இராணுவப் புரட்சியின் எதிர்வினைகள்…!! கட்டுரை
இலங்கையில் ஜனநாயகம் நசுக்கப்பட்டால், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் ஆபத்து இருப்பதாக, நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன விடுத்த எச்சரிக்கை கடுமையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கிறது.
இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் ஆபத்து இருப்பதாக, தினேஸ் குணவர்த்தன வெளியிட்ட கருத்துக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதும், அதன் உள்நோக்கம் என்ன என்பதும் அவருக்கு மாத்திரமே தெரிந்திருக்கக் கூடிய இரகசியம்.
ஆனாலும், இராணுவப் புரட்சி பற்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே எச்சரிக்கை விடுப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான விடயமோ அல்லது புறக்கணித்து விடத்தக்க விடயமோ அல்ல.
ஜனநாயகத்தை நசுக்கினால், இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது என்ற பொருள் படவே அவர் கூறியிருந்தார்.
அவர், அப்படிக் கூறிய ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என்னவென்றால்? நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் பேசுவதற்குப் போதிய நேரம், வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பது தான்.
இதுபோன்று, நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்குமானால் ஆபத்தான நிலை ஏற்படும் என்று கூறியே, இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புக் குறித்த எச்சரிக்கையை தினேஸ் குணவர்த்தன விடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்தில் இருந்து அவ்வப்போது இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் குறித்த வதந்திகளும் ஊகங்களும் இருந்து வந்திருக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வியடைந்து வருவதை உறுதிப்படுத்திக் கொண்டதும், இராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றதாக, தற்போதைய அரசாங்கம் முன்னர் குற்றஞ்சாட்டி வந்தது.
அதுபற்றிய விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அந்த விசாரணைகள் முடிவுக்கு வந்ததாகவும் தெரியவில்லை. அதுபற்றிப் பகிரங்கமாக அறிவிக்கப்படவுமில்லை.
அதற்குப் பின்னர், இராணுவ அதிகாரிகள் மத்தியில், முன்னைய அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்களைக் களையெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இராணுவப் புரட்சி ஒன்றுக்கான வாய்ப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே பேசப்பட்டது.
எனினும், இராணுவப் புரட்சி ஒன்று நடக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கும் நிலை இந்த இரண்டாண்டு காலத்தில், இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை.
எனவேதான், இராணுவத்தைக் காண்பித்து, இராணுவப் புரட்சி என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அரசாங்கத்தை மிரட்டுவதற்கு கூட்டு எதிரணி முனைகின்றது என்ற கருத்தும் குற்றச்சாட்டுகளும் வலுப்பெற்றிருக்கின்றன.
ஜனநாயக முறையில் ஆட்சியைப் பிடிக்க முடியாததால் தான், இராணுவப் புரட்சி குறித்துக் கூட்டு எதிரணியினர் கனவு காண்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அதுபோலவே, தினேஸ் குணவர்த்தனவின் இந்தக் கருத்துக்கு அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பையும் கண்டனங்களையும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவும் இந்தக் கருத்துக் குறித்து படையினர் அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்ந்து இதுபோன்று நசுக்கப்பட்டால், இராணுவப் புரட்சி ஏற்படும் என்று எச்சரித்த தினேஸ் குணவர்த்தனவுக்கே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் மாத்திரமன்றி, நாடு முழுவதிலும் ஜனநாயக சூழல் எப்படியிருந்தது என்பது நன்றாகவே தெரியும்.
காலத்துக்குக் காலம் தேர்தல்களை நடத்தியது மாத்திரமே அப்போது இருந்து ஒரே ஜனநாயக சூழலாகும். அதற்கு அப்பால், எல்லாவற்றிலும் அதிகாரத்துவ ஆட்சியே நிலவியிருந்தது.
அப்போது, ஜனநாயகம் நசுக்கப்பட்ட போது, இராணுவப் புரட்சியில் ஈடுபடவில்லை. அப்படியிருக்க, இப்போது மாத்திரம் இராணுவம் அதிகாரத்தைப் பிடிக்க முனையும் என்ற தினேஸ் குணவர்த்தனவின் எச்சரிக்கை சாதாரணமானதல்ல.
இராணுவத்துக்குள், முன்னைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவான அணியொன்றும் அதிகாரிகளும் இருப்பது யாருக்கும் தெரியாத இரகசியமல்ல.
இந்த அரசாங்கம், பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே, அத்தகைய அணியை ஓரம்கட்டி, அடக்கி வைப்பதில் கவனம் செலுத்தி வந்திருந்த போதிலும், இராணுவத்துக்குள் முழுமையான அதிகாரத்தைச் செலுத்த அரசாங்கம் விரும்பவில்லை.
அத்தகைய போக்கு, அரசாங்கத்துக்கு எதிரான போக்கை இன்னும் கூர்மைப்படுத்தும் என்பதால், இராணுவம் தொடர்பான முடிவுகளை அரசாங்கம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன்தான் மேற்கொண்டு வந்தது.
ஆனாலும், இராணுவத்துக்குள் அரசாங்கத்துக்கு எதிரான போக்குடையவர்கள் அல்லது அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டவர்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
அத்தகையவர்களைக் கூட்டு எதிரணி தமது பக்கத்தில் இழுத்துக் கொள்ள முனைகிறதா? அல்லது அவர்களைத் தூண்டிவிட முனைகிறதா என்ற சந்தேகங்களை தினேஸ் குணவர்த்தனவின் முன்னெச்சரிக்கை எழுப்பியிருக்கிறது.
நீண்ட ஜனநாயகப் பாரம்பரியங்களைக் கொண்ட இலங்கையில் அவ்வப்போது இராணுவப் புரட்சி பற்றிய அச்சுறுத்தல்கள் இருந்தாலும், அது ஒருபோதும் வெற்றியளித்ததில்லை.
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே இராணுவப் புரட்சிகளுக்கான சாதகமான நிலை உருவாகாமல் இருந்தமைக்குக் காரணமாகும்.
அதைவிட, இராணுவத்துக்குள் முரண்பாடுகள், ஒழுங்கீனங்கள் இருந்தாலும், அரசாங்கத்துக்கு விசுவாசமாகச் செயற்படும், ஒழுங்கில் இருந்து இராணுவம் ஒருபோதும் விலகவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
ஒரு நாட்டின் இராணுவத்துக்கு முக்கியமாக இருக்க வேண்டிய பண்பு, கட்டளைக்குக் கீழ்ப்படிதலாகும். அரசாங்கத்தின் உத்தரவுகளை மதித்துச் செயற்பட வேண்டும்.
அத்தகைய பண்பில் இருந்து இலங்கை இராணுவம் இதுவரையில் விலகிச் செல்லவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.
போரின் போது, இராணுவத்தினரின் ஒழுக்கம், போருக்குப் பிந்திய காலகட்டங்களில் இராணுவத்தினரின் ஒழுக்கம் பற்றிய குற்றச்சாட்டுகள் நிறையவே இருக்கின்றன.
ஆனாலும், அரசாங்கத்துக்குக் கட்டுப்படுதல் என்ற விடயத்தில், இலங்கை இராணுவம் ஒருபோதும், ஒழுங்கை மீறியதில்லை. அந்தப் பலமே, எப்போதும், இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுக்கிறது.
இலங்கையில் போர்க்காலத்தில் வீங்கிப் பருத்த இராணுவம், போருக்குப் பின்னரும் அரசியலிலும் நிர்வாகத்திலும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது.
ஆனால், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அரசியல், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் இராணுவத்தின் பங்கு கணிசமாகவே குறைக்கப்பட்டுள்ளது.
சீருடைப் பணிகள் தவிர்ந்த, சிவில் பணிகளில் இருந்து இராணுவத்தினரை ஒதுக்குவதில் அரசாங்கம் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்திருந்தாலும், தமது திட்டத்தை, நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அவர்களின், பகிரங்கமான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இராணுவம் முடக்கப்பட்டதால் தான், ஆவா குழு’ போன்றவை தலையெடுத்தது போன்று, அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடந்தவாரம் காலியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளும் மந்தமடைந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் இந்தக் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் காரணிகள் இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
வடக்கிலும், கிழக்கிலும் நிலைமைகள் மோசமடைந்து வருவதாகக் காண்பிக்கும் முயற்சியாகவும் ‘ஆவா குழு’வினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கருத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் கருத்து பார்க்கப்படுகிறது.
எனினும், இராணுவத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை, இன்னும் குறைக்கப்படுவதை, எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய கருத்துடையோரை, கூட்டு எதிரணி இராணுவப் புரட்சிக்குத் தயார்படுத்துகிறதா என்ற சந்தேகம் எவருக்கும் எழுவது இயல்பானதே.
முன்னாள் இராணுவ அதிகாரியான கோத்தாபய ராஜபக்ஷ இராணுவத்துக்குள் தனது அதிகாரத்தை அடிமட்டம் வரை கொண்டு சென்றவர்.
அவரை முன்னிறுத்தி ஓர் இராணுவப் புரட்சிக்கு கூட்டு எதிரணி திட்டமிடலாம் என்ற ஊகங்கள் இருந்தாலும், அதனைச் செயற்படுத்துவது ஒன்றும் இலகுவான காரியமில்லை.
கூட்டு எதிரணி அரசாங்கத்துக்கு எதிரான யாரையெல்லாம் திருப்பி விட முடியும்? தூண்டிவிட முடியும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
போரில் உடல் உறுப்புகளை இழந்த படையினர், பௌத்த பிக்குகள், வடக்கு, கிழக்கின் சிங்களக் குடியேற்றவாசிகள் என்று தொடர்கின்ற இந்த வரிசையில், இப்போது இராணுவத்தினரையும் அவர்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமது அரசியல் நலனுக்காக இராணுவத்தினரை பலிக்கடாவாக்கவும் அவர்கள் துணிந்துள்ளனர்.
இதுவரை காலமும், எந்த இராணுவத்தை ஒழுக்கமானது, எந்த மீறல்களிலும் ஈடுபடாதது என்று வாய்கிழியக் கத்திக் கொண்டிருந்தார்களோ, அதே இராணுவத்தின் ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், இராணுவப் புரட்சி என்ற புரளியையும் அவர்களே கிளப்பி விட்டிருப்பதுதான் வேடிக்கை.
Average Rating