தமிழக அரசியலை புரட்டிப்போட்ட கறுப்புப் பண ஒழிப்பு…!! கட்டுரை

Read Time:13 Minute, 47 Second

article_1481174982-article_1480303869-kasinathகறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல் களம் வித்தியாசப்பட்டு நிற்கிறது. ‘நாடா’ புயல் தமிழகத்தைத் தாக்கியதோ இல்லையோ, ‘நாடா’ புயல் வடிவில் வந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தமிழக அரசியலை தாக்கியுள்ளது.

இதுவரை அ.தி.மு.க ஓர் அணியாகவும் தி.மு.க இன்னொரு அணியாகவும் மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும் அரசியல் செய்து வந்தன. பிரதமர் நரேந்திரமோடி கொண்டு வந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை ‘ஆதரிப்பதா’, ‘எதிர்ப்பதா’ என்று இரு வேறு திசைகளாகப் பிரிந்து நிற்கும் அரசியல் அணிகள் தமிழகத்தில் உருவாகி விட்டன.

மத்திய பா.ஜ.க அரசாங்கத்தின் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பினை அ.தி.மு.க எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. மக்களுக்கு பாதிப்பாக இருக்கிறது என்று அ.தி.மு.க

எம்.பிக்கள் மிகவும் மெல்லிய குரலில் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்துக்குள் கூட, பெரிய அளவில் அ.தி.மு.க எம்.பிக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

டெல்லியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் அ.தி.மு.கவின் சார்பில் ஒரேயொரு எம்.பி மட்டும் முன்னனியில் நின்றதைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகும் அதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக

அ.தி.மு.க இருந்தாலும் கறுப்பு பண ஒழிப்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் போக்க வேண்டும் என்று தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தின. அந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கூட அரசு அனுமதி கொடுக்கவில்லை. அ.தி.மு.கவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் “எங்கள் அம்மா கறுப்புப் பண ஒழிப்பில் ஆரம்பம் முதலே தீவிரமாக இருக்கிறார்” என்று பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து ஆவேசமாகப் பேசுவதற்கு தயாராக இல்லை. ஆகவே, தமிழகத்தில் அ.தி.மு.க இன்னும் மத்திய அரசாங்கத்துடன் இணக்கமாகப் போகும் போக்கையே கடைப்பிடித்துக் கொண்டிருப்பதால் இந்த விடயத்திலும்

அ.தி.மு.க தனி அணியாகவே காணப்படுகின்றது.

மக்கள் நலக்கூட்டணியைப் பொறுத்தமட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எல்லாம் ஓரணி. கறுப்புப் பண ஒழிப்பில் மத்திய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடித் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவிப்பதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்று காரசாரமாகக் களத்தில் நிற்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். அவர்களுக்குக் கை கோர்த்து நிற்கின்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். ஆனால், மக்கள் நலக் கூட்டணிக்குள் தனி அணியாகி விட்டார் வைகோ. ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தமிழகத்தில் பிரதமர் மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்து, தன் பாதையை தனிப் பாதையாக அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆதரவு அறிக்கையால் தமிழக ஆளுநரையே சந்தித்து அதுபற்றி விவாதிக்கும் வாய்ப்பை வைகோ பெற்றிருக்கிறார். தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த ம.தி.மு.கவினருக்கு ஆளுநர் சந்திப்பு, கறுப்புப் பண ஒழிப்புக்கு ஆதரவு எல்லாம் ஓர் ஆறுதல் பரிசாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் வைகோ மட்டுமே கறுப்புப் பணம் ஒழிப்பில் தெள்ளத் தெளிவாக பிரதமர் மோடியை பாராட்டுகிறார்.
இதனால் ஏற்கெனவே உராய்வு ஏற்பட்டுக் கொண்டிருந்த மக்கள் நலக்கூட்டணிக்குள் இப்போது பிளவு ஏற்படும் நிலை உருவாகி விட்டது. இனி வைகோ அடங்கிய மக்கள் நலக்கூட்டணி இருக்குமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. ஆகவே, கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் மக்கள் நலக்கூட்டணி கலகலத்திருக்கிறது.

பிரதான எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை பாராட்டுகிறது. அதே நேரத்தில் அந்த நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மத்திய அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. அதற்காக போராட்டம் நடத்துகிறது. நவம்பர் 28 ஆம் திகதி அகில இந்திய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு கைதானார்.

ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட நடுத்தர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகள் முன்பு மக்கள் பணம் எடுக்க வரிசையில் நிற்கிறார்கள் போன்ற பிரச்சினைகளை முன் வைத்து ‘கறுப்புப் பண ஒழிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை’ மட்டும் தி.மு.க எதிர்த்துப் போராடுகிறது.

ஆனால், 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததை வாபஸ் பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை தி.மு.க முன் வைக்கவில்லை. இந்த வகையில் பார்த்தால் இன்றைக்கு கறுப்புப் பண ஒழிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் தி.மு.கவும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இருக்கின்றன.
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை முழு மனதுடன் வரவேற்கும் பட்டியலில் பாரதீய ஜனதா கட்சியும் ம.தி.மு.கவும் இருக்கின்றன. இந்த நடவடிக்கையை எதிர்ப்பதா ஆதரிப்பதா என்பதில் இன்னமும் தயக்கத்தில் இருக்கிறது அ.தி.மு.கட்சி. இதுதான் ‘கறுப்புப் பண நடவடிக்கைக்குப் பிறகு’ தமிழக அரசியல் நிலை.

இந்த அரசியல் நவம்பர் எட்டாம் திகதிக்குப் பி்றகு தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. மக்களுக்கான இன்னல்கள் தொடரும் பட்சத்தில் இந்தக் ‘கறுப்புப் பண அரசியல்’ வரும் காலத்தில் தேர்தல் கூட்டணியாக உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது. இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் பா.ஜ.கவுக்கு மாற்று இல்லை என்ற சிந்தனை பெரும்பாலான மாநில கட்சிகள் மனதில் இருந்தது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகள் மனதிலும் இருந்தது. ஆனால், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திய குழப்பங்கள், தினம் தினம் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிவிப்புகள் எல்லாம் பா.ஜ.கவின் மீதான எதிர்ப்புணர்வை மக்கள் மத்தியில் வளர்த்து வருகிறது. அதனால் இப்போதைக்கு மாநில கட்சிகள் பலவும் ‘இனி பா.ஜ.கவை எதிர்த்து அணி சேர்ப்பது எளிது’ என்ற நினைப்புக்கு வந்திருக்கின்றன. அதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருக்கிறது என்பதுதான் கடந்த 24 நாட்களாக நடக்கும் தமிழக அரசியல் நிலை.

இந்த அடிப்படையில் பா.ஜ.க, அ.தி.மு.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் ஓரணியாகவும் தி.மு, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்,விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இன்னொரு அணியாகவும் தமிழகத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி அமைய வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் ‘எதிர்கால கூட்டணி’ என்பதை விட தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க இரு கட்சியின் முக்கியத் தலைவர்களான முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரும் மருத்துமனையில் இருப்பது ‘சாதகமான’ அரசியல் நிகழ்வாகப் பார்ப்பது போல் தெரிகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் அ.தி.மு.க அரசாங்கத்துக்கு பிரச்சினை ஏதும் கொடுக்காமல் மத்திய அரசாங்கம் செயல்படுகின்ற அதே நேரத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துமனையில் இருக்கின்ற நேரத்தில் வைகோவுக்கு அதிக முக்கியத்துவத்தை மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தமிழக ஆளுநரை வைகோ இருமுறை சந்தித்திருப்பது பல்வேறு ஹேஸ்யங்களுக்கு வித்திட்டுள்ளது. தி.மு.கவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் பெருமளவில் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள நிலையில் வைகோ தமிழக ஆளுநரைச் சந்தித்து இருப்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அரசியல் நிகழ்வு! ஏனென்றால், ஆளுநர் இருமுறை வைகோவுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுப்பதற்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை. தமிழக சட்டமன்றத்தில் அதிக எம்.எல்க்களை வைத்திருக்கும் கட்சியும் அல்ல என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

எது எப்படியிருந்தாலும் மத்திய அரசு கொண்டு வந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியிலேயே இந்த அணியா, அந்த அணியா என்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளை ஒவ்வொரு அரசியல் தலைவரும் சமாளித்து ‘2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான’ களத்தை தயார் செய்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை இந்த கறுப்புப் பண ஒழிப்பு கொடுத்திருக்கிறது.

ஊழல்வாதிகளுக்கு ‘கெட்ட சகுணமாக’ இருக்கும் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவில் பா.ஜ.கவுக்கு எதிரான புதிய அணி உருவாகும் களத்துக்கு ‘நல்ல சகுணமாகவே’ எதிர்கட்சிகள் பார்க்கின்றன என்பதே எதார்த்தமான நிலை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராம் சரணுக்காக விட்டுக் கொடுத்த சூர்யா
Next post ஆக்ரோசத்தின் உச்சத்திற்கு சென்ற சிங்கத்தால் பரிதாபமாக பலியான பயிற்சியாளர்…!! வீடியோ