வயிற்றில் கட்டி வளர்வது தெரியாமல் கர்ப்பமாக இருப்பதாக கூறி பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்…!!
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர்அலி (வயது 29). கார் டிரைவர். இவருடைய மனைவி அசீனா (28). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் அசீனா கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் வயிற்று வலியால் அசீனா பாதிக்கப்பட்டார். இதையடுத்து மீண்டும் அதே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாதந்தோறும் ஆஸ்பத்திரிக்கு வந்து மகப்பேறு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் சென்றபோது நவம்பர் 18-ந் தேதி குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என்றும், வயிற்றில் குழந்தையுடன் சேர்ந்து கட்டி ஒன்று வளர்வதாகவும், எனவே அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் நவம்பர் 18-ந் தேதி கடந்த நிலையிலும் குழந்தை பேறுக்கான எந்த விதமான அறிகுறியும் தோன்றவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசீனாவுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு உள்ளது. அது குழந்தை பேறுக்கான இடுப்பு வலி என்று கருதி அசீனா தனது கணவருடன் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு, ‘உங்கள் வயிற்றில் குழந்தை இல்லை. கட்டி தான் வளர்ந்து இருக்கிறது’ என்று டாக்டர்கள் ஆதாரத்துடன் தெரிவித்து உள்ளனர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிகிச்சை அளித்த அரசு டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியத்துடன் பதில் அளித்து அவர்களை அப்புறப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அசீனா கூறுகையில், ‘குழந்தை உள்ளதா? இல்லையா? என்று கூட தெரியாத இவர்கள் எப்படி டாக்டர்களாக பணியாற்ற முடிகிறது. தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தான் எனது வளைகாப்பை கொண்டாடினேன். ஆனால் அது எல்லாமே வீணாகி விட்டது’ என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கஸ்தூரிபா காந்தி அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயா கூறுகையில், ‘அசீனா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேரும்போது கர்ப்பத்துக்கான அறிகுறி இருந்தது. ஆனால் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது நீர்ப்பை பலவீனமாக இருந்த காரணத்தால் சில முக்கிய முடிவுகளை உறுதிபடுத்த முடியவில்லை. 5 அல்லது 6 மாதங்களுக்கு பிறகே அவை உறுதி செய்யப்படும். அப்படி தான் அசீனாவின் வயிற்றில் நீர்க்கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே மருந்துகள் தரப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்தார்.
Average Rating