பிரபாகரன் ”ஒரு தன்னலங்கொண்ட அதிகாரப் பிரியர்”.. “ஒரே கட்சி, ஒரே தலைவன்” என்ற நிலைப்பாட்டை உடையவர்!! –இந்தியத்தூதர் திக்ஷித் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -99) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கப்போவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை பிரபாகரனை நன்கு அறிந்தவர்கள் புரிந்தே வைத்திருந்தனர்.
பிரபாகரனுடன் நேரடியான தொடர்புடன் தமிழ்நாட்டில் இருந்து ‘வீர வேங்கை’ பத்திரிகை நடத்தியவர் கேவை மகேசன்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் தொடர்பாக கோவை மகேசன் எழுதியதில் முக்கியமான சில பகுதிகள் இவை:
“ஜயவர்த்தனா முன்வைத்திருக்கும் ‘அரசியல் தீர்வு’ என்பது ஒரு சூழ்ச்சி வலை. அந்த வலையில் ஈழத்தமிழர்களோ, தமிழீழப் போராளிகளோ வீழ்ந்தால் அதை அறுத்துக் கொண்டு வெளிவரவே முடியாது.
‘டொனமூர் என்றால் தமிழர்கள் இல்லை’ (DONOUGHMRE MEANS TAMILS NOMORE) என்று இலங்கைத்தீவின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட சேர்.பொன். இராமநாதன் 1931ல் கூறிய அதே டொனமூர் திட்டத்தில் கூறப்பட்ட மாகாண சபைகளை 57 ஆண்டுக்கு முன்பு கூறப்பட்ட அதே ஆலோசனையை, ஐந்து, ஆறு தலைமுறை கழித்து இன்று ‘அரசியல் தீர்வாக’ முன்வைத்திருக்கிறார் ஜயவர்த்தனா.
வடக்குடன் கிழக்கை இணைக்கும் யூ.என்.பி. முஸ்லிம் பிரமுகர்களிடம் ஜே.ஆர் என்ன சமாதானம் சொல்லியிருக்கிறார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
“நீங்கள் ஏன் இதற்கு கலங்க வேண்டும்? கிழக்கில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் 34 சதவீதம் இருக்கிறீர்கள். உங்களுக்கு இஷ்டமில்லை என்பதை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் காட்டிவிடுங்கள்!”
ஜே.ஆரின் சூழ்ச்சி புரிகிறதா? இடையிலுள்ள ஓராண்டு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மேலும் சிங்களவரைக் குடியேற்றி தமிழ் மாநிலம் உருவாகுவதை வாக்கெடுப்பு என்ற சாக்கில் இல்லாமற் செய்துவிடலாம்.
தமிழர்களைப் பூண்டோடு ஒழிக்கும் இத்திட்டத்துக்கு போராளிகள் என்று கூறிக்கொண்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் சில குழுக்களை ஜயவர்த்தனாவும், இந்திய அரசும் பயன்படுத்த நினைக்கிறார்கள்.
சிறீலங்கா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்துவதானால் அது இருநாட்டு எல்லைகளைப் பற்றியதாகவே இருக்கும் என்று கூறிய நமது புலிகள், ஒற்றையாட்சி சிறீலங்காவுடன் நிர்வாகப் பரவலாக்கல் பற்றிப் பேச்சு நடத்தச் செல்லலாமா?
சிறீலங்கா அரசு தமிழீழத்தில் நடத்தும் அனைத்துத் தேர்தல்களையும் தமிழீழ மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், போட்டிபோடுகிற துரோகிகளைத் தீர்த்துக் கட்டியும் தமிழீழ மக்களின் சுயமரியாதையைக் கட்டிக்காத்து வருபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
அவர்கள் எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாக மாறி ஒற்றையாட்சிக்கும், ஜயவர்த்தனாவின் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட மாகாணசபைத் தேர்தலிலும் பங்குபற்றி சிறீலங்கா ஆட்சியில் பங்காளிகளாக மாறுவார்கள் என்பது எண்ணிக்கூடப்பார்க்க முடியாது.
தூங்க வைக்கும் முயற்சி
தமிழீழ விடுதலைப் புலிகளை ஜே.ஆர் -ராஜீவ் உடன்பாடு என்ற பெயரில் நிராயுதபாணியாக்கி தூங்கவைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.
நமது தமிழீழ விடுதலைப் புலிகள் தூங்குவது போல பாசாங்கு செய்வார்களே தவிர தூங்கிவிடமாட்டார்கள்.
ஆயுதம் ஒப்படைக்கப்பட்டு விட்டதே என்றால், கொடுத்த ஆயுதங்களைப் பறித்திட புலிகளுக்கா அவகாசம் தேவை? எங்கே, எப்படி, ஆயும் எடுப்பதென்பது தம்பி பிரபாவுக்குத் தெரியும்.”
கோவை மகேசன் எழுதியவற்றில் பல விடயஙகள் பின்னர் உண்மையாகின.
திக்ஷித் முரண்பாடு
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் ஒவ்வோர் அடி வைப்பிலும் பிரபாகரன் முரண்டுபிடிப்பவராகவே இருந்தார்.
ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் பிரபாகரன் தாமதம் செய்வதாக இந்தியத் தூதர் திக் ஷித் அதிருப்தி கொண்டுவிட்டார்.
இந்தியப் படையினர் புலிகள் விடயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார்கள். கண்டிப்பாக நடந்துகொள்கிறார்கள் இல்லை என்பது திக் ஷித்தின் கருத்து.
ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு அமைப்பு உடனடியாக தனது ஆயுதங்களை அப்படியே ஒப்படைத்துவிடாது. விட்டுத்தான் பிடிக்கவேண்டும் என்று கருதினார்கள் இந்தியப் படை அதிகாரிகள்.
இலங்கையில் இந்தியப் படை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் திபிந்தர் சிங். அவருக்கு பிரபாகரனின் மனப் போக்குகள் தெரிந்திருந்தன.
திபிந்தர் சிங்கின் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தில் இருந்தவர் ஜெனரல் ஹரிகிரத் சிங். அவரும் புலிகளுடன் முரட்டுத்தனமான போக்கைக் கையாள விரும்பவில்லை.
புலிகள் இயக்கத்தினருக்கும், இந்தியப் படையினருக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டிருந்தது.
இந்தியப்படை அதிகாரிகள் புலிகள் இயக்க முகாம்களுக்குச் சென்றனர். புலிகள் இயக்கப் பிரமுகர்களுடன் நட்புடன் பழக ஆரம்பித்தனர்.
இத்தகவல்கள் எல்லாம் திக் ஷித்துக்கு எட்டிவிட்டன.
இந்திய இராணுவத் தளபதி கிருஷ்ண சுவாமி சுந்தர்ஜிக்கு திக் ஷித் ஒரு புகார் அனுப்பி வைத்தார். இந்தியப் படை நடவடிக்கை தொடர்பாக தனது புகாரில் திக் ஷித் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“அமைதிப்படைக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டதோ அப்படை அதனை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகவில்லை.
பிரபாகரனுக்கு பெரும் மரியாதை காட்டுகிறார்கள்.
இந்தியப்படை வீரர்களும், அதிகாரிகளும் பிரபாகரனுக்கு சல்யூட் அடிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
இப்போதுள்ள ஜி.ஓ.சி-54வது பிரிவை மாற்றாவிட்டால் நிலமை மோசமடையலாம்.” என்பது திக் ஷித்திக் குற்றச்சாட்டு.
இந்திய அமைதிப்படையைச் சேர்ந்தவர்கள் பலர் புலிகள் இயக்கத்தினரின் வீடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களுடன் கைகோர்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
அவர்களின் திருமண வைபவங்களில் கலந்து கொள்கின்றனர் என்றும் திக் ஷித் குற்றம் சாட்டியிருந்தார்.
யாழ் மாவட்ட புலிகள் இயக்கத் தளபதி குமரப்பாவின் திருமணம் அமைதிப்படை வந்த பின்னர்தான் நடைபெற்றது.
அத்திருமண நிகழ்ச்சியில் இந்தியப்படையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டதாக திக் ஷித்துக்கு தகவல் கிடைத்துவிட்டது. அதன் பின்னர்தான் தனது அதிருப்தியைக் கொட்டி இந்தியப் படைத் தளபதிக்கு உடனே புகார் அனுப்பிவைத்தார்.
இந்தியத்தூதர் திக் ஷித்தை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. திக் ஷித்துக்கும் புலிகள் இயக்கம் தொடர்பாகவும் அப்போது நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை.
பிரபாகரன் தொடர்பாக திக் ஷித் கொண்டிருந்த கருத்து மோசமானதாக இருந்தது. பிரபாகரன் தொடர்பாக திக் ஷித் தெரிவித்த கருத்து இது:
“பிரபாகரனுடன் கடந்த மூன்றாடுகளாகத் தொடர்பு வைத்திருந்த இந்தியக் குடிமகனாகிய நான் அவர் பற்றிக் கொண்டுள்ள கருத்தினைக் கூறுகிறேன்.
அவர் ஒரு தன்னலங்கொண்ட அதிகாரப் பிரியர். ஒரே கட்சி, ஒரே தலைவன் என்ற நிலைப்பாட்டை உடையவர். உங்கள் கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு ஒருவருடன் பழகுவது போலாகும் அவருடன் பழகுவது.”
புலிகளின் புகார்
புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகள் தொடர்பாக திக் ஷித் அதிருப்திகொள்ளத் தொடங்கிய கட்டத்தில், பிரபாகரனும் இந்திய அரசின் போக்குக் குறித்து தனது அதிருப்தியை மெல்ல மெல்ல வெளிக்காட்ட ஆரம்பித்தார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. வடக்கு-கிழக்கில் அவசரகால சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. ஊர்காவல் படைகளின் ஆயுதங்கள் களையப்படவில்லை.
புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்களை நடத்துதல், தமிழ் பொலிஸ் படை அமைக்கபப்படாமை போன்றவை புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளாக இருந்தன.
ஏனைய இயக்கங்களை வடக்கு-கிழக்கில் பிரவேசிக்க அனுமதிப்பது தொடர்பாகவும் புலிகள் இயக்கத்தினர் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தனர்.
“அமைதியை நிலைநாட்டுவதற்காக என்று புலிகள் இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களை ஒப்படைக்கக் கோரும் இவ்வேளையில், ஏனைய தமிழ் இயக்கங்களுக்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியுள்ளது.
தமிழ் பகுதிகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்துள்ளது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கை தொடர்பாக நாம் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்துள்ளோம்.” என்று புலிகள் இயக்கத்தினர் தமது கண்டனத்தை தெரிவித்தனர்.
ஏனைய இயக்கங்களை இந்திய அரசு தமிழ் பகுதிகளில் பிரவேசிக்க அனுமதித்தமையை புலிகள் விரும்பவில்லை.
அதே சமயம் ஆயுத ஒப்படைப்பு நடவடிக்கையை தாமதப்படுத்த அது ஒரு காரணமாக சொல்லப்படக்கூடியதாக இருந்தமை புலிகளுக்கு மற்றொரு சாதகமாக இருந்தது.
படையினரின் ஆச்சரியம்
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த இந்தியப் படையினருக்கு அங்குள்ள வாழ்க்கை முறை ஆச்சரியமாக இருந்தது.
“வீடு, கிணறு, மலசலகூடம், ரி.வி., ரேடியோ என்று எல்லாம் இருக்கின்றன. உங்களுக்கு வேறு என்ன பிரச்சனை?” என்று இந்தியப்படை வீரர்கள் சிலர் பொது மக்களிடம் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தியாவில் பொதுவாக வீடுகளில் கிணறுகள் இருப்பது அரிது. மலசலகூடம் இல்லாத வீடுகளும் பெருமளவில் இருக்கின்றன. வெளிப்பகுதிகளுக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்துவிடுவார்கள். ஒரு செம்பு தண்ணீருடன் காலைக்கடன் பூர்த்தியாகிவிடும்.
தமிழ் நாட்டில் கூட அதே நிலைதான். தமிழக தலைநகரான சென்னையில் சன நெரிசல் மிகுந்த வீதிகளின் ஓரத்தில் சிறுவர்கள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டிருப்பார்கள்.
குடிப்பதற்கும், குளிப்பதற்கும் குழாய் தண்ணீரைத்தான் நம்பியிருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து, குழாயில் தண்ணீர் பிடித்து வைத்தால்தான் அன்றைய குடிநீர் தேiயை பூர்த்தி செய்ய முடியும். கிணறுகள் எங்காவது அரிதாகத்தான் இருக்கும்.
இந்தியப் படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
இந்தியப் படையில் இருந்த ஏனைய மாநிலத்தவர்களுக்கு தமிழ் தெரியாது. தமிழ்நாட்டுப்படை வீரர்கள்தான் அவர்களுக்கும், யாழ்ப்பாண மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர்களாகவும் உதவ வேண்டியிருந்தது.
தமிழ்நாட்டுப் படைவீரர்களுக்கும் யாழப்பாண மக்களின் வாழ்க்கைத் தரம் பேராச்சரியமாகத்தான் இருந்தது.
‘இங்கே ரேடியோவில் தமிழ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்க முடிகிறது. தமிழ் நாட்டில் ஆறுகோடி தமிழர்கள் இருந்தும் ரேடியோவில் தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதில்லையே. நீங்கள் ஏன் பிரச்சனைப் படுகிறீர்கள்.?” என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாட்டு படைவீரர்களும் இருந்தனர்.
வாங்கிக் குவித்தனர்
அப்போது இந்தியாவில் வெளிநாட்டுப் பொருட்கள் அரிதாகத்தான் கிடைக்கும். அப்படிக் கிடைத்தாலும் விலை கூடுதலாக இருக்கும்.
பெரும்பாலான படைவீரர்களின் குடும்ப வாழ்க்கைத்தரம் உயர்வானதல்ல. அதனால் வெளிநாட்டுப் பொருட்களை கூடுதல் விலையில் வாங்கக்கூடிய வசதியும் இருந்ததில்லை.
யாழ்ப்பாணத்தில் கடைத்தெருக்களுக்குச் சென்ற இந்தியப் படைவீரர்களின் விழிகள் வியப்பால் விரிந்துபோயின.
எங்கும் வெளிநாட்டுப் பொருட்கள் குவிந்து கிடந்தன. விலைகளை விசாரித்துப் பார்த்தார்கள். அப்படி ஒன்றும் அதிகமாகத் தெரியவில்லை.
இருந்த பணத்தையெல்லாம் கொடுத்து ஆசைப்பட்ட பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர்.
என்ன குறை இருக்கிறது இங்கே? என்று ஆச்சரியம்தான் சென்ற இடங்களில் கண்ட நிலவரங்கள் மூலம் இந்தியப் படையினருக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
“யாழ்ப்பாண பெண்கள்கூட அழகாகத்தான் இருக்கிறார்கள். சுதந்திரமாக விதம் விதமான ஆடைகளோடு சிட்டுக் குருவிகள் போல சைக்கிள்களில் பறந்து திரிகிறார்கள்.
இத்தனை சுதந்திரம் நம் நாட்டுப் பெண்களுக்கு இல்லையே!” என்று தமிழ்நாட்டு படைவீரர் ஒருவர் வருத்தப்பட்டாராம்.
தாம் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பது பெரும்பாலான இந்தியப் படைவீரர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இங்கே தமது கடமை என்ன என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.
தமிழ் மக்களுக்கு உதவி செய்யவே தாம் வந்திருப்பதாக படைவீரர்களில் ஒரு பகுதியினர் கூறிக்கொண்டிருந்தனர்.
ஆனால் இந்தத் தமிழ் மக்கள் எல்லா வசதிகளோடும் இருந்துகொண்டு எதற்காகப் பிரச்சினைப்படுகிறார்கள் என்பதுதான் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.
புலிகளுக்கு ஆதரவு
திருக்கோணமலையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைவீரர்களும் புலிகளுடன் சுமுகமான உறவு வைத்திருந்தனர்.
ஒப்பந்த்தின் பின்னர் திருமலையில் சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்படுவதாக புலிகள் இயக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
குடியேற்றங்களை நடத்தும் முயற்சிகளை புலிகள் இயக்கத்தினர் எதிர்த்த போது இந்தியப் படையினர் அந்த முயற்சிக்கு ஆதரவளித்தனர்.
இந்தியப் படையும், புலிகள் இயக்கத்தினரும் இணைந்து குடியேற்றங்களை தடுக்கிறார்கள். புலிகள் இயக்கத்தினர் சிங்கள மக்களை அச்சுறுத்தும் போது இந்தியப் படையினர் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று இலங்கைப் படையினருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்தியப் படையினர் நின்றமையால் இலங்கைப் படையினர் எதிலும் நேரடியாகத் தலையிடமுடியாமல் இருந்தது. தமது கோபத்தை இலங்கைப் படைவீரர்கள் மறைமுகமாகத் தெரிவிக்கத் திட்டமிட்டனர்.
திருமலையில் அமைதிப்படையினர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைப் படைவீரர் ஒருவர் மறைந்திருந்து சுட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டார்.
அதனையடுத்து திருமலையில் மற்றொரு சம்பவம் இடம்பெற்றது.
இந்தியப்படை வீரர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மூவரில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
இந்தியப் படைவீரர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமைக்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது கிடைத்த தகவல் இது:
“அந்தப்படைவீரரின் சகோதரனும் ஒரு படைவீரன்தான். யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடி விபத்து ஒன்றில் அந்தச் சகோதரன் பலியானார்.
செய்தி அறிந்ததும் ஏற்பட்ட சோகம் கோபமாக மாறியது. துப்பாக்கியை எடுத்து மூன்று பொதுமக்களை சுட்டுத்தள்ளி தனது கோபத்தைத் தணித்துக் கொண்டார்.”
கைதிகள் விடுதலை
இலங்கை அரசு சிறைகளில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஆரம்பித்தது.
விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் நீண்ட கால சிறைத்தண்டனையை எதிர்பார்த்தவர்களும் இருந்தனர்.
காலி பூஸா முகாமில் ஆடுமாடுகள் போல தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளும் விடுதலையானார்கள். விடுதலையான அனைவரும் காலி துறைமுகத்தில் தரித்து நின்ற இந்தியக் கடற்படைக்கப்பலில் ஏற்றப்பட்டனர்.
‘நிர்தே ஷக்’ என்னும் பெயருடைய அக்கப்பல் மூலமாக விடுதலையானவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மட்டக்களப்புக்கு ஆகஸ்ட் 15ம் திகதிக்குப் பின்னர்தான் இந்தியப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர். பிரிகேடியர் எல்.எம்.டார் தலைமையில் இந்தியப் படையின் 76வது இன்ஃபென்டரிப் பிரிவு மட்டக்களப்பில் இறங்கியது.
மட்டக்களப்பு மக்கள் இந்தியப் படையினருக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் அப்போது 18 அதிரடிப்படை முகாம்கள் இருந்தன. அவற்றில் மொத்தமாக 650 அதிரடிப்படையினரே இருந்தனர்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சென்று இறங்கிய இந்தியப்படை வீரர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டக்களப்பில் தமது அலுவலகம் ஒன்றையும் புலிகள் இயக்கத்தினர் திறந்துவைத்தனர்.
அலுவலகத் திறப்பு விழாவுக்கு வந்து புலிக்கொடியை ஏற்றிவைக்குமாறு பரமதேவாவின் தாயாரை புலிகள் இயக்கத்தினர் அழைத்திருந்தனர்.
1984ல் கருவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் பலியானார்கள் பரமதேவா.
பரமதேவாவின் சகோதரர் வாசுதேவா புளொட் இயக்கத்தில் அரசியற்துறைச் செயலாளராக இருந்தார்.
தமது இயக்க வேலைகளை ஆரம்பிக்க வாசுதேவாவும், புளொட் இயக்க படைத்துறைச் செயலர் ஜோதீஸ்வரனுன் என்னும் கண்ணனும் மட்டக்களப்புக்குச் சென்றனர்.
மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தின் பிரவேசத்தை தடுப்பது என்று முடிவு செய்தனர் புலிகள் இயக்கத்தினர்.
புளொட் இயக்கத்தினரும் ஆயுதங்களுடன் தான் நடமாடினார்கள். புலிகள் இயக்கத்தினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே பரவலான மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.
செப்டம்பர் 17ம் திகதி புளொட் இயக்கத்தைச் சேர்ந்த 70 பேர்வரை புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
மட்டக்களப்பில் புளொட் இயக்க முக்கியஸ்தர்களைத் தீர்த்துக்கட்ட புலிகள் இயக்கத்தினர் திட்டமிட்டனர்.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றுக்கும் புலிகள் திட்டமிட்டனர்.
(தொடர்ந்து வரும்)
-அரசியல் தொடர் -எழுதுவது அற்புதன்- தொடரும்
Average Rating