாசின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து கோட்டயம் காவல்துறையில் புகார் செய்தனர். அதில் தங்களது மகன் அவினாசை கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
மதுவில் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொடிகளை கலந்து குடிக்க கொடுத்துள்ளனர். மேலும் காலையில் தொடங்கி மாலை வரை சுமார் 6 மணி நேரம் தண்டால் எடுக்க வைத்தும், இது போல கடுமையான சில உடற்பயிற்சிகளை செய்யச் சொல்லியும் கொடுமைபடுத்தி உள்ளனர்.
இதன் காரணமாகவே அவினாசின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் விடுதியில் தங்கி இருந்த மூத்த மாணவர்கள் 8 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தனர்.
இதனையடுத்து பொலிசார் இப்புகாரின் மீது வழக்கு பதிவு செய்தனர். தகவல் அறிந்து 8 மாணவர்களும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும் கல்லூரி நிர்வாகம், 8 மாணவர்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்தது. மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதற்கிடையே ராகிங் கொடுமையால் மாணவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உம்மண்சாண்டி திருச்சூர் ஆஸ்பத்திரிக்குச் சென்று மாணவர் அவினாசை பார்த்தார். அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர் அவினாசுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அவரது உடல் நிலை தேறிவிடும் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாணவர் அவினாசுக்கு ஆதரவாக மாணவர்கள் கூட்டமைப்பு ஒன்றிணைந்து ராகிங் கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
Average Rating