ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்…!! கட்டுரை
சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது.
உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது.
ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் முடிவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தின் நிச்சயமின்மையை இன்னொரு படி உயர்த்தியுள்ளது. இத்தாலியின் தீவிர வலதுசாரிக் கட்சிகளும் குடியேறிகளுக்கு எதிரான கட்சிகளும் ஈட்டியுள்ள வெற்றி, ஐரோப்பாவில் வீசும் வலதுசாரி, வெள்ளை நிறவெறி அலைக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.
பிரெக்ஸிட், டொனால்ட் ட்ரம்பின் வருகை ஆகியவற்றைத் தொடர்ந்து ஐரோப்பிய மண்டலத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இத்தாலியின் மக்கள் வாக்கெடுப்பு முடிவுகள் குடியேறிகளுக்கு எதிரான, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவான குரல்களின் வலிமையைக் காட்டுகிறது.
அரசியல் யாப்பை மாற்றும் ஆணையைக் கோரும் மக்கள் வாக்கெடுப்புப் பல காரணங்களால் முக்கியமானது. இத்தாலிய உள்நாட்டு அரசியலின் தொடர்ச்சியான உறுதியைப் பேண இந்த யாப்புத் திருத்தம் அவசியம் என்று கூறப்பட்டது. ஐரோப்பாவில் வலதுசாரிச் சக்திகள் பெற்றுள்ள ஆதரவுத் தளத்தின் வலிமையை அறிய அது உதவியது.
ஐரோப்பிய ஒன்றியம் பற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான தூணான ஒரு நாட்டின் மக்களின் கருத்தை அது தெரிவித்தது. இவ்வகையில் மக்கள் வாக்கெடுப்பைக் கோரிய குறிப்பிட்ட யாப்புத் திருத்தம் ஏன் அவசியம் என அறிய வரலாற்றைத் தெரிதல் உதவும்.
முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் தாயகமான இத்தாலி, மத்தியதரைப் பிரதேசத்தின் நடுவில் அமைந்துள்ளது. பிரான்ஸ், சுவிஸ்சலாந்து, ஒஸ்ற்ரியா, ஸ்லவேனியா ஆகிய நாடுகளை எல்லையில் உடைய இத்தாலி, கத்தோலிக்கத் திருச்சபையின் கேந்திரமான வத்திக்கானைத் தன்னகத்தே கொண்டதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடாகவும் உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது.
ரோமாபுரிப் பேரரசின் பிறப்பிடமாயும் அதைத் தொடர்ந்து எழுந்த பிரதேச அரசுகளின் மையமாகவும் இத்தாலி ஒரு காலத்தில் விளங்கியது. அதைத் தொடர்ந்த மறுமலர்ச்சிக் காலத்தில் சிந்தனையாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், நாடுகாண் பயணிகள் என உலகின் திசைவழியைத் தீர்மானித்த பலரின் தாயகமாக இத்தாலி இருந்தது. அன்றைய ஐரோப்பாவின் முக்கியமான வணிகத் துறைமுகமான வெனிஸ் நகரம் வர்த்தகத்தின் மையமாயிருந்தது.
புதிய வணிகப் பாதைகளின் கண்டுபிடிப்பு, இத்தாலியின் அரசியல், பொருளாதாரச் செல்வாக்கைச் சரித்தது. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் நடந்த போர்களும் அதைத் தொடர்ந்த அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பும் உலக அரங்கில் இத்தாலியின் செல்வாக்கை அழித்தன. 19 ஆம் நூற்றாண்டில், பகுதிகளாகச் சிதறியிருந்த சிறிய தேச அரசுகளை ஒன்றிணைத்து இத்தாலிய முடியரசைத் தோற்றுவித்த இத்தாலிய தேசியவாதம், இத்தாலியைப் புதிய காலனியாதிக்கச் சக்தியாக்கியது. அதன் விளைவாக சோமாலியா, எரிட்ரியா, லிபியா ஆகியவற்றை இத்தாலி தன் பகுதிகளாக்கியது.
இதைத் தொடர்ந்த முதலாம் உலகப் போரில் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவற்றுக்கு ஆதரவாக ஜேர்மனியை எதிர்த்துப் போரில் இறங்கிய இத்தாலி, கடுஞ் சேதங்களைச் சந்தித்தது. அதேவேளை இத்தாலியின் வட பகுதி தொழில்மயமானது. தொழிற்சாலைகளின் வருகை, புதிய தொழிற்றுறைகளின் உருவாக்கம், நவீன தொழிநுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கள் என்பன வாழ்க்கைத் தரத்தை உயர்த்தின. இத்தாலியின் தென்பகுதியில் வறுமையும் வேலையின்மையும் ஏழ்மையும் வலுத்தன. இதனால், இத்தாலிய சமூகம் வடக்கு – தெற்காகப் பிரிந்தது. தெற்கில் இத்தாலிய சோசலிசக் கட்சிக்கு உழைக்கும் மக்களின் ஆதரவு வலுத்தது. இது பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளுக்கும் தாரளவாத சிந்தனைகளுக்கும் பெரும் சவாலாகியது. இதற்கு எதிராக இத்தாலிய தேசியவாதம் தூண்டப்பட்டது.
ரஷ்யப் புரட்சியின் பாதையில் இத்தாலியும் நகரும் எனப் பயந்த தாராளவாதிகள் பெனிட்டோ முசோலினி தலைமைதாங்கிய ‘கருஞ் சட்டைக்காரர்’ என அறியப்பட்ட தேசிய பாஸிசக் கட்சியிடம் ஆட்சியதிகாரத்தை அளித்தனர். இடதுசாரிகளையும் சோசலிசவாதிகளையும் மாற்றுக்கருத்தாளர்களையும் கொன்று, மாற்று அரசியல் கட்சிகளைத் தடை செய்த முசோலினி முதலாளித்துவ தாராளவாதிகளின் ஆசியுடன் சர்வாதிகார ஆட்சி நடத்தத் தொடங்கினார். இது இத்தாலியின் அண்டை நாடுகளான ஜேர்மனியிலும் ஸ்பெயினிலும் சர்வாதிகாரிகள் தோன்றுவதை ஊக்குவித்தது.
முசோலினியின் ஆட்சியும் அது ஐரோப்பாவில் தூண்டிய பாசிச அலையும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் பாசிச சித்தாந்தத்தின் நலிவையும் அடுத்து, 1948 இல் ஜனரஞ்சக சர்வாதிகார முனைப்புடைய நாட்டுத் தலைவரொருவர் உருவாவதைத் தவிர்க்கும் ஏற்பாடுகளைக் கொண்டதொரு அரசியல் யாப்பு உருவானது.
இவ்வாறு உருவான யாப்பின்படி நாடாளுமன்றின் இரு சபைகளும் சம அதிகாரமுடைவை. இரு அவைகளும் அனுமதி அளித்தால் மட்டுமே ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம். இதனால் சட்டங்களை உருவாக்க நீண்டகாலம் எடுத்தது. உதாரணமாக, திருமணத்துக்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்குச் சட்ட அங்கிகாரம் அளிக்கும் சட்டவரைவு, சட்டமாக 1,300 நாட்கள் எடுத்தன. இவையனைத்தையும் கருதி, யாப்பை மாற்றும் முயற்சியாக மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
2014 ஆம் ஆண்டு பிரதம மந்திரியாகத் தேர்தெடுக்கப்பட்ட மற்றெயோ றென்சி இத்தாலியின் வினைதிறனான ஆட்சிக்கு அரசியல் யாப்புத் தடையாயிருக்கிறது என்ற அடிப்படையில் புதிய யாப்புத் திருத்தங்களை முன்மொழிந்தார். நாடாளுமன்றின் இரு அவைகளும் அவற்றை அங்கிகரித்தும், யாப்பினடிப்படையில் மக்கள் ஆணை தேவைப்பட்டதால் மக்கள் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் வாக்கெடுப்பில் தோற்றதால் பிரதமர் றென்சி பதவி விலகுவதாக அறிவித்தார்.
வாக்களிக்கத் தகுதியுள்ளோரில் 68 சதவீதமானோர் வாக்களித்தனர். அண்மைக்கால இத்தாலியத் தேர்தல்களின் வாக்களிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். வாக்களித்தோரில் 59 சதவீதமானோர் திருத்த முன்மொழிவுகளை எதிர்த்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் அரசியல் நிறுவனமாதலுக்கு எதிராக உலக மக்கள் அளித்த மூன்றாவது தீர்ப்பாக இதைக் கொள்ளலாம்.
முதலாவது பொது எதிர்பார்ப்புக்கு மாறாக பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்தமை. இரண்டாவது அமெரிக்க அரசியல் உயரடுக்குகளின் விருப்பத் தெரிவான ஹிலரி கிளின்டனைத் தோற்கடித்து டொனால்ட் ட்ரம்ப் வென்றமை. மூன்றாவது இப்போது இத்தாலியில் நடந்தது.
இந்த வாக்கெடுப்பை அரசியல் யாப்புத் திருத்த வாக்கெடுப்பாக மட்டும் நோக்கின் இதன் முக்கியத்துவம் பெரிதல்ல. ஆனால், இன்றைய ஐரோப்பியச் சூழலில் வலதுசாரித் தீவிரவாதக் கருத்துக்கள் மென்மேலும் ஆதரவுபெறும் நிலையில் இவ்வாக்கெடுப்பில் பிரதமர் றென்சிக்கு எதிராகத் தீவிர வலதுசாரிக் கொள்கையை முன்மொழியும் அனைத்துக் கட்சிகளும் பிரசாரம் செய்தன. ஆதலால், இவ் விடயத்தில் பிரதமர் றென்சியின் தோல்வி என்பதை விட வலது தீவிரவாதத்தின் வெற்றி என்ற வகையில் இவ்வாக்கெடுப்பு முக்கியம் பெறுகிறது.
அதைவிட றென்சி, முன்மொழிந்த திருத்தங்கள் இத்தாலிய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துச் சர்வாதிகாரத் தன்மையுடைய ஆட்சியை உருவாக்க வழி செய்வன. மேற்குலக ஊடகங்களோ றென்சியின் முயற்சியை வரவேற்றதோடு, இத்தாலிய மக்கள் எதிர்த்து வாக்களித்ததனூடு வரலாற்றுத் தவறு செய்துள்ளனரெனக் கண்டிக்கின்றன. உலகெங்கும் ஜனநாயகத்தின் தேவைக்காகக் கூவும் ஊடகங்கள் இத்தாலியில் மட்டும் வேறு வகையில் நடப்பது ஏனென ஆராய்ந்தால் அதன் பின்னால் உள்ள பொருளாதார நலன்கள் வெளிச்சத்துக்கு வரும்.
இத்தாலியப் பொருளாதாரம் தள்ளாடுகிறது. இத்தாலி இன்னமும் 2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியினின்று மீளவில்லை. வங்கிகள் வழங்கிய கடன்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதித்தவாறே இத்தாலியிலும் நடந்தது. உத்தியோகபூர்வத் தரவுகளின் படி இத்தாலிய வங்கிகள் வழங்கிய கடன்களின் தொகை 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள். உண்மையில் இது 800 பில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்று சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, இவ் வங்கிகள் இதிலிருந்து மீள்வது மிகச் சிரமமானது.
இத்தாலிய வங்கிகளின் பங்குதாரர்களில் 40 சதவீதமானோருக்கு மேற்பட்டோர் சாதாரண இத்தாலியர்கள். தமது ஓய்வூதியம் உள்ளிட்ட சேமிப்புக்களை வங்கிகளில் முதலிட்டுள்ளனர். எனவே, ஏற்பட்ட நட்டத்தை, பங்குதாரர்களின் தலையில் கட்டின் அது பாரிய சமூகப் பிரச்சினையாகும். எனவே, வங்கிகளைப் பிணையெடுக்க வேண்டும். தற்போதைய இத்தாலிய நாடாளுமன்ற ஜனநாயக முறையின்கீழ் இத்தகைய பிணையெடுப்பு இயலாதது. அதேவேளை, மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இயலாது. எனவே, அரசியல் யாப்புத் திருத்தம் மூலம் அதை இயலுமானதாக்க றென்சி முயன்றார். இந்தத் திருத்தத்தை ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச வங்கிகளும் வரவேற்றன.
இத்தாலிய வங்கிகள் வங்குரோத்தை எதிர்நோக்குகின்றன. இவ் வங்கிகளின் சரிவு ஏனைய ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளையும் தாக்கும். ஏனெனில் அனைத்து வங்கிகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. இத்தாலிய வங்கிகள் வங்குரோத்தாயின் ஜேர்மன், பிரெஞ்சு வங்கிகளின் உறுதி பாதிக்கப்படும்.
மேற்கூறிய பின்னணியில் வாக்கெடுப்பு முடிவு: ஒருபுறம், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஈவிரக்கமற்ற போரை இத்தாலிய ஆளும் வர்க்கம் தொடுப்பதைத் தாமதப்படுத்தியுள்ளது. இத்தாலியின் மோசமான பொருளாதார நிலை காரணமாகச் சர்வதேச நிதி மூலதனத்தின் முகவர்கள் சிக்கன நடவடிக்கைகளை முன்மொழிகின்றார்கள். அவற்றைத் தடையின்றிச் செய்யும் சட்ட அங்கிகாரத்தைப் பெற வாக்கெடுப்பு முடிவுகள் தடையாயுள்ளன. மறுபுறம், வாக்கெடுப்பைத் தமது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்திய தீவிர வலதுசாரிக் கட்சியான வடக்கு லீக் கட்சியும் புதிதாக தேன்றிய ஐந்து நட்சத்திர இயக்கமும், வெள்ளை நிறவெறி நோக்கில் குடியேறிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் எதிரான கோஷங்கள் மூலம் புதிய அரங்காடிகளாகத் தங்களை தரமுயர்த்தியுள்ளன. இவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இத்தாலி விலகுவதற்கான மக்கள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்த்துள்ளன.
தேர்தல் முடிவு ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான அரசியல் சக்திகளின் வளர்ச்சியும் மக்களிடையே அவர்களுக்குள்ள ஆதரவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. அடுத்து, மிகப்பெரிய ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடிக்கான பொறியைத் தட்டும் நிலையில் இத்தாலிய வங்கிகள் உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் இன்னொரு பொருளாதார நெருக்கடியைத் தாங்காது. இந் நிலையில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி அரசின் பிணையெடுத்தலை இயலாமலாக்கியுள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயம் இவற்றைப் பிணையெடுக்க வேண்டும். அதற்கான பொருளாதார வலு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லை. அதேவேளை வங்கிகள் நொடிப்பதை அனுமதிக்க இயலாது. இவ்வாறான இரண்டக நிலையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பாராத, இன்னும் பொருத்தமாகச் சொல்லின் நடக்காது என நம்ப விரும்பாத முடிவொன்றை, இத்தாலிய மக்கள் வழங்கியுள்ளனர். இது பல வழிகளில் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லது.
இது இத்தாலியில் தேசியவாத, குடியேற்ற விரோதக் கொள்கைகளையுடைய சிறிய கட்சிகளை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது. அரசாங்கம் பிணையெடுக்கும் என எதிர்பார்த்த வங்கிகளின் எதிர்காலம் கேள்விக்குரியதாகியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய வங்கியில் இன்னொரு வகையான நெருக்கடிக்கு வழியமைத்து நிதியியல் நிலைமைகளைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற இத்தாலியச் சிந்தனையாளரான அந்தோனியோ கிராம்ஸியின் வரிகளில் சொல்லின், பழையது இறந்து கொண்டிருக்கிறது; புதியது இன்னும் பிறக்கவில்லை. இடைப்பட்ட இக் காலம் ஆரோக்கியமற்ற அறிகுறிகளின் கூட்டாகும்.
Average Rating