மாவட்ட அபிவிருத்தி சபைகள்…!! கட்டுரை
இராணுவக் கெடுபிடியும் அரசியல் தீர்வும்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினதும் அவசரகாலச் சட்டத்தினதும் கோரத்தன்மை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இது தமிழ் மக்களின் வாழ்வைப் பெரும் அவலமாக மாற்றியது என்று சொன்னால் அது மிகைப்படுத்தலல்ல.
பாதுகாப்பு அமைச்சானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கையிலே இருந்தபோதும் 1983 இலே ‘தேசிய பாதுகாப்பு அமைச்சு’ என்று தனி அமைச்சொன்றை உருவாக்கி, அதற்கு லலித் அதுலத்முதலியை அமைச்சராக நியமித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான அதிகாரங்களை அந்த அமைச்சுக்கு வழங்கியதன் மூலம், தமிழ் மக்களை அடக்கியொடுக்கும் செயற்பாட்டை ஜே.ஆர் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நடத்திக் காட்டியது. இந்த வரலாற்றை நாம் எதிர்வரும் அத்தியாயங்களில் விவரமாகக் காண்போம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் அவசரகால நிலைப் பிரகடனமும் ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இனப்பிரச்சினைத் தீர்வு நடவடிக்கை தொடர்பான அரசியல் நகர்வொன்றை செய்யவேண்டிய சூழலைத் தோற்றுவித்தது. அரசியல்த் தீர்வை ஆயுதவழியில் இன்றி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் வழியில் தேடுங்கள் என்பதே அரசாங்கத்தின் வாய்ப்பாட்டாக இருந்தது.
ஆகவே, இராணுவத்தைக் களமிறக்கி வடக்கிலே தமிழ் ஆயுதக் குழுக்களை அடக்கும் அதேவேளையில், அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான காய்நகர்த்தல்களையும் ஜே.ஆர் அரசாங்கம் செய்தது.
ஏற்கெனவே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 1978 அக்டோபர் மாதத்தில் மாவட்ட அமைச்சர் என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்தியிருந்தார். மாவட்ட அமைச்சுப் பதவிகளைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் வழங்கத் தயாராக இருந்தபோதும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடுத்த கட்ட முன்மொழிவாக, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற கருவினை முன்வைத்தார். இது, ஜே.ஆரால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதொரு எண்ணக்கருவல்ல; மாறாக பிரதமர் டட்லி சேனநாயக்க காலத்திலேயே பேசப்பட்ட மாவட்ட சபைகள் என்பதன் அடிப்படையில் அமைந்ததுதான்.
ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு
இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ், விசாரணை ஆணைக்குழு ஒன்றினை 1979 ஆகஸ்ட்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமித்தார். இந்த விசாரணை ஆணைக்குழுவின் நோக்கமானது, இலங்கையின் உள்ளூராட்சி முறையை ஆராய்வதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஸ்தாபித்தல், அதன் அமைப்பு, அதிகாரங்கள், இயங்குமுறை உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விரிவானதொரு அறிக்கையை அளிப்பதாக இருந்தது.
இந்த ஆணைக்குழுவுக்கு விக்டர் தென்னக்கோன், ஏ.சீ.எம்.அமீர், பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், கலாநிதி நீலன் திருச்செல்வம், என்.ஜீ.பீ.பண்டிதரட்ண, எம்.ஆர்.தாஸிம், கலாநிதிஜே.ஏ.எல்.குரே, கணபதிப்பிள்ளை நவரட்ணராஜா, பேராசிரியர் கே.எம். டி சில்வா மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
வில்சனும் நீலனும்
இலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில், சுதந்திரத்துக்குப் பின்னரான முக்கிய தமிழ்த் தலைமைகளாக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமாகட்டும் சா.ஜே.வே.செல்வநாயகமாகட்டும் அவர்கள் கொழும்பைத் தளமாகக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்களது நிரந்தர வாசஸ்தலம் கொழும்பாகவே இருந்தது. அத்துடன், கொழும்பு மைய அரசியல் சக்திகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பெரும்பாலும் நேரடியாக ஈடுபட்டார்கள்.
செல்வநாயகம் பிற்காலத்தில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முருகேசன் திருச்செல்வத்தை ஈடுபடச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் காலத்தில் இந்நிலை சற்று மாற்றம் பெற்றிருந்தது.
தனது முன்னைய தலைவர்கள் போலல்லாது அமிர்தலிங்கம், வடக்கை – யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டே செயற்பட்டார். இந்நிலையில், அரசாங்கத்துடனான முக்கிய பேச்சுவார்த்தைகள் சில தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகத்தின் மருமகனும் இலங்கையின் முன்னணி அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமான ஏ.ஜே.வில்சனினாலும் முருகேசன் திருச்செல்வத்தின் மகனும் இலங்கையில் குறிப்பிடத்தக்க சட்ட அறிஞர்களில் ஒருவருமான நீலன் திருச்செல்வத்தினாலுமே முன்னெடுக்கப்பட்டதாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் கலாநிதி ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமைத்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பில் ஆராயும் இந்த விசாரணை ஆணைக்குழுவில், தமிழ் ஐக்கிய முன்னணியின் நலன்களைக் கவனித்துக்கொள்ள இருவர் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்று சொன்னால் அது தவறாகாது.
இதுகூட, ஜே.ஆரின் தந்திரம்தான் எனச் சொல்லும் அரசியல் ஆய்வாளர்களும் உளர். சமூகத்தில் மதிப்பு மிகுந்த, அதேவேளை மென்போக்குடைய அல்லது மிதவாதப்போக்குடைய தமிழ் புத்திஜீவிகளைத் தீர்வுத்திட்டம் ஆக்கும் பணியில் இணைத்துக்கொண்டு, அந்தக் குழுவினால் பல சமரசங்களுக்குப் பின் உருவாக்கப்படும் திட்டத்தைத் தமிழ் மக்கள் முன்னும், சர்வதேசம் முன்னும் தமிழ் புத்திஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டமாக முன்னிறுத்தி, அதனை எதிர்ப்போரைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தாம் எண்ணிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உபாயமே இது என்பது சிலரின் விமர்சனம்.
எது எவ்வாறிருப்பினும், சமரசங்கள் எதுவுமின்றி எந்தவொரு தீர்வும் எட்டப்பட முடியாது என்பதுதான் யதார்த்தம். இரு எதிர் தீவிர எல்லைகளில் நின்று கொண்டு, தீர்வினைப் பெற முடியாது. மாறாகத் தீர்வு என்பது இரு எதிர் தீவிர எல்லைகளின் நடுவிலுள்ள ஏதோ ஒரு புள்ளியில்தான் அமையமுடியும் என்பதுதான் யதார்த்தமானது. ஆனால், அதற்கான சமரசத்தில் நாம் எதனை விட்டுக்கொடுக்கிறோம் என்பதும் முக்கியமானது. அடிப்படைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, அலங்காரமான தீர்வுகளைப் பெறுவது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
ஆணைக்குழுவின் செயற்பாடு
1979 ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவானது தனது பணிகளை 1980 பெப்ரவரியில் நிறைவு செய்தது. 1980 ஆகஸ்ட் எட்டாம் திகதி பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த மசோதாவுக்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஆதரவும் இருந்தது. இதற்கு பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் முக்கிய காரணகர்த்தா ஆவார்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அமைப்பதற்கான இந்த முயற்சியில் பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் பங்கு பெரியது. இதுபற்றி அவரது ‘இலங்கையின் உடைவு: தமிழ், சிங்களப் பிரச்சினை (ஆங்கிலம்)’ என்ற நூலில் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றி ஆராயும் செயற்பாட்டில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை இணங்கச் செய்ததில் பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் பங்கு முக்கியமானது.
இந்த ஆணைக்குழுவுக்குத் தலைவராக பேராசிரியர் ஏ.ஜே.வில்சனையே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமிக்க விரும்பியதாகவும் ஆனால், மறைந்த சா.ஜே.வே.செல்வநாயகத்தின் உறவினன் என்பது சிக்கலைத் தோற்றுவிக்கும் என அவர் கூறியதாகவும் அவர் எண்ணியது போலவே அமைச்சரவையில் அந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி தன்னிடம் வருத்தத்துடன் தெரிவித்ததாகவும் அதற்கு மாற்றாக இரண்டு தலைமைகளை நியமிக்கும் எண்ணம் முன்வைக்கப்பட்டபோதும் விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் அதற்கு இடமில்லை என்பதனால் ஒரு குறித்த முன்னாள் சிவில் சேவை உத்தியோகத்தரை நியமிக்கும் முன்மொழிவு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால், குறித்த அந்நபர் இந்த ஆணைக்குழுவுக்கு தலைமையேற்றால், தமிழ் ஐக்கிய முன்னணி இதில் பங்குபற்றாது என அறிவித்தமையினால், அவருக்கு மாற்றாக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோனை நியமிக்க
ஜே.ஆர்.ஜெயவர்த்தன முடிவெடுத்ததாகவும் ஏ.ஜே.வில்சன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
மேலும், விக்டர் தென்னக்கோனைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோவினால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர். மேலும், அவர் தனக்கும் உறவினர். ஆகவே, அவர் பொருத்தமானவர் என ஜே.ஆர் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் பேராசிரியர் ஏ. ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். விக்டர் தென்னக்கோனின் நியமனத்தை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஏற்றுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து, பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் ஆணைக்குழுவில் ஓர் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆணைக்குழுவின் கலந்தாய்வுகளும் சிக்கலற்றதாக இருக்கவில்லை என்றும் என்.ஜீ.பீ.பண்டிதரட்ண போன்றோர் முறையானதொரு தீர்வு எட்டப்படுவதற்கு முட்டுக்கட்டையாக ஆணைக்குழுவுக்குள் இருந்ததாகவும் ஏ.சீ.எம்.அமீர் மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் பேராசிரியர்
ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார்.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆணைக்குழு இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுத்திட்டத்தை வகுப்பதில் அதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோனே பெருந்தடையாக இருந்ததாக பேராசிரியர் ஏ.ஜே.விலசன் குறிப்பிடுகிறார். ‘இரண்டாம் பட்சமான சட்டவாக்க அதிகாரப் பிரிவினைக்கும் நிர்வாக அதிகாரப் பகிர்வுக்குமான ஜனாதிபதி ஆணைக்குழு’ என்ற பெயரை ‘அபிவிருத்தி சபைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு’ என்று சுருக்கியதில் ஆரம்பித்த அவரது கைங்கரியம், இறுதி வரை தொடர்ந்ததாக பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் விவரிக்கிறார்.
தமிழ் மக்களின் எதிர்ப்பு
குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மசோதா, 1980 ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. ஆனால், இதனைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரித்தமையானது கூட்டணி ஆதரவாளர்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை.
இதன் பின்னர், வவுனியாவில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கூட்டமொன்றில், அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கூட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வௌியே நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்க்க வேண்டுமென சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் நீண்ட உரையொன்றை ஆற்றிய அமிர்தலிங்கம், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தத்தான் போகிறது என்றும் இதனை ஏற்றுச் செயற்படுவதன் மூலம் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்த முடியும் என்ற தொனிப்பட அமிர்தலிங்கம் பேசினார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையை தீயிட்டுக் கொழுத்தி, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கும் அதனை ஆதரிக்கும் அமிர்தலிங்கத்துக்கும் எதிரான தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.
ஆனால், அமிர்தலிங்கமும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. அடுத்து, நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலைச் சந்திக்க அவர்கள் தயாரானார்கள்.
வில்சனின் நம்பிக்கையும் நம்பிக்கையிழப்பும்
தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனதும் சா.ஜே.வே.செல்வநாயகத்தினதும் உறவினர்கள் உட்படப் பலரும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை நம்ப வேண்டாம். ‘மாக்கியவல்லி’யனான ஜே.ஆர் ஒருபோதும் தனது வாக்குறுதியை நிறைவேற்றப்போவதில்லை என்று தனக்குப் பலர் கூறியதாகவும் ஆயினும், இறுதி வரைதான் ஜே.ஆர் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் ஆனால், கடைசியில் ஜே.ஆரினுடைய நடவடிக்கைகளை அலசிப் பார்க்கையில், இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை முறைப்படி நடைமுறைப்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருக்கவில்லை என்பது புலனானதாகவும் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் வருத்தத்தோடு கூறுகிறார்.
தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அரசியல் களத்தில் அணைத்து வைத்திருக்கத்தக்க ஒரு கைங்கரியமாக அவர் இதனைக் கைக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். எது எவ்வாறாயினும், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்பது தமிழ்-சிங்கள இனமுரண்பாட்டை அமைதி வழியில் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கான ஓர் ஆரம்பம் என்பது பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் கருத்து.
காத்திருந்தது கொடூரம்
மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் நான்காம் திகதி நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தேர்தலும் அதன் பிரச்சாரத்தின்போது, நடந்த சம்பவங்களும் தமிழர்களிடையே ஆறாத ரணங்களை உருவாக்கியது. ஓர் இனத்தின் பெருஞ்சொத்தை அழிக்கும் செயற்பாடு அரசாங்கக் கைக்கூலிகளினால் அமைச்சர்களின் முன்னிலையில் நடத்திமுடிக்கப்பட்ட கொடூரமும் இதன்போதுதான் நிகழ்ந்தது.
Average Rating