களச்சவால்கள்…!! கட்டுரை
ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும்.
முஸ்லிம்கள் இன்னும் ‘தேநீர்க்கடை அரசியலை’த்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேநீர் குடித்து முடிக்கும் வரை பேசுகின்றார்கள், பின்னர் மறந்து விடுகின்றார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை அலசுவது, அதைப் பற்றி விவாதிப்பது; பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் பழையதை மறந்து விட்டுப் புதிய பிரச்சினையை தலையில் போட்டுக் கொண்டு ஒப்பாரி வைப்பதுமாக முஸ்லிம்களின் அரசியல் இருக்கின்றது.
இதனால், முஸ்லிம் விரோத தரப்பினரால் மிக இலகுவாக போக்குக்காட்டக் கூடிய ஓர் இனக்குழுமமாக முஸ்லிம்களும் அவர்களுடைய நடப்பு விவகாரங்களும் கையாளப்படுகின்றன. முஸ்லிம்களை ஆட்சியாளர்கள், இனவாதம் மட்டுமன்றி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும் போக்குக்காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே பட்டறிவாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்கள் பொதுவாகவே மதம்சார்ந்த விடயங்களில் கூருணர்வு கொண்டவர்கள் என்பதால் அவர்களைச் சீண்டிப்பார்த்து, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக, சிங்களவர்களுக்கு எதிரானவர்களாகக் காண்பித்து, எதையோ சாதித்துக் கொள்வதற்கு ‘யாரோ’ நினைக்கின்றார்கள் என்பது தெளிவானது.
இந்தத் தரப்பினருள் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் மட்டுமன்றி பெருந்தேசியவாதிகளும் இருக்கலாம் என்பது பலரதும் அனுமானமாகும். தமிழர்களை ஓரளவுக்கு அடக்கியாயிற்று. அதேபோல முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும் என நினைக்கின்ற இனவாத சக்திகளுக்கு, உலகெங்கும் உருவாகியுள்ள முஸ்லிம் விரோதப் போக்கு, பெரும் துணையாக இருக்கின்றது. உள்நாட்டு அரசியல் நிலைவரங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், தவறாகச் செயற்படும் பௌத்த பிக்குகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு நீதித்துறை தர்மசங்கடப்படுவதாகத் தெரிகின்றது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப்போய், ஆட்சியில் அதிர்வுகள் ஏற்பட்டுவிடுமோ என்று அரசாங்கம் உள்ளூற நினைக்கின்றது.
அதன் காரணமாக, கண்ணுக்கு முன்னே ஏவி விடப்பட்டுள்ள இனவாதிகளைக் கைது செய்யாமல் விட்டுவிட்டு, கண்ணுக்குத் தெரியாத அவர்களது பின்புலங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுட்டவனைப் பிடித்து சிறையில் அடைத்தால் அவனுக்கு துப்பாக்கி கொடுத்தவன், திட்டம் தீட்டியவன், பணம் கொடுத்தவன், ஏற்றிக் கொண்டு வந்தவன் என எல்லா சூத்திரதாரிகளும் யார் என்ற முழு விவரமும் வெளியில் வரும். அதைவிடுத்து சுட்டுவிட்டு ஓடுகின்றவனை ஓடவிட்டுவிட்டு… திரைமறைவில் திட்டம் தீட்டியவனை சட்டம் ஒருக்காலும் தேடி அலைந்ததில்லை என்கின்ற மிகச் சாதாரண நடைமுறை நியதிகூட இங்கே மறுதலிக்கப்பட்டிருக்கின்றது.
அண்மைக் காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களை மையப்படுத்தியதாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகளவில்
குறிவைக்கப்பட்டிருக்கின்றார்கள். பல வருடங்களாகத் தொடரும் முஸ்லிம்கள் மீதான இனவெறுப்பு நடவடிக்கைகளில் மிகப் பிந்திய கட்டம் அரங்கேறிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.
இதனால் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மனக் குழப்பமடைந்தனர். கொழும்பில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்திய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் கைதானார். இவ்வாறிருக்கையில் கடும்போக்கு பௌத்த இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் நடத்திய சமகாலத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஊடுருவல் தொடர்பான சர்ச்சை வெளியானது. பின்னர், பொதுபலசேனா கிழக்குக்குள் நுழையப் பகிரத பிரயத்தனம் எடுத்து, அது சாத்தியப்படாமல் திரும்பிச் சென்றிருக்கின்றது. இவ்வாறு…. இனவாத செயற்பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் இன்று வரையும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பு, அதன் கீழ் முன்வைக்கப்படவிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வுப்பொதி, தீர்வுப் பொதியின் பிரதான உள்ளடக்கமாக இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் போன்ற முக்கியத்துவம்மிக்க விடயங்களில் முஸ்லிம்கள் அக்கறை செலுத்திக் கொண்டிருந்த நேரத்திலேயே, இனவாதச் செயற்பாடுகள் உச்ச நிலையை அடைந்தன என்பது இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
ஆகவே, முஸ்லிம்களின் கவனத்தை வேறு விடயங்களின்பால் திருப்பிவிட்டு, தேசிய அளவில் முக்கியத்துவம் பொருந்திய அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தீர்வுத்திட்டம் போன்ற காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்ற கோணத்திலும், அவதானிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
தம்புள்ளை பள்ளி விவகாரம், அளுத்கம கலவரம் தொட்டு கிழக்கு மாகாணத்துக்குள் பிக்குகள் அத்துமீறிப் பிரவேசிக்க முற்பட்ட சம்பவம் வரைக்குமாக இடம்பெற்ற பெரும் எண்ணிக்கையிலான இனவெறுப்பு நடவடிக்கைகளில் பிரதான பங்குவகித்தவர்கள் கைது செய்யப்படவில்லை.
மாறாக, இது வெளிநாட்டு சதி என்றும் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் என்றும், இனங்களைக் குழப்பும் ஒரு குழுவின் வேலை என்றும், பொறுப்பு வாய்ந்த தரப்பினரே தொடர்ந்தும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
அதற்கேற்றாற்போல், இலங்கையர் பலர், ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புபட்டிருப்பதான செய்தி வெளியானது. இருப்பினும், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இக்கருத்தை மறுத்துரைத்திருந்தார். இதுவே ஜனாதிபதியின் நிலைப்பாடும் என்று சொல்லியிருந்தார்.
எவ்வாறாயினும், அதன் பின்னரான அரசாங்கத் தரப்பினரின் சில கருத்துக்கள், இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தொடர்பில், அரசாங்கமானது இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றதா? அல்லது, எதையாவது சொல்லிச் சமாளித்துக் கொண்டு, அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தீர்வுத் திட்டம், சட்டவாக்கங்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் திட்டத்தில் முன்னேறிச் செல்கின்றதா? என்ற இரண்டு கேள்விகள் இங்கு எழுகின்றன.
இதற்கு காரணங்களும் உள்ளன. குறிப்பாக, நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்தமை மற்றும் சர்வதேச அழுத்தங்கள் என்பவற்றினால் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. ஆனால், இதற்குப் பதிலாக பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான சட்டம் ஒன்றை வேறு ஒரு பெயரில் அரசாங்கம் உருவாக்கத் திட்டமிட்டு வருவதாக ஊகங்கள் வெளிவந்திருக்கின்றன.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நாட்டில் யுத்தமோ பயங்கரவாதமோ இல்லாத ஒரு காலப்பகுதியில், பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு ஒப்பான ஒரு சட்டம் ஏன் நாட்டுக்கு அவசியப்படுகின்றது என்ற வினாவுக்கு விடை காணவேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒரு சட்டம் உருவாக்கப்படின், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு வலுவான சட்ட ஏற்பாடுகளையாவது கொண்டிருக்கும்.
ஆனால், இந்தச் சட்டம் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழ் அரசியல்வாதி ஒருவர் சொல்லியுள்ளார். அப்படியொரு சட்டம் உருவாக்கப்படுகின்றதா என்பதையோ, அதனால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதையோ முஸ்லிம் கட்சித் தலைவர்கள் யாரும் சொல்லவில்லை.
எவ்வாறெனினும், நாட்டில் தற்போதிருக்கின்ற இனவாத சூழல், இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் ஊடுருவல் பற்றி வெளியிடப்படும் கருத்துக்கள் என்பவற்றை வைத்துப் பார்க்கின்ற போது, அவ்வாறான சட்டம் ஒன்று உருவானால், அது முஸ்லிம்களைக் கணிசமாகப் பாதிக்கமாட்டாதா என்ற ஐயம் ஏற்படுகின்றது.
இதே சந்தேகத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் அண்மையில் முன்வைத்திருந்தார். “பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக இன்னுமொரு சட்டத்தை, பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டமூலம் என்ற தோரணையில் கொண்டுவரத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இதில், பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு பரந்தளவான குற்றச்செயல்களை உள்ளடக்கியதாகப் பிரமாணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. இன்று, பூகோள அரசியலில் பயங்கரவாதம் என்று சோடிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதும் முஸ்லிம்கள் தொடர்புபட்டிருக்கும் ஆயுதச் சண்டையைத்தான். எனவே, இந்த உத்தேசச் சட்டமூலம் முஸ்லிம்களின் செயற்பாடுகளையே குறிவைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள களச் சவால்களைத் தொகுத்து நோக்குங்கள். கடும்போக்கு சக்திகளின் செயற்பாடுகள் அபாயச் சங்குகளாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனிலும் ஏக இறைவனான அல்லாஹ்விலும் குறைகாணும் அளவுக்கு இனவாதிகள் தைரியம் பெற்றிருக்கின்றார்கள்.
நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாகக் கடும்போக்காளர்கள் கூறி வருகின்ற அதேநேரத்தில், இஸ்லாமியப் பயங்கரவாதம் பற்றி அரசாங்கத்துக்குள்ளேயே தெளிவற்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.
பிராந்திய ரீதியாகப் பெரும்பான்மையினரால் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிக்காக தமிழர்களும் முஸ்லிம்களும் காணிகளை இழந்து கொண்டிருக்கின்றார்கள். வழிபடுவதற்கு ஆட்களற்ற பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. ஒரு மாணவி பர்தா அணிந்து கொண்டு பரீட்சை எழுத முடியாத அளவுக்கு இன்று நிலைமை போயிருக்கின்றது. இவையெல்லாம் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அபசகுணங்களே அன்றி, ஆரோக்கியமான அறிகுறிகள் அல்ல.
ஆனால், இவ்வாறான முக்கியத்துவம் மிக்க காலப்பகுதியில் நமது முஸ்லிம் தலைமைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? சுருக்கமாகச் சொன்னால், தேசியத் தலைமை என்ற மாயைக்குள்ளும் அமைச்சுப் பதவி என்ற சுகத்துக்குள்ளும் அவர்கள் மயங்கிக் கிடக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ சம்பவங்கள் இடம்பெற்றிருந்தும் கூட, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், சட்ட வலுவூட்டல் பற்றிய (அரசியலமைப்புப் பேரவையின் வழிப்படுத்தல்) உபகுழுவுக்கு எழுத்துமூலப் பரிந்துரைகளை முன்வைக்க நேரமில்லாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. அதேபோன்று, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தேர்தல் முறை மறுசீராக்கம், வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற அத்தியாவசியமான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யவும் இல்லை.
அரசாங்கத்தில் அமைச்சராக, எம்.பியாக இருந்து கொண்டு ‘அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரைப் போல முஸ்லிம் தலைவர்களும் அறிக்கை விடுவதைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா? என்று தெரிவதில்லை.
இந்நிலையில், ஏனைய தளபதிகள், இரண்டாம் நிலைத் தலைவர்களைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களும் அறிக்கை விட்டுக்கொண்டு காலத்தைக் கடத்துகின்றார்கள்.
முஸ்லிம்கள் தொடர்பில் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ள கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்விடயத்தில், அண்மைக் காலத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். கட்டாரில் அவர் ஆற்றியதாகச் சொல்லப்படுகின்ற உரையும் அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கின்றது.
ஒப்பீட்டளவில் களத்தில் இறங்கி வேலை செய்பவராக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கருதப்பட்டாலும், அவரும் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
மஹிந்த ஆட்சியிலே மௌனியாக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, தற்போதைய அரசாங்கத்தை விமர்சிப்பதில் திருப்தி காண்கின்றார். ஒவ்வொரு முஸ்லிம் பெருமகனும் நடப்பு விவகாரங்களின் பாரதூரத்தை, அதில் மறைந்துள்ள அபாயத்தை முன்னுணர்ந்து செயற்பட வேண்டும்.
அரசியல்வாதிகள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தம்பாட்டில் இருக்கக் கூடாது. கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைக்கே தீர்வு காண முடியாமல்,செயலாளர் பதவி, தேசியப்பட்டியல் எனத் தீராத தலைவலிகளோடு இருக்கும் மு.கா தலைவர் ஹக்கீமும், செயலாளர் பதவி சார்ந்த சட்டப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டும், தங்களது அடுத்த பதவி குறித்துச் சிந்திந்து கொண்டிருக்கின்ற ஏனைய அரசியல்வாதிகளும் இந்தச் சமூகத்தின் ‘பென்னம்பெரிய’ பிரச்சினைகளின் பாரத்தை தனியே சுமப்பார்களா? என்பதை முதலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
Average Rating