தேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம், தாரை வார்க்க மகிந்த தயாரானார்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-24) – வி. சிவலிங்கம்
வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள் புலிகளால் எழுப்பப்பட்டது.
சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த நிலையில் அவ் அழுத்தங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் ஓர் அணுகுமுறையாக சந்திரிகா அரசில் காணப்பட்ட உள்முரண்பாடுகளை தமக்குச் சாதகமாக புலிகள் பாவிக்கத் தொடங்கினர்.
ஜனாதிபதித் தேர்தலும் அண்மித்துள்ளதால் புலிகள் அரசிற்குப் புதிய அழுத்தங்களைப் போட அவ் வாய்ப்பைப் பயன்படுத்த தயாராகினர்.
தென்பகுதியிலும் அரசியல் அணிச் சேர்க்கைகள் ஆரம்பித்தன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன நாட்டின் சனத் தொகையில் சுமார் 10 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இக் கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
2005ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களின் இறுதி தினமாகும்.
அன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜே வி பி உடனும், ஜாதிக கெல உறுமயவுடனும் மகிந்த ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து ரணில் மிகவும் கடுமையாக விமர்ச்சித்தார்.
நாட்டைப் பிரிப்பதற்கான ஓர் ஏற்பாடே அதுவெனவும், போர் மீண்டும் தொடர்வதற்கு ஆதரிப்பவர்கள் மகிந்தவிற்கு வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் இவ் ஒப்பந்தம் குறித்து விமர்சனங்கள் காணப்பட்டன. குறிப்பாக ஜாதிக கெல உறுமய இனர் நாட்டினை ஒற்றை ஆட்சிமுறையிலிருந்து மாற்ற முடியாது என எடுத்த நிலைப்பாட்டினை விமர்ச்சித்தனர்.
சமஷ்டி ஆட்சிமுறையைப் பின்பற்றும் இந்தியா இன்று உடைந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பி சிறீலங்கா சுதந்திரக்கட்சி இம் மாதிரியான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளவர்களோடு உறவை வைத்திருக்குமாயின் அக் கட்சி இனவாத அரசியலிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது.
அத்துடன் இனப் பிரச்சனை என்ற புண் ஒருபோதும் மாறப்போவதில்லை என்ற கருத்தும் நிலவியது.
மகிந்த குறித்த தனது மதிப்பீட்டினை எரிக் சோல்கெய்ம் வெளிப்படுத்துகையில்…. “2002ம் ஆண்டளவில் ஓர் துணை அமைச்சராக காணப்பட்ட அவர் தனது கடுமையான உழைப்பால் பிரதமராக வர முடிந்தது எனவும், சந்திரிகா பதவியில் இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் எவரும் இருக்கவில்லை.
ஏனெனில் அவ்வாறான தகுதியில் யாரும் இருக்கவில்லை”.
ஆனால் காலப்போக்கில் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாகும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
சமாதான முயற்சிகளில் எந்த வாய்ப்பையும் பயன்படுத்த அவர் தயாராக இருந்தார்.
அவரிடம் திட்டமிட்ட எந்த தீர்வும் இருக்கவில்லை.
தனது அதிகாரத்தை நிலைப்படுத்துவதே நோக்கமாக இருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் 2006ம் ஆண்டு ஜனவரியில் அவரைச் சந்தித்தபோது எந்தத் தேர்தல் எதுவும் இல்லாமலேயே பிரிவினையைத் தவிர்க்க வட மாகாண நிர்வாகத்தினை பிரபாகரனிடம் கையளிக்க தாம் தயார் என மகிந்த தெரிவித்தார்.
அவர் இதற்காக பின்கதவுப் பேச்சுவார்த்தைகளுக்கும் தயாரானார்.
அவ்வாறானால் அவர் எதை எதிர்க்கிறார்? எனக் கேட்டபோது புலிகள் விரும்புவது போல இழுபட்ட பேச்சுவார்த்தைகளை தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், அது தனது தனிச் சிங்கள அரசியலுக்கு உதவாது என்பதைத் தெரிந்திருந்தார்.
அதுமட்டுமல்ல சமஷ்டி அரசியல் தீர்வு வழிமுறை மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் தரப்படுமானால் பின்கதவு வழியாக அதனை கொண்டுசெல்லவும் தயாராக இருந்தார்.
மிகவும் ஆழமான தென்பகுதியிலிருந்து மக்களின் நாடியோட்டத்தினை நன்கு புரிந்திருந்த, வழமையான அதிகார வட்டத்திற்கு அப்பாலிருந்து கட்சி அரசியல் வழியாக வந்த ஒருவர் அவர்.
வழமையான குடும்ப கட்சி அரசியல் வலைப் பின்னலுக்கு அப்பால் புதிய குடும்ப வழிமுறையை அவர் ஏற்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
மகிந்த பற்றிய தனது பார்வையைத் தெரிவித்த சோல்கெய்ம் பௌத்த மக்கள் செறிந்த கிராமப் புறத்தில் அதிக நிலவுடமையைப் பெற்றிருந்த அவரது குடும்பம் மிகவும் திட்டமிட்ட விதத்தில் அம் மக்களின் எண்ணங்களில் வேர்விட்டிருந்தனர்.
அவரது குடும்பம் படிப்படியாக தமது பலத்தை அதிகரித்தனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மகிந்தவின் சகோதரர் சமல் ராஷபக்ஸ அக் குடும்பத்தின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரானார்.
22 ஆண்டுகள் கடந்தபோது அவரது குடும்பத்தின் நிருபாமா, பசில், நமல் என்போர் பாராளுமன்றம் சென்றனர். கூடவே இன்னொரு சகோதரர் கோட்டபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பாளரானார்.
இப் பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில், மகிந்த ஆகியோர் சமாதான முயற்சிகள் குறித்து எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதை அமெரிக்க தூதுவராலய செய்திக் குறிப்பு இவ்வாறு தெரிவித்திருந்தது.
மகிந்தவின் பிரச்சாரங்கள் நாட்டின் சமூகங்களிடையே ஆழமான பிளவுகளை ஏற்படுத்துவதாக உள்ளன. இவை இன்னும் வன்முறையைத் தூண்டுவதற்கே உதவும்.
ஏற்கெனவே குழப்ப நிலையில் உள்ள கிழக்குப் பிராந்தியம் மேலும் வன்முறையை நோக்கிச் செல்லும். இவை புலிகள் சமாதான முயற்சிகளிலிருந்து விலகிச் செல்வதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கும்.
அரசியல் தீர்வு பற்றி மகிந்தவின் முக்கிய ஆலோசகர்களோடு உரையாடுகையில்….. “தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றை ஆட்சி முறை வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அவர் சமஷ்டி முறையையோ அல்லது வடக்கு, கிழக்கு மாகாண மட்டத்தில் கணிசமான அதிகார பரவலாக்கத்தினையோ எதிர்க்கவில்லை எனவும், மகிந்தவிற்கு நல்ல எண்ணம் இருந்த போதிலும் சமாதான முயற்சிகளில் அவ்வளவு உற்சாகம் அற்றவராக உள்ளதாக அச் செய்தி ஆய்வு தெரிவித்திருந்தது.”
இவ் ஆய்வில் அவருக்கு நல்ல எண்ணங்கள் இருந்தாலும் புலிகளைக் கையாள்வதில் காணப்படும் அனுபவமின்மையும், ஜே வி பி இன் கடுமையான தேசியவாதப் போக்கும் அதற்கு இடமளிக்குமா? என்பது சந்தேகமே எனத் தெரிவித்திருந்தது.
ரணிலின் தேர்தல் பிரச்சார உத்திகள் குறித்த ஆய்வில்… “அவர் பதவிக்கு வந்தால் தான் விட்ட இடத்திலிருந்து புதிய பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் ஆரம்பிக்கலாம் என எண்ணுகிறார்.
புதிய பிரச்சனைகள் என அவர்கள் எதிர்பார்ப்பது கருணா தரப்பினர் பிரச்சனை, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நாளாந்தம் எழும் பிரச்சனைகள், பி ரொம் தொடர்பாக அரசு நடந்துகொண்ட முறைகளால் புலிகள் தரப்பில் எழுந்தள்ள சந்தேகங்கள், கதிர்காமர் படுகொலை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை என்பன போன்றனவாகும்.
ரணில் கடந்த காலங்களில் புலிகளுடன் தான் ஏற்படுத்திக்கொண்ட உறவுகள் பலனளிக்கலாம் என நம்புகிறார்.
இருப்பினும் கருணா தொடர்பாக தெற்கு நடந்துகொள்ளும் முறை பெரும் சந்தேகத்தை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ள அவ் ஆய்வு தனது முடிவுரையில் ரணில் எதிர்பார்ப்பது போல விட்ட இடத்திலிருந்து தொடங்குவதற்கு புலிகள் அந்த இடத்தில் தற்போது இல்லை எனவும், சந்திரிகா அரசு காலத்தில் அவர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளார்கள் எனவும், பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகலாம் ஆனால் விட்டுக்கொடுப்புகள் சாத்தியமா? என்பதே கேள்வி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புலிகள் தரப்பினர் நீண்ட மௌனத்தின் பின்னர் பேசத் தொடங்கினர்.
2005ம் ஆண்டு அக்டோபர் மத்தியில் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் ஞாயிறு பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில்…
தாம் இரு தரப்பாரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இதில் தாம் பேசுவதற்கு எதுவுமில்லை எனவும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வர்க்களிக்கலாம் எனவும், எக் காரணம் கொண்டும் அவர்களைத் தாம் பலவந்தப்படுத்தி வாக்களிக்கச் செய்யவோ அல்லது தடுக்கவோ போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
புலிகளின் முடிவு தெளிவாக காணப்பட்ட போதிலும் அம் முடிவு பல சந்தேகங்களை எழுப்பியது.
சில நாட்களில் அவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தின் உண்மை வெளியாகியது.
யாழ். மாவட்டத்தின் உயர் பாடசாலைகளின் அமைப்பு என்ற பெயரில் இயங்கிய புலிகளுக்கு ஆதரவாக இயங்குவதாக கருதப்பட்ட நிறுவனம் வடபகுதி வாக்களரை தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோரியது.
ஆனால் அது புலிகளின் உத்தியோகபூர்வ முடிவு அல்ல என தயா மாஸ்டர் மறுத்தார்.
இக் கோரிக்கை வெளியான மறு வாரம் “மக்கள் படை” என்ற பெயரில் குடாநாடு முழுவதும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இவை புலிகளின் நிலைப்பாடு குறித்து மேலும் சந்தேகத்தை அதிகரித்தது.
இந் நிலமை மக்கள் மனம் திறந்து தமது அரசியல் விருப்பை வெளிப்படுத்துவதைத் தடுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த 23 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாம் சந்திக்கப்போவதாக தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் புலிகள் அறிவித்தனர்.
அரசாங்கம் தேர்தல் வாக்களிப்பிற்கான ஆயத்தங்களை புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆரம்பித்தது.
யாழ் மாவட்டத்தில் சுமார் 7 லட்சம் வாக்காளர்களும், கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் 10000 வாக்காளர்களும் உள்ளதாக கருதப்பட்டது.
இவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ சூனியப் பகுதிகளிற்குச் சென்று வாக்களிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் நடந்தன.
தொடரும்
Average Rating