சுதுமலையில் பிரபாகரன் ஆற்றிய உரை.. ‘புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் தமிழீழத்தில் செயற்பட விடமாட்டோம்”!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -96) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
“எனது கையால் இலங்கை இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவே முடியாது. அது ஒரு போதும் நடக்காத காரியம்” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன்.
• “நாங்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு ஓடிவந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். சுதுமலையில் தம்பி பேசிய கூட்டத்தில் சனத்துக்ளு தம்பியைச் சரியாகவே தெரியவில்லையாம். தம்பியை விட உயரமான ரெண்டுபேர் குறுக்கே நின்றார்களாம். அவ்வளவு பாதுகாப்பு அவைக்கே தேவைப்படுகிறது.” – அமிர்தலிங்கம்
• விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் தமிழீழத்தில் செயற்பட விடமாட்டோம்.
•ஒப்பந்தமும் – புலிகளின் நிலையும்
தொடர்ந்து…
பிரபாகரன் இந்தியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலமாக சுதுமலை அம்மன் கோயில் முன்றலில் இறக்கப்பட்டதாக சென்றவாரம் குறிப்பிட்டிருந்தேன்.
அதில் ஒரு சிறு திருத்தம்
பலாலி விமான தளத்தில் தான் பிரபாகரன் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து இந்தியப் படையினரின் கவச வாகனம் மூலமாக பாதுகாப்பாக சுதுமலைக்கு அழைத்து வரப்பட்டார்.
எங்கிருந்து பிரபாகரன் இந்தியாவுக்குப் புறப்பட்டாரோ அதே சுதுமலையில் தான் பிரபாகரனை தமது பொறுப்பில் இருந்து விடுவித்தனர் இந்தியப் படையினர்.
சுதுமலையில் நடைபெற்ற புலிகள் அமைப்பினர் நடாத்திய பொதுக்கூட்டத்துக்குச் செல்வாதற்கு இடையில் முக்கியமான சில சம்பவங்களை குறிப்பிட்டுவிடுகிறேன்.
ஆயுத ஒப்படைப்பு தொடர்பான விடயத்தில், பிரபாகரனுக்கும், இந்தியப் படை அதிகாரிகளுக்குமிடையே சிறியளவிலான கசப்புணர்வு ஏற்பட்டது.
பிரபாகரன் ஆயுத ஒப்படைப்பில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு அடையாளத்திற்காக சில ஆயுதங்களையாவது அவர் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள் இந்தியப் படை அதிகாரிகள்.
ஜெனரல் திபேந்தர் சிங்கும், ஹரிகரத் சிங்கும் பிரபாகரனைச் சந்தித்தனர்.
பிரபா மறுப்பு
“எனது கையால் இலங்கை இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவே முடியாது. அது ஒரு போதும் நடக்காத காரியம்” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன்.
அதன்பின்னர் தான் யோகியை ஆயுத ஒப்படைப்புக்கு அனுப்பிவைத்தார் பிரபாகரன்.
ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றவுடன் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் பிரகடனத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிகல வாசித்தார்.
அந்தப் பிரகடனத்தில் இடம்பெற்ற வாசகங்கள் இதுதான்:
“சிறீலங்காவின் எதிர்காலம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் இன்றாகும். ஆயுதங்களை ஒப்படைக்கும் இந்நடவடிக்கை எமது ஜனநாயக சமுதாய அமைப்பு முழுவதற்கும் பாதிப்பை தந்து கொண்டிருக்கும் இரத்தம் சிந்துதல், மற்றும் வன்முறைக்கு முடிவு கட்டுவதைக் குறிப்பதாகும்.
எமது சொந்த நாட்டில் இலங்கையர்களாகிய நாம் அனைவரும் அமைதியாகவும், நல்லுறவுடனும் வாழ்வதற்கு இனிமேல் வழிகிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்.”
வேடிக்கை
ஆயுத ஒப்படைப்பு நிகழ்ச்சியில் ஒரு வேடிக்கையும் நடந்தது.
சேபால ஆட்டிகலவிடம் தனது பிஸ்டலை ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக வழங்கினார் யோகி. அந்தச் சந்தர்ப்பத்தில் படமெடுக்கத் தவறிவிட்டனர் தொலைக்காட்சிக்காரர்கள்.
மீண்டும் ஒருமுறை யோகி ஆயுதத்தை சேபால ஆட்டிகலவிடம் கொடுப்பது போல செய்து காட்டினால் படம்பிடித்து விடலாம் என்று வேண்டுகோள்; விடுத்தனர் படப்பிடிப்பாளர்கள்.
இந்திய-இலங்கை அதிகாரிகளும் சொல்லிப் பார்த்தனர். சேபால ஆட்டிகல தயார்தான் ஆனால் யோகியோ ‘முடியவே முடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
யோகி கொடுத்த பிஸ்டல் மேசையில் இருந்தது. அதன்மீது சேபால ஆட்டிகல கையை வைத்துக் கொண்டிருக்க அதனைத் தான் படம்பிடிக்க முடிந்தது
ஆயுத ஒப்படைப்பின் போது தமிழீழ இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்களில்தான் புலிகள் இயக்கத்தினர் வந்திந்தனர். வாகனங்களில் புலிக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன.
இந்தியப் படை நிலைகொண்டமையடுத்து வடக்கில் இருந்து ஆறாயிரம் இலங்கைப் படையினர் இந்திய விமானங்களின் உதவியோடு தென்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டனர். மொத்தமாக அறுநூறு படைவீரர்கள் மட்டுமே வடக்கில் உள்ள முகாம்களில் இருந்தனர்.
சுதுமலையில் கூட்டம்
யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது சுதுமலை.
சுதுமலை அம்மன் கோயில் முன்றலில் சுமார் பதினைந்து அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். யாழ் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் வேன்கள், மினிபஸ்சுகள், லொறிகள் என்பவற்றில் மக்கள் சுதுமலைக்கு வந்து சேர்ந்தனர்.
பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்கள் மேடையைச் சுற்றியும், மேடையின் மீதும் வியூகம் அமைத்தது போல பாதுகாப்பாக நின்றனர்.
பிரபாகரன், மாத்தையா, கிட்டு, குமரப்பா, திலீபன், யோகி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிட்டு மேடையில் பேச வந்த போது மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
கிட்டு தனது பேச்சின் போது, கடைசிப் புலி இருக்கும் வரை போராடுவோம் என்று கூறினார். “தலைவர் இருக்கிறார். அவரை நம்புங்கள்” என்று தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
இறுதியாகப் பிரபாகரன் பேச வந்தார்.
முதன் முதலாக பிரபாகரன் கலந்து கொள்ளும் பகிரங்கக்கூட்டம். பிரபாகனை பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் கூட்டத்தினர் முணடியடித்தனர்.
பிரபாகரன் பேச ஆரம்பித்ததும் அவர் முன்பாக இறுபுறமும் வந்து நின்று கொண்டனர் இரண்டு மெய்க்காவலர்கள்.
இருவருமே மலைகள் போன்ற தோற்றத்தில் இருந்தனர். அதனால் பிரபாகரனைப் பார்க்க முடியாமல் மக்கள் அப்படியும் இப்படியுமாக அசைந்தும், எட்டி எட்டி துள்ளிக்கொண்டுமிருந்தனர்.
இது தொடர்பாக அமிர்தலிங்கம் ஒரு நண்பரிடம் சொன்ன கருத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
“நாங்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு ஓடிவந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். சுதுமலையில் தம்பி பேசிய கூட்டத்தில் சனத்துக்ளு தம்பியைச் சரியாகவே தெரியவில்லையாம். தம்பியை விட உயரமான ரெண்டுபேர் குறுக்கே நின்றார்களாம். அவ்வளவு பாதுகாப்பு அவைக்கே தேவைப்படுகிறது.”
சுதுமலைக் கூட்டத்தில் பிரபாகரன் என்ன பேசுகிறார் என்பதை நேடியாகக் கேட்பதற்கு இந்தியப் படை அதிகாரிகளும் வந்து அமர்ந்திருந்தனர்.
சுதுமலையில் பிரபா ஆற்றிய உரை
பிரபா உரை
பிரபாகரன் தனது பேச்சில் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் இதுதான்:
“எனது அன்புக்குரிய தமிழீழ மக்களே! இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென்று எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திடீரென்று மிகவும் அவசர அவசரமாக எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காது இந்தியாவும், இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்போது அமுலாக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேளிவிக் குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது.
ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்கு தௌ;ளத் தெளிவ்க விளக்கினோம்.
ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கியே தீருவோமென இந்தியா கங்கணம்கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய-இலங்கை உறவு பற்றியது.
இந்திய வல்லரசின் வியூகத்தின் கீழ் சிறீலங்காவைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருந்தன. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்வதில் அதிக அக்கறை காட்டியது.
ஆனால் அதேசமயம் தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம்.
ஆனால் நாம் ஆட்சேபித்ததில் பயன் இல்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும் நிலையில் நாம் என்ன செய்வது?
15 வருடங்களாக இரத்தம் சிந்தி தியாகம் புரிந்து, சாதனைகள் செய்து எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்து கட்டி எழுப்பப்பட்ட போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவது என்றால் அதை நாம் ஜீரணிக்க முடியவில்லை.”
பிரபாகரன் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே அவரது குரல் சற்றுக் கம்மியிருந்தது. விரும்பாத ஒரு காரியத்தை செய்வதற்காக நிர்ப்பந்திக்கப்பட்ட மனநிலையை பிரபாகரனின் குரல் பிரதிபலித்தது.
பிரபாகரன் தனது உரையை முன் கூட்டியே தயாரித்து வைத்திருந்தார். அந்த உரையின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் பத்திரிகையாளர்களுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டன.
தமிழீழமே தாகம்
பிரபாகரன் மேலும் தொடர்ந்து பேசியது இது:
“இந்திய மாண்புமிகு பிரதமர் ராஜீவ் காந்தி என்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
நான் அவரிடம் மனந்திறந்து எமது மக்களின் நிலைப்பாட்டையும் எமது பிரச்சினைகளையும் எடுத்துரைத்தேன்.
இந்தியப் பிரதமரிடம் இனவாத சிங்கள அரசாங்கத்தின் மீது சிறிதளவேனும் எனக்கு நம்பிக்கையற்ற தன்மையினைச் சுட்டிக்காட்டியதுடன் இவ்வொப்பந்தத்தை அமுல் நடத்தப்போவதில்லை என்ற எனது அவநம்பிக்கையையும் எடுத்துரைத்தேன்.
எமது மக்களின் பாதுகாப்புக்குரிய உத்தரவாதத்தையிட்டும் அவரிடம் பேசினேன். இந்தியப் பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்புக்கான உறுதியினை அவர் வழங்கினார்.
இந்தியப் பிரதமரின் ஒளிவு மறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பினை தொடங்குவதற்கு இந்தியா அனுமதிக்கமாட்டாது என்று நாம் நம்புகிறோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம்.
எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தகைய மாபெரும் தியாகங்களை நாம் செய்திருக்கிறோம்! இவையெல்லாம் மேலும் விபரிக்க வேண்டியதில்லை.
இந்தியாவை நேசிக்கிறோம்
பிரபாகரனின் உரையின் கடைசிப்பகுதி இது:
“ஆயுதங்களை நாம் ஒப்படைப்பது பொறுப்பினை கைமாற்றிக் கொடுப்பதையே காட்டுகிறது.
ஆயுதங்களை நாம் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலையினையே உருவாக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். இது நமக்குத் தேவையில்லை.
நாம் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்தியப் படையினருக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.
எமது எதிரிகளிடமிருந்து எம்மைப்பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.
எமது ஆயுதங்களை இந்தியப்படைகளிடம் ஒப்படைப்பதன் மூலம் இந்திய அரசாங்கம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் உயிருக்கும் முழுப்பாதுகாப்பினை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுகிறது என்பதனை வலியுறுத்திக் கூறுகிறேன்.
தொடர்ந்து போராடுவோம்
எனது பேரன்புக்குரிய மக்களே!
இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம். இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தமானதொரு தீர்வு கிட்டும் என்று நான் கருதவில்லை.
சிங்களப் பேரினவாத வேதாளம் இவ்வொப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரத்தீர்வு, தனித்தமிழ் ஈழம் அமைப்பதிலேயே தங்கியிருக்கிறது என்பதே எனது மாறுபடாத நம்பிக்கையாகும்.
ஒன்றை இங்கு, எத்தயை சந்தேகத்துக்கும் இடமன்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் ஈழம் என்ற குறிக்கோளினை அடையும் வரை நான் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்.
எமது போராட்டத்தின் வடிவங்கள் மாற்றமடையலாம். ஆனால் எமது குறிக்கோளினை அடைவதற்கான போராட்டங்கள் மாறப்போவதில்லை. எமது குறிக்கோளினை ஈடேற்றுவதற்கு எமது மக்களாகிய உங்கள் முழுமனதுடனான, முழுமையான ஒன்றிணைந்த ஆதரவு எப்போதும் எமக்கு இருக்க வேண்டும்.
தமிழ் ஈழ மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிர்வாக அமைப்பில் இணையவோ தேர்தலில் நிற்கவேத தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு சூழ்நிலை உருவாகலாம்.
அதே வேளை நான் இங்கு உறுதியாகக் கூற விம்புகிறேன் எத்தகைய சூழ்நிலையிலும் நான் தேர்தலில் போட்டியிடவோ, முதன்மந்திரிப் பதவியை ஏற்கவோ மாட்டேன்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”… என்று கூறி தனது பேச்சை முடித்தார் பிரபாகரன்.
பத்திரிகைப் பேட்டி…
பிரபாகரன்; பாதுகாப்பாக தங்கியிருப்பதற்காக யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள பிரம்படியில் வீடுகளைத் தயார் செய்தனர் புலிகள் இயக்கத்தினர்.
இரண்டு மூன்று வீடுகளில் பிரபாகரன் எப்போது எந்த வீட்டில் தங்கியிருப்பார் என்று தெரியாதளவுக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பிரபாகரனை பத்திரிகையாளர்கள் சந்திக்க விரும்பினார்கள். பிரபாகரனும் அவர்களைச் சந்தித்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரபாகரன் சொன்ன பதில்கள் இவை.
“சிறீலங்கா அரசு தனது சிறைகளில் உள்ள தமிழர்களை முதலில் விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பின்னலே எம்மிடமுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வோம்.
விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் தமிழீழத்தில் செயற்பட விடமாட்டோம்.
தமிழர் விடுதலைக் கூட்டணிபற்றி நான் சொல்லத் தேவையில்லை. இங்கு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதன் தலைவர்கள் நாட்டைவிட்டே ஓடி விட்டார்கள்.
அதனைத் தமிழீழ மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
இலங்கையில் வடக்கு-கிழக்குப் பகுதிகளை நிபந்னை எதுவும் இல்லாமல் இணைக்க வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
இணைப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் தமிழ் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழீழம் ஒன்றே எம் நம்பிக்கை. தமிழீழம் தவிர்ந்த இடைக்காலத் தீர்வை விட நிரந்தரத்தீர்வே ஏற்றதாகும்.
சர்வதேச பார்வையில் நம்மை முரடர்கள் என்று காட்டிவரும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா என்ன செய்கிறார் என்பதை நாம் உலகுக்குக் காட்டவேண்டும்”..
என்று கேள்விகளுக்கு பதில் அளித்தார் பிரபாகரன்.
பிரபாகரனின் பேச்சு, பேட்டிகள் போன்றவற்றை கூர்ந்து அவதானித்தவர்களுக்கு ஒரு விடயம் புரிந்தது.
தமிழீழ போராட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிட பிரபா தயாராக இல்லை.
இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக ஒப்பந்தத்தை ஏற்க வேண்டியிருந்தது.
அடுத்ததாக, இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறும் நாளுக்காக காத்திருக்கவே முதலில் விரும்பினார் பிரபாகரன்.
அவ்வாறு இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறுமானால் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரண்பாடு தோன்றும். சர்வதேச அரங்கிலும் இலங்கை அரசு அம்பலமாகும். அத்தருணத்தில் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றே பிரபாகரன் நம்பியிருந்தார்.
ஆனால் ஜே.ஆர் . ஒரு ராஜதந்திரப் புலி. எப்படியாவது இந்தியாவுக்கும், புலிகளுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கிவிடவேண்டும் என்று ஜே.ஆரும் ஒரு கணக்குப் போடத் தொடங்கி விட்டார்.
எனவே ஒப்பந்தத்தை துரிதமாக அமுல் நடத்தும் காரியப்புலியாக தன்னைக் காட்டிக் கொள்ள ஆம்பித்தார் ஜே.ஆர். எனினும் புலிகளும் விட்டுக்கொடுக்கவில்லை. இருபுறமும் காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருந்தன.
திரை மறைவில் நடந்த காய் நகர்த்தல்களும் மாறி மாறி வைக்கப்பட்ட பொறிகளும் அடங்கிய வரலாற்று நாடகம் அது.
அதன் சுவாரசியமான கட்டங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்…
(தொடர்ந்து வரும்)
Average Rating