காவுகொள்ளப்பட்ட காணிகள்…!! கட்டுரை
நிலங்களைப் பிடிப்பதும் காணிகளைக் கையகப்படுத்துவதும் உலக சரித்திரத்துக்குப் புதிய விடயமல்ல. நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றல், தீவுகளைச் சொந்தமாக்கல், நிலங்களை அபகரித்தல், நிலங்களை ஆக்கிரமித்தல் என உலக சரித்திரத்தின் பெரும் பகுதியானது நிலம் சார்ந்த உரிமையை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றது எனலாம்.
உண்மையில், காலனித்துவம் என்பதும் ஒரு வகையான நில உடைமைத்துவத்தின் நாகரிகமான பெயர் என்றே குறிப்பிடலாம். இஸ் ரேல் என்றொரு நாடு உருவாகுவதற்குத் தமது பெருநிலப்பரப்பில், ஓர் எல்லையில் இடமளித்த பலஸ்தீன மக்கள் படும் அவஸ்தைகளும், எண்ணெய் வளமுள்ள நிலத்துக்காக, மேற்குலகம் நடத்துகின்ற யுத்த நாடகங்களும் கூட இந்த வகையறாக்களுக்குள் உள்ளடங்கும்.
இலங்கையிலும் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள், கையகப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகப் பொது மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதும் அதற்குப் பகரமாக (பதிலாக) காணிகளையோ, நட்டஈட்டையோ வழங்குவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.
ஆனால், இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் இன்று தார்மீகமற்ற நில ஆக்கிரமிப்புகள், கையகப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. யுத்தம் மையங்கொண்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்நிலைமை தீவிரமாகக் காணப்பட்டது. வடபுலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தமிழ் மக்கள் இழந்திருக்கின்றார்கள் அல்லது அந்தக் காணிகளில் உரிமை கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெருமளவிலான காணிகள் பிறிதொரு தரப்பினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற நிலைமைகளை யுத்தகாலத்தில் மட்டுமன்றி, இன்றும் வடக்கில் காண முடிகின்றது. சில காணிகளுக்குள் படையினர் நிலை கொண்டுள்ளனர். இன்னும் சில காணிகள் பாதுகாப்புக் காரணங்களின் பெயரில் முற்றாக விடுவிக்கப்படவில்லை.
தமிழர்கள் மட்டுமன்றி, இடம்பெயர்ந்த யாழ்ப்பாண, வன்னி முஸ்லிம்களும் இவ்விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காணிகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு தமிழ் மக்கள் அவ்வப்போது கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, ஒப்பீட்டளவில் தமிழ் அரசியல்வாதிகளும் இதற்கான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இதன் பயனாக குறிப்பிட்டளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், கிழக்கில் இப்படியான ஒரு முன்னேற்றம் இல்லை.
கிழக்கில் அபகரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் 90 சதவீதமானவை இன்னும், அபகரிப்பாளர்களின் வசமே இருக்கின்றன என்பதுதான் வேதனையானதும் நிதர்சனமானதுமான செய்தியாகும்.
கிழக்கு மாகாணத்தில் எட்டு வருடங்களாக சிறுபான்மையினரின் ஆட்சியதிகாரம் பலமான நிலையில் இருக்கின்றது. ஆளுநர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, முதலமைச்சர் பதவி முன்னர் ஒரு தமிழராலும் தற்போது ஒரு முஸ்லிமாலுமே வகிக்கப்பட்டு வருகின்றது.
இதற்குப் புறம்பாக, தமிழர்களையும் முஸ்லிம்களையும் தேசிய அரசியலில் பிரதிவிம்பப்படுத்தும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நிறையவே இருக்கின்றார்கள். இங்கு, தமிழ்க் கட்சிகள் ஓரளவுக்கு அக்கறை எடுத்துச் செயற்படுவதாகச் சொன்னாலும், அம்பாறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மீட்கும் விவகாரங்களில் முஸ்லிம் கட்சிகள் அந்தளவுக்கு அக்கறை எடுக்கவில்லை என்பதையே அவதானிக்க முடிகின்றது.
அபிவிருத்தி என்ற மாயையும், உணர்ச்சிக் கோஷங்களையும் வைத்துக் கொண்டே ‘அரசியல்’ செய்து வருகின்ற மூன்று காங்கிரஸ்களும் காணிகளை மீட்டுக் கொடுப்பதற்கு அறிக்கைகளையும் அழுத்தங்களையும் தவிர வெற்றிகரமான நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
அவர்களது முயற்சிகள் வெற்றி பெற்றிருந்தால் காணிச் சொந்தக்காரர்கள் இன்றும் வீதிக்கு இறங்கிப் போராடும் நிலை தொடர்ந்திருக்காது.
குறிப்பிட்டுச் சொல்வதென்றால், 2007ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியது. பொத்துவில், கரங்காவட்டைப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஆட்சேபித்தே, ஆளும் தரப்பிலிருந்து வெளியேறியதாக மு.கா நெஞ்சு நிமிர்த்தி பிரகடனம் செய்திருந்தது.
ஆனால், அதே பிரச்சினை அப்படியே இருக்க, மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு பதவிகளைப் பெற்றது. இது ஒருபதச்சோறு மட்டுமே. இன்றும் கூட மு.கா மாத்திரமன்றி மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளன. இருப்பினும், கரங்காவட்டை, வட்டமடு உள்ளிட்ட எல்லாக் காணிப் பிரச்சினைகளும் பிணக்குகளும் அப்படியேதான் இருக்கின்றன.
வடக்கு, கிழக்கில் காணிகள் உரிமையாளர் அல்லாத வேறு ஒரு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றாலும், இவ்விரு மாகாணங்களிலும் காணிகள் காவுகொள்ளப்பட்ட அடிப்படைகளில் வேறுபாடு இருப்பதாகச் சொல்ல முடியும். வடக்கில் இராணுவ பிரசன்னம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற அடிப்படையில் பெரும்பாலும் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியும்.
இதற்குப் புறம்பாக, பிந்திய காலங்களில் செயற்றிட்டங்களுக்கான சுவீகரிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றிருக்கின்றன. இதுபோல மேலும் பல காரணங்களும் உள்ளன.
ஆனால், கிழக்கிலே அதிகமான காணிகள் சிங்களக் குடியேற்றங்கள்,புராதன தலங்கள், புதைபொருள் ஆராய்ச்சிகள், பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அமைத்தல் போன்ற அடிப்படைகளில் பறிகொடுக்கப்பட்டிருக்கின்றன.
திட்டமிட்ட நில அபகரிப்புக்களுக்கு மேலதிகமாக வன பரிபாலனத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் காணி தொடர்பாகச் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசாங்க அதிகாரத் தரப்பினரிடம் கிழக்கு மக்கள் அதிக காணிகளை இழந்திருக்கின்றார்கள்.
ஆண்டாண்டு காலமாக வேளாண்மை செய்து வந்த நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் கையை விட்டு இன்று போயுள்ளன. அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் காடுவெட்டி, மண் பதப்படுத்தப்பட்டு, பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த பல கண்டங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் சிறுபான்மையினர் உரிமை கொண்டாட முடியாதபடி பறித்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், இங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இம் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறு கோரி விவசாயிகள் மற்றும் காணிச் சொந்தக்காரர்கள் பல வருடங்களாப் போராடி வருகின்றார்கள்.
இதற்காக அண்மைக் காலங்களாகக் ‘காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி’ என்றொரு அமைப்பும் குரல்கொடுத்து வருகின்றது. இந்த அமைப்பின் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்கு விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தில் பரந்தளவிலான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். “நல்லிணக்கச் செயற்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், எமக்குரித்தான காணிகளை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
காணி உரிமைக்கான செயலணியின் தகவல்களின் படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, நிந்தவூர், சம்மாந்துறை, திருக்கோவில், உகணை ஆகிய பிரதேச செயலகங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன அல்லது உரிமை சார்ந்த சர்ச்சைக்குள் சிக்கியுள்ளன.
முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறை மாவட்ட நிலப்பரப்பில் பெரும்பான்மையின மக்களைத் திட்டமிட்டுக் குடியேற்றியமையாலும் மாவட்ட எல்லை நிர்ணயத்தாலும் சிறுபான்மையினரின் விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து சிங்களவர்களின் விகிதாசாரம் பல மடங்கினால் அதிகரித்திருக்கின்றது.
குடியேற்றத் திட்டங்களால் காணிகள் சுவீகரிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, பரம்பரையாக முஸ்லிம்கள், தமிழர்கள் நெற்செய்கை மேற்கொண்ட காணிகள் குடியேறிகளுக்குப் பகிரப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி, இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களின் எல்லையில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு கட்டம் கட்டமாக நம்மவர்களால் இழக்கப்பட்டிருக்கின்றது.
1930 களில் ‘அதிக உணவு பயிரிடல்’ தேசிய அபிவிருத்தித் திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, முஸ்லிம்களுக்கு எல்.டீ.ஓ உத்தரவுப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கியதுடன், அடர்ந்த காடுகளை வெட்டி விவசாயம் செய்யும் நிலையும் உருவானது.
இந்தக் காணிகளில் 30 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்தனர். பின்னர் கல்ஓயா அபிவிருத்தித் திட்டம் மற்றும் அதன் பின்னரான செயற்றிட்டங்களின் கீழ் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்களுக்காக இவற்றுள் கணிசமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
நுரைச்சோலை, அம்பலத்தாறு, ஓமரங்காய், சேனைக்கண்டம், சேலவட்டை, வேலாமரத்துவெளி, சியத்தரவட்டை, பொன்னன்வெளி போன்ற இடங்களில் ஒரு தொகுதி காணிகள் சிங்களவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக, அம்பாறை மாவட்டத்தில் சிங்கள இனப் பரம்பலை அதிகரிக்கும் வேறு குடியேற்றங்களாலும் பெருமளவு காணிகள் இழக்கப்பட்டுள்ளன.
இராணுவ முகாம், தொல்பொருள் அமைவிடங்கள், புனித வலயப் பிரகடனம் என்ற தோரணையிலும் கணிசமான காணிகளை சிறுபான்மையினர் இழந்திருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம், பொன்னன்வெளியில் 600 ஏக்கர் காணியானது தீகவாபி புனித பிரதேச பிரகடனத்தின் கீழ் பறிபோயுள்ளது. அஷ்ரப் நகர் என அழைக்கப்படும் பிரதேசத்தில் உள்ள 150 ஏக்கர் காணியின் பெரும்பகுதி வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் உரிமை கொண்டாடப்படுகின்ற அதேநேரத்தில், அங்கு இராணுவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பலம்ஓயா, கண்டத்தின் கீழ்வரும் சுமார் 750 ஏக்கர் விவசாயக் காணிகள் கல்லோயா அபிவிருத்திச் சபை வசமாகியுள்ளது. கீத்துப்பத்து பாவாபுரத்திலுள்ள 96 ஏக்கர் காணிகள் பெரும்பான்மை சமூகத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் மற்றும் லாகுகலை எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் 140 விவசாயிகளின் 450 ஏக்கர் காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் உரிமை கொண்டாடப்படுகின்றது. கிரான்கோவை, பாலையடிவட்டையில் கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகள் இன்று அரசாங்க வனமாகக் கருதப்படுகின்றன.
அதேபோன்று, 1957 இல் மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் காணி உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டு, நிந்தவூர் விவசாயிகளால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட கிரான், கோமாரி காணிகளில் யுத்தம் காரணமாக நீண்டகாலம் விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது உரிமையாளர்களான முஸ்லிம்கள் சென்றால்… வனவள திணைக்களமும் இராணுவமும் தடைபோடுவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.
இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம், மேலே விவரிக்கப்பட்ட காணிகள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்டவை மாத்திரமேயாகும். மீதமுள்ள பிரதேச செயலகங்களின் கீழுள்ள காணிப் பிரச்சினைகள், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் அதேபோல் வட மாகாணத்திலும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் தரவுகளைத் தொகுத்தால், ஆச்சரியமான புள்ளிவிவரங்கள் வெளிச்சத்துக்கு வரும்.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பெரும்பகுதியினர் பெரிய செல்வந்தர்கள் அல்லர். விவசாயிகளாகப் பிறந்து, இன்னும் விவசாயிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்தக் காணிகளை மீட்டெடுப்பதற்கு தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்திருக்கின்றனர்.
“இவ்விடயத்தைப் பிரதேச செயலாளர்கள், அரச அதிபர்கள், அரசியல்வாதிகள், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் தொடக்கம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வரை எல்லாத் தரப்பினரின் கவனத்துக்கும் கொண்டு சென்று விட்டோம். ஆனால் இன்னும் தீர்வில்லை” என்று அந்த விவசாயிகள் சொல்கின்றனர்.
நிலங்களைப் பகிர்ந்தளிப்பது மற்றும் நிலவுடைமை தொடர்பாகச் சர்வதேச சட்டங்களிலேயே விதந்துரைக்கப்பட்டுள்ளன. இவ்வாறிருக்கையில்,வடக்கு, கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் வரையறுக்கப்பட்ட காணிகளோடு வாழும் தமிழர்கள், முஸ்லிம்களின் காணிகளை காவுகொள்வதும், அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்திருப்பதும் தார்மீகமானதல்ல. நல்லிணக்கத்தில் நாட்டம் கொண்டுள்ள அரசாங்கம்,காணிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
Average Rating